Published:Updated:

“நாங்களும் பைக்கர்ஸ்தான்!”

ஞா.சுதாகர், படங்கள்: த. ஸ்ரீநிவாசன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஸ்கூட்டி ஸ்வீட்டிகள் இப்போது பைக்குகளுக்கு மாறி, பசங்களுக்கு டஃப் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பல்ஸரானாலும் FZ-ஆனாலும், தடுமாறாமல் டாப் கியரில் பறக்கும் கோயம்புத்தூர் பெண்களைச் சந்தித்தோம்.

‘‘பெண்களுக்கு என தனியாக பைக் தயாரித்தால், அதுதான் டாப்பில் இருக்கும். காரணம், எல்லா பெண்களின் மனதிலும் பைக் ஓட்டும் ஆசை இருந்துக்கிட்டுதான் இருக்கு!” என பைக் கம்பெனிகளுக்கு ஐடியா கொடுத்து ஆரம்பித்து வைத்தார் ரஞ்சிதா.

‘‘பொண்ணுங்க பைக் ஓட்டுவதில் எவ்வளவு பிரச்னை இருக்கு தெரியுமா?” என்ற ஹேமா, “பைக்ஸ் ரொம்பப் பிடிச்சதால ஓட்டக் கத்துக்கிட்டேன். பல தடவை எடை தாங்காம கீழே போட்டிருக்கேன். எப்படியோ நல்லபடியா பைக் ஓட்டக் கத்துக்கிட்டு, ஒருநாள் வெளியே எடுத்துக்கிட்டுப் போனேன். சிக்னலில் யு-டர்ன் அடிச்சுத் திரும்ப வேண்டியிருந்தது. அப்போ பேலன்ஸ் பண்ண முடியாமக் கீழே போட்டுட்டேன். அங்க இருந்தவங்க அடிச்ச கமென்ட்ஸ் ரொம்ப வலிச்சது. டிராஃபிக் போலீஸ் வந்து, ‘முதல்ல லைசென்ஸ் இருக்கா? அண்ணன் பைக்கைத் தூக்கிட்டு வந்துட்டியா?’னு கமென்ட் பண்ணினார். இனிமே யாராச்சும் அப்படி விழுந்தா, தயவுசெய்து ஹெல்ப் பண்ணுங்க. ஊக்கப்படுத்துங்க...” என கோரிக்கை விடுத்தார் ஹேமா.

“நாங்களும் பைக்கர்ஸ்தான்!”

மாளவிகா, பைக்கால் ஏற்பட்ட காயங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். ‘‘சின்ன வயசுல இருந்தே பைக் ஓட்ட ஆசை இருந்தாலும், அப்பா விடவே இல்லை. பிறகு, அவரோட நண்பர் மூலமாத்தான் பைக் ஓட்டக் கத்துக்கிட்டேன். அதன் பிறகு, வழக்கமா விழுந்து எழுவது எல்லாம் பல தடவை நடந்திருக்கு. விழுந்த பிறகு கொஞ்ச நாள் பைக் எடுக்க மாட்டேன். புனேவுக்குப் படிக்கப் போயிருந்தப்பதான் ஒரு விஷயம் தெரிஞ்சது. இங்க இருக்கிறவங்களைவிட அங்க நிறைய கேர்ள்ஸ் பைக் ரைடிங் போறதுல ஆர்வமா இருந்தாங்க. அதுக்குப் பிறகுதான் என்னோட செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பிச்சது. நிறைய ரைடு போக ஆரம்பிச்சேன். பொண்ணுங்க பைக் ஓட்டக் கத்துக்கணும். காரணம், நமக்கே ஒரு நல்ல தன்னம்பிக்கை வரும். பைக்குல போகும்போது சுதந்திரம் கிடைச்ச மாதிரி மனசு ஜாலியா இருக்கும். அதே சமயம், பாதுகாப்பும் ரொம்ப முக்கியம். நான் எப்பவுமே ரைடிங் ஜாக்கெட்டையும், ஹெல்மெட்டையும் மறப்பதே இல்லை!” எனச் சொல்லி CBR திராட்டிலை முறுக்கினார்.

ஸ்ருதி தொடர்ந்தார். “பைக்ல கால் எட்ட ஆரம்பிச்சதில் இருந்தே பைக் ஓட்ட ஆரம்பிச்சுட்டேன். அம்மாதான் முதல்ல பைக் ஓட்ட சம்மதிச்சாங்க! சாதாரண பைக்கைவிட சூப்பர் பைக் மேலதான் எனக்கு கிரேஸ். ஃப்ரெண்ட்ஸ் பைக்கை வாங்கி ஓட்டுவேன். எத்தனை தடவை கீழே போட்டாலும் அவங்க கோபப்பட்டதே இல்லை. ரேஸிங் மேல ரொம்ப ஆர்வம் இருக்கு. அதுக்குத்தான் நான் முயற்சி பண்றேன். என்னோட கனவு டுகாட்டி மான்ஸ்டர் பைக் வாங்கணும். லாங் ரைடிங் ரொம்பப் பிடிக்கும். தனியாவே பல தடவை சுத்தியிருக்கேன். வீட்லேயும் மாட்டியிருக்கேன்!” எனச் சிரித்தார்.

இவர்கள் ஒன்று சேர்ந்த கதையைச் சொன்னார் சுஷ்மிதா. “ஃபேஸ்புக்ல அவங்க பைக் ஓட்டின அனுபவம், போட்டோனு போடுவாங்க. உடனே மத்தவங்க எல்லாரும் எங்கே.. எப்போனு விசாரிப்போம். அப்படித்தான் எங்க டீம் ஃபார்ம் ஆச்சு. நாங்க நிறைய இடங்கள்ல பைக்ல போறதைப் பார்த்துட்டு, நிறைய பேர் விசாரிப்பாங்க. நாங்களே நிறைய பொண்ணுங்களை பைக் ஓட்ட வெச்சிருக்கோம். பல பேருக்கு பைக் ஓட்டத் தெரிஞ்சாலும் டிராஃபிக்கை நினைச்சுத் தயங்குறாங்க. பார்க்கிறவங்க என்ன சொல்லுவாங்களோனு பயப்படுறாங்க!” என்றார்.

“நாங்களும் பைக்கர்ஸ்தான்!”

“நான் என் பைக்குக்கு ரோமியோனு பேர்கூட வெச்சிருக்கேன். அப்படித் தான் இந்த பல்சர் 150 பைக்கைக் கூப்பிடுவேன். அண்ணா, அப்பா கிட்ட இருந்து பைக் கிரேஸ் வந்துச்சு. டிவிஎஸ் 50, ஸ்கூட்டினு நார்மலாகத்தான் பைக் பக்கமே வந்தேன். அப்புறம் நாலு தடவை ஃபெயில் ஆகி, ஒரு வழியா 8 போட்டு லைசென்ஸ் எடுத்தேன். ‘Lone Wolf’ ‘அப்படிங்கிற பேர்ல பைக் கிளப் பத்திக் கேள்விப்பட்டேன். பிறகு அந்த கிளப்ல சேர்ந்து ராமேஸ்வரம், கன்னியாகுமரினு ரைடு போனோம். அதுதான் என்னோட  முதல் ரைடு. அப்போதான் பைக்கோட டெக்னிக்ஸ், மெக்கானிசம் எல்லாம் நல்லா கத்துக்க முடிஞ்சுது. CBR150, NS200, ராயல் என்ஃபீல்டுனு நிறைய  பைக் ஓட்டிட்டேன். ஆனா, இதுக்குப் பின்னாடி வீட்ல சொன்ன பொய், வாங்கின திட்டு எல்லாம் நிறைய இருக்குங்க. முதன்முதல்ல பொண்ணுங்க பைக்கைத் தொட்டாலே... ‘கீழே போட்ருவீங்க... தரையில கால் வெச்சுத்தான் பொண்ணுங்க பிரேக்கே போடுவாங்கப்பா... அடி பட்டுடும்’னு ஏகப்பட்ட அட்வைஸ் வரும். அதுதான் எங்க நம்பிக்கையில் முதல்ல கை வைக்கும். அதை எல்லாம் தாண்டித்தான் வர வேண்டியிருக்கு. கோயம்புத்தூர் மாதிரி பெரிய நகரத்தில்கூட பைக் ஓட்டும் பெண்கள் குறைவாதான் இருக்காங்க. காரணம், யாரும் என்கரேஜ் பண்றது இல்லை. அதனால கேர்ள்ஸ், யார் சொன்னாலும் கேட்காதீங்க... உங்களுக்கு ஆசை இருக்கா? பைக் ஓட்டுங்க!’’  என்கிறார் ரஞ்சிதா.

கலக்குங்க கேர்ள்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு