Published:Updated:

மூன்று பெண்களின் மூவர்ணப் பயணம்!

குமரி முதல் இமயம் வரை...பயண அனுபவம் / ஃபோர்டு எக்கோஸ்போர்ட்கார்க்கிபவா

பிரீமியம் ஸ்டோரி

லகம் ஒரு புத்தகம். பயணங்கள் செய்கிறவன் அதன் எல்லாப் பக்கங்களையும் படிக்கிறான்’ என்பார்கள் ஜப்பானியர்கள். இவை சத்தியமான வார்த்தைகள். எல்லோருக்குமே பயணம் செய்யப் பிடிக்கும். ஆனால், அதைச் செய்து முடிக்கத்தான் சரியான திட்டமிடல், நேரம், பணம் என நிறையத் தேவைப்படுகின்றன. ‘‘ஆர்வம் இருந்தால் போதும்; இவை எல்லாம் தானாகவே அமையும்” என்கிறார்கள் நீதா, சுனிதா மற்றும் பர்ணீத். இந்த மகளிர் அணி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை காரிலேயே பயணம் செய்து திரும்பியிருக்கிறது. கிட்டத்தட்ட 5,000 கிமீ தூரம் - இந்த மூன்று பெண்கள் மட்டும் 14 நாட்கள் இந்தியா முழுவதும் தனியே சுற்றி வந்திருக்கிறார்கள்.

“இந்தப் பயணத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நம்ம இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடுன்னு உலகத்துக்குக் காட்டணும். அதுதான் முக்கியமான காரணம்!” என்கிறார் சென்னையைச் சேர்ந்த நீதா. இவர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பொது மேலாளர்; திருமணமானவர். சுனிதா, சொந்தமாக ‘பொட்டிக்’ நடத்துகிறார். போட்டோகிராஃபியில் அதீத ஆர்வம்; இவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அடுத்து பர்ணீத்; இந்தியாவைச் சுற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில், அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தவர். மூன்று பேரும் சில ஆண்டுகளுக்கு முன்பு, டிரெக்கிங் சென்றபோது நண்பிகள் ஆனவர்கள். இவர்களை ஒன்றிணைத்த புள்ளி... பயணம்.

மூன்று பெண்களின் மூவர்ணப் பயணம்!
மூன்று பெண்களின் மூவர்ணப் பயணம்!

‘‘சுனிதா கால் பண்ணி, அவளோட புது ஃபோர்டு எக்கோஸ்போர்ட் கார்ல காஷ்மீர் போற பிளான் சொன்னா. ஆபீஸ்ல லீவு கேட்கணும்; வீட்டுல பர்மிஷன் கேட்கணும்னு நிறைய பிரச்னை. ஆனா, இது லைஃப் டைம் வாய்ப்புனு மனசு சொல்லுச்சு. ஹஸ்பண்ட்கிட்ட சொன்னதும் என் ஆசையைப் புரிஞ்சுக்கிட்டு  பச்சைக் கொடி காட்டினார். ஆபீஸ்ல பாஸ சமாளிச்சு, லீவு வாங்கி, என் டீம் கூட சேர்ந்தப்ப... அவ்ளோ சந்தோஷம்!” - நீதாவின் கண்களில் மலையைப் புரட்டிய திருப்தி.
சுனிதாவும், பர்ணீதாவும்தான் ஓட்டுநர்கள். நீதா, வழிகாட்டி. ஏற்கெனவே திட்டமிட்ட சாலையை, சரியாக மேப் மூலம் கண்டறிந்து வழியைச் சொல்வார். மற்ற இருவரும் மாறி மாறி காரை ஓட்டுவார்கள்.

மூன்று பெண்களின் மூவர்ணப் பயணம்!

“ஒரு நாளைக்கு எப்படியும் 700 கி.மீ தாண்டணும். சாப்பிட, போட்டோ எடுக்க மட்டும்தான் நிறுத்த முடியும். மற்றபடி கார் ஓடிட்டே இருக்கணும். தாபா, கையேந்தி பவன்னு கிடைக்கிற இடத்துல சாப்பிட்டோம். அதே மாதிரி, தங்குறதும் நைட் 9 மணிக்கு எந்த ஊர்ல இருக்கோமோ, அந்த ஊர்தான். 11 மாநிலங்கள் தாண்டிப் போயிருக்கோம். ஒரு இடத்துலகூட நாங்க பயப்படுற மாதிரி எந்தச் சம்பவமும் நடக்கலை. எங்க திட்டத்தைத் தெரிஞ்ச சிலர், ரொம்ப உதவியா இருந்தாங்க. இந்தியா நல்ல நாடுங்க!” என்றார் சுனிதா.

மூன்று பெண்களின் மூவர்ணப் பயணம்!

‘‘ஆகஸ்ட் 8, மாலை 6.30-க்கு கன்னியாகுமரியில இருந்து கிளம்பினோம். சூரிய அஸ்தமனத்தை போட்டோ எடுத்ததும், நேராக திண்டுக்கல். அங்கே இரவு தங்கினோம். அடுத்த நாள் பிளான், 1,000 கிமீ. நைட்டுக்குள்ள ஹைதராபாத் போகணும். அதிகாலை 5 மணிக்கே கிளம்பி, பெங்களூரைத் தாண்டும்போது ரூட் மாறி சிட்டிக்குள்ள நுழைஞ்சுட்டோம்... செம டிராஃபிக். அதைச் சமாளிச்சு ஹைதராபாத் சேர்ந்தபோது இரவு 10 மணி.

நாக்பூரைத் தாண்டி சியோனி போகணும். 740 கி.மீ. சில இடங்கள்ல சிங்கிள் ரோடு, ரொம்ப சிக்கலா இருந்தது. நடுவுல புலிகள் சரணாலயம்கூட உண்டு. அடுத்த நாள் காலையில 7 மணிக்குக் கிளம்பி, சாயந்திரம் 4 மணிக்கு ஜான்சி. அங்கே கார் பிரேக் டவுன் ஆயிடுச்சு. மூணு மணி நேரம் சர்வீஸ் ஸ்டேஷனிலேயே காலி. டில்லி போயிடணும்கிறது திட்டம். ஆனால், ஆக்ராவிலேயே தங்க வேண்டியதாயிடுச்சு.

மூன்று பெண்களின் மூவர்ணப் பயணம்!

தாஜ்மஹாலில் போட்டோ ஷூட். அது முடிச்சதும் டில்லி. அதிர்ஷ்டவசமா டிராஃபிக் இல்லை. ஹாயா டில்லியைத் தாண்டி ராஜ்புராவில் நைட் தங்கினோம்.கார் சில இடங்கள்ல பயமுறுத்த, திரும்பவும் சர்வீஸ் ஸ்டேஷன்; எலெக்ட்ரிகல் பிரச்னைகள்னு சரி செஞ்சுட்டு, கிளம்பி பதன்கோட் போய்ச் சேர்ந்தோம்.

மூன்று பெண்களின் மூவர்ணப் பயணம்!

காஷ்மீருக்குக் கொஞ்சம் முன்னாடி எங்க கார் நீளமான டிராஃபிக்ல சிக்கிடுச்சு. எங்க காரைப் பார்த்து போலீஸ் விசாரிக்க... விஷயத்தைச் சொன்னோம். எங்கள் காரை மட்டும் க்யூவில் இருந்து தனியே எடுத்து, ஸ்பெஷல் ரூட்டுல போகச் சொன்னாங்க. அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு ஸ்பெஷல் பாதுகாப்பு கான்வாய் முதல்ல போனது. பின்னர் நாங்க ராஜமரியாதையோட காஷ்மீருக்குள்ள நுழைஞ்சோம். அன்னைக்குத்தான் ஆகஸ்ட் 15...’’ - சிலிர்ப்புடன் சொன்னார் நீதா.

“பயணம், வாசிப்பு, இசை - இந்த மூணும் முக்கியம்னு சொல்வாங்க. இதுல அதிகம் கண்டுக்கொள்ளப்படாத விஷயம் பயணம்தான். அதுவும் பெண்களுக்கு சுத்தமா வாய்ப்பே இருக்காது. திருமணமான பிறகு பயணங்கள்ல பெண்களோடு பங்கு, அங்கேயும் வேலை செய்றதுதான். சாதாரண நாள்களைவிட அன்னைக்கு அதிகமா வேலை செய்வாங்க. அப்படி இல்லாம, ரிலாக்ஸா அவங்க மட்டும் போற பயணங்கள்தான் தேவை. நாங்க ‘ஒன்லி கேர்ள்ஸ் ட்ரிப்’ ஆர்கனைஸ் பண்ண விரும்புறோம். இந்தியாவுக்குள்ள எங்க போகணும்னு நினைச்சாலும் எங்ககிட்ட வரலாம். நாங்க பிளான் பண்ணித் தர்றோம்!” என்றார் பர்ணீதா.

ஒரு நல்ல பயணத்தை மைல்களால் அளக்கக் கூடாது. உடன் வரும் நண்பர்களால்தான் அளக்க வேண்டும். நண்பர்களுக்கு நம் வாழ்த்துகள்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு