Published:Updated:

டூரிங் டாக்கீஸ்!

ஒப்பீடு / மஹிந்திரா மோஜோ Vs பெனெல்லி TNT25தொகுப்பு: ராகுல் சிவகுரு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ட்டுப்படியான விலையில், ஓட்டுவதற்கு வசதியான ஸ்போர்ட்ஸ் டூரிங் பைக்குகள், இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேதான் இருந்தன. சமீபகாலமாக புதிய பைக்குகளின் படையெடுப்பு, இந்த நிலைமையைத் தலைகீழாக மாற்றியிருக்கிறது. அதில், மஹிந்திரா மோஜோ மற்றும் பெனெல்லி TNT2 ஆகிய இரண்டும் முக்கியமான பைக்குகள்.

மஹிந்திரா மற்றும் பெனெல்லி ஆகிய இரண்டு நிறுவனங்களும், இந்திய பைக் மார்க்கெட்டைப் பொறுத்தமட்டில், அவ்வளவு பரிச்சயம் இல்லாதவை. மேலும், ஸ்போர்ட்ஸ் டூரர் செக்மென்ட்டுக்குப் புதியவை என்பதால், சிறப்பான பைக்கைத் தயாரிக்க மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. திடீரென பலரது கவனத்தை ஈர்த்திருக்கும் இதில் எது பெஸ்ட்?

டூரிங் டாக்கீஸ்!

டிஸைன்

இரண்டுமே நேக்கட் பைக்ஸ்தான் என்றாலும், டிஸைனில் பல வேறுபாடுகளைக் காண முடிகிறது. மோஜோ, அதிகமான வளைவு நெளிவுகளுடன் இருக்கிறது. ஷார்ப்பான கோடுகள் மூலம் ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது பெனெல்லி TNT25. இரு கண்களைப்போன்ற ஹெட்லைட்டுக்கு மேலே, புருவம் போன்ற லைட் ஸ்ட்ரிப் காரணமாக, கிட்டத்தட்ட மனித முகத்தை நினைவுபடுத்துகிறது மோஜோ. கச்சிதமான வடிவமைப்புடன் ஈர்க்கிறது  பெனெல்லியின் ஹெட்லைட். பெட்ரோல் டேங்குக்குக் கீழே, ஃப்ரேம் வெளியே தெரியும்படி இருப்பது, இரண்டும் நேக்கட் பைக்குகள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. மஹிந்திரா பைக்குகளின் அடையாளமான தங்க நிற ரிப்கள், மோஜோவிலும் தொடர்வது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். தவிர, பைக்கின் முன்பக்கத்தில், கவனிக்கக்கூடிய வகையில் அதிக விஷயங்கள் இருப்பதால், பின்பக்கம் சட்டென முடிந்துவிடுவதுபோல இருக்கிறது. இதுபோன்ற எந்தக் குறையும், பெனெல்லி TNT25 பைக்கில் இல்லை. ஏனெனில், பைக்கை காம்பேக்ட்டாகவும், ஸ்மார்ட்டாகவும் வடிவமைத்துள்ளது பெனெல்லி. மேலும், இதன் ட்ரெல்லிஸ் ஃப்ரேம், பைக்கின் நிறத்தில் இருப்பது அசத்தல்.

டூரிங் டாக்கீஸ்!

பெர்ஃபாமென்ஸ்
 
மோஜோவில் பொருத்தப்பட்டிருக்கும் 295சிசி, லிக்விட் கூல்டு இன்ஜின், 8,000 ஆர்பிஎம்-ல் 26.8bhp பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 3kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இன்ஜின் அளவுடன் ஒப்பிடும்போது, பவர் சற்று குறைவாகத் தெரிந்தாலும், இருக்கின்ற பவரை பின் சக்கரங்களுக்குச் சிறப்பாக டெலிவரி செய்கிறது மோஜோவின் இன்ஜின். டார்க் அதிகமாக இருப்பதால், 4,500 ஆர்பிஎம் முதல் 6,500 ஆர்பிஎம் வரை இழுவைத் திறன் அட்டகாசம். ஸ்மூத்தான இன்ஜின் காரணமாக, அதிகபட்ச வேகத்தில் (143 கி.மீ) செல்லும்போதுதான், பைக்கில் சின்ன அளவில் அதிர்வுகள் எட்டிப் பார்க்கின்றன. சிங்கிள் சிலிண்டர் இன்ஜினுக்கு, தேவையில்லாமல் இரண்டு சைலன்ஸர்களை மஹிந்திரா ஏன் சேர்த்தது எனத் தெரியவில்லை. என்னதான் வேகமாகச் செல்லும்போது, எக்ஸாஸ்ட் சத்தம் நன்றாக இருந்தாலும், ஒரு சைலன்ஸர் மட்டும் பயன்படுத்தியிருந்தால், பைக்கின் எடையைக் கணிசமாகக் குறைத்திருக்கலாம். மேலும், நகர டிராஃபிக்கில் மோஜோவை ஓட்டும்போது, இன்ஜின் விரைவில் சூடாவதை உணர முடிந்தது.

பெனெல்லி TNT25-ல், 249.2 சிசி, லிக்விட் கூல்டு இன்ஜின் இடம்பிடித்துள்ளது. இது 9,000 ஆர்பிஎம்-ல் 24.1bhp பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 2.1kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மோஜோவுடன் ஒப்பிடும்போது சின்ன இன்ஜின் என்றாலும், ஆரம்ப வேகங்களிலேயே போதுமான டார்க் கிடைக்கிறது. அதிக ஆர்பிஎம் எட்டும்போது, இன்ஜின் முழு பலத்துடன் சீறுவதால், டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸ் தெறிக்கிறது. ஆனால், நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் பயணிக்கும்போது, பைக்கின் ஹேண்டில் பாரில் அதிர்வுகள் ஏற்படுவது எரிச்சலாக இருக்கிறது. ஆச்சரியப்படும் வகையில் மோஜோவின் கிளட்ச், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது. TNT25-ன் கிளட்ச், இடதுகைக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் ஹெவியாக இருக்கிறது. மேலும், இரண்டு பைக்கின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸும் துல்லியமாகச் செயல்படுகின்றன.

டூரிங் டாக்கீஸ்!

0 - 60 கி.மீ வேகத்தை மோஜோ 3.59 விநாடிகளிலும், பெனெல்லி 3.83 விநாடிகளிலும் எட்டுகின்றன.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை:

டிஸைனைப் போலவே, இரண்டு பைக்கின் சேஸி அமைப்பும் வித்தியாசமாக இருக்கின்றன. மோஜோவைப் போன்ற ஸ்போர்ட்ஸ் டூரர் பைக், என்ன வேகத்தில் சென்றாலும் நல்ல நிலைத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால், 30 கி.மீ வேகம் முதலே பைக் ஆட்டம் காணத் துவங்குகிறது. மேலும், 100 கி.மீ வேகத்தில் செல்லும்போது, மோஜோ நிலையாக இல்லாமல் அலைபாய்கிறது. பெனெல்லி TNT25, ஸ்டெபிளிட்டியில் சிறப்பாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், மோஜோவைவிட எடை குறைவு என்பதால், பெனெல்லியைக் கையாள்வது சுலபமாக இருக்கிறது. பைக்கின் எடையை சமவிகிதத்தில் பகிர்ந்தளிக்கும் ட்ரெல்லிஸ் சேஸி அமைப்பைக்கொண்டிருப்பதால், திருப்பங்களில் நம்பிக்கையாக TNT25 பைக்கைச் செலுத்த முடிகிறது. மோஜோ பைக்கின் முன்பக்கத்தில் எடை அதிகமாக இருப்பதால், திருப்புவதற்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது.

டூரிங் டாக்கீஸ்!

முன் பக்கம் - அப் சைடு டவுன் ஃபோர்க்ஸ், பின் பக்கம் - மோனோஷாக் சஸ்பென்ஷன் என சஸ்பென்ஷன் அமைப்பு இரு பைக்குகளிலும் ஒரே மாதிரி இருக்கின்றன. ஆனால், மோஜோவின் சஸ்பென்ஷன் சற்று இறுக்கமாகவும், TNT25-ல் சஸ்பென்ஷன் இந்தியச் சாலைகளுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த பைக்கில் நல்ல கிரிப் அளிக்கும் டயர்கள் இருப்பது அவசியம். அந்த வகையில், மோஜோவில் பைரலி டயர்களும், பெனெல்லியில் மெட்ஸெலெர் டயர்களும் பொருத்தப்பட்டிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். TNT25-ன் பிரேக்கிங், மோஜோ அளவுக்கு ஷார்ப்பாக இல்லை. ஆனால், மோஜோவின் பின்பக்க டிஸ்க் பிரேக்கைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. ஏனென்றால், ஏபிஎஸ் சிஸ்டம் இல்லாத காரணத்தால், வீல் விரைவிலேயே லாக் ஆகிவிடுகிறது.

டூரிங் டாக்கீஸ்!

மைலேஜ்

மைலேஜைப் பொறுத்தவரை, பெனெல்லிக்குத்தான் முதல் இடம். நகரத்தில் லிட்டருக்கு 31.6 கி.மீ, நெடுஞ்சாலையில் 34.4 கி.மீ மைலேஜ் அளிக்கிறது. பவர்ஃபுல் பைக் என்பதால், TNT25 பைக்கைவிட குறைவாக நகரத்தில் 28 கி.மீ, நெடுஞ்சாலையில் 33.4 கி.மீ மைலேஜ் கொடுக்கிறது மோஜோ. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, இரண்டு பைக்கின் மைலேஜும் நிறைவாகவே

டூரிங் டாக்கீஸ்!

இருக்கின்றன.

ரு பைக்குகளிலும் சாதகமான அம்சங்களும், பாதகமான விஷயங்களும் இருக்கின்றன. மோஜோவைப் பொறுத்தவரை, ஸ்மூத்தான இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் இருக்கின்றன என்றால், நல்ல சேஸி அமைப்பையும், அசத்தலான கையாளுமையையும்  TNT25 வழங்குகிறது. சஸ்பென்ஷன் மற்றும் டயர்களைப் பொறுத்தவரை, சமநிலையில் இருந்தாலும், பிரேக்கிங்கில் இரு பைக்குகளுக்குமே முன்னேற்றம் தேவைப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளாக டெஸ்ட்டிங்கில் இருந்தும், சுமாரான கையாளுமை மற்றும் நிலைத்தன்மை, திருப்பங்களில் சுணக்கம், லாக் ஆகும் பின்பக்க பிரேக், ஓவர் ஹீட்டாகும் இன்ஜின் என ஒரு பைக்கை வாங்கத் தூண்டும் அம்சங்களில், மஹிந்திரா இன்னும் பின்தங்கியிருக்கிறது. TNT25 இன்னும் விற்பனைக்கு வராததால், இருக்கும் குறைகளைச் சரிசெய்வதற்கு பெனெல்லிக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது.இப்போதைக்கு, இந்தப் போட்டியின் வெற்றியாளர், TNT25.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு