Published:Updated:

மிரட்டும் மோஜோ!

டெஸ்ட் ரிப்போர்ட் / மஹிந்திரா மோஜோதொகுப்பு: சார்லஸ்

பிரீமியம் ஸ்டோரி

ரும்... ஆனா வராது’ என்ற நிலையிலேயே   கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த மோஜோ, இப்போது விற்பனைக்கு வந்துவிட்டது. நீண்ட நாட்களாக டெஸ்ட்டிங்கிலேயே இருந்ததால், டிஸைனில் ஏற்றம் கண்டு பளபளப்போடு அறிமுகமாகி இருக்கிறது, மஹிந்திரா மோஜோ!

டிஸைன்

மோஜோவின் டிஸைனைப் பொறுத்தவரை, இது எல்லோருக்குமே பிடித்துவிடும் டிஸைன் எனச் சொல்ல முடியாது. ஆனால், ‘என்ன இந்த பைக் புதுசா இருக்கே’ எனத் திரும்பிப் பார்க்க வைக்கும். இரட்டை விளக்குகள் கொண்ட ஹெட்லைட் டிஸைன், பைக்குக்குத் தனி அடையாளத்தைக் கொடுக்கிறது என்றாலும், இது மிகப் பெரிதாக இருக்கிறது. இரட்டை ஹெட்லைட்ஸுக்கு மேலே பட்டையாகக் கொடுக்கப்பட்டுள்ள LED விளக்குகள் கவனத்தை ஈர்க்கின்றன. சிறிதாக இருந்தாலும், பைக்கின் முன்பக்க டிஸைனோடு பொருத்தமாக இருக்கும் வைஸர், 120 கி.மீ வேகத்தில் செல்லும்போதுகூட காற்று முகத்தில் அறையாமல் தடுக்கிறது.

மிரட்டும் மோஜோ!

ஸ்பீடோ மீட்டர் - அனலாக், டிஜிட்டல் என இரண்டும் கலந்ததாக இருக்கிறது. வழக்கமான ஸ்பீடோ, ஓடோ, ட்ரிப் மீட்டர் டயல்களைத் தாண்டி, கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது, எந்த வேகத்தில், எந்த கியருக்குச் செல்ல வேண்டும் என்பதைக் காட்டுகிறது. டயல்களில் கொடுக்கப்பட்டுள்ள LED விளக்குகள், அதிக ஆர்பிஎம் தொடும்போது, டேக்கோ மீட்டர் டயலின் வெளிச்சத்தைக் கூட்டுகிறது. இது, அதிக ஆர்பிஎம்மைத் தொடுகிறோம் என்பதை ஓட்டுநருக்கு உணர்த்துவதற்கான வசதி. இது தவிர, 0 - 100 கி.மீ வேகத்தை எவ்வளவு குறைவான விநாடிகளில் தொட்டீர்கள் என்ற விவரமும், அதிகபட்ச வேகமும் டிஜிட்டல் திரையில் தெரிகின்றன.

ஹேண்டில்பார் உயரமாக வைக்கப்பட்டு இருப்பதால், நிமிர்ந்து உட்கார்ந்து, ரிலாக்ஸாக ஓட்டக்கூடிய பொசிஷனில் இருக்கிறது மோஜோ. ஸ்விட்ச்சுகள், ஒளிரும் விளக்குகளைக் கொண்டிருப்பதால், இரவு நேரத்தில் ஓட்டுவது இன்னும் ஈஸியாக இருக்கிறது. கைப்பிடிகள், பிடித்து ஓட்டுவதற்கு சாஃப்ட்டாகவும் க்ரிப்பாகவும் இருக்கின்றன. ரியர் வியூ கண்ணாடிகள் பெரிதாகவும், பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டும் வகையிலும் இருக்கின்றன. பைக்கின் இக்னிஷன் பெட்ரோல் டேங்க்கின் மீது வைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரப் பயணங்கள் செய்பவர்களுக்கு வசதியாக 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க்குடன் இருக்கிறது. மோஜோ முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட்டதில் இருந்தே தொடரும் தங்க வண்ண ரிப் டிஸைன், இதிலும் தொடர்கிறது.

பைக்கை ஓட்டுபவருக்குத் தேவையே இல்லாமல் மிகப் பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறது மஹிந்திரா. பின்சீட்டில் இடவசதி மிகக் குறைவாக இருக்கிறது. இதனால், பில்லியன் சீட்டில் உட்காருபவர் நிச்சயம் ஒல்லியாக இருந்தே ஆகவேண்டும். டெயில் லைட்டுகள் சின்னதாக இருந்தாலும், பவர்ஃபுல். ஆனால், பைக்கைப் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, ஒரு ஒழுங்கில் இல்லாமல் தாறுமாறாக இருப்பதுபோல இருக்கிறது மோஜோ. பைக்கின் ஒட்டுமொத்தத் தரத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை.

மிரட்டும் மோஜோ!

இன்ஜின்

4-ஸ்ட்ரோக், லிக்விட் கூல்டு, 295 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜினைக்கொண்டிருக்கிறது மோஜோ. இது, அதிகபட்சமாக 8,000ஆர்பிஎம்-ல் 26.8bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 5,500ஆர்பிஎம்-ல் 3kgm டார்க்கைக் கொண்டிருக்கிறது. பவர் அதிகமாக இருப்பதால், ஆக்ஸிலரேட்டரை முறுக்கியதுமே வெறிகொண்டு பறக்கிறது மோஜோ. 4,500 முதல் 6,500 வரையிலும் டார்க் சிறப்பாக இருப்பதால், மிட் ரேஞ்ச் பெர்ஃபாமென்ஸ் அசத்துகிறது. கிளட்ச் இயக்குவதற்கு ஈஸியாக இருப்பதோடு, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் எந்தச் சிக்கலும் இல்லாமல் ஷிஃப்ட் ஆகிறது. இன்ஜின் சத்தம் இல்லாமல் இயங்குகிறது. அதிர்வுகளும் இல்லை. குறிப்பாக, அதிக ஆக்ஸிலரேஷன் கொடுக்கும்போதும் திணறல், அதிர்வுகள் இல்லாமல், ஸ்மூத்தான இன்ஜினாக இருக்கிறது.

நெடுஞ்சாலையில் 125 கி.மீ வேகத்தில் எந்தச் சிரமும் இல்லாமல் க்ரூஸ் செய்துகொண்டு ஓட்ட முடிகிறது. இதன் அதிகபட்ச வேகம், மணிக்கு 141 கி.மீ. இன்ஜின் ஓவர்ஹீட் அல்லது இன்ஜினில் ஏதும் பிரச்னை  ஏற்பட்டால், ஓட்டுநருக்கு எச்சரிக்கை செய்ய எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்டுக்குள் ‘லிம்ப் ஹோம்’ எனும் மோட் செட் செய்திருக்கிறது மஹிந்திரா. இதன்படி, ‘இன்ஜினில் பிரச்னைகள் ஏற்பட்டால், சென்ஸார்கள் உடனடியாக இதைக் கண்டுபிடித்து இன்ஜினை 5,000ஆர்பிஎம்முக்குள் மட்டுமே இயக்கும். இதனால், உடனடியாக அருகில் உள்ள மெக்கானிக் ஷெட்டுக்குப் பிரச்னை இல்லாமல் சென்றுவிட முடியும்’ என்கிறது மஹிந்திரா.

கையாளுமை

முன்பக்கம் அப்சைடு டவுன் ஃபோர்க்ஸைக் கொடுத்திருக்கும் மஹிந்திரா, பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனைக் கொடுத்திருக்கிறது. இரண்டுமே சிறப்பாக ட்யூன் செய்யப்பட்டிருப்பதால், ஓட்டுதல் தரம் சிறப்பாக இருக்கிறது. இதனால் மேடு பள்ளங்களைக் கடக்கும்போது, அதிர்வும் ஆட்டமும் இல்லை. ஆனால், திருப்பங்களில் வளைத்து நெளித்து ஓட்ட சிறப்பான பைக்காக இல்லை மோஜோ.

மிரட்டும் மோஜோ!

பைக்கின் முன்பக்கம் ஹெவியாக இருப்பதோடு, நீளமான வீல்பேஸ் கொண்ட பைக் என்பதால், சட் சட்டென பைக்கை வளைத்துத் திருப்பி ஓட்ட முடியாது. ஆனால், வளைவுளில் ஓட்ட பயப்படாத வகையில் சிறப்பான டயர்களைக் கொடுத்திருக்கிறது மஹிந்திரா. 110/70 சைஸ் கொண்ட 17 இன்ச் முன்பக்க டயரும், பின்பக்கம் 150/60 அளவு கொண்ட பைரலி டயர்களையும் கொண்டிருக்கிறது மோஜோ.

முன்பக்கம் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கையும் கொண்டிருக்கிறது மோஜோ. ஏபிஎஸ் இல்லை என்பது இதன் மைனஸ். 1 சிலிண்டர் இன்ஜின் என்றாலும் 2 எக்ஸாஸ்ட் பைப்புகளைக் கொண்டிருப்பதால், கூடுதல் எடையைச் சுமக்கிறது மோஜோ. இது பைக்கின் பெர்ஃபாமென்ஸைப் பாதிக்கிறது.

மிரட்டும் மோஜோ!

முதல் தீர்ப்பு!

நீண்ட தாமதத்துக்குப் பிறகு, சரியான பைக்கையே கொண்டுவந்திருக்கிறது மோஜோ. கிட்டத்தட்ட 1.80 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்திருக்கும் மோஜோ, தமிழ்நாட்டில் விற்பனைக்கு வர ஜனவரி வரை காத்திருக்க வேண்டும். ராயல் என்ஃபீல்டு க்ரூஸர் பைக்குகளுடன்தான் மோஜோ போட்டி போடுகிறது என்பதால், வெற்றிபெறுவதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன. ஆனால், சிறந்த சர்வீஸையும், நம்பகத்தன்மையையும் அதிகரித்தால் மட்டுமே, மோஜோ மந்திரம் பலிக்கும்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு