Published:Updated:

எது பிரீமியம் ஹேட்ச்பேக்?

பெட்ரோல் இன்ஜின்ஒப்பீடு / பெலினோ vs ஜாஸ் vs i20 (பெட்ரோல்)தொகுப்பு: ராகுல் சிவகுரு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்த ஒரு கார் நிறுவனமாக இருந்தாலும், புதிதாக ஒரு காரைத் தயாரிக்கும் முன்பு, அந்த செக்மென்ட்டில் அதிகம் விற்பனையாகும் காரையும் குறைவாக விற்பனையாகும் காரையும் தேர்ந்தெடுத்து, அதற்கான காரண காரியங்களை ஆராய்ந்த பின்புதான், புதிய கார் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். மேலும், நிகழ்காலத் தொழில்நுட்பமும் எதிர்கால டிஸைன் அம்சங்களும் இணைவதால், போட்டியாளர்களைவிட புதிதாகத் தயாரிக்கும் கார், அனைத்து வகையிலும் முன்னணியில் இருக்கும்.

சென்ற இதழில், புதிய ஹேட்ச்பேக் காரான மாருதி சுஸூகி பெலினோவின் டீசல் மாடல், ஹூண்டாய் எலீட் i20 டீசல் மாடலிடம் தோல்வியடைந்தது. ஆனால், இந்த ஒப்பீடு பெட்ரோல் கார்களுக்கானது என்பதால், நிலைமை மாறலாம். இடவசதி மற்றும் பவர்ஃபுல் இன்ஜின் ஆகியவற்றைத் தனது பலமாகக்கொண்டிருக்கும் ஹோண்டா ஜாஸ், இந்தப் போட்டியில் இணைந்திருக்கிறது. இவற்றில் எது பெஸ்ட்?

 எது பிரீமியம் ஹேட்ச்பேக்?

டிஸைன்

இதுவரை மாருதி சுஸூகி தயாரித்த ஹேட்ச்பேக் கார்களிலே சிறந்த தோற்றம் கொண்ட கார் பெலினோதான். பின் பக்க குவார்ட்டர் க்ளாஸ், அலைபோல உயரும் ஷோல்டர் லைன், V வடிவ க்ரில், டே டைம் ரன்னிங் லைட்ஸ் உடன் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் என குறிப்பிடத்தக்க அம்சங்கள் பெலினோவில் அதிகம். பெரிய வீல் ஆர்ச்சுடன் சரியாகப் பொருந்தும் 16 இன்ச் அலாய் வீலின் டிஸைன், மிகவும் சுமாராக இருக்கிறது. ஆனால், மற்ற இரு கார்களுடன் ஒப்பிடும்போது, டல்லாக இருக்கிறது பெலினோ.

அதிக இடவசதி ஒன்றையே நோக்க மாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டதால், ஒற்றை பாக்ஸ் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது பழைய ஜாஸ். அதனால், தற்போது விற்பனையில் இருக்கும் புதிய ஜாஸில் ஷார்ப்பான கோடுகள், பெரிய ஏர் டேம் மற்றும் பனி விளக்குகள், பின்பக்க பம்பரில் பொய்யான ஏர் வென்ட், டெயில் லைட்டுகளை இணைக்கும் க்ரோம் பட்டை, பூட் வரை நீண்ட டெயில் லைட் என தன் கைவண்ணத்தை, காரில் காட்டியிருக்கிறது ஹோண்டா. ஆனால், 15 இன்ச் அலாய் வீல்கள், மிகவும் சிறிதாக இருக்கின்றன.

 எது பிரீமியம் ஹேட்ச்பேக்?

சாலைகளில் அதிகமாகக் காணப்படும் கார் என்றாலும்கூட, இன்னும் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது எலீட் i20. கறுப்பு நிற பில்லர், 16 இன்ச் அலாய் வீல்கள், ஸ்பிளிட் கிரில், LED போன்ற டெயில் லைட், ஷார்ப்பான ஹெட்லைட் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட விதம் சூப்பர். உயரமான சஸ்பென்ஷன் ஸ்பிரிங் காரணமாக, கார் எதன் மீதோ ஏறி நிற்பதுபோல இருக்கிறது.

இன்டீரியர் மற்றும் சிறப்பம்சங்கள்

பாகங்களின் ஃபிட் அண்டு ஃபினிஷ், ஹூண்டாய் கார்களில் ஹேட்ச்பேக் செக்மென்ட்டைப் பொறுத்தவரை, அசத்தலாக இருக்கும். அதற்கேற்ப, தரமான பிளாஸ்டிக்குகளால் செய்யப்பட்ட எலீட் i20 காரின் இரட்டை வண்ண டேஷ்போர்டு ஈர்க்கிறது. தவிர, பட்டன்கள் அனைத்தும் ஒளிரும் தன்மையுடன் இருப்பது, இரவு நேரத்தில் உதவியாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், காரின் விலைக்கேற்ற இன்டீரியரைக் கொண்டிருக்கிறது எலீட் i20.

ஹோண்டா சிட்டியை அடிப்படையாகக் கொண்ட ஜாஸின் டேஷ்போர்டின் ஃபிட் அண்டு ஃபினிஷ் தரம் - ஹூண்டாய் அளவுக்கு இல்லை. மேலும் பல்வேறு வடிவங்களில் இருக்கும் பாகங்கள், சரியாக ஒருங்கிணைக்கப்படவில்லை. இன்டீரியரில் இடம் பெற்றிருக்கும் பளபளப்பான பிளாஸ்டிக்ஸ், கைத்தடங்களைப் பிரதிபலிப்பதுடன் தரமும் ஒரே சீராக இல்லை. ஹோண்டா சிட்டியில் இருக்கும் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, ஜாஸில் இல்லாததால், அந்த இடத்தை பிளாஸ்டிக்கால் மறைத்திருக்கிறார்கள். காரின் கேபினில், பொருட்களை வைப்பதற்கு மற்ற கார்களைவிட நிறைய இடம் இருக்கிறது.

 எது பிரீமியம் ஹேட்ச்பேக்?
 எது பிரீமியம் ஹேட்ச்பேக்?

மாருதி சுஸூகி பெலினோ, மற்ற மாருதி கார்களுடன் ஒப்பிடும்போது, வித்தியாசமான வடிவமைப்புடன் கூடிய டேஷ்போர்டைக் கொண்டிருக்கிறது. ஆனால், பவர் விண்டோஸ் ஸ்விட்ச், ஸ்டீயரிங் வீல் ஆகியவை, விலை குறைவான மாருதி கார்களில் இருந்து பெறப் பட்டிருப்பது நெருடல். V-வடிவ சென்டர் கன்ஸோல் ஈர்த்தாலும், காருடைய கேபினில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்ஸ் தரம் நன்றாக இல்லை. ஆறுதல் என்னவென்றால், நீல நிற இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் இடையே இருக்கும் ஸ்கிரீன், ஓட்டுநருக்குத் தேவையான தகவல்களை வழங்குகிறது.

சிறப்பம்சங்களில் மிகவும் பின்தங்கி இருப்பதால், ஹோண்டா கிட்டத்தட்ட விலகிவிட்ட நிலையில், ஹூண்டாய் மற்றும் மாருதி சுஸூகி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பெலினோவில் டச் ஸ்கிரீன் வருகிறது எனத் தெரிந்தவுடன், டாப் வேரியன்டில் உடனடியாக டச் ஸ்கிரீனை ஹூண்டாய் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இங்கிருக்கும் மூன்று கார்களிலும் ப்ளூடூத், நேவிகேஷன், AUX - USB, ரிவர்ஸ் கேமரா வசதிகளுடன் கூடிய டச் ஸ்கிரீன் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஆப்பிள் போன்களை இணைப்பதற்கான வசதியுடன் கிடைக்கும் பெலினோவின் டச் ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதுடன், தெளிவாகவும் இருக்கிறது. ஜாஸின் டச் ஸ்கிரீன் சிஸ்டம், வெளிமார்க்கெட்டில் வாங்கிப் பொருத்தியதுபோல இருக்கிறது. இதனுடன் ஒப்பிடும்போது, ஹூண்டாய் காரின் டச் ஸ்கிரீன் எவ்வளவோ பரவாயில்லை. பெரிய காரான ஜாஸில், மற்ற கார்களில் இருக்கும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார், புஷ் பட்டன் ஸ்டார்ட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் வீல், தானாக ஒளிரும் ஹெட்லைட் ஆகியவை இல்லாதது மைனஸ். ஏனென்றால், இங்கிருக்கும் மூன்று கார்களில் ஜாஸ்தான் விலை அதிகமான கார். ஆனால், ஒவ்வொரு காருக்கும் தனித்தன்மையான வசதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. எலீட் i20 காரில் மட்டும்தான் பின்பக்க ஏ.சி வென்ட் இருக்கிறது. ஜாஸில் மட்டும்தான் சிடி ப்ளேயர் இருக்கிறது. பெலினோவில் மட்டும்தான் ப்ரொஜெக்டர் ஹெட் லைட்ஸ், டே டைம் ரன்னிங் லைட்ஸ் இருக்கின்றன. பாதுகாப்பைப் பொறுத்தவரை ஜாஸ், எலீட் i20 கார்களின் டாப் வேரியன்ட்டில் மட்டுமே இரண்டு காற்றுப் பைகள் மற்றும் ஏபிஎஸ் கிடைக்கும் நிலையில், பெலினோவின் ஆரம்ப மாடல் முதலே பாதுகாப்புச் சாதனங்கள் இடம்பெற்றிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.

 எது பிரீமியம் ஹேட்ச்பேக்?
 எது பிரீமியம் ஹேட்ச்பேக்?

இடவசதி

அதிக இடவசதி மற்றும் சிறப்பம்சங்களை வழங்குவதால், பிரீமியம் ஹேட்ச்பேக்கை வாங்குபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதை நிறைவேற்றாத காரணத்தால்தான் ஃபோக்ஸ்வாகன் போலோ, ஃபியட் புன்ட்டோ ஆகிய கார்கள், இந்த ஒப்பீட்டில் சேரவில்லை. முன்பு, i20 கார்தான் அதிக இடவசதியையும் மற்றும் பூட் ஸ்பேஸையும் கொண்டிருந்தது. தற்போது இங்கிருக்கும் கார்களில் i20 மேற்கூறிய இரு விஷயங்களிலும் பின்தங்கி இருக்கிறது. தாழ்வான இருக்கை மற்றும் உயரமான கதவுகள், இதனைப் பறைசாற்றுகின்றன. மேலும், இருக்கைகள் குறுகலாக இருப்பதால், இரண்டு பேர் மட்டுமே வசதியாக அமர முடிகிறது. எலீட் i20-ன் முன்பக்க மற்றும் பின்பக்க இருக்கைகள் மென்மையாக இருப்பதால், நீண்ட தூரப் பயணங்களுக்கு உகந்ததாக இல்லை. மற்ற மாருதி கார்களுடன் ஒப்பிடும்போது, ஆச்சரியப்படும் வகையில் இருக்கிறது பெலினோவின் இடவசதி. அகலமான இருக்கை என்பதால், மூன்று பேர் கால்களை நீட்டி உட்கார முடிகிறது. முன்பக்க இருக்கைகளும் வசதியாக இருக்கின்றன என்றாலும், அவை உயரமாகவும் பெரிதாகவும் இருப்பதால், பின்னால் அமர்பவர்களுக்கு முன்பக்க சாலை தெளிவாகத் தெரியவில்லை. இடவசதியைப் பொறுத்தவரை, ஹோண்டா ஜாஸ்தான் ராஜா. மேஜிக் சீட் என்பதால், நமது விருப்பத்துக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிகிறது. இருக்கைகள் சொகுசாகவும் உயரமாகவும் இருப்பதால், மூன்று பேர் வசதியாக அமர முடிவதுடன், வெளிச்சாலை தெளிவாகத் தெரிகிறது. முன்பக்க இருக்கையிலும் ஜாஸ்தான் பெஸ்ட். 354 லிட்டர் கொள்ளளவுடன், இங்கிருக்கும் கார்களில் அதிக பூட் ஸ்பேஸைக்கொண்டிருக்கிறது. மாருதி சுஸூகி பெலினோ மற்றும் ஹூண்டாய் எலீட் i20 முறையே 339 லிட்டர் மற்றும் 285 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டுள்ளன. தவிர, ஜாஸின் பூட் உயரம் குறைவாக இருப்பதால், மற்ற இரு கார்களுடன் ஒப்பிடும்போது, பொருட்களை வைக்க எளிதாக இருக்கிறது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ்

இந்த மூன்று கார்களின் டீசல் இன்ஜினின் திறன் மற்றும் வெளிப்படுத்தும் பவரின் அளவில் வித்தியாசம் இருப்பதால், பெர்ஃபாமென்ஸ் ஒரே மாதிரி இல்லை. ஆனால், பெட்ரோல் இன்ஜின்கள் அனைத்தும் 1.2 லிட்டர் இன்ஜின்கள் என்பதால், அவை கிட்டத்தட்ட ஒரே பவர்/டார்க் அளவைக் கொண்டுள்ளன. காரின் எடைதான் ஒவ்வொரு காரின் பெர்ஃபாமென்ஸைத் தீர்மானிக்கிறது. முற்றிலும் புதிய சேஸியில் தயாராகி இருக்கும் பெலினோவின் எடை, வெறும் 890 கிலோதான். இது, ஜாஸைவிட 150 கிலோவும், எலீட் i20-ஐவிட 190 கிலோவும் குறைவு. அதனால், 0 - 100 கி.மீ வேகத்தை, பெலினோ 12.60 விநாடியிலேயே எட்டிப் பிடிக்கிறது. இதே வேகத்தை எட்டுவதற்கு, ஜாஸ் 14.2 விநாடிகளும், எலீட் i20 காருக்கு 15.71 விநாடிகளும் தேவைப்படுகின்றன. கார் சட்டெனச் சீறுவதால், பெலினோவை நகரம் மற்றும் நெடுஞ்சாலையில் பிரச்னையின்றி ஓட்ட முடிகிறது. மேலும் கிளட்ச் மற்றும் கியர்பாக்ஸ், பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதுடன், அனைத்து வேகங்களிலும் பவர் டெலிவரி ஒரே சீராக இருக்கிறது. சுஸூகியின் K12 இன்ஜின் ஸ்மூத்தாக இருந்தாலும், காரின் எடைக் குறைப்புக்காக, குறைவான அளவே சத்தத்தைக் கட்டுபடுத்தக்கூடிய மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால், இன்ஜின் சத்தம் காருக்குள் கேட்கிறது. எடை குறைவான கிராண்ட் i10ல், ஹூண்டாயின் KAPPA 2 இன்ஜின் சிறப்பாகச் செயல்படுகிறது. ஆனால், எலீட் i20யின் எடை 1,080 கிலோ என்பதால், இன்ஜின் கூடுதல் எடையை இழுக்க வேண்டியிருக்கிறது. அதனால், பவர் டெலிவரி வீக்காக இருக்கிறது. ஆறுதல் என்னவென்றால், எலீட் i20யின் கிளட்ச் - கியர்பாக்ஸ் கூட்டணி, பயன்படுத்த ஸ்மூத்தாக இருப்பதுடன், எந்த வேகத்திலும், குறைவான சத்தம் காரணமாக, இன்ஜின் இயங்குவதே தெரியவில்லை.

 எது பிரீமியம் ஹேட்ச்பேக்?
 எது பிரீமியம் ஹேட்ச்பேக்?

இதற்கு நேர்மாறாக, ஓட்டுநரை விரட்டி ஓட்டத் தூண்டும் வகையில் இருக்கிறது ஜாஸின் இன்ஜின். குறைவான வேகங்களில் அமைதியாகவும், அதிக வேகங்களில் ஸ்போர்ட்டியான சத்தத்தையும் வெளிப்படுத்துகிறது ஹோண்டாவின் i-VTEC இன்ஜின். மிட் ரேஞ்ச் டல்லாக இருப்பதால், அடிக்கடி கியர் மாற்ற வேண்டியிருக்கிறது. ஆனால், ஜாஸின் கியர்பாக்ஸ்தான் பயன்படுத்த பெஸ்ட். என்றாலும், கிளட்ச் ஹெவியாக இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்தபடி, எடை குறைவான பெலினோதான் இங்கிருக்கும் கார்களிலே அதிக மைலேஜ் தருகிறது. பெலினோ - லிட்டருக்கு நகருக்குள் 13.43 கி.மீ, நெடுஞ்சாலையில் 18.11 கி.மீ மைலேஜ் அளிக்கிறது. ஜாஸ் - நகரத்தில் 12.3 கி.மீ, நெடுஞ்சாலையில் 16.9 கி.மீ அளிக்கிறது. எலீட் i20 - நகருக்குள் 11.5 கி.மீ, நெடுஞ்சாலையில் 15.2 கி.மீ மைலேஜ் அளிக்கிறது.

 எது பிரீமியம் ஹேட்ச்பேக்?

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

ஹேட்ச்பேக் செக்மென்ட்டில், மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்தான், இந்தியச் சாலைகளுக்கு ஏற்ற சஸ்பென்ஷன் மற்றும் சூப்பரான கையாளுமையை வழங்கி தனித்தன்மையுடன் திகழ்கிறது. சியாஸில், பயணிகளின் சொகுசே முக்கியம் என்பதால், சஸ்பென்ஷன் மென்மையாக இருந்தது. ஆனால், ஆச்சரியப்படும் வகையில், பெலினோ இறுக்கமான சஸ்பென்ஷன் அமைப்பைக்கொண்டிருக்கிறது. அதனால், அனைத்து வேகங்களிலும், காரின் பாடி கன்ட்ரோல் மற்றும் நிலைத்தன்மை சிறப்பாக இருக்கிறது. ஆனால், பெரிய மேடு பள்ளங்களில் கார் ஏறி இறங்கும்போது ஏற்படும் அதிர்வுகளை, காருக்குள் இருப்பவர்களால் உணர முடிகிறது. ஸ்டீயரிங் போதுமான எடையுடன் இருந்தாலும், அவ்வளவு துல்லியமாக இல்லை என்பதுடன், காரைத் திருப்பி முடித்தவுடன் ஸ்டீயரிங் உடனடியாக நடுப்பகுதிக்கு வர மறுக்கிறது. ஹூண்டாய் எலீட் i20-யிலும் இதே பிரச்னை இருக்கிறது. குறைவான ஸ்டீயரிங் எடை மற்றும் மென்மையான சஸ்பென்ஷன் இருப்பதால், நகரத்தில் எலீட் i20 காரை ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. ஆனால், இதே செட்அப் காரணமாக, நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் செல்லும்போது கார் அலைபாய்வதுடன், கார் மிதப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஜாஸின் கையாளுமையில், ஹோண்டா தனது மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறது. சஸ்பென்ஷன் இயங்குவது காருக்கு உள்ளே சற்று கேட்கிறது என்றாலும், நமது சாலைகளுக்கு ஏற்ற அமைப்பைக்கொண்டிருக்கிறது. உயரமான கார் என்றாலும், பாடி ரோல் குறைவாகவே இருப்பதுடன், அதிக வேகத்திலும், ஜாஸ் நிலையாக இருக்கிறது. ஜாஸின் ஸ்டீயரிங், குறைவான வேகத்தில் லைட்டாகவும், அதிக வேகத்தில் டைட்டாகவும் இருப்பதால், செல்ல வேண்டிய திசையில், நம்பிக்கையுடன் காரைச் செலுத்த முடிகிறது.

 எது பிரீமியம் ஹேட்ச்பேக்?

எலீட் i20 கார்தான் இங்கிருக்கும் கார்களிலேயே பழையது என்றாலும், இன்னும் ஸ்டைலாகவே காட்சியளிக்கிறது. தரமான இன்டீரியர், அதிக சிறப்பம்சங்கள் என கொடுக்கும் காசுக்கு ஏற்ற காராக இருக்கிறது. ஆனால், வீக்கான இன்ஜின், சொதப்பலான ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை என மெக்கானிக்கல் விஷயங்களில் பின்தங்கிவிடுகிறது. மேலும், இடவசதியும் அவ்வுளவு சிறப்பாக இல்லை.

 எது பிரீமியம் ஹேட்ச்பேக்?

எலீட் i20 காருக்கு அப்படியே நேர் எதிராக இருக்கிறது ஹோண்டா ஜாஸ். ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை விஷயத்தில், இந்த கார் அட்டகாசமாக இருக்கிறது. இடவசதியிலும் சொல்லி அடிக்கிறது ஜாஸ். ஆனால், காரின் கேபினில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்கின் தரம் நன்றாக இல்லை. மேலும், காரின் விலை அதிகமாக இருந்தாலும், அதை நியாயப்படுத்த போதுமான சிறப்பம்சங்களும் இல்லை.

மாருதி சுஸூகி பெலினோ - டிஸைன், கட்டுமானத் தரம், கையாளுமை ஆகியவற்றில் ஸ்விஃப்ட் அளவுக்கு இல்லை என்றாலும், இங்கிருக்கும் மற்ற கார்களைவிட பெலினோதான் பயன்படுத்த எளிதாக இருக்கிறது. பெர்ஃபாமென்ஸ், இடவசதி, பூட் ஸ்பேஸ், சிறப்பம்சங்கள், பாதுகாப்பு என ஒரு பிரீமியம் காருக்குத் தேவையான விஷயங்களில் அசத்துகிறது, தவிர, இங்கிருக்கும் கார்களிலே குறைந்த விலை என்ற தகுதி, பெலினோவை இந்தப் போட்டியின் வெற்றியாளராக மாற்றுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு