Published:Updated:

i20 - யை அசைக்க வரும் பெலினோ!

MARUTI SUZUKI BALENO Vs HYUNDAI ELITE i20ஒப்பீடு / மாருதி சுஸூகி பெலினோ vs ஹூண்டாய் i20தொகுப்பு: வேல்ஸ்

பிரீமியம் ஸ்டோரி

பொதுவாக, பிரீமியம் ப்ளஸ் செக்மென்ட் கார் வாங்க விரும்புபவர்கள் - தாராளமான இடம், அதிக சக்தி, ஸ்டைல் என்று அனைத்துக்கும் ஆசைப்படுவார்கள். இது ஓரளவு அல்ல, பெரிய உண்மை! 89bhp சக்திகொண்ட பெலினோ வரப்போகிறது என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு, மாருதி கொடுத்திருப்பது 74bhp சக்தியைக் கொடுக்கும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின். ஆனால், பெலினோ போட்டி போடப் போகும் ஹூண்டாய் i20 காரில், இதைவிடக் கூடுதலாக 15bhp சக்திகொண்ட இன்ஜின் இருக்கிறது. அதனால்தான் 0 - 80 வேகத்தை இரண்டு கார்களுமே ஒரே நேரத்தில் கடந்தாலும் 0 - 100 வேகத்தை i20 பெலினோவைவிட சீக்கிரமாகவே எட்டிப் பிடித்து விடுகிறது.

i20 - யை அசைக்க வரும் பெலினோ!

புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், டே-டைம் ரன்னிங் லைட்ஸ், உயரமாக எழும்பி நிற்கும் பின்பக்கம் என்று பெலினோவில் பார்வையை தன் பக்கம் இழுக்கும் அம்சங்கள் அதிகம். இரண்டுமே நான்கு மீட்டருக்கு உட்பட்ட கார்கள்தான். இரண்டிலும் இருப்பது (விலை உயர்ந்த வேரியன்ட்டுகளில்) 16 இன்ச் வீல்கள்தான். இருந்தாலும் பெலினோவைவிட i20 அட்ராக்ட்டிவ்வாக இருக்கிறது. அதன் ஸ்டைலிங் மிகவும் புதுமையாக இருக்கிறது. i20 கேபினும் தரமானதாக மட்டுமல்ல, கன்ட்ரோல்கள், பட்டன்கள் என அனைத்துமே பிரீமியம் கார்களில் இருப்பதைப்போன்று காட்சி தருகின்றன. ஆனால், பெலினோவின் கேபின் வழக்கமான கேபினைப் போலவே காட்சி தருகிறது. இருப்பினும், பெலினோவில் இடம் பெற்றிருக்கும் மல்ட்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே மற்றும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் ஆகியவை கவனத்தைக் கவர்கின்றன. 

புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்டீயரிங் மவுன்டட் கன்ட்ரோல்ஸ், மொபைல் போனை இணைக்கக் கூடிய ப்ளூ-டூத், ஆடியோ ஸ்ட்ரீமிங், ரிவர்ஸ் கேமரா, டிரைவர் சீட் ஹைட் அட்ஜஸ்ட் வசதி ஆகியவை இரண்டிலும் உள்ளன. ஆனால், பெலினோவில் மட்டுமே புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் இருக்கிறது. அதேபோல, i20 காரில் மட்டும்தான் ரியர் ஏ.சி வென்ட் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ் இருக்கின்றன.  இரண்டு கார்களிலுமே முதல் வரிசை இருக்கைகள் வசதியாக இருக்கின்றன. பின் இருக்கைகளைப் பொறுத்தவரை, i20 காரில் கால்களை நன்கு நீட்டி மடக்கி உட்கார முடியும். பெலினோவில், கால் மேல் கால் போட்டு உட்கார முடிகிறது. பெலினோவில் இருப்பது பெஞ்ச் சீட் என்பதால், மூன்று பேர் தாராளமாக உட்காரலாம். பெலினோவின் பின் இருக்கைகளுக்குப் பிரத்யேகமான ஏ.சி வென்ட் இல்லை என்பது குறைதான் என்றாலும், அதைக் கொடுத்திருந்தால், பின் சீட்டின் நடுவே உட்கார்பவர் கால்கள் வைக்க இடைஞ்சலாக இருந்திருக்கும்.  i20 காரின் பூட் ஸ்பேஸ் வெறும் 285 லிட்டர்தான். ஆனால், பெலினோவின் பூட் ஸ்பேஸ் 339 லிட்டர். மேலும், இரண்டு கார்களின் டிக்கியுமே உயரமாக இருப்பதால், பெட்டி படுக்கைகளை ஏற்றி இறக்க சிரமமாக இருக்கிறது.

i20 - யை அசைக்க வரும் பெலினோ!

பவர் to வெயிட் மற்றும் டார்க் to வெயிட் ரேஷியோ ஆகிய இரண்டிலும் இரண்டு கார்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 74bhp சக்தியையும் 19.4kgm டார்க்கையும் வெளிப்படுத்தும் பெலினோவின் 1.3 லிட்டர், 4 சிலிண்டர் இன்ஜின் 985 கிலோ எடையைச் செலுத்தியாக வேண்டும். ஆனால், 89 bhp சக்தியையும் 22.4 kgm டார்க்கையும் கொடுக்கக்கூடிய 1.4 லிட்டர் திறன் கொண்ட i20 காரின் 4 சிலிண்டர் இன்ஜின், 1,200 கிலோ எடையைச் செலுத்தியாக வேண்டும்.

i20 - யை அசைக்க வரும் பெலினோ!

நகர்ப்புறங்களில் குறைந்த வேகத்தில் ஓட்டுவதற்கு i20 ஏற்றதாக இருக்கிறது.  அதேபோல, பெலினோவின் இன்ஜினும் ரெஸ்பான்ஸிவ் ஆக இருக்கிறது. என்றாலும், கூடுதல் சக்தி வேண்டி ஆக்ஸிலரேட்டர் பெடலை சட்டென்று அழுத்தினால், தேவையான சக்தி உடனடியாகக் கிடைக்கவில்லை. ஆனால், 2,000 ஆர்பிஎம் தாண்டிவிட்டால், பெலினோவின் இன்ஜின் சொன்னபடி கேட்கிறது. அதேநேரம், ஆக்ஸிலரேட்டரை அழுத்த அழுத்த... இன்ஜின் சத்தமும் கூடிக்கொண்டே போகிறது. இந்தப் பிரச்னை i20 காரில் இல்லை. 100 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் க்ரூஸ் செய்வது i20 காரில் சுகமானதாக இருக்கிறது. இரண்டு கார்களிலும் கியர் ஷிஃப்ட் ஸ்மூத்தாக இருக்கிறது.

i20 - யை அசைக்க வரும் பெலினோ!
i20 - யை அசைக்க வரும் பெலினோ!

முன்பக்கம் மெக்பெர்ஸன், பின்பக்கம் டார்ஷன் பீம் என்று இரண்டு கார்களிலும் சஸ்பென்ஷன் ஒரே மாதிரிதான். ஆனால், குறைவான வேகத்தில் செல்லும்போது i20 கார் குழிகளில் விழுந்து எழுந்து செல்வது தெரிகிறது. என்றாலும், குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறை எதுவும் இல்லை. ரைடு மற்றும் கையாளுமையைப் பொறுத்தவரை பெலினோ நன்றாகவே இருக்கிறது.

i20 - யை அசைக்க வரும் பெலினோ!

பெலினோவின் உள்ளே... இடவசதி தாராளம். சிறப்பம்சங் களுக்கும் பஞ்சம் இல்லை. அராய்  அளவுகோலின் படி, பெலினோவின் மைலேஜ் லிட்டருக்கு 27.39 கி.மீ. இது, i20 காரின் அதிகாரபூர்வமான மைலேஜான 22.54 கி.மீ-யைவிட மிக மிக அதிகம்.

 i20 பார்வைக்கு வந்துவிட்டால், பெலினோ அவுட்-ஆஃப் போகஸ் ஆகிவிடுகிறது. ஃபியட்டில் இருந்து மாருதி பெறும் பழங்காலத்து இன்ஜின், புது யுகத்தின் கார்களோடு போட்டி போடத் திணறுகிறது. i20  காரின் லுக் நன்றாக இருக்கிறது. பிரீமியம் கார் என்ற உணர்வை இதன் உள்ளலங்காரம் கொடுக்கிறது. இன்ஜின், சத்தம் இல்லாமல் தன் வேலையைச் செய்கிறது. ஆகவே, பிரீமியம் டீசல் ஹேட்ச்பேக் மாடலைப் பொறுத்தவரை, i20 தன்னுடைய முதல் இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்கிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு