Published:Updated:

M என்றால் மிரட்டல்!

ட்ராக் டிரைவ் / பிஎம்டபிள்யூ Mசார்லஸ்

பிரீமியம் ஸ்டோரி

பிஎம்டபிள்யூ கார்களில் M சீரிஸ் என்பது மோட்டார் ஸ்போர்ட்ஸ்... அதாவது, பெர்ஃபாமென்ஸுக்கு என ட்யூன் செய்யப்படும் இன்ஜின்களைக்கொண்ட கார்களைக் குறிக்கும். X5 மற்றும் X6 கார்களில் அதிக பெர்ஃபாமென்ஸை அளிக்கும் M சீரிஸ் மாடல்களை சென்னையில் அறிமுகப்படுத்தியது பிஎம்டபிள்யூ. மோட்டார் ஸ்போர்ட்ஸ் கார்களை ரேஸ் டிராக்கில் டெஸ்ட் செய்வதுதானே சரியாக இருக்கும்? 12 கார்னர்களைக் கொண்ட இந்தியாவின் முதல் ரேஸ் டிராக்கான, மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் டிராக்கில் தயாராக இருந்தோம்.

முதல் இரண்டு லேப் நம்மை உட்கார வைத்தும், அடுத்த இரண்டு லேப் நம்மை டெஸ்ட் செய்யச் சொல்லியும் கார்களைக் கொடுத்தார்கள். ரேஸ் டிராக்கில் கார் ஓட்டுவது என்பது சுலபமான விஷயம் அல்ல. வளைவுகளில் வேகமாகத் திருப்பும்போது, ரேஸ் டிராக்கைவிட்டு விலகிப் போகாமல் இருக்க... அழுத்தமாக பிரேக்கைப் பிடித்து, அதேசமயம் ஸ்டீயரிங்கைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, ஆக்ஸிலரேஷனையும் விட்டுவிடாமல் ஓட்ட வேண்டும். சவாலான, அதே சமயம் த்ரில்லான இந்த விளையாட்டு, யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்?

X5, X6 ஆகிய இரண்டு கார்களிலுமே M5 மற்றும் M6 கார்களில் இருக்கும் 4.4 லிட்டர் திறன்கொண்ட, ட்வின் டர்போ, V8 இன்ஜின் இடம் பிடித்திருக்கிறது. இது, அதிகபட்சமாக 567bhp சக்தியையும், 76.4kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 0 - 100 கி.மீ வேகம் எவ்வளவு என்கிறீர்களா? இரண்டு கார்களுமே 4.2 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தைக் கடக்கின்றன.

M என்றால் மிரட்டல்!

பட்டனைத் தட்டி ஸ்டார்ட் செய்ததுமே, ஒரு ரோலர் கோஸ்ட்டர் சாகசத்துக்குத் தயாராகிவிட்டோம் என்பதுபோல, இதயத் துடிப்பை எகிறச் செய்கிறது எக்ஸாஸ்ட் சத்தம். 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் துல்லியமாக இல்லை. கியர்கள் மாறும்போது ஜெர்க்காகும் உணர்வைத் தருகிறது. ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷனை - கம்ஃபர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய மூன்று மோடுகளுக்கு ஏற்ற வகையில் மாற்றி வைத்துக்கொண்டு ஓட்டலாம். 2,300 கிலோ எடைகொண்ட X6 கார் எஸ்யுவி என்பதால், திருப்பங்களில் வளைத்துத் திருப்பி ஓட்டும்போது பாடி ரோல், அதாவது கார் திரும்பும்போது நம் உடலுடன் சேர்ந்து திரும்புவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. முன்பக்கம் 285/40 R20 டயர்களையும், பின்பக்கம் 325/40 R20 டயர்களையும் கொண்டிருப்பதால், செம கிரிப்! எந்த வேகத்தில் சென்று பிரேக் அடித்தாலும், பிரேக் பிடித்த ஒரு சில விநாடிகளில் கார் முழுவதுமாக நின்றுவிடுகிறது.

M என்றால் மிரட்டல்!

இப்போது X5 M

X6 M காரைவிட 10 கிலோ எடை அதிகம் என்பதோடு, 95 மிமீ உயரம் அதிகமான கார் X5 M. ஆனால், செம வேகமாக இருக்கிறது X5 M. 6 காலிப்பர்ஸ் கொண்ட முன்பக்க 395 மிமீ டிஸ்க் பிரேக் செம ஷார்ப்! பெர்ஃபாமென்ஸுக்கு என்று தயாரிக்கப்பட்ட, அதிக பவர் மற்றும் அதிக திறன்கொண்ட இந்த கார்களின் பெர்ஃபாமென்ஸ், எதிர்பார்த்ததுபோலவே தெறிக்கவிடுகிறது.

இரண்டு மாடல்களில் X6 M கார்தான் பார்ப்பதற்கு பிரமாண்டமாகவும், தனித்துவ மான டிஸைனுடனும் இருக்கிறது. இரண்டு கார்களிலுமே முன்பக்கம் இடம் பிடித்திருக்கும் ஜம்போ சைஸ் ஏர்டேம், மிரட்டலாக இருக்கின்றன. 20 இன்ச் வீல்கள் இதில் இடம் பிடித்திருந்தாலும் வேண்டும் என்றால், இதைவிட பெரிய 21 இன்ச் வீல்களுக்கும் ஆப்ஷன் உண்டு. சாதாரண X5 மற்றும் X6 கார்களில் இருந்து இந்த M கார்களை வேறுபடுத்திக் காட்ட ஸ்போர்ட்டியான 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் இடம் பெற்றிருக்கின்றன. இடவசதியைப் பொறுத்தவரை சாதாரண கார்களுக்கும், M சீரிஸ் கார்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதனால், உயரமானவர் களுக்கு X6 M காரில் ஹெட்ரூம் போதுமானதாக இருக்காது.

M என்றால் மிரட்டல்!

‘என்னுடைய காரில் பவர் அதிகம்; பெர்ஃபாமென்ஸ் மிரட்டும்’ என தனித்து நிற்க விரும்புபவர்களுக்கான கார்கள் இவை. மற்றவர்களுக்கு இது கனவு கார்கள்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு