Published:Updated:

தகுதியான தரமான கார் க்ரெட்டா!

ரீடர்ஸ் ரெவ்யூ / ஹூண்டாய் க்ரெட்டா டீசல்சந்திப்பு, படங்கள்: ஜெ.விக்னேஷ்

ன்னுடைய அப்பா 1990களில் அம்பாஸடர், டாடா சியரா, டாடா சஃபாரி ஆகிய கார்களை வைத்திருந்தார். நான் கல்லூரிக்குச் செல்ல, சிட்டி டிரைவிங்குக்கு ஏற்ற ஹேட்ச்பேக் கார் ஒன்றை வாங்க விரும்பினேன். மாருதி ஸ்விஃப்ட் என் விருப்பத்தைப் பூர்த்தி செய்தது. 2009-ம் ஆண்டு ஸ்விஃப்ட் காரை வாங்கினேன். அது, கல்லூரி மாணவனுக்கு உகந்த காராக இருந்தது. 2012-ம் ஆண்டு, குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் செல்ல, டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை வாங்கினோம். நீண்ட தூரப் பயணங்களுக்கு ஃபார்ச்சூனர் மிகவும் பாதுகாப்பான காராக இருந்தது. அடிக்கடி ஃபார்ச்சூனரில் சென்னையில் இருந்து முதுமலைக்கு பயணம் செய்வோம். ஆனால், செல்ஃப் டிரைவிங்குக்கு, ஃபார்ச்சூனர் பொருத்தமான காராக இல்லை.

ஏன் ஹூண்டாய் க்ரெட்டா?

குடும்பத்துடன் பயணிக்க, அதே நேரத்தில் செல்ஃப் டிரைவிங்குக்கும் ஏற்ற காரை தேடிக்கொண்டிருந்தோம். இணையதளம், நண்பர்கள், உறவினர்கள் ஆலோசனை என கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தோம். ரெனோ டஸ்ட்டர், நிஸான் டெரானோ, ஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுடன் ஒப்பிடுகையில் இன்ஜின், இடவசதி, பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் ஹூண்டாய் க்ரெட்டா சிறந்த காராக இருந்தது. மேலும், எங்களுடைய பட்ஜெட்டான 15 - -20 லட்சம் விலைக்குள் உள்ள கார்களில், க்ரெட்டா பெஸ்ட்டாகத் தெரிந்தது. சென்னையிலும் ஓட்டுவதற்கு வசதியாக, காம்பேக்ட்டான SUV காராக இருந்ததால், எந்தவித தயக்கமும் இன்றி க்ரெட்டாவை தேர்வு செய்தோம்.

தகுதியான தரமான கார் க்ரெட்டா!

ஷோரூம் அனுபவம்

கஸ்டமர் சர்வீஸ் சிறப்பாக இருந்ததால், அம்பத்தூரில் உள்ள FPL ஹூண்டாய் ஷோரூமைத் தேர்ந்தெடுத்தோம். என் நண்பர் அங்கு சேல்ஸ்மேனாக வேலை செய்கிறார். அவரைச் சந்தித்து காரின் விவரங்களைத் தெரிந்துகொண்டேன். பின்னர், அங்கு டெஸ்ட் டிரைவுக்காக நிறுத்தப்பட்டிருந்த காரை ஓட்டிப் பார்த்தேன். ஓட்டுவதற்கு வசதியாக இருந்தது. இடவசதியும் அதிகமாக இருந்ததால், உடனே புக் செய்துவிட்டேன். புக் செய்த இரண்டு வாரங்களில் கார் டெலிவரிக்கு தயாரானது. குடும்பத்துடன் ஷோரூமுக்குச் சென்று, காரை டெலிவரி எடுத்துக்கொண்டு திருவேற்காடு கோயிலுக்குச் சென்றோம்.

எப்படி இருக்கிறது ஹூண்டாய் க்ரெட்டா?

கார் வாங்கி மூன்று நாட்கள் கழித்து, நண்பரின் திருமணத்துக்காக திருச்சிக்கு சென்றேன். அதுதான் க்ரெட்டாவில் என்னுடைய முதல் நீண்ட தூரப் பயணம். நெடுஞ்சாலையில் செல்லும்போது, சுலபமாக மணிக்கு 140 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்ய முடிகிறது. அதிகபட்சமாக நான் மணிக்கு 170 கி.மீ வேகம் வரை சென்றேன். ஸ்டீயரிங் கன்ட்ரோல் சிறப்பாக இருந்தது. வளைவுகளில் காரை திருப்பும்போது, பயமில்லாமல் திருப்ப முடிகிறது. சோர்வின்றி சென்னையில் இருந்து திருச்சி வரை சென்று திரும்பினேன். ஸ்விஃப்ட், ஃபார்ச்சூனர் ஆகிய கார்களுடன் ஒப்பிடுகையில், க்ரெட்டாவில் லாங் டிரைவ் செல்லும்போது, மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். ஆனால், ஹெட்லைட், போதிய வெளிச்சம் இல்லாததால், இரவில் வேகமாகச் செல்ல முடியவில்லை. 

தகுதியான தரமான கார் க்ரெட்டா!

பிடித்தது

இந்த காரின் பெரிய ப்ளஸ், இதன் ஹேண்ட்லிங்தான். 140 கி.மீ வேகத்தில் செல்லும்போதுகூட கன்ட்ரோல் பக்காவாக இருக்கிறது. திருப்பங்களிலும் கன்ட்ரோல் சிறப்பாக உள்ளது. இன்ஜின் பவரும் அட்டகாசம். ஸ்டார்ட் செய்து, 10 விநாடிகளில் சுலபமாக 0- 100 கி.மீ வேகத்தை தொட்டுவிட முடிகிறது. வெளியூர்களுக்கு செல்லும்போது, ஒரு லிட்டருக்கு 15 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கிறது. முன்னால் இருவரும், பின்னால் இருவரும் வசதியாக உட்காரும் வகையில், க்ரெட்டாவில் அதிக இடவசதி இருக்கிறது. இருக்கைகளும் சிறப்பாக உள்ளன. வெளியூர்களுக்குச் செல்லும்போது பொருட்களை எடுத்துச் செல்ல ஏதுவாக விசாலமான டிக்கியும் இருப்பது இந்த காரின் கூடுதல் சிறப்பம்சம்.

பிடிக்காதது

க்ரெட்டாவின் மிகப் பெரிய மைனஸ் ஹெட்லைட்ஸ்தான். வெளிச்சம் மிகக் குறைவாக இருப்பதால், இரவு நேரங்களில், தெரு விளக்கு இல்லாத சாலைகளில் செல்ல கொஞ்சம் சிரமமாக இருக்கும். பின்னால் உள்ள சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்ஸ் பொருத்தியிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். டேஷ்போர்டின் தரம் 16 லட்ச ரூபாய் விலைகொண்ட காருக்கு ஏற்றதாக இல்லை. குறைந்த  விலை கார்களான i10, i20 ஆகிய கார்களிலும் இதே தரத்திலான டேஷ்போர்டுதான் உள்ளன. 
           
என் தீர்ப்பு

16 லட்ச ரூபாய்க்கு முழுத் தகுதியுள்ள கார் க்ரெட்டா. செல்ஃப் டிரைவிங் செய்பவர்களுக்கு மிகப் பொருத்தமான கார். ஸ்டீயரிங் கன்ட்ரோலும், இடவசதியும், பாதுகாப்பு அம்சங்களும் மன நிறைவைத் தருகின்றன.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு