Published:Updated:

“நாங்கள் இப்போ பச்சைமலைப் பூக்கள்!”

திருச்சி to பச்சை மலைரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ்தமிழ், படங்கள்: தே.தீட்ஷித்

பிரீமியம் ஸ்டோரி

வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், யு-ட்யூப், ஸ்கைப் - இதுக்கெல்லாம் ரெண்டு நாள் லீவு விடணும்; இயற்கையை ரசிக்கணும்! என்னோட எட்டியோஸ் க்ராஸ்ல சின்னதா ஒரு கிரேட் எஸ்கேப் பண்ணணும்! தெறிக்க விடலாமா?’’ என்று சோஷியல் மீடியாக்கள் எல்லாவற்றிலும் மெசேஜ் தெறிக்க விட்டிருந்தார் சரண்யா. திருச்சியில் வாடகை கார் நிறுவனம் ஒன்றை, தனது தந்தையுடன் இணைந்து நடத்தி வரும் சரண்யாவிடம் பல கார்கள் இருந்தாலும், இந்த கிரேட் எஸ்கேப்புக்கு டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் காரை சாய்ஸ் ஆக்கியிருந்தார். “ஏன்னா, எட்டியோஸ் க்ராஸ் கார்ல நீங்க இன்னும் கிரேட் எஸ்கேப் பண்ணலை... சரியா?” என்று க்ராஸின் ரிமோட் சாவியை நம்மிடம் திணித்தார்.

க்ராஸ் போலோ, i20 ஆக்டிவ் போன்றவற்றுக்குப் போட்டியாக வந்ததால், எட்டியோஸ் க்ராஸின் டிஸைனில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறது டொயோட்டா. ‘‘ஆனா, இந்த பிளாஸ்டிக் கிளாடிங் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்திருக்கலாம் சார்!’’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார் சரண்யாவின் தந்தை சுப்ரமணியன்.

‘‘என் கார்களுக்கு அப்புறம் நான் என்ன சொன்னாலும் வழிமொழியுற ஒரே ஜீவன், எங்க அப்பாதான்; ஏன்னா, எனக்கு இந்தப் பொறப்பும் பொழப்பும் அவர் கொடுத்தது!’’ என்று சரண்யா பாச அவதாரம் எடுத்தபோது, ‘‘சித்த்தீ... நானும்.... டூர்..’’ என்று மழலிய அவரது 4 வயது அக்கா மகனையும் ஏற்றியபடி, நமது எட்டியோஸ் க்ராஸ் திருச்சியைத் தாண்ட ஆரம்பித்தது.

 “நாங்கள் இப்போ பச்சைமலைப் பூக்கள்!”

‘கியரைப் போட்டாலே சும்மா அதிருதுல்ல’ என்பதுபோல், கியர் மாற்ற மாற்ற அதிர ஆரம்பித்தது எட்டியோஸ் க்ராஸ். டீசல் இன்ஜின் என்பதற்கேற்ப இரைச்சலும் பட்டையைக் கிளப்பியது. ‘‘காருக்குள்ள வெளிச்சத்தம் கேட்குதுன்னு நீங்க எழுதினது சரிதாங்கண்ணே!’’ என்றார் சரண்யா. கியர்களுக்கான இடைவெளி குறைவு என்பதால், ‘சட் சட்’ என கியர் மாற்ற வேண்டியிருந்தாலும், பெட்ரோல் இன்ஜின் கார்போல ஸ்மூத் ஆக இருந்தது கியர்பாக்ஸ். மூன்றாவது கியருக்குப் பிறகு 1,500 ஆர்பிஎம்-மைத் தாண்டினால் அதிர்வுகள் இருந்தாலும், அதிக வேகத்தில் நம்மை அதிர வைக்கிறது எட்டியோஸ் க்ராஸ். 0-80 கி.மீ வேகத்தை, வெறும் ‘பத்து எண்றதுக்குள்ள’ தொட்டுவிடுகிறது.

அடக்கமான டிஸைன், ஹை ரேஞ்சில் கிடைக்கும் பவர் டெலிவரி போன்றவை டாப் ஸ்பீடில்கூட ஓவர்டேக் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. இதை ‘ஃபன் டு டிரைவ்’ என்பார்கள். போலோ, ஃபிகோ போன்ற ஹேட்ச்பேக் கார்களுக்குப் பிறகு, எட்டியோஸ் க்ராஸில் இதை அதிகம் உணர முடிகிறது.

‘‘பச்சைமலைப் பூவு... நீ உச்சிமலைத் தேனு!’’ என்று மியூஸிக் சிஸ்டத்தில் இளையராஜா இசை ஒலிக்க ஆரம்பித்ததும்தான் நினைவுக்கு வந்தவராக, ‘‘23 வருஷமா திருச்சியில இருக்கேன். ஆனா, பச்சைமலை பத்தி நீங்க சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும்!’’ என்று கூகுளில் தேடினார் சரண்யா. ‘திருச்சியில் இருந்து சுமார் 85 கி.மீ தூரத்தில் இருக்கும் பச்சமலை பகுதி, விரைவில் எக்கோ டூரிஸம் ஆக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்!’ என்று கூகுள் கூக்குரலிட்டது.

துறையூர் தாண்டியதும், ‘‘சின்ன வயசுல புளியஞ்சோலை அருவிக்கு எங்க அப்பா அடிக்கடி கூட்டிட்டுப் போவாரு! இப்போ மோட்டார் விகடன்கூட வந்து, வரலாற்றுல இடம் பெறப் போறேன்!’’ என்று, புளியஞ்சோலை அருவிக்கு க்ராஸைத் திருப்பப் பணித்தார் சரண்யா.

புளியஞ்சோலை, பெரிதாக அறியப்படாத, பிரபலமாகாத, ஆனால் அழகிய சுற்றுலாத் தலம். ஒகேனக்கலின் செல்லமான மினியேச்சர்போல் இருக்கிறது. மீன் வறுவல்கள், கால் நனைக்கத் தூண்டும் ஓடைகள், தின்பண்டங்களை எப்போது வேண்டுமானாலும் பிடுங்கித் தின்னக் காத்திருக்கும் குரங்குகள், சின்னஞ்சிறு கோவில்கள், குழந்தைகள் விளையாட அழகான பூங்கா என்று அச்சு அசல் கிராம வாழ்க்கையை நினைவுப்படுத்துகிறது புளியஞ்சோலை.

காரை பார்க் செய்துவிட்டுத் திரும்பினால், ஓடையின் மேலுள்ள குட்டிப் பாலத்தைத் தாண்டி, அரச மரத்தடியில் பூச்சொறிந்தபடி வீற்றிருக்கிறது குட்டியூண்டு குருவாயி அம்மன் கோவில். இங்குள்ள ஆதி விநாயகர் சிலைக்குப் பின்னால் இருக்கும் புராணக் கதை ஒன்றைச் சொன்னார் கோயில் பூசாரியான பாட்டி.

 “நாங்கள் இப்போ பச்சைமலைப் பூக்கள்!”

‘‘பிள்ளைப் பேறே இல்லாத சிவன் - பார்வதி தம்பதியினருக்கு, நீண்ட நாள் கழித்துப் பிறந்த சிறுவன், விநாயகர். ஒருமுறை கைலாயத்தில் குளிக்கச் சென்ற தன் தாய்க்குக் காவல் காத்த சிறுவனிடம் தகராறு ஏற்படுகிறது சிவனுக்கு. மகன் என்று தெரியாமல், தன் வாளால் சிறுவனின் கழுத்தைச் சீவிவிடுகிறார் சிவன். பிள்ளைப் பாசத்தில் பார்வதி கதற, விஷ்ணுவும் பிரம்மனும் இதற்குப் பரிகாரம் சொல்கிறார்கள். காட்டுப் பக்கம் நாலா திசையில் செல்லும்போது, எந்த உயிரினம் வடக்குப் பக்கமாகத் தலை வைத்துப் படுத்தபடி முதலில் தென்படுகிறதோ, அந்த உயிரினத்தின் தலையை எடுத்து சிறுவனின் உடம்பில் பொருத்தினால் உயிர் வந்து விடும் என்று பரிகாரம் சொல்லப்படுகிறது. சிவன் சென்ற திசையில் யானை ஒன்று வடக்காகப் படுத்து வீற்றிருக்க, யானையின் தலையைக் கொய்து சிறுவனின் தலைக்குப் பொருத்தினார் சிவன். இதனாலேயே பிள்ளையாருக்கு யானைத் தலை வந்தது. ஆனால், அதுக்கு முன்புவரை விநாயகர் மனிதத் தலையோடுதான் இருந்தார் இல்லையா... அந்தப் பொருளில்தான் இந்தச் சிலை!” என்று சிலையின் பின்னணியை விளக்கினார் பாட்டி.

 “நாங்கள் இப்போ பச்சைமலைப் பூக்கள்!”

‘‘ப்ரோ.... புராணக் கதை போதும்; மத்தியானச் சாப்பாடு?’’ என்று சரண்யா பசி ஏப்பம் விட, புளியஞ்சோலையில் இருந்த ஒரே ஒரு ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்தோம். இங்கு வேறு ஏதும் உணவகங்கள் கிடையாது. ஒரே ஒரு ஆப்ஷன்தான். சீனா ஸ்டைலில் நாட்டுக் கோழிகள், மீன்கள் வரிசையாக இருக்க, உங்களுக்குப் பிடித்த பறப்பன/நீந்துவன போன்றவற்றை செலெக்ட் செய்துவிட்டால், குளித்து ஈரம் காய்வதற்குள் உங்களுக்கு செ‘மத்தியான’ சாப்பாடு தயாராக இருக்கும்.
 
காடு மாதிரி; ஆனால், காடு இல்லை என்பதுபோல் பரந்து விரிந்திருக்கும் ஏரியாவுக்குள் கொஞ்ச தூரம் ஜாலியாக கால் நனைத்தபடி சென்றால், புளியஞ்சோலையின் மொத்த அழகையும் ரசிக்கலாம். ஒகேனக்கல் போல் மிரட்டாமல், செல்லமாக விழும் அருவியைப் பார்த்தவுடன் செல்லமாக செல்ஃபி எடுக்கத் தோன்றியது. ‘தைரியமா இறங்குங்க’ என்பதுபோல சிறுசுகள், இளசுகள், பெருசுகள் வரை எல்லோரையும் ஆசையாக லேசான நீரோட்டத்துடன் அழைக்கிறது ஓடை. நீச்சல் எக்ஸ்பர்ட்டுகளுக்காக, கடைசியில் ஓர் அகழி வரவேற்கிறது. பாறைகள் மேலிருந்து டைவ் அடித்துக் குளிக்கலாம் எனும் அளவுக்கு ரொம்பவும் ஆழம் இல்லாமல், இயற்கை அமைத்த வற்றாத நீச்சல் குளம்போல் இருக்கிறது. ஐந்து தடவை முங்கி எழுந்தால், அடுத்த வேளை உணவுக்கு முன்கூட்டியாகவே வயிற்றில் அலாரம் அடித்துவிடுகிறது. குளித்துவிட்டு வந்தால், நிஜமாகவே நாட்டுக் கோழி கிரேவி, மத்தியான சாப்பாட்டை செமத்தியான சாப்பாடாக ஆக்கியிருந்தது.

 “நாங்கள் இப்போ பச்சைமலைப் பூக்கள்!”

நமது அடுத்த திட்டம் பச்சைமலை என்பதை அறிந்துகொண்ட ஹோட்டல் ஓனரக்கா, ‘‘பச்சைமலை ரோடு கொஞ்சம் சுமாராத்தாங்க இருக்கும். இப்ப ஏற ஆரம்பிச்சீங்கன்னா கரெக்டா இருக்கும் சார். ஆனா, அங்க சாப்பாடு கிடைக்கிறது கஷ்டம்ங்க!’’ என்று எச்சரித்து அனுப்பினார். அவர் சொன்னதுபோலவே உப்பிலியபுரம் தாண்டி செக்போஸ்ட்டில் கையெழுத்திட்ட பிறகு வந்த மலைச் சாலை, எட்டியோஸ் க்ராஸுக்குக் சவால் விட்டது. நெடுஞ்சாலையில் ‘கபாலி’ ரஜினிபோல் மாஸ் காட்டிய எட்டியோஸின் டர்போ சார்ஜர், மலை ஏற்றங்களில் சிம்புவை வைத்துப் படமெடுக்கும் தயாரிப்பாளர் போல் சுணங்கியது. ‘‘டர்போ லேக்னா என்னன்னு நான் மோ.வி. பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்’’ என்றார் சரண்யா.

இரவு எட்டிப் பார்க்கும் முன்பே பச்சைமலையைத் தொட்டுவிட்டிருந்தோம். கண்ணுக்கு எட்டிய வரை பச்சைப் பசேல் என்று இருப்பதால், இதற்கு ‘பச்சை மலை’ என்று பெயர். சுற்றுலாவாசிகளுக்கு இப்படி ஓர் இடம் இருப்பதே தெரியாது எனும் அளவுக்கு வளர்ச்சி அடையாத சுற்றுலாத்தலம். காரணம், இங்கு தங்கும் இடம் கிடையாது; உணவகங்கள் கிடையாது; கடைகள் கிடையாது; முறையான சாலை வசதிகள் கிடையாது; ஆள்நடமாட்டம் கூட அவ்வளவாகக் கிடையாது. இதையெல்லாம்விட யானை, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்கு நடமாட்டங்களும் இங்கு சுத்தமாக இல்லை என்பதும் ஆச்சரியம். ‘‘பிரேம்ஜி இல்லாத வெங்கட்பிரபு படம்போல, விலங்குகளே இல்லாத ஒரு காடா?’’ என்று ஆச்சரியப்பட்டார் சரண்யாவின் தந்தை சுப்ரமணியம். ‘‘ஆனால், காட்டுக்குள் கரடிங்க கால் தடத்தைப் பார்த்திருக்கேன் சார்!’’ என்று லேசாக திகில் கிளப்பினார் பச்சைமலை கிராமவாசி ஒருவர்.

ஏற்கெனவே பச்சைமலை வனத்துறை அதிகாரியிடம் அனுமதி வாங்கியிருந்ததால், உள்ளே நுழைந்தோம். ‘‘விரைவில் ஊட்டி, கொடைக்கானல்போல இதை மிகப் பெரிய சுற்றுலாத்தலம் ஆக்குவதற்காக முழு மூச்சில் வேலை செய்துகொண்டிருக்கிறோம்!’’ என்றார் திருச்சி வனச் சரக அதிகாரி ஒருவர். வனத்துறை அலுவலகத்தில் தங்கிவிட்டு மறுநாள் கிளம்பினோம். மலையைச் சுற்றிலும் ஆங்காங்கே மர வீடுகள் கட்டிக்கொண்டிருந்தார்கள். ‘‘இன்னும் ஒரு வருஷத்துல காட்டேஜ், ஹோட்டல், ஃபாரஸ்ட் சஃபாரின்னு பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் ஆகப்போகுது பச்சைமலை. அதுக்காகத்தான் தீவிரமா வேலை செஞ்சுக்கிட்டிருக்கோம்!’’ என்றனர் ஊழியர்கள்.

 “நாங்கள் இப்போ பச்சைமலைப் பூக்கள்!”

பச்சைமலை முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. மரவள்ளிக் கிழங்கு, அரிசி, அன்னாசி, பப்பாளி, மூலிகை போன்ற இயற்கைப் பொருட்களின் அமோக விளைச்சலில் செழிப்பாக இருக்கிறது ஊர். பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும், உணவைச் சம்பாதிக்கக்கூடிய ஒரே வழி - விவசாயம் மட்டும்தான்! அதை முழுமையாக நம்பி இருக்கிறது பச்சைமலை. ‘‘வாவ்... செமயா இருக்குல்ல! இங்க ஒரு ரெண்டு ஏக்கர் வாங்கிப் போட்டு செட்டில் ஆகிட வேண்டியதுதான்’ என்று நீங்கள் நினைத்தால், சத்தியமாக அது நடக்காது. காரணம் - இங்கு வெளியாட்கள் பெயரில் யாரும் பட்டா போட முடியாது. முழுக்க முழுக்க இங்குள்ள பழங்குடியினருக்கு மட்டும்தான் பச்சைமலை சொந்தம். சுற்று வட்டாரக் கிராமங்களுக்கெல்லாம் சோறு போடும் பூமியை, ரியல் எஸ்டேட் என்ற பெயரில் கூறு போட அனுமதிக்காதது நல்ல விஷயம்தான்.

இப்போதைக்கு பச்சைமலையில் என்ஜாய் பண்ண இரண்டே இரண்டு விஷயங்கள்... ஒன்று - ட்ரெக்கிங்; இன்னொன்று - மங்கள அருவி. ‘‘ட்ரெக்கிங்குக்கு அதிகாலைதான் உகந்த நேரம். ட்ரெக்கிங்கை முடித்துவிட்டு, அப்படியே அருவியில் குளித்தால், அலுப்பு தீர்ந்து வேற லெவலுக்குப் போகலாம்!’’ என்று ஐடியா கொடுத்தார் வனத்துறை காவலர். கிழங்குகள் விளைவதால், சில நேரங்களில் காட்டுப் பன்றிகள் உலவலாம் என்றார்கள். அதுவும் எப்போதாவதுதான்!

மங்கள அருவிக்குச் செல்லும் பாதை - எட்டியோஸை அடிக்கடி நிறுத்தி நிறுத்தி மிரட்டியது. காரணம், ஃபார்ச்சூனர், ஸ்கார்ப்பியோ போன்ற எஸ்யுவி கார்களுக்காகவே உருவான பாதைபோல் இருந்தது மண் சாலை. 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருந்தும் இந்தப் பாதைகளை க்ராஸ் செய்ய, க்ராஸ் ரொம்பவே திணறியது. 1 கி.மீ தூரத்துக்கு முன்பாகவே காரை பார்க் செய்துவிட்டு நடந்தோம். ‘மங்களம் அருவி; நுழைவுக் கட்டணம் 20 ரூபாய்’ என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால், கவுன்ட்டரில் ஆள் இல்லை என்றால், இலவசமாகவே குளிக்கலாம்.

‘அப்படி என்னைப் பற்றி என்ன எழுதிவிடுவீர்கள் என்னைவிட அழகான ஹைக்கூவை’ என்பதுபோல், சின்னக் கவிதையாகப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது மங்களம் அருவி. குறைவான உயரத்தில் இருந்து விழுந்தாலும் குற்றாலம், மணிமுத்தாறு போன்ற மெகா அருவிகள் போல், தலையில் ‘ணங் ணங்’கென்று ஓங்கி ஆசீர்வதிக்கிறது மங்களம் அருவி. ‘‘அம்மா குளிப்பாட்டி விடுறது மாதிரியே இருக்குண்ணா!’’ என்று ஃபீலிங் காட்டினார் சரண்யா.

மங்களம் அருவியில் எந்தப் பயமும் இல்லை என்பது மிகப் பெரிய ப்ளஸ். இங்கு குடித்துவிட்டு பாட்டில் சில்லுகள் சிதறடிக்கப்படவில்லை; காதல் கசமுசாக்கள் நடக்கவில்லை; ‘கார் பார்க்கிங் 50; அருவியில் குளிக்க 50’ என்று ரசீது கிழிக்கும் வசூல்ராஜாக்கள் தொந்தரவு இல்லை. மொத்தத்தில், பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லை; எனவே, பெண்கள் பாதுகாப்பாகக் குளிக்கலாம். உடை மாற்றுவதற்கென்று இங்கு சின்ன அறையும் இருக்கிறது.

ஆனால், விடுமுறை நாள் என்பதால், பள்ளி மாணவர்கள் சிலர் அருவியை அதகளம் செய்து கொண்டிருந்தார்கள். ‘‘30 கி.மீ-க்கு அந்தப் பக்கம் இருந்து மலை ஏறி வர்றோம்ணே! ஆளுக்கு 100 ரூவா வீட்ல வாங்கிட்டு வந்து, நாட்டுக்கோழி வாங்கி இங்கேயே சமைச்சு சாப்பிடுறதுதான் எங்க பொழுதுபோக்கு! இந்த ஆண்ட்ராய்டு... கேண்டி க்ரஷ்... டெம்பிள் ரன்னெல்லாம் சொல்றாங்களே... அப்படின்னா என்னண்ணே?’’ என்று இயற்கையாக விழுந்த சிக்ஸ்பேக்கைத் தடவியபடி குளத்தில் டைவ் அடித்தான் ஓர் எட்டாம் வகுப்பு மாணவன்.

தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்றால், தனியாக இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டதோ என்னவோ, தனித்துவமான அழகோடு தனியாக இருக்கிறது பச்சைமலை. ‘ஆசம்’ என்று வியக்க வைக்கும் பச்சைமலை, எக்கோ டூரிஸம் ஏரியா ஆனபிறகு, சுற்றுலாவாசிகளால் ‘நாசம்’ ஆக்கப்படாமல் இருந்தால் ஓகே!

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044 - 66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு