Published:Updated:

சுஸூகியின் முதல் கார்!

MARUTI S - CROSSடெஸ்ட் ரிப்போர்ட் / மாருதி S-க்ராஸ்சார்லஸ், சுரேன், பத்ரி, படங்கள்: சார்லஸ்

ந்தியாவில், இந்தியர்களுக்கு இமேஜ் ரொம்ப முக்கியம். ‘என்னைப்போல இந்த உலகில் யாரும் இல்லை; நான் ஸ்பெஷல்’ என்று எல்லோருமே பிரத்யேகமாக ஒரு இமேஜை உருவாக்க விரும்புகிறார்கள்.

ஐபோனைக் கொண்டாடுவார்கள்; 60 ஆயிரம் ரூபாய் போனை வாங்க க்யூ கட்டி நிற்பார்கள்; ஆன்லைனில் ஆள் பிடித்து வாங்குவார்கள். ஆனால், அந்த போனில் இருக்கும் அத்தனை வசதிகளையும் கொண்ட, விலை குறைவான - எவ்வளவு சிறந்த போன் வைத்திருந்தாலும், அதற்கு இரண்டாம் தர மரியாதைதான் கொடுப்பார்கள். இதுவேதான் இப்போது கார்கள் விஷயத்திலும் தொடர்கிறது.

சுஸூகியின் முதல் கார்!

மாருதி சுஸூகி, இந்திய கார் நிறுவனம் அல்ல. ஜப்பானைச் சேர்ந்த இந்த நிறுவனத்துக்கு, ‘இந்தியாவில் விலை மலிவான கார்களை விற்பனை செய்யும் நிறுவனம்’ என்கிற இமேஜ் விழுந்துவிட்டது. 6 லட்சம் ரூபாய்க்குள் ஒரு கார் வாங்க வேண்டுமா? மாருதி பக்கம் வருவார்கள். 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கார் வாங்க வேண்டுமா? அது எப்படிப்பட்ட காராக இருந்தாலும் மாருதி பக்கம் கூட்டம் குறையும். இந்த இமேஜை மாற்றத் துடித்துக்கொண்டிருக்கிறது மாருதி. மக்கள் மனதில் மாருதிக்குப் புது அடையாளம் கொடுக்க, நெக்ஸா (New EXcluisve Automotive Experience) என்ற பெயரில் சொகுசு கார்களை விற்பனை செய்வதுபோல, பிரமாண்ட டீலர்ஷிப்புகளைத் திறந்து, அதில் பிரீமியம் கார்களை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறது மாருதி.

மாருதியின் நெக்ஸா ஷோரூமுக்கு, முதல் காராக வந்து சேர்ந்திருக்கும் கார், S-க்ராஸ். 17 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்ததால், மாருதி எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகவில்லை. இதனால், 1 லட்சம் வரை டிஸ்கவுன்ட் எல்லாம் கொடுத்தது மாருதி. விலை மட்டும்தான் இதன் பிரச்னையா? காரின் பலம் என்ன, பலவீனம் என்ன? உண்மையிலேயே மாருதியின் பிரீமியம் காரா இது? 5,000 கி.மீ வரை ஓட்டி S-க்ராஸை டெஸ்ட் செய்தோம்.

சுஸூகியின் முதல் கார்!

இமேஜ் மார்க்கெட்

இந்தியாவில் இப்போது விறுவிறுவென வளர்ந்துவரும் மார்க்கெட், மினி எஸ்யுவி/கிராஸ்ஓவர் மார்க்கெட்தான். 2012-ம் ஆண்டு விற்பனைக்கு வந்த ரெனோ டஸ்ட்டர் விற்பனையில் உச்சம் தொட... மற்ற கார் தயாரிப்பாளர்கள் விழித்துக் கொண்டனர். எக்கோஸ்போர்ட், டெரானோ, குவான்ட்டோ, அவென்ச்சுரா, க்ரெட்டா என எல்லோருமே எஸ்யுவி/கிராஸ்ஓவர் கார்களோடு வர... மாருதியும் S-க்ராஸ் என்ற பெயரில் கிராஸ்ஓவர் காரைக் கொண்டுவந்திருக்கிறது. மாருதியின் இந்த கார் - டஸ்ட்டர், டெரானோ, க்ரெட்டா கார்களுடன் போட்டி போடும் எஸ்யுவி கார் அல்ல. இது, முழுக்க முழுக்க கிராஸ்ஓவர் கார்தான்.

டிஸைன்

S-க்ராஸை வெளியில் இருந்து பார்க்கும் போது i20 ஆக்டிவ், அவென்ச்சுரா போன்ற சின்ன காரில் இருந்து முளைத்த, கொஞ்சம் பெரிய கார்போல இருக்கிறது. ஆனால், உண்மையில் இது ரெனோ டஸ்ட்டரைவிட 15 மி.மீ மட்டுமே நீளம் குறைவான கார். கிராஸ்ஓவர் கார் என்பதை உறுதிப்படுத்த உயரமான காராக இருப்பதோடு, 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும் கொண்டிருக்கிறது.

சுஸூகியின் முதல் கார்!

முன்பக்க கிரில்லின் மீது வைக்கப் பட்டிருக்கும் இரட்டை க்ரோம் பட்டை,  அதன் நடுவில் சுஸூகியின் க்ரோம் லோகோ, பனி விளக்குகளுக்கு க்ரோம் அவுட்லைன் ஆகியவை காரின் முன்பக்கத்தை அழகுபடுத்துகின்றன. முதன்முறையாக இந்த செக்மென்ட்டில் எந்த காரிலும் இல்லாத Bi-Xenon புரொஜெக்டர் ஹெட்லைட்ஸைக் கொண்டிருக்கிறது. ஆனால், ஹெட்லைட்டுக்குக் கீழே இருக்கும் LED விளக்குகள், டே டைம் ரன்னிங் லைட்ஸ் இல்லை. ஆட்டோமேட்டிக் சென்ஸார் வைப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அலாய் வீல்கள் பிரமாண்டமாக இல்லாமல், வீல் கேப் போலத் தெரிகிறது.

மொத்தத்தில் S-க்ராஸ் உற்றுப் பார்க்க வைக்கும் டிஸைனைக்கொண்ட கார் இல்லை. அதேசமயம், பிடிக்காமல் வெறுக்க வைக்கும் டிஸைனும் இல்லை.
1,275 கிலோ எடை கொண்டது, 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்கொண்ட மாடல். இது, ரெனோ டஸ்ட்டரைவிட எடை அதிகம். அதனால், பில்டு குவாலிட்டியில் ஜப்பான் கார்போல இல்லாமல், ஐரோப்பிய கார்போல ஸ்ட்ராங்காக இருக்கிறது. 
 
உள்ளே

கதவுகளை அகலமாகத் திறக்க முடிவதால், காருக்குள்ளே ஏறுவதும் இறங்குவதும் ஈஸியாக இருக்கிறது. உள்ளே, முழுக்க முழுக்க கறுப்பு வண்ண டேஷ்போர்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்டர் கன்ஸோலில் இடம்பிடித்திருக்கும் டச் ஸ்கிரீன், பிடித்து ஓட்டுவதற்கு லாவகமான ஸ்டீயரிங் வீல், லெதர் இருக்கைகள் ஆகியவை, இதைக் கொஞ்சம் விலை அதிகமான கார் என்பதுபோலக் காட்டுகின்றன. ஆனால், வெளிப்பக்கம் போலவே உள்பக்கத்திலும் வியக்க வைக்கும் எந்தச் சிறப்பம்சமும் இல்லை. விண்ட் ஸ்கிரீன் மற்றும் கதவுக் கண்ணாடிகள் மிகவும் பெரிதாக இருப்பதால், காருக்குள் அதிக இடம் இருப்பது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பாகங்களின் தரம் சிறப்பாக இருப்பதோடு, ஸ்விட்ச், கன்ட்ரோல் லீவர்களும் தரமாக இருக்கின்றன. 4 லட்சம் ரூபாய் செலெரியோ காரில் இருக்கும் அதே ஸ்டீயரிங் வீல்தான் என்றாலும், கன்ட்ரோல் பட்டன்கள் மற்றும்  ஸ்டீயரிங் வீலின் மீது சுற்றப்பட்டிருக்கும் லெதர் மூலம் பிரீமியமாகத் தெரிகிறது. கதவுகளில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்விட்ச் பேட், விலை குறைவான மாருதி கார்களில் இருப்பவைதான். கண்ணாடிகளை மூட மறந்துவிட்டு காரை ஆஃப் செய்துவிட்டால், மீண்டும் ஆன் செய்தபிறகுதான் கண்ணாடிகளை மூட முடியும். பிரீமியம் கார் என்று சொல்லி, மற்ற மாருதி கார்களோடு இந்த காரை விற்பனை செய்ய விரும்பாத மாருதி, இது போன்ற விஷயங்களை எல்லாம் சேர்ந்திருந்தால், பிரீமியம் என்ற சொல்லை நியாயப்படுத்த முடியும்.

சுஸூகியின் முதல் கார்!

சீட்டிங் பொசிஷன் உயரமாக இருப்பதால், பெரிய காரை ஓட்டுகிறோம் என்கிற உணர்வு ஏற்படுவதோடு, வெளிச்சாலையை முழுமையாகப் பார்த்து ஓட்ட முடிவதால், தைரியம் கிடைக்கிறது. சீட்டின் உயரத்தை அதிகரிக்க முடியும் என்பதுடன், ஸ்டீயரிங் வீலை மேலும் கீழும் - முன்னும் பின்னும் நம் வசதிக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும். மிகவும் உயரமானவர்கள் உட்கார்ந்தாலும் கை, கால்களை நீட்டி மடக்கி உட்காரவும், தலை இடிக்காத வகையில் அதிக ஹெட்ரூமும் கொண்டிருக்கிறது S-க்ராஸ். ரிவர்ஸ் கேமரா மற்றும் பார்க்கிங் சென்ஸார்கள் துல்லியமாக இருப்பதால், ரிவர்ஸ் எடுக்க பயப்படத் தேவை இல்லை. க்ரூஸ் கன்ட்ரோல் பட்டன் ஸ்டீயரிங் வீலிலேயே இடம்பெற்றிருக்கிறது. டயல்கள் பெரிதாக இருப்பதோடு, எண்கள் தெளிவாகத் தெரிகின்றன. கீ-லெஸ் என்ட்ரி வசதியும் உண்டு.

காருக்குள் பொருட்கள் வைத்துக் கொள்ள அதிக இடம் தரப்பட்டுள்ளது.  நான்கு கதவுகளிலுமே 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் வைக்க இடம் இருக்கிறது. முன் பக்க இருக்கைகளுக்கு நடுவே இருக்கும் மூடும் வசதிகொண்ட ஆர்ம்ரெஸ்ட்டில் நோட் பேட், பேப்பர் போன்ற பொருட்கள் வைத்துக்கொள்ள இடம் இருப்பதோடு, யுஎஸ்பி போர்ட் வசதியும் இருக்கிறது. ஆனால், ஹூண்டாய் கார்களில் இருப்பதுபோன்ற கூல்டு க்ளோவ் பாக்ஸ் வசதி இல்லை.

S-க்ராஸ் காரை பிரீமியம் கார் என்று சொல்வதற்காக, முக்கியமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பம்சம் 7 இன்ச் டச் ஸ்கிரீன். இது யூஸர் ஃப்ரெண்ட்லியாக இருக்கிறது. சில கார்களில் இருக்கும் டச் ஸ்கிரீனை எப்படி இயக்குவது என்று புரியவே பல மாதங்கள் ஆகும். அதுபோல இல்லாமல் ஈஸியாகவும், டச் திறன் துல்லியமாகவும் இருக்கிறது. ஆனால், டச் ஸ்கிரீன் கொண்ட விலை உயர்ந்த வேரியன்ட்டில் சிடி ப்ளேயர் வசதி இல்லை.

சுஸூகியின் முதல் கார்!

பின்பக்க இருக்கைகளில் மூன்று பேர் வசதியாக உட்காரும் அளவுக்கு இடம் இருக்கிறது. கால்களை நீட்டி மடக்கி வசதியாக உட்கார்ந்து நீண்ட தூரம் பயணிக்க ஏதுவாக, இடவசதி அதிகமாக இருக்கிறது. ஆனால், பின்பக்கப் பயணிகளைக் குளிர்விக்க ஏ.சி வென்ட் இல்லை. 6 லட்சம் ரூபாய் கிராண்ட் i10 காரில் இருக்கும் இந்த வசதி, 17 லட்சம் ரூபாய் S-க்ராஸில் இல்லை.
353 லிட்டர் கொள்ளளவுகொண்ட S-க்ராஸில் ஒரு பயணத்துக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் கொண்டுசெல்லும் அளவுக்கு இடம் இருக்கிறது. இது தவிர, டிக்கியில் இரு ஓரங்களிலும் பெரிய பாட்டில்கள் வைத்துக்கொள்ளவும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்பேர் வீல் டிக்கிக்கு அடியில் வைக்கப்பட்டுள்ளது.

இன்ஜின்

S-க்ராஸில் டீசல் இன்ஜின்கள் மட்டுமே! 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் ஆகிய இரண்டுமே, ஃபியட்டின் டீசல் இன்ஜின்கள்தான். 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் இந்தியாவுக்குப் புதுசு. ஃபியட் கார்களிலேயே இல்லாத இந்த இன்ஜின், மாருதி காருக்குள் இடம் பிடித்திருக்கிறது. 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட S-க்ராஸ் காரின் டாப் வேரியன்ட்டுக்கும், 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்கொண்ட காரின் டாப் வேரியன்ட்டுக்கும் கிட்டத்தட்ட 3.50 லட்சம் ரூபாய் விலை வித்தியாசம். இதில் இருந்தே ஃபியட்டின் பவர்ஃபுல் டீசல் இன்ஜினுக்கும், 6-ஸ்பீடு கியர்பாக்ஸுக்கும்தான் இந்தக் கூடுதல் விலை என்பதைப் புரிந்துகொள்ளலாம். மேலும், 1.3 லிட்டர் இன்ஜின் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. ஆனால், 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இங்கே அசெம்பிள் செய்யப்படுகிறது.

ஃபியட்டின் 1,598 சிசி திறன்கொண்ட இந்த இன்ஜின், அதிகபட்சமாக 3,750 ஆர்பிஎம்-ல் 118bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. ஸ்டார்ட் பட்டனை அழுத்தியதும் டீசல் இன்ஜின் என்பதை உறுதிப்படுத்த சின்ன அதிர்வுகளோடும், சத்தத்தோடும் ஆரம்பமாகிறது S-க்ராஸ். வெர்னாவில் இருக்கும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்போல, ஃபியட்டின் இன்ஜின் சத்தம் இல்லாமல் இல்லை. அதேசமயம், ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ அளவுக்கு அதிக சத்தம் போடும் இன்ஜினாகவும் இல்லை.

1.6 லிட்டர் டீசல் இன்ஜின், டார்க்கில் ராஜா. 32.63kgm டார்க் என்பது விலை உயர்ந்த கார்களான ஜெட்டா, ஆக்டேவியா கார்களில் இருக்கும் டார்க். அதனால், பெர்ஃபாமென்ஸில் மிரள வைக்கிறது S-க்ராஸ் டீசல். ஆரம்பத்தில் மிகச் சின்ன அளவுக்கு டர்போ லேக் உணர முடிகிறது. ஆனால், இது டிராஃபிக்கில் ஓட்டும்போது எரிச்சலை ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை. டர்போ லேக் தாண்டிவிட்டால், அதன் பிறகு பெர்ஃபாமென்ஸில் மிரட்டும் காராக மாறிவிடுகிறது S-க்ராஸ். அதிக வேகத்தில் ஓட்டும்போது அதிர்வுகளோ, அதிக சத்தமோ இல்லாமல் இருக்கிறது.

6-வது கியரில் 100 கி.மீ வேகத்துக்கு மேல் க்ரூஸ் செய்துகொண்டு ஓட்ட மிகச் சிறப்பாக இருக்கிறது. 6-வது கியரில் அதிகபட்ச வேகமாக, மணிக்கு 186 கி.மீ வேகத்தைத் தொட முடிகிறது. 0-100 கி.மீ வேகத்தை 11.50 விநாடிகளில் தொடுகிறது. 

சுஸூகியின் முதல் கார்!

கையாளுமை

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையிலும் ஜப்பான் காராக இல்லாமல், ஐரோப்பிய கார் போலவே இருக்கிறது S-க்ராஸ். மேடு பள்ளங்களை மிகச் சுலபமாகச் சமாளிக்கிறது S-க்ராஸின் சஸ்பென்ஷன். 160 கி.மீ வேகத்தில் செல்கிறோம் என்பது ஸ்பீடோ மீட்டரைப் பார்த்தால்தான் தெரிகிறது. வெளிச்சத்தமோ, டயர் சத்தமோ காருக்குள் கேட்கவில்லை. காரின் ஸ்டெபிலிட்டியும் மிகப் பிரமாதமாக இருக்கிறது. வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்டத் தூண்டும் வகையில் கையாளுமை அமைந்திருக்கிறது. பாடி ரோல் இருந்தாலும், தலை சுற்ற வைக்கும் அளவுக்கு இல்லை.

பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸும் மிகச் சிறப்பாக இருக்கிறது. 80 கி.மீ வேகத்தில் சென்று சடன் பிரேக் அடித்தால், 26.96 மீட்டருக்குள் கார் முழுவதுமாக நின்றுவிடுகிறது.

மைலேஜ்

எடை அதிகமான, பவர்ஃபுல் இன்ஜின்கொண்ட S-க்ராஸ் அதிக மைலேஜைத் தருகிறது. நகருக்குள்

சுஸூகியின் முதல் கார்!

லிட்டருக்கு 12.1 கி.மீ, நெடுஞ்சாலையில் 17.1 கி.மீ மைலேஜ் அளிக்கிறது.

பெட்ரோல் இன்ஜின் இல்லாமல், மாருதியின் பெயர் இல்லாமல், இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் சுஸூகியின் முதல் கார் S-க்ராஸ். பார்ப்பதற்குப் பிரமாண்டமான, மிரட்டலான காராக இல்லை. காரின் உள்பக்கமும் 17 லட்ச ரூபாய் விலையை நியாயப்படுத்தவில்லை. ஆனால், பவர்ஃபுல் டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது. இந்த டீசல் இன்ஜின், வேகப் போட்டிகளில் வெற்றிபெறுவதோடு மட்டும் அல்லாமல், மைலேஜும் அதிகம் தருகிறது. ‘விலை எனக்குப் பிரச்னை இல்லை. மாருதியின் ஸ்பேர் பார்ட்ஸ் விலை குறைவாக இருக்கும்; சர்வீஸ் நெட்வொர்க் அதிகம்’ என்று சொல்பவர்களுக்கு S-க்ராஸ் மிகச் சரியான கார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு