Published:Updated:

எந்திரன் - 11

கிளட்ச் எப்படி வேலை செய்கிறது?பரணிராஜன்

பிரீமியம் ஸ்டோரி

வாகனத்தின் கன்ட்ரோல் யூனிட்களில் ‘கிளட்ச்’ மிக முக்கியமானது. இன்ஜின் சக்தியை, டிரான்ஸ்மிஷனுக்குத் தேவைப்படும்போது கடத்துவதும், தேவையில்லாதபோது நிறுத்தி வைப்பதும்தான் இதன் வேலை.

ஆட்டோமொபைல் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் இன்ஜின், தொடர்ச்சியாக ஒரே சீரான வேகத்தைத் தரும். அந்தக் குறிப்பிட்ட வேகத்தில் நிறுத்தியிருக்கும் வாகனத்தை நகர்த்துவதும், சாலை மாறுபாடுகளுக்கேற்ப வேகத்தை மாற்றுவதும் முடியாது. இதனைச் சாத்தியப்படுத்தி, தேவையான வேகத்தை அளிக்கும் டிரான்ஸ்மிஷன் பற்றி முன்பு படித்தோம். வாகனம் நியூட்ரலில் இருக்கும்போதும்; இயக்கத்தில் இருக்கும்போதும்; டிரான்ஸ்மிஷன் இன்ஜினுடன் தொடர்பிலேயே இருக்கும். அதாவது, கிளட்ச் ‘எங்கேஜிங்’(Engaging) நிலையிலேயே இருக்கும். கிளட்ச் பெடலை அழுத்துவதன் மூலம், இதனை ‘டிஸ்-என்கேஜிங்’(Dis-engaging) செய்து, (இன்ஜின் சக்தி, டிரான்ஸ்மிஷனுக்குக் கடத்தப்படாத நிலை) நமக்குத் தேவையான வேகத்தினை மாற்றிக்கொள்கிறோம்.

கிளட்ச் செயல்பாட்டின் முக்கிய அடிப்படை அம்சம், உராய்வு (Friction). இந்த உராய்வு விசை, பிரேக் பிடிப்பதில் எப்படிப் பயன்படுத்தப்பட்டது எனப் பார்த்திருக்கிறோம். இங்கும் அடிப்படையில் கிட்டத்தட்ட பிரேக் போன்ற செயல்பாடுதான். கிளட்ச் செயல்பாடுகளைப் பார்ப்பதற்கு முன்பு, அதனுடன் சம்பந்தப்பட்ட சில முக்கியப் பாகங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

எந்திரன் -  11

ஃப்ளைவீல் (Flywheel)

ஃப்ளைவீல் என்பது வட்டமான ஒரு சக்கரம். இன்னும் எளிதாகச் சொல்வது என்றால், பம்புசெட் பார்த்திருப்போம். அந்த மோட்டாரின் ஒருபுறம் இன்ஜினோடு இணைக்கப்பட்டிரும் சக்கரத்தைப் பார்த்திருப்போம். இதுதான் ஃப்ளைவீல். இதுவே, ஆட்டோமொபைல் ஃப்ளைவீலில் வெளிப்புறம் பற்சக்கரங்கள் பொருத்தப்பட்டு, பெரிய கியர் போல அமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில், இதுதான் இன்ஜினை ஸ்டார்ட் செய்ய உதவுகிறது. வாகனத்தை ஸ்டார்ட் செய்ய இக்னீஷன் ஸ்விட்ச்சை ஆன் செய்யும்போது, ஸ்டார்ட்டர் மோட்டாரில் இருக்கும் சின்ன கியர், ஃப்ளைவீலின் கியரில் இணைந்து அதைச் சுழலவைத்துவிட்டு விலகிவிடும். இப்படிச் சுற்ற ஆரம்பித்த ஃப்ளைவீல், இன்ஜினை இயங்கவைக்கும். தற்போது எல்லா வாகனங்களும் 4 ஸ்ட்ரோக் இன்ஜின் கொண்டவை. இதில், 1 ஸ்ட்ரோக் மட்டுமே ‘பவர் ஸ்ட்ரோக்.’ அதில் மட்டும்தான் இன்ஜினில் இருந்து சக்தி கிடைக்கும். அந்த சக்தி, இன்ஜின் கிராங்க் ஷாஃப்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள ஃப்ளைவீலில் சேமிக்கப்பட்டு, இன்ஜின் சக்தி வெளிப்படாத மீதி 3 ஸ்ட்ரோக்குகளின்போது வெளிப்படுகிறது. இப்படி சக்தியைச் சேமிக்கும் இடமாகவும், தொடர்ந்து டிரான்ஸ்மிஷனுக்கு சக்தியைக் கொடுக்கும் வேலையையும் ஃப்ளைவீல் செய்கிறது. சக்தியைச் சேமித்துக் கொடுக்க, ஃப்ளைவீல் அதன் நிலைமத்தைப் (Moment of Inertia) பயன்படுத்துகிறது. இன்ஜின் இயக்கத்தினால் ஏற்படும் அதிர்வுகளையும் இது குறைக்கிறது. ஃப்ளைவீலின் ஒரு பக்கம் இன்ஜினுடனும், மற்றொரு பக்கம் கிளட்ச் அசெம்பிளியுடனும் இணைக்கப்பட்டு இருக்கும்.

எந்திரன் -  11

கிளட்ச் டிஸ்க் (Clutch disc)

அடுத்தது கிளட்ச் டிஸ்க் அல்லது கிளட்ச் பிளேட் எனப் படும் வட்டத் தகடு. கிளட்ச் டிஸ்க், டிரான்ஸ்மிஷன் ஷாஃப்ட்டுடன் இணைந்திருக்கும். இதன் சுழற்சி வேகமே, டிரான்ஸ்மிஷன் சுழற்சி வேகத்தைத் தீர்மானிக்கும். இந்த கிளட்ச் டிஸ்க்-ன் இருபுறமும் உராய்வுப் பரப்புகள்(Friction surfaces) ரிவெட்(Rivets) மூலம் இணைந்திருக்கும். இந்த உராய்வுப் பரப்புகள் முன்பு ஆஸ்பெட்டாஸில் செய்யப்பட்டன, இப்போது செராமிக்கில் செய்யப்படுகின்றன. இவைகளின் உராய்வுக் குணகம் (Co-efficient of Friction) மிக அதிகம். ஏனெனில், இவைதான் இன்ஜினின் சக்தியை அப்படியே டிரான்ஸ்மிஷனுக்குக் கடத்துகின்றன.

கிளட்ச் பிளேட்டின் நடுப்பகுதி ‘ஹப்’ (HUB). இது ஸ்ப்ளைன்கள் வழியாக டிரான்ஸ்மிஷன் ஷாஃப்ட்-ல் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஹப்பின் மேலே, 4 அல்லது 5 ஸ்ப்ரிங்குகள் (Torsional Springs) கொண்ட அதிர்வு தாங்கும் அமைப்பு இருக்கிறது. திடீரென கிளட்ச்சை அழுத்துதல் மற்றும் வெவ்வேறு வேக மாற்றங்களின்போது, கிளட்ச் அழுத்தப்படுவதனால் தோன்றும் பளு மாற்ற அதிர்வுகளை, இந்த ஸ்பிரிங்குகள் தாங்கிக்கொள்கின்றன.

எந்திரன் -  11

பிரஷர் பிளேட் (Pressure Plate)

அடுத்து இருப்பது பிரஷர் பிளேட். இது கிளட்ச் கவருடன் இணைந்து, ஃப்ளைவீல் உடன் போல்ட்டுகள் மூலம் பொருத்தப்பட்டிருக்கும். இதில் உள்ள ஸ்ப்ரிங்க் லோடட் கிளாம்ப் (Spring loaded clamp), எப்போதும் கிளட்ச் டிஸ்க் ஃப்ளைவீலுடன் ஒட்டியே இருக்கும்படி அழுத்திக்கொண்டிருக்கும்.

விளக்கப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் பிரஷர் பிளேட்டின் நடுவில் இருந்து ஆரங்களாக நீட்டிக்கொண்டிருப்பவையே ஸ்பிரிங்குகள். இவை நடுவில் ஒரு கிளாம்ப்புடன் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் கிளட்ச் ரிலீஸ் பேரிங் ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கும்.

வேலை செய்யும் முறை

கிளட்ச் பெடல் அழுத்தப்படாமல் இருக்கும்போது, இந்த ஸ்பிரிங் லோடட் கிளாம்ப், பிரஷர் பிளேட்டை முன்பக்கம் கிளட்ச் டிஸ்க்கின் மேலே அழுத்தமாகப் பொருந்துமாறு பிடித்திருக்கும். கிளட்ச் டிஸ்க், ஒரு சான்ட்விச் போல ஒரு பக்கம் ஃப்ளைவீல், மறுபக்கம் பிரஷர் பிளேட் என நடுவில் அழுந்தப் பொருந்தியிருக்கும். ஃப்ளைவீலின் சுழற்சி, கிளட்ச் டிஸ்க்கின் உராய்வுப் பரப்புகள் வழியாக, கிளட்ச் டிஸ்க்கின் சுழற்சியை மாற்றியமைக்கும். அதனால், கிளட்ச் டிஸ்க்குடன் இணைக்கப்பட்டிருக்கும் டிரான்ஸ்மிஷன் ஷாஃப்ட், ஃப்ளைவீல் வேகத்திலேயே சுழன்றுகொண்டிருக்கும்.

வாகனத்தின் வேகத்தை மாற்ற நினைக்கும்போது, முதலில் கிளட்ச் பெடலை அழுத்துவோம். அப்போது, கிளட்ச் பெடலின் அழுத்தம், மெக்கானிக்கல் லிங்க்கேஜ்களின் வழியாக, பிரஷர் பிளேட்டில் இருக்கும் கிளட்ச் ரிலீஸ் பேரிங்கை அழுத்தும். இவை அழுத்தப்படும்போது இந்த பேரிங் உள்ளே சென்று, ஸ்பிரிங் லோடட் கிளாம்பைத் தள்ளும். அப்போது, பிரஷர் பிளேட்டில் இருக்கும் ஸ்பிரிங்குகள் தளர்வடைந்து, பிரஷர் பிளேட்டை பின்னோக்கித் தள்ளும். அதனால், சான்ட்விச் போல ஒட்டிக்கொண்டிருந்த ஃப்ளைவீல் + கிளட்ச் டிஸ்க் + பிரஷர் பிளேட் அமைப்பு, தனித் தனியே விலக ஆரம்பிக்கும். ஃப்ளைவீலுக்கும் கிளட்ச் டிஸ்க் உராய்வுப் பரப்புகளுக்கும் இடையே இருந்த தொடர்பு அறுபட்டு, இன்ஜின் சக்தி டிரான்ஸ்மிஷனுக்குக் கடத்தாது. இந்தச் சமயத்தில், நமக்குத் தேவையான வேகத்தை, கியர் லீவர் மூலம் மாற்றிக்கொள்ளலாம். 

நான்கு சக்கர வாகனத்தில் இருக்கும் கிளட்ச், ட்ரை கிளட்ச் (Dry clutch) வகையைச் சேர்ந்தது. எவ்வளவுக்கு எவ்வளவு உராய்வுப் பரப்பு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கிளட்ச்சின் செயல்பாடு பயனுள்ளதாக இருக்கும். உராய்வுப் பரப்புகள் தேய்வடையும்போது, சரிவர கிளட்ச் பிடிக்காமல் இருக்கும் நிலையை, ‘கிளட்ச் ஸ்லிப் (Clutch slip) என்பர்.
அதிகப்படியான உராய்வுப் பரப்புகளின் தேய்மானமே கிளட்ச்சை மாற்றும் நிலைக்குக் கொண்டுவந்துவிடுகிறது. முறையான கிளட்ச் பயன்பாடு மற்றும் சரியான பராமரிப்பு மூலம், நம் வாகனத்தின் கிளட்ச்சை நீண்ட காலம் உழைக்கவைக்கலாம்.

- (எந்திரன் பேசுவான்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு