Published:Updated:

ஆல்ட்டோ, இயானுடன் மோதும் ரெனோ க்விட் !

800 சிசி மினி கார்கள்தொகுப்பு: சார்லஸ்

பிரீமியம் ஸ்டோரி

மாருதி மற்றும் ஹூண்டாயின் ஏகபோக   ஏரியாவாக இருக்கும் 800சிசி கோட்டைக்குள், க்விட் கார் மூலம் களம் இறங்கியிருக்கிறது ரெனோ. ஸ்டைலான, அதிக இடவசதி கொண்ட காராக மட்டும் அல்லாமல், விலை குறைவான காராகவும் விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ரெனோ.

மாஸ் மார்க்கெட்டுக்குள் நுழைய மிகப் பெரிய தில் வேண்டும். காரணம், பைக்கில் இருந்து அடுத்த கட்டமாக முதல் கார் வாங்குபவர்கள்தான் 800சிசி கார் மார்க்கெட்டின் 90 சதவிகித வாடிக்கையாளர்கள். கார் ஸ்டைலாக இருக்க வேண்டும்; ஐந்து பேர் காருக்குள் வசதியாக உட்கார்ந்து பயணிக்க வேண்டும் என்பது எல்லாம் தாண்டி, சர்வீஸ் செலவுகள் மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் தேவை. பைக்குக்கு, பொதுவாக ஆண்டுக்கு 3,000 ரூபாய் வரை சர்வீஸ் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆல்ட்டோ வாடிக்கையாளர் ஓர் ஆண்டுக்கு சர்வீஸுக்கு 5,000 ரூபாய் வரை செலவு செய்வார். அதுதான் ஆல்ட்டோவின் பலம். சர்வீஸ் செலவு குறைவாகவும், ஸ்பேர் பார்ட்ஸுகளின் விலைகளும் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் பராமரிப்புச் செலவு குறைவாக இருக்கும். பராமரிப்புச் செலவு குறைவாக இருந்தால் மட்டுமே க்விட் வெற்றிபெற முடியும்.  ஆனால் ரெனோ, ஆல்ட்டோவைவிட க்விட் காரின் ஸ்பேர் பார்ட்ஸ் விலை 19 சதவிகிதம் குறைவு என்கிறது. இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆல்ட்டோ, இயானுடன் மோதும் ரெனோ க்விட் !
ஆல்ட்டோ, இயானுடன் மோதும் ரெனோ க்விட் !

கடந்த இதழில் க்விட் காரின் முழுமையான டெஸ்ட் ரிப்போர்ட் வெளியிட்டிருந்தோம். போட்டியாளர்களுடன் மோதும்போது, இது எப்படி?

டிஸைன்

புதிய ஆல்ட்டோ 800, பழைய காருடன் ஒப்பிடும்போது டிஸைனில் பல மாற்றங்கள் கண்டிருக்கிறது. முந்தைய காரைக் காட்டிலும் பெரிய பானெட், பெரிய ஹெட்லைட்ஸ், பெரிய வீல் ஆர்ச் மற்றும் தெளிவான பின் பக்க டிஸைன் என, பொதுவாக எல்லோருக்குமே பிடிக்கும் சிம்பிள் டிஸைனுடனேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு 800சிசி பட்ஜெட் கார் சிம்பிளாக மட்டும் இருக்க வேண்டியது இல்லை. ஸ்டைலாகவும் இருக்க முடியும் என நிரூபித்தது ஹூண்டாய் இயான். லேட்டஸ்ட்டாக ஹுண்டாய் ஃப்ளூயிடிக் டிஸைனுக்கு மாறிய பிறகும், அதன் ஃப்ளூயிடிக் அம்சங்களையும் சேர்த்துக்கொண்டு வந்த கார் இயான். ‘டால் பாய்’ ஹேட்ச்பேக் டிஸைன் என்றாலும், வளைவு நெளிவுகளோடு அழகாக டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது இயான். ஆனால், சிலருக்கு இது ஓவர் மேக்-அப் போட்ட கார்போல, நெகட்டிவ் இமேஜையும் ஏற்படுத்துகிறது.

ஆல்ட்டோ, இயானுடன் மோதும் ரெனோ க்விட் !
ஆல்ட்டோ, இயானுடன் மோதும் ரெனோ க்விட் !

இயான் - ஸ்டைலான பட்ஜெட் கார் என்றால், க்விட் - ஸ்டைலின் அடுத்த  கட்டத்தைக் காட்டியிருக்கிறது. எஸ்யுவி போன்று காரை வடிவமைத்திருப்பதே, மாஸ் மார்க்கெட்டில் பலருக்கும் பிடித்துவிடும். 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பது மாருதியின் பிரீமியம் காரான S-க்ராஸ் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ். வட்ட வடிவ பவர்ஃபுல் ஹெட்லைட்ஸ், அதன் அருகிலேயே இண்டிகேட்டர் லைட்ஸ், பனி விளக்குகளுக்கு மேல் க்ரோம் பட்டை, மிரட்டலான க்ரில் என க்விட்டின் முன்பக்கம் ‘செமயா இருக்கே... இது என்ன கார்?’ என எல்லோரையுமே திரும்பிப் பார்க்க வைக்கும் டிஸைனுடன் இருக்கிறது. இந்தியாவில் எஸ்யுவிகள் மிகவும் பிரபலமாகி வரும் இந்தக் காலகட்டத்தில், ஹேட்ச்பேக் காரையே எஸ்யுவி டிஸைனில் கொடுத்ததன் மூலம், மக்களின் பல்ஸை சரியாகப் பிடித்திருக்கிறது ரெனோ.

உள்ளே

4 லட்சம் ரூபாய் பட்ஜெட் கார் எனும் போது, காருக்குள் என்னவெல்லாம் இருக்கும் என எல்லோருக்குமே ஒரு ஐடியா இருக்கும். அது ஆல்ட்டோவுக்கு மட்டுமே பொருந்தும். ஆல்ட்டோ சிம்பிளாக இருக்க, இயானும், க்விட்டும் பட்ஜெட் கார்களின் இன்டீரியர் செட்-அப்பைப் பளபளப்பாக்கியிருக்கின்றன. ஆல்ட்டோவின் உள்பக்கம், 1990-களில் வெளிவந்த கார்களைப் போலவே இருக்க... ஹூண்டாயும், ரெனோவும் தங்கள் கார்களை எதிர்காலத்துக்கு ஏற்ற டிஸைனுடன் வடிவமைத்திருக்கின்றன. ஆல்ட்டோ சிறப்பம்சங்கள் அற்ற காராக மட்டும் இல்லாமல், குறுகிய உள்பக்கத்தையும் கொண்டிருக்கிறது. மூன்று கார்களின் ஃபிட் அண்டு ஃபினிஷில் மிகவும் பின்தங்கிய கார், மாருதி ஆல்ட்டோ.

ஆல்ட்டோ, இயானுடன் மோதும் ரெனோ க்விட் !
ஆல்ட்டோ, இயானுடன் மோதும் ரெனோ க்விட் !

தரம் மற்றும் டிஸைனில் பெஸ்ட்டான உள்பக்கத்தைக்கொண்ட கார் இயான். 10 லட்சம் ரூபாய் வெர்னாவில் உள்பக்கப் பாகங்களின் தரம் எப்படி இருக்கிறதோ, அதேபோல இயானிலும் தரத்தை நிலை நிறுத்தியிருக்கிறது ஹூண்டாய். சென்டர் கன்ஸோலின் டிஸைன் புதுமையாக இருப்பதோடு, இரட்டை வண்ண டேஷ்போர்டு காருக்கு பிரீமியம் லுக் கொடுக்கிறது. ஸ்விட்ச், லீவர், பட்டன் என அனைத்துமே நீடித்து உழைக்கக்கூடிய தரத்துடன் இருக்கின்றன. டோர் பாக்கெட்டுகளில் தண்ணீர் பாட்டில்கள் வைக்க இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இயானுடன் ஒப்பிடும்போது க்விட்டின் உள்பக்கம் மிரட்டலாக இல்லை. அதேசமயம், சாதாரணமாகவும் இல்லை. ஃபங்கியான டயல்கள், இரட்டை க்ளோவ் பாக்ஸ், வீக்கமாக இருக்கும் சென்டர் கன்ஸோல் என மாடர்னாக இருக்கிறது க்விட்டின் உள்பக்கம். டோர் பாக்கெட்களில் பாட்டில்கள் வைக்க இடம் இருப்பதோடு, முன் இருக்கைகளின் அருகில் கப் ஹோல்டர்களும் இருக்கின்றன. ஆனால், பவர் விண்டோஸ் ஸ்விட்ச்சுகள் டேஷ்போர்டிலேயே இருப்பது வசதியாக இல்லை. அதேபோல, ஏ.சி வேண்டாம் என்றால், ஏ.சி வென்ட்டை முழுவதுமாக மூட முடியுமே தவிர, குறைக்க முடியாது.

ஆல்ட்டோ, இயானுடன் மோதும் ரெனோ க்விட் !
ஆல்ட்டோ, இயானுடன் மோதும் ரெனோ க்விட் !

சிறப்பம்சங்கள்

எப்போதுமே சிறப்பம்சங்களில் ஹூண்டாய் தான் முதலில் இருக்கும். ஆனால், அதை டச் ஸ்கிரீன் மூலம் காலி செய்துவிட்டது ரெனோ. இயானின் விலை உயர்ந்த வேரியன்ட்டில் யுஎஸ்பி போர்ட், சிடி ப்ளேயர் வசதி மட்டுமே இருக்க, க்விட்டின் டச் ஸ்கிரீனில் மியூஸிக் ஆப்ஷனுடன் நேவிகேஷன் வசதியும் இருக்கிறது. மியூஸிக் சிஸ்டம், டச் ஸ்கிரீன் எல்லாம் இருந்தாலும் மூன்றுமே பட்ஜெட் கார்கள் என்பதால், இல்லாத விஷயங்கள் பல இருக்கின்றன. எந்த காரிலுமே பின்பக்கம் பவர் விண்டோஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார், டிரைவர் இருக்கையை உயர்த்தும் அட்ஜஸ்ட் என எதுவுமே இல்லை. இயானில் மேலும் கீழும் ஸ்டீயரிங் வீலை அட்ஜஸ்ட் செய்யும் வசதி இருக்கிறது. ஆல்ட்டோவில் பனி விளக்குகள் இல்லை. க்விட்டில் ஆட்டோமேட்டிக்காக உள்ளே இழுக்கும் சீட் பெல்ட் இல்லை. இது மற்ற இரண்டு கார்களிலும் இருக்கின்றன. மேலும், க்விட்டில் பக்கவாட்டுக் கண்ணாடிகள் சரியான பொசிஷனில் இல்லை என்பதோடு, உள்ளே இருந்து அட்ஜஸ்ட் செய்ய முடியாதபடி இருக்கின்றன.

இடவசதி

பட்ஜெட் எனும்போதே உள்ளே அதிக இடவசதியை எதிர்பார்க்க முடியாது. மேலும், எதிர்பார்த்தாலும் கிடைக்காது என்பதே உண்மை. ஆல்ட்டோவின் பின் இருக்கைகளில் உட்காருபவர்களுக்கு ஹெட்ரூம் அதிகமாக இருக்கிறது. ஆனால், அதைத் தாண்டி மற்ற எல்லா விஷயங்களிலுமே இடநெருக்கடி அதிகம் கொண்ட கார் ஆல்ட்டோ. மூன்று பேர் பின் இருக்கைளில் உட்கார்ந்தால், கிட்டத்தட்ட ஒருவர் மீது ஒருவர் உட்காருவதுபோலத்தான் இருக்கும். இருக்கைகள் மிகவும் தாழ்வாக வைக்கப்பட்டிருப்பதால், கிட்டத்தட்ட தரையில் உட்கார்ந்திருப்பது போன்ற உணர்வைத் தருகிறது ஆல்ட்டோ. டிக்கியிலும் இடவசதி குறைவு. 177 லிட்டர் மட்டுமே டிக்கியில் இடம் உள்ளது.

ஆல்ட்டோ போலவே இயானில் உள்பக்க இடவசதி குறுகலாக இருந்தாலும், கால்களை நீட்டி உட்கார லெக்ரூம் அதிகம். டால் பாய் டிஸைன் என்பதால், இருக்கைகள் உயரமாக வைக்கப்பட்டுள்ளன. முன்பக்க இருக்கைகள், விலை அதிகமான கார்களில் இருப்பதுபோல் சொகுசாகவும் அதிக இடவசதியுடனும் இருக்கின்றன. ஆனால், கண்ணாடிகள் சிறிதாக இருப்பது நாம் மிகவும் சின்ன காரில் உட்கார்ந்திருக்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

வெளிப்பக்கம் இருந்து பார்ப்பதற்குப் பெரிதாக இருக்கும் க்விட், உள்ளேயும் மற்ற கார்களைவிட அதிக இடவசதி கொண்டதாக இருக்கிறது. இதனால், மற்ற கார்களைவிட க்விட்டில் பயணிகள் வசதியாக உட்காரலாம். மூன்று கார்களில் க்விட்டில் மட்டுமே ஐந்து பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும். டிக்கி 300 லிட்டர் கொள்ளளவுகொண்டது என்பதால், பெரிய கார்களைப் போன்று அதிகப் பொருட்களை வைத்துக்கொள்ள முடியும். ஆனால், இயானின் இருக்கைகள்போல க்விட்டின் இருக்கைகள் சொகுசாக இல்லை.

ஆல்ட்டோ, இயானுடன் மோதும் ரெனோ க்விட் !

இன்ஜின்

க்விட்டைத் தவிர, மற்ற இரண்டு கார்களிலும் 1,000 சிசி இன்ஜின் ஆப்ஷனும் இருக்கிறது. க்விட்டிலும் அடுத்த ஆண்டு 1,000 சிசி இன்ஜின் வரப்போகிறதாம். இப்போதைக்கு 800 சிசி இன்ஜின் மட்டுமே என்பதால், இங்கே போட்டி போடும் அனைத்துமே 800 சிசி கார்கள்தான். 814 சிசி திறன்கொண்ட ஹூண்டாய் இயான், ரெனோ க்விட்டைவிட பவர்ஃபுல்லாகவும், அதிக டார்க் கொண்டதாகவும் இருக்கிறது. ஆனால், இயானைவிட 50 கிலோ எடை குறைவு என்பது க்விட்டின் பலம்.

ஓகே. இப்போது மூன்று கார்களில் 0-100 கி.மீ வேகத்தில் எது வேகமான கார்? ஆல்ட்டோதான் வேகமான கார். ஆனால், வேக வித்தியாசம் மிக மிகக் குறைவு. 100 கி.மீ வேகத்தை ஆல்ட்டோ 16.92 விநாடிகளில் தொடுகிறது. இயான் இந்த வேகத்தைத் தொட இதைவிட 0.7 விநாடிகள் அதிகமாகவும், க்விட் 1 விநாடி அதிகமாகவும் எடுத்துக்கொள்கிறது. மற்ற இரண்டு கார்களைவிடவும் எடை அதிகமான, பவர் குறைவான கார், ஆல்ட்டோ. ஆனால், ஆரம்பம் முதல் இறுதி வரை பவர் டெலிவரி மிகச் சீராக இருப்பது ஆல்ட்டோவில்தான். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பழைய இன்ஜின் என்றாலும், இப்போதும் நவீன தொழில்நுட்பம் கொண்ட இன்ஜின்களோடு இது போட்டி போடுகிறது என்பதே ஆச்சரியம்தான். ஆனால், இன்ஜின் சத்தம் காருக்குள் அதிகமாகக் கேட்கிறது.

ரெனோ க்விட்டின் மிட் ரேஞ்சில் பவர் இல்லை. இதனால், அதிக ஆக்ஸிலரேஷன் கொடுத்து, அதிக வேகத்துக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. க்விட் மூன்று சிலிண்டர் இன்ஜின் கொண்டது என்பதால், இன்ஜின் சத்தம் காருக்குள் அதிகமாகக் கேட்கிறது. வெளிச்சத்தமும் காருக்குள் அதிகமாகக் கேட்கிறது.

ஆல்ட்டோ, இயானுடன் மோதும் ரெனோ க்விட் !

மூன்று கார்களில் மிகவும் மந்தமான கார், இயான்தான். பவர் டெலிவரி சீராக இல்லாததால், திடீர் திடீர் என பவர் வரும்போதெல்லாம் ஒரு ஜெர்க்கை உணர முடியும். மூன்று கார்களில் இயக்குவதற்குச் சுலபமான கியர்பாக்ஸை கொண்டிருப்பது ஆல்ட்டோதான். கியர்களுக்கு இடையே இடைவெளியும் குறைவாக இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் அனைத்து கார்களிலும் இருக்கிறது. க்விட்டில் ரிவர்ஸ் கியர் முதல் கியருக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது.

கையாளுமை

பட்ஜெட் கார்கள் என்பதால், இந்த கார்களின் விலை குறைந்த வேரியன்ட்டுகளில் பொதுவாக பவர் ஸ்டீயரிங் இருக்காது. இதனால், எல்லா கார்களுமே குறைந்த எடையுடன் தயாரிக்கப்படும். பவர் ஸ்டீயரிங் கொண்ட மாடலை வாங்கும்போது, இது சிக்கலாகிவிடும். காரணம், ஏற்கெனவே ஈஸியாகத் திரும்பும்; பவர் ஸ்டீயரிங்கைப் போட்டதும் டபுள் பெர்ஃபாமென்ஸைக் கொடுக்கும். இதனால், ஸ்டீயரிங்கை வளைத்து முடித்ததும், மீண்டும் பழைய பொசிஷனுக்கு வர வேண்டும். இதில் க்விட், இயானின் ஸ்டீயரிங் மோசம். திரும்பி தானாக வராது. ஆல்ட்டோ ஓகே ரகம்.

ஓட்டுதல் தரத்தில் க்விட்தான் நம்பர் ஒன். இயானில் சின்னச் சின்ன மேடு பள்ளங்களையும் காருக்குள் உணர முடியும். ஆல்ட்டோவில் இது பரவாயில்லை. மேடு, பள்ளங்களைச் சமாளிப்பதில் விலை உயர்ந்த கார்களுக்குப் போட்டியைக் கொடுக்கிறது க்விட். கிரவுண்ட் கிளியரன்ஸும் அதிகம் என்பதால், ஸ்பீடு பிரேக்கர்களைக் கண்டு அஞ்ச வேண்டியது இல்லை. நெடுஞ்சாலைகளில் ஸ்டேபிளான காராகவும் இருக்கிறது க்விட்.

ஆல்ட்டோ, இயானுடன் மோதும் ரெனோ க்விட் !

ஸ்டைலான, அதேசமயம் பிரீமியமான காராக இருக்கிறது ஹூண்டாய் இயான். மற்ற கார்களைவிட விலை அதிகமான காராக இருந்தாலும், கொடுக்கும் விலைக்கு ஏற்ற வசதிகளும் இருக்கின்றன. ஆனால், பெர்பாமென்ஸும் ஓட்டுதல் தரமும்தான் இயானைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன.

இடவசதி இல்லை; இருக்கைகள் சொகுசாக இல்லை; சிறப்பம்சங்கள் இல்லை; ஸ்டைலாகவும் இல்லை என்றாலும், மிகச் சிறந்த மெக்கானிக்கல் பேக்கேஜைக் கொண்டிருக்கிறது ஆல்ட்டோ. பெர்ஃபாமென்ஸில் முதல் இடத்தில் இருப்பதோடு, ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா... இவன் ரொம்ப நல்லவன்’ எனச் சொல்லும் அளவுக்கு, எந்தச் சோதனைக்கும் தயாராக இருக்கிறது சுஸூகியின் இன்ஜின்.

முதன்முறையாக ஆல்ட்டோவுக்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் காராக வந்திருக்கிறது க்விட். ஸ்டைலான, இடவசதி அதிகம் கொண்ட, அதிக மைலேஜ் தரும் இன்ஜினையும் கொண்டிருக்கிறது க்விட். விலையும் குறைவு என்பது க்விட்டின் மிகப் பெரிய பலம். இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மூன்று கார்களில் சிறந்த ஆல் ரவுண்டராக இருக்கிறது க்விட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு