Published:Updated:

பவர்ஃபுல் ஃபிகோ போட்டியில் வெல்லுமா?

ஒப்பீடு / ஃபிகோ Vs போல்ட் Vs கிராண்ட் i10தொகுப்பு: ராகுல் சிவகுரு

திக மைலேஜ், குறைவான செலவு’ என்று சொல்லித்தான் டீசல் ஹேட்ச்பேக் கார்களை விற்பனை செய்கிறார்கள் கார் தயாரிப்பாளர்கள். தவிர, தொழில்நுட்ப ரீதியாக, டீசல் இன்ஜின்கள் முன்னேற்றம் அடைந்துவருகின்றன. இந்த செக்மென்ட்டில், புது வரவாக முற்றிலும் புதிய ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட ஃபிகோ காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஃபோர்டு. புதிய சஸ்பென்ஷன், புதிய சேஸி, புதிய கேபின் ஆகியவற்றோடு, ஃபியஸ்டா காரில் இருந்த 100bhp சக்திகொண்ட 1.5 லிட்டர் TDCi டீசல் இன்ஜினை மேம்படுத்தி, இதில் பொருத்தியுள்ளது ஃபோர்டு. இதனால், பழைய ஃபிகோவுடன் ஒப்பிடும்போது, புதிய ஃபிகோ 90 கிலோ எடை குறைவாகவும், 30bhp அதிக பவரையும் கொண்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் சிறந்த தயாரிப்புகளுள் ஒன்றான போல்ட், அதற்கேற்ற விற்பனையை எட்டாதது வருத்தமான விஷயம்தான். ஏனெனில், ஸ்டைல், இன்டீரியர், கட்டுமானத் தரம், சிறப்பம்சங்கள், இன்ஜின் ஆகியவற்றில் மற்ற டாடா கார்களோடு ஒப்பிடும்போது, போல்ட் பல படிகள் உயர்ந்து நிற்கிறது.

பவர்ஃபுல் ஃபிகோ போட்டியில் வெல்லுமா?

ஹூண்டாயின் கிராண்ட் i10, ஐரோப்பிய மாடலுடன் ஒப்பிடும்போது, இந்தியச் சந்தைக்கு என பிரத்யேக மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்த கார். திகட்டாத டிஸைன், தரமான இன்டீரியர், அதிக சிறப்பம்சங்கள் என்று பாராட்ட வேண்டிய விஷயங்கள் கொண்ட கார் கிராண்ட் ஐ10. இந்த மூன்று கார்களில் எதை வாங்கலாம்?

டிஸைன் மற்றும் சிறப்பம்சங்கள்

ஏற்கெனவே ஃபோர்டு ஃபிகோவின் தோற்றம், நமக்கு ஆஸ்பயர் மூலம் பழக்கப்பட்டு இருந்தாலும், ஸ்மார்ட்டாக இருக்கிறது. இதற்கு முழுக் காரணம், ஆஸ்டன் மார்ட்டின் கார்களில் இருப்பது போன்ற கிரில் டிஸைனும், காரின் பக்கவாட்டில் இருக்கும் க்ரீஸ் கோடுகளும்தான். ஆனால், பின்பக்க வடிவமைப்பு சுமாராக இருக்கிறது. மேலும், 14 இன்ச் அலாய் வீல்கள் சிறிதாக இருக்கின்றன.

காரின் சூப்பரான கட்டுமானத் தரம், இந்தக் குறைகளை மறக்கச் செய்து விடுகிறது. ஹூண்டாய் கிராண்ட் i10 காரின் முன்பக்க டிஸைன், குறை சொல்ல முடியாதபடி இருக்கிறது. கிரில்லுடன் ஹெட்லைட் இணையும் விதம் செம! தவிர, பம்பரில் அறுகோண வடிவில் இருக்கும் ஏர் டேம் ஸ்டைலாக இருக்கிறது.

பவர்ஃபுல் ஃபிகோ போட்டியில் வெல்லுமா?
பவர்ஃபுல் ஃபிகோ போட்டியில் வெல்லுமா?

டாடா போல்ட், விஸ்டாவை அடிப்படையாகக் கொண்டு அதே அளவுகளில் தயாரிக்கப்பட்டிருந்தாலும், பாடி பேனல்கள் புதியவை. அதனால், கார் பார்ப்பதற்கு ப்ரெஷ்ஷாக இருக்கிறது. ஜெஸ்ட் காரில் இருப்பதுபோன்ற ஹெட்லைட் மற்றும் கிரில் டிஸைன்கள் ரசிக்கும் விதத்தில் இருக்கின்றன. புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் டெயில் லைட்டுகளின் இடையே இருக்கும் க்ரோம் பட்டை, காரின் பின்பக்கத் தோற்றத்தை மாடர்னாகக் காட்டுகிறது. ஆனால், வீல்கள் மற்றும் வீல் ஆர்ச்சுகளுக்கு இடையே இருக்கும் இடைவெளி அதிகம். மேலும், கார் எதன் மீதோ ஏறி நிற்பது போல இருக்கிறது. கிராண்ட் i10 கார்தான், இங்கிருக்கும் கார்களிலேயே குறைவான நீள, அகலம் கொண்ட கார். மூன்று கார்களில் எடை அதிகமானது, டாடா போல்ட்.

இந்த மூன்று கார்களில் ஃபிகோதான் நீளமான, எடை குறைவான கார். ஃபிகோவின் அதிக வீல்பேஸ் காரணமாக, இடவசதி சிறப்பாக இருக்கிறது. தாழ்வான பின்பக்க இருக்கைகள் மென்மையாக இருந்தாலும், ஹெட்ரெஸ்ட் அட்ஜஸ்ட் செய்ய முடியாதபடி இருப்பது மைனஸ். தவிர, முன்பக்க இருக்கைகள் பெரிதாக இருந்தாலும், மிக மென்மையாக இருக்கின்றன. போல்ட்டின் உயரம் அதிகம் என்பதால், காருக்குள் சென்று வருவது எளிது. மேலும், சொகுசான பின்பக்க இருக்கைகள் தட்டையாக இருந்தாலும், உட்காருபவர்களுக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. முன்பக்க இருக்கைகள், விசாலமாக இருக்கின்றன. கிராண்ட் i10 காரின் பின்பக்க இடவசதி நிறைவாக இருக்கிறது. ஆனால், இருக்கைகள் தாழ்வாக இருப்பதுடன், அதிக சாய்மானத்தைக் கொண்டிருப்பது, சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.

இங்கே ஒப்பிடப்படும் மூன்றில், பின்பக்க ஏ.சி வென்ட் இருக்கும் ஒரே கார் கிராண்ட் i10. மேலும், எலீட் i20 போன்ற இன்டீரியர் தரத்தைக் கொண்டிருக்கிறது கிராண்ட் i10. லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், பட்டன்கள், கியர் லீவர், ஹேண்ட் பிரேக் லீவர், ஸ்விட்சுகள், இரட்டை வண்ண டேஷ்போர்டு பிளாஸ்டிக்ஸ் என பொருட்களின் தரமும் அட்டகாசமாக இருக்கின்றன. இதே கார், ஐரோப்பிய சந்தைக்கு ஏற்ப வீல்பேஸில் மாற்றம் செய்து விற்பனை செய்வதால், இந்தத் தரம் சாத்தியமானது என்கிறது ஹூண்டாய். மேலும் முன்பக்க இருக்கைகள் சொகுசாக இருப்பதுடன், முதுகுக்கு நல்ல சப்போர்ட் கொடுக்கிறது.

ஃபிகோவின் டேஷ்போர்டு, நல்ல கட்டுமானத் தரத்தைக் கொண்டிருந்தாலும், அதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள இறுக்கமான பிளாஸ்டிக்கின் தரம் அவ்வுளவு சிறப்பாக இல்லை. ஸ்டீயரிங் வீல், சென்டர் கன்ஸோல், SYNC சிஸ்டம் என அனைத்தும் எக்கோஸ்போர்ட்டில் இருந்து பெறப்பட்டிருக்கின்றன.

பவர்ஃபுல் ஃபிகோ போட்டியில் வெல்லுமா?
பவர்ஃபுல் ஃபிகோ போட்டியில் வெல்லுமா?

போல்ட்டின் டச் ஸ்கிரீன் கொண்ட சென்டர் கன்ஸோல் கவனத்தை ஈர்க்கிறது. டேஷ்போர்டு பிளாஸ்டிக்கின் தரம், ஃபிகோவைவிட சிறப்பாக இருந்தாலும், பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட விதம் சரியாக இல்லை. ஸ்டீயரிங், சென்டர் கன்ஸோல், கியர் லீவர், ஏ.சி வென்ட் ஆகியவற்றில் உள்ள க்ரோம் மற்றும் மெட்டல் வேலைப்பாடுகளை, மிகுந்த ரசனையோடு செய்திருக்கிறது டாடா. ஆனால், கேபினில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் மிகக் குறைவாக இருக்கிறது. மற்றபடி பாட்டில் ஹோல்டர், கப் ஹோல்டர், க்ளோவ் பாக்ஸ் ஆகியவை ஃபிகோ மற்றும் கிராண்ட் i10 கார்களில் தேவையான அளவுக்கு இருக்கின்றன.

ஃபிகோ சிறந்த டிரைவிங் பொசிஷனைக் கொண்டிருந்தாலும், போல்ட்டின் டிரைவர் இருக்கையில் இருந்துதான் வெளிச்சாலை தெளிவாகத் தெரிகிறது. பூட் ஸ்பேஸைப் பொறுத்தவரை, ஃபிகோ மற்றும் கிராண்ட் i10 ஆகியவை முறையே 257 லிட்டர் மற்றும் 256 லிட்டர் என்ற அளவில் உள்ளன. போல்ட் மிகக் குறைவான 210 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டுள்ளது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

பொதுவாக, ஹேட்ச்பேக் கார்களில், பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்கள் குறைவான பவரையே வெளிப்படுத்தும். ஆனால், இந்த விதியை மாற்றி எழுதியிருக்கிறது ஃபோர்டு ஃபிகோ. 1,041 கிலோ எனும் குறைந்த எடை, 98.96bhp பவர் மற்றும் 21.92kgm டார்க்கை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் சேரும்போது, இங்கிருக்கும் மற்ற கார்களைவிட அதிக பவர் டு வெயிட் ரேஷியோ கிடைக்கிறது. ஆரம்ப வேகத்தில் இன்ஜின் கரகரவென்று இருந்தாலும், 2,000 ஆர்பிஎம் தாண்டியவுடன், இன்ஜின் ஸ்மூத்தாக மாறுவதுடன், 4,000 ஆர்பிஎம் வரை பவர் மிரள வைக்கிறது. இதனால், பெட்ரோல் கார் ஓட்டுவது போன்ற அனுபவத்தைத் தருகிறது ஃபிகோ. கியர்பாக்ஸ் மற்றும் கிளட்ச் பயன்படுத்துவதற்குச் சற்று ஹெவியாக இருந்தாலும், சரியான வேகம் மற்றும் நேரத்தில் கியர் மாற்றினால், 10.5 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டிப் பிடிக்கிறது ஃபிகோ. இதைவிட விலை அதிகமான ஃபோக்ஸ்வாகன் போலோ GT காரைவிட வேகமாக இருக்கிறது ஃபிகோ. டர்போ லேக் இருந்தாலும்,  1,600 ஆர்பிஎம்-ல் டர்போ சார்ஜர் செயல்பட ஆரம்பிப்பதால், நகருக்குள் காரை ஓட்டுவது எளிதாகவும், நெடுஞ்சாலையில் ரிலாக்ஸாகவும் இருக்கிறது. 4,200 ஆர்பிஎம்-க்கு மேல் பவர் வெளிப்பாடு குறைந்துவிடுவதால், அதற்கு மேல் வேகத்தை அதிகரித்தால், இன்ஜினில் இருந்து சத்தம்தான் அதிகமாகக் கேட்கிறதே தவிர, பவர் இல்லை. 

ஹூண்டாய் கிராண்ட் i10, 70bhp பவரை வெளிப்படுத்தும் 1.1 லிட்டர் டீசல் இன்ஜினைக்கொண்டுள்ளது. இது, நகர டிராஃபிக்கில் சிறப்பாகச் செயல்படும் வகையில் ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. குறைந்த இன்ஜின் வேகங்களில் அதிர்வுகளை உணரமுடிந்தாலும், பேலன்ஸர் ஷாஃப்ட் சுழல ஆரம்பித்தவுடன், இன்ஜின் ஸ்மூத்தாகி விடுகிறது. பவர் டெலிவரி சீராக இருப்பதுடன், கியர்பாக்ஸ் மற்றும் கிளட்ச் பயன்படுத்துவதற்கு லைட்டாக இருக்கிறது. ஆனால், இதை நம்பி 3,500 ஆர்பிஎம்-க்கு மேல் ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், ஏமாற்றமே மிஞ்சும். காரணம், அதற்கு மேல் இன்ஜினில் பவர் இல்லை. இதனால் நெடுஞ்சாலையில், முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்வதற்கு முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். 0- 100 கி.மீ வேகத்தை, மிகவும் பொறுமையாக 20.25 விநாடிகளில் எட்டுகிறது கிராண்ட் i10. இது ஃபிகோவைவிட 10 விநாடிகள் அதிகம்!

பவர்ஃபுல் ஃபிகோ போட்டியில் வெல்லுமா?
பவர்ஃபுல் ஃபிகோ போட்டியில் வெல்லுமா?

டாடா போல்ட்டில் உள்ள ஃபியட்டின் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின், 74bhp பவரையே வெளிப்படுத்தினாலும், பவர் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. குறைவான வேகங்களில் இன்ஜின் கரகரவென இருந்தாலும், 1,800 ஆர்பிஎம் தாண்டியவுடன் சீற ஆரம்பிக்கிறது போல்ட். அதிலும் 2,200 ஆர்பிஎம் முதல் 4,000 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரி சீராக இருக்கிறது. ஆனால், 4,500 ஆர்பிஎம் தாண்டிய பிறகு, பவர் இல்லாமல் திணறுகிறது. 5,000 ஆர்பிஎம்மைத் தாண்டும் திறன் இன்ஜினுக்கு இருந்தாலும், அந்த வேகத்தில் இன்ஜின் சத்தம் அதிகமாகவும், பவர் குறைவாகவும் கிடைக்கிறது. 100 கி.மீ வேகத்தை, ஃபிகோவைவிட அதிகமாக 16.58 விநாடிகளில் எட்டினாலும், போல்ட் காரில் நெடுஞ்சாலையில் ஓட்டுவதற்கு ஏற்ற பவர் இருக்கிறது. தவிர, கியர்பாக்ஸ் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

சிறந்த ஓட்டுதல் தரத்தைக் கொண்டிருக்கிறது போல்ட். இந்த காரின் சஸ்பென்ஷன் ஸ்பிரிங் மற்றும் டேம்பர் ஆகியவை, பலதரப்பட்ட சாலைகளில் கார் ஸ்மூத்தாகப் பயணிக்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், சஸ்பென்ஷன் சைலன்ட்டாக இயங்குகிறது. பெரிய மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போதுதான், காருக்குள் ஆட்டம் தெரிகிறது.
 ஃபிகோவின் சஸ்பென்ஷன், குறைவான வேகங்களில் நிலையற்ற சாலைகளில் பயணிக்கும்போது, இறுக்கமாக இருப்பதுபோலத் தோன்றுகிறது. மற்றபடி காரின் ஓட்டுதல் தரம் குறை சொல்ல முடியாதபடி இருக்கிறது.

பவர்ஃபுல் ஃபிகோ போட்டியில் வெல்லுமா?
பவர்ஃபுல் ஃபிகோ போட்டியில் வெல்லுமா?

சின்ன மற்றும் நடுத்தர அளவுப் பள்ளங்கள் இருக்கும் நிலையற்ற சாலைகளைச் சமாளிக்கும் கிராண்ட் i10, பெரிய பள்ளங்களில் பயணிக்கும்போது, பின் இருக்கையில் இருப்பவர்களை ஆட்டம் போட வைக்கிறது. சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்-அப்பைக் கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம். ஆனால், எடை குறைவான ஸ்டீயரிங் மற்றும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் கன்ட்ரோல்கள் காரணமாக, நகருக்குள் ஈஸியாக ஓட்டும் வகையில் இருக்கிறது கிராண்ட் i10.

ஃபிகோவைப் பொறுத்தவரை, கியர்பாக்ஸ், கிளட்ச், ஸ்டீயரிங் ஆகியவை பயன்படுத்துவதற்கு ஹெவியாக இருப்பதால், நகருக்குள் காரை ஓட்டுவது, கிராண்ட் i10அளவுக்கு எளிதாக இல்லை. ஸ்டீயரிங் துல்லியமாக இல்லாததால், பழைய ஃபிகோவின் பலமான கையாளுமை, இதில் மிஸ்ஸிங். பாடி ரோல் அதிகம் இருப்பதால், வளைவுகளில் ஓட்டுவதற்கு உற்சாகமான காராக இல்லை புதிய ஃபிகோ. ஆனால், காரின் ஸ்டெபிலிட்டி மற்றும் பிரேக்கிங், ஓட்டுநருக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது.

போல்ட்டின் ஸ்டீயரிங், ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறைவான வேகங்களில் எடை குறைவாகவும், அதிக வேகங்களில் துல்லியமாகவும் இருக்கிறது. பாடி ரோல் இருந்தாலும் வளைவுகளில் நம்பிக்கையுடன் காரைச் செலுத்த முடிகிறது. ஆனால், போல்ட்டின் கையாளுமை,

பவர்ஃபுல் ஃபிகோ போட்டியில் வெல்லுமா?

ஸ்விஃப்ட் காருடன் போட்டி போடும் வகையில் இல்லை. தவிர, பிரேக்குகளின் திறன் சராசரியாகத்தான் இருக்கிறது.

சொகுசு, பில்டு குவாலிட்டி, சிறந்த ஓட்டுதல் தரம், கையாளுமை, சிறப்பம்சங்கள் என ஒரு நல்ல பேக்கேஜாக அசத்துகிறது டாடா போல்ட். இதன் சென்னை ஆன் ரோடு விலை 8.12 லட்ச ரூபாய் எனும்போது, கொடுக்கும் காசுக்கேற்ற தரமான கார் என எண்ணத் தோன்றுகிறது. ஆனால், டாடா கார்களின் ரீ-சேல் மதிப்பு மற்றும் நீண்ட கால நம்பகத்தன்மை ஆகியவை, இந்த காரின் விற்பனையைப் பாதித்திருக்கிறது என்பதே உண்மை.
 
நகர டிராஃபிக்கில் பயன்படுத்துவதற்குச் சிறந்த கார், ஹூண்டாய் கிராண்ட் i10. தரமான இன்டீரியர் மற்றும் சிறப்பம்சங்களைக் கொண்ட இது, மற்ற கார்களைவிட குறைவாக 7.93 லட்ச ரூபாய்க்கு (சென்னை ஆன் ரோடு) கிடைக்கிறது. ஆனால், குறைவான பவரை வெளிப்படுத்தும் 3 சிலிண்டர் டீசல் இன்ஜின் இதன் மிகப் பெரிய மைனஸ்.

பழைய ஃபிகோவுடன் ஒப்பிடும்போது ஓட்டுதல் தரம், கையாளுமை மற்றும் இன்டீரியர் தரம் ஆகியவற்றில் பின் தங்கியிருக்கிறது புதிய ஃபிகோ. ஆனால் ஸ்டைல், இடவசதி, பாதுகாப்பு, சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் புதிய உயரத்தை எட்டியிருக்கிறது. ஃபிகோவின் 8.83 லட்சம் விலை (சென்னை ஆன்ரோடு) சற்று அதிகம்போலத் தோன்றினாலும், காரின் அசத்தலான பெர்ஃபாமென்ஸ் மற்றும் 6 காற்றுப் பைகள்கொண்ட பாதுகாப்பு வசதி, புதிய ஃபிகோவை வாங்கத் தூண்டுகிறது! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு