Published:Updated:

மோட்டார் விகடன் விருதுகள்!

மோட்டார் விகடன் விருதுகள்!

மோட்டார் விகடன் விருதுகள்!

மோட்டார் விகடன் விருதுகள்!

Published:Updated:
மோட்டார் விகடன் விருதுகள்!

ந்த ஆண்டின் சிறந்த கார், சிறந்த பைக் எது’ என்று கடந்த இதழில் வாசகர்களின் கருத்துகளைக் கேட்டிருந்தோம். கடிதங்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக உங்களின் தேர்வு எது என்பதைச் சொல்லி, மோட்டார் விகடன் விருதுகளைப் பெருமைப்படுத்தியதற்கு நன்றி. மோட்டார் விகடன் தேர்வுக் குழுவின் முடிவுகளைச் சரியாகக் கணித்திருக்கும் வாசகர்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்களுக்குப் பரிசுகள் விரைவில் வீடு தேடி வரும்!

சபாஷ் வாசகர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 எஸ்.சதீஸ்,  அவினாசி  

 பி.முகிலன், திருநெல்வேலி 

 எஸ்.சதீஷ்குமார், நாமக்கல் 

 பி.சோலைராஜன், காரைக்குடி 

 எஸ்.சுரேஷ், திண்டுக்கல் 

 எஸ்.நந்தகோபால், நாமக்கல் 

 பிரபு, சிவகிரி 

 சி.ஸ்ரீனிவாசன், அரியலூர் 

 சதாம் ஹுசைன், ஈரோடு 

 ப்ரேம் சுகந்த் ஃப்ரான்சிஸ், சென்னை 

 இ.சுகந்தன், ஈரோடு  

 ஆ.பிரபு ஆசிர்வாதம், ஈரோடு 

 எஸ்.புனிதன், கோயம்புத்தூர் 

 கணேஷ் முருகன், புதுச்சேரி 

 எஸ்.ராஜா சங்கர், தூத்துக்குடி 

 வி.சுபா, குமாரபாளையம் 

 நடராஜன் சத்தியமூர்த்தி, புதுக்கோட்டை. 

மோட்டார் விகடன் விருதுகள்!

பட்ஜெட் கார்களில், தனி ராஜாங்கம் நடத்திய மாருதி சுஸூகி ஆல்ட்டோ 800 காருக்குப் போட்டியாகக் களமிறங்கி, மார்க்கெட் ஷேரைப் பிரித்த கார் - ரெனோ க்விட். இடவசதி, சிறப்பம்சங்கள், டிஸைன் என க்விட்டுக்கு பலங்கள் அதிகம். அடுத்தபடியாக, மார்க்கெட்டுக்கு கார் வருவதாக அறிவிப்பு வந்ததுமே, ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு புக்கிங் குவிந்தது. அதிக வசதிகள்கொண்ட தரமான காம்பேக்ட் எஸ்யுவி என்பதுதான் க்ரெட்டாவின் சிறப்பு. ‘டாடாவில் இருந்து இப்படி ஒரு காரா’ என டிஸைனிலும் சிறப்பம்சங்களிலும் வியக்க வைத்த கார் போல்ட். தவிர, மாருதி சுஸூகி பெலினோ, புதிய மஹிந்திரா TUV3OO, ஹோண்டா ஜாஸ் என பல கார்கள், சிறந்த காருக்கான போட்டியில் இருந்தன. ஆனால், இந்த ஆண்டின் மோஸ்ட் வான்டட் காராக அறிமுகமாகி, விற்பனையில் சிக்ஸர் அடித்து, மக்கள் மனதில் இடம்பிடித்த கார், ரெனோ க்விட்தான். சுருக்கமாகச் சொல்லப்போனால் ரெனோ க்விட், பட்ஜெட் கார்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறது. எஸ்யுவி ஸ்டைலில், பட்ஜெட் காராக இருப்பதுதான் க்விட்டின் அசுர பலம். 3 - 5 லட்சத்துக்குள், தரமான பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் வேண்டும் என்றால், பலரின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக மாறியிருக்கிறது ரெனோ க்விட். எனவே, இதுதான் 2016-ன் சிறந்த கார்!

மோட்டார் விகடன் விருதுகள்!

பொதுவாகவே, சந்தையில் பெருவெற்றி பெற்ற ஒரு பைக்கை அடிப்படையாகக் கொண்டு, புதிய மாடல் ஒன்றைக் களமிறக்கும்போது, பழைய மாடலுக்கும் இதற்குமான ஒப்பீடுகள் தானாகவே ஆரம்பிக்கும். ‘இதுக்கு பழைய மாடலே நல்லா இருக்குல்ல’ என்ற ரீதியில் விமர்சனங்கள் எழுவதும் வாடிக்கை. ஆனால், பழைய பைக்கைவிட டிஸைனிலும், பெர்ஃபாமென்ஸிலும் முன்னேறி, சுஸூகியின் விற்பனையை இன்னும் பல மடங்கு உயர்த்தியிருக்கும் பைக், சுஸூகி ஜிக்ஸர் SF. சுஸூகியின் நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான ஜிக்ஸரில், ஃபுல் ஃபேரிங் சேர்க்கப்பட்டு உருவான பைக்தான் ஜிக்ஸர் SF. கூடுதல் பாகங்கள் பயன்படுத்தப்படுவதால், பைக்கின் விலை மற்றும் எடை கட்டாயம் அதிகமாகும். இது பைக்கின் செயல்திறனைப் பாதிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். ‘நன்றாக விற்பனையாகிக்கொண்டிருக்கும் பைக்கில் இது போன்ற முயற்சி தேவையா?’ என்ற விமர்சனங்களைத் தூக்கி தூர எறிந்துவிட்டு, தரமான இன்ஜினீயரிங் மூலம் ஜிக்ஸர் பைக்கில் ஃபுல் ஃபேரிங்கை அறிமுகப்படுத்தி வெற்றிபெற்றிருக்கிறது சுஸூகி. எனவே, ஜிக்ஸர் SFதான் 2016-ம் ஆண்டின் மிகச் சிறந்த பைக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

மோட்டார் விகடன் விருதுகள்!

அறிமுகமான மூன்று மாதங்களுக்குள்ளாகவே, மிகப் பெரிய ஹிட்டான ரெனோ க்விட்தான் 2016-ன் சிறந்த ஹேட்ச்பேக் கார். உச்சகட்ட சாதனையாக, 75,000 புக்கிங்குகளைக் கடந்துள்ள க்விட், போட்டியாளர்களை மிரள வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட இதே விலைக்குக் கிடைக்கும் ஆல்ட்டோ 800 காருடன் ஒப்பிடும்போது, டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், டச் ஸ்கிரீன் சிஸ்டம், சாட்டிலைட் நேவிகேஷன், 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், காற்றுப் பை, 300 லிட்டர் பூட் ஸ்பேஸ், 5 பேருக்கான இடவசதி, நல்ல மைலேஜ் தரும் 800 சிசி இன்ஜின், மிரட்டலான டிஸைன் என முதன்முறையாக கார் வாங்குபவர்களின் தேவைக்கும் அதிகமான வசதிகளை, பட்ஜெட் ஹேட்ச்பேக்கில் கொடுத்திருப்பதுதான் க்விட்டின் வெற்றிக்கான காரணம்!

மோட்டார் விகடன் விருதுகள்!

ரெனோ லாஜியை ஓட்டும்போது, ஏழு பேர் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய பெரிய எம்பிவி காரை ஓட்டுகிறோம் என்கிற உணர்வே யாருக்கும் வராது. குடும்பத்துடன் பயணிக்க ஏதுவான கார், ரெனோ லாஜி. டஸ்ட்டர் பிளாட்ஃபார்மில் இருந்து உயிர்கொண்ட இந்த லாஜி, இனோவாவைவிட பெர்ஃபாமென்ஸ், ஓட்டுதல் தரம், கையாளுமை ஆகியவற்றில் சிறந்ததாக இருக்கிறது. இனோவாவைவிட குறைவான விலையில், அதாவது 10 - 15 லட்ச ரூபாய்க்குள், சிறப்பான ஒரு எம்பிவி கார் வாங்க வேண்டும் என்பவர்களுக்கான முதல் சாய்ஸாக, ரெனோ லாஜி உருவெடுக்க வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன என்பதால், இதுதான் 2016-ம் ஆண்டின் சிறந்த எம்பிவி.

மோட்டார் விகடன் விருதுகள்!

ரெனோ டஸ்ட்டருக்குப் போட்டியாக ஹூண்டாய் களம் இறக்கிய எஸ்யுவிதான் க்ரெட்டா. இந்த க்ரெட்டா பார்வைக்கு எப்படி இருக்கும், பெர்ஃபாமென்ஸில் எப்படி இருக்கும் என எதுவுமே தெரியாத நிலையில், ஹூண்டாய் மீதுள்ள அசாத்திய நம்பிக்கையில் வாடிக்கையாளர்கள் பலர் க்ரெட்டாவை புக்கிங் செய்தார்கள். வாடிக்கையாளர்களை ஏமாற்றாமல் ஸ்டைல், தரம், சிறப்பம்சங்கள், இன்ஜின் ஆப்ஷன்கள், பெர்ஃபாமென்ஸ் என க்ரெட்டாவை ஹூண்டாய் ஓர் ஆல் ரவுண்டராக அறிமுகம் செய்தது. இப்போது ஒரு மாதத்துக்கு சராசரியாக 7,000 கார்கள் விற்பனையாகிறது. எஸ்யுவி செக்மென்ட்டில் புதிய அத்தியாயத்தைத் துவக்கி இருக்கும் க்ரெட்டாதான், இந்த ஆண்டின் சிறந்த எஸ்யுவி!

மோட்டார் விகடன் விருதுகள்!

ஸைலோவை அடிப்படையாகக்கொண்டு, 2012-ல் குவான்ட்டோ என்ற காம்பேக்ட் எஸ்யுவியை அறிமுகப்படுத்தி, தனது கையை மஹிந்திரா சுட்டுக்கொண்டது. ஆனால், இதற்குப் பின்னர் அறிமுகமான ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டின் வெற்றி, குவான்ட்டோவில் தான் செய்த பிழைகளை மஹிந்திராவுக்கு உணர்த்தியது. அதனால், முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில், எஸ்யுவி தயாரிப்பதில் தனக்கு இருக்கும் அனுபவத்தைப் பயன்படுத்தி, TUV3OO காரைத் தயாரித்து அறிமுகப்படுத்தியது மஹிந்திரா. கம்பீரமான தோற்றம், அட்டகாசமான இடவசதி, நன்கு டிஸைன் செய்யப்பட்ட இன்டீரியர், தேவையான சிறப்பம்சங்கள், போதுமான பெர்ஃபாமென்ஸ், விலைக்கேற்ற தரம் என அத்தனை பலங்களையும் TUV3OO காருக்குக் கொடுத்து, ஒரு புதிய ஆட்டத்துக்குத் தயாராகியிருக்கிறது மஹிந்திரா!

மோட்டார் விகடன் விருதுகள்!

1995-ம் ஆண்டு முதலே ஃபோர்டு கார்கள் நம் நாட்டில் விற்பனையானாலும், அதிக கார்கள் விற்பனையாகும் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில், ஃபிகோ மூலம் முத்திரை பதித்தது 2010-ம் ஆண்டில்தான். ஆனாலும் போட்டியாளர்களின் படையெடுப்பு காரணமாக, ஃபிகோவால் தொடர்ந்து தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் ஃபோர்டு, இந்த ஆண்டு முற்றிலும் புதிய ப்ளாட்ஃபார்மில் தயாரான ஃபிகோ காரைக் களமிறக்கியது. பழைய காரில் இருந்த குறைகளைக் களைந்துவிட்டு, கூடுதல் பலங்களுடன் இதை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் உள்ள மேம்படுத்தப்பட்ட டீசல் இன்ஜின், விலை அதிகமான கார்களுடன்கூட போட்டி போடும் அளவுக்கு ஃபிகோவைக் கொண்டுபோய்விட்டது. உள்பக்கத்தில், காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆகவே, ஃபிகோ டீசலுக்கே வெற்றி்!

மோட்டார் விகடன் விருதுகள்!

சமீபகாலமாக நம் நாட்டில் க்ராஸ்-ஓவர் ஜுரம். ஃபோக்ஸ்வாகன் போலோ க்ராஸ், டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ், ஃபியட் அவென்ச்சுரா, ஹூண்டாய் i20 ஆக்டிவ் என ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட, நான்கு மீட்டர் நீளத்துக்குள்ளான க்ராஸ்-ஓவர் கார்கள் வரிசை கட்டிவந்தன. அதன் தொடர்ச்சியாக, 4.3 மீட்டர் நீளத்தில், வெளிநாடுகளில் SX4 என்ற பெயரில் விற்பனையாகும் க்ராஸ்-ஓவரை, S-க்ராஸ் என்ற பெயரில் காம்பேக்ட் எஸ்யுவிகளுடன் போட்டியிடும் வகையில் களமிறக்கியது மாருதி சுஸூகி. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, டிஸைன் ஈர்க்காவிட்டாலும், கட்டுமானத் தரம், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், இடவசதி என அடிப்படையான விஷயங்களில் அசத்துவதால், சிறந்த க்ராஸ்-ஓவர் காருக்கான மகுடம்
S-க்ராஸுக்குத்தான்!

மோட்டார் விகடன் விருதுகள்!

எவ்வளவு சிறப்பான காராக இருந்தாலும் விலை சரியில்லை என்றால், அது வெற்றி பெறாது. உதாரணம், முதலில் வெளிவந்த ஹோண்டா ஜாஸ். ஆனால், விலைக்கேற்ற தரமான காராக இருந்தால், அது பெஸ்ட் செல்லராக உயரும். அந்த அடிப்படையில் பார்த்தால், இந்த ஆண்டின் சிறந்த விலைமதிப்புள்ள கார், டாடா போல்ட். ஏனெனில், 5 - 8 லட்ச ரூபாயில் ஸ்டைல், அதிக வசதிகள், 5 பேர் தாராளமாக‑ உட்கார்வதற்கான இடம், டர்போ பெட்ரோல் இன்ஜின்கொண்ட ஒரே கார், போல்ட்தான். விஸ்டாவை அடிப்படையாகக்கொண்டிருந்தாலும், உள்பக்க மற்றும் வெளிப்பக்க டிஸைன், ஓட்டுதல் தரம், கையாளுமை, சிறப்பம்சங்கள், கட்டுமானத் தரம் என காரை முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கிறது டாடா.

மோட்டார் விகடன் விருதுகள்!

எரிபொருள் சிக்கனத்துக்காகப் பயன்படுத்தப்படும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை, ஸ்போர்ட்ஸ் காரின் பெர்ஃபாமென்ஸை அதிகரிப்பதற்காக பயன்படுத்திய ஒரே காரணத்துக்காகவே, 2016-ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்பத்திற்கான விருது, பிஎம்டபிள்யூ i8 காருக்கு அளிக்கப்படுகிறது. இதில் உள்ள 3 சிலிண்டர் இன்ஜின் - எலெக்ட்ரிக் மோட்டார் கூட்டணி, ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கான சக்தியை வெளிப்படுத்துகிறது. இவை அட்டகாசமான டிஸைனுடன் இணையும்போது, ஒரு நவீனமான காருக்கான தகுதிகளுடன் ஸ்பெஷலாகத் தனித்து நிற்கிறது, பிஎம்டபிள்யூ i8.

மோட்டார் விகடன் விருதுகள்!

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மேம்படுத்தப்பட்ட புன்ட்டோ ஈவோ காரை விற்பனைக்குக் கொண்டு வந்த கையோடு, அதனை பவர்ஃபுல் காராக மாற்றும் முயற்சிகளில் இறங்கியது ஃபியட். அபார்த் கோட்பாடுகளுக்கு ஏற்ப காரை மாற்றியமைத்து, இந்த ஆண்டு களம் கண்டது புன்ட்டோ ஈவோ அபார்த். அதிரடியான பவரை வெளிப்படுத்தும் T-JET இன்ஜின் காரில் பொருத்தப்பட்டிருப்பதால், மற்ற ஹேட்ச்பேக் கார்களை பெர்ஃபாமென்ஸில் துரத்தியடிக்கிறது இந்த ஃபியட் கார். அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில், மிரட்டும் வேகம், அசத்தலான கையாளுமை, சிறப்பான ஓட்டுதல் தரம், போதுமான இடவசதி, ஈர்க்கும் ஸ்டைல் என ஒரு முழுமையான காராக உருமாறியிருக்கும் புன்ட்டோ ஈவோ அபார்த்தான், இந்த ஆண்டின் வெற்றியாளர்!

மோட்டார் விகடன் விருதுகள்!

இந்தியாவில் உள்ள பைக் ஆர்வலர்களின் ஸ்பெஷல் பைக்கான YZF-R15 பைக்கை, 2009-ம் ஆண்டு களமிறக்கியது யமஹா. ஒரு லட்ச ரூபாயில், ஒரு ஃபுல் ஃபேரிங் ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்க முடியும் என்ற பலரின் கனவை நனவாக்கிய பைக், யமஹா YZF-R15. இடையே 2011-ல் அறிமுகமான கேடிஎம் பைக்குகள் ஏற்படுத்திய போட்டியால், YZF-R15 பைக்கின் அடுத்த பரிமாணமாக வெளிவந்துள்ளது YZF-R3. இது, விலையில் பெனெல்லி TNT300, கவாஸாகி Z250, ஹாய்ஸங் GT250R ஆகிய பைக்குகளுடன் போட்டியிட்டாலும், இவற்றில் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றை வழங்கும் காரணத்தால், வெற்றிக் கோப்பை யமஹா YZF-R3தான்.

மோட்டார் விகடன் விருதுகள்!

யமஹா ஃபஸினோ, வெஸ்பா 150சிசி, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ், ஹீரோ டூயட் என இந்த ஆண்டு வெளிவந்த ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், இன்றைய காலத்தின் தேவையை அவை தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. நம்பகத்தன்மைக்கும் தரத்துக்கும் பெர்ஃபாமென்ஸுக்கும் பெயர் பெற்ற ஸ்கூட்டர், யமஹா ரே. அதனை அடிப்படையாகக் கொண்டு, காலத்துக்கு ஏற்றபடி ஸ்டைலை மாற்றி ரெட்ரோ மாடல் ஸ்கூட்டராக ஃபஸினோவை அறிமுகப்படுத்தியது யமஹா. 110சிசி செக்மென்ட்டின் மார்க்கெட் லீடராக இல்லாவிட்டாலும், அதிகம் விற்பனையாகும் டாப் 10 ஸ்கூட்டர்களில் இடம் பிடித்துள்ள ஃபஸினோதான் இந்த ஆட்டத்தின் வின்னர்!

மோட்டார் விகடன் விருதுகள்!

இந்தியர்களின் மனநிலையை முழுக்கப் படித்து வைத்திருக்கும் நிறுவனம் மாருதி சுஸூகி. பெலினோ, S-க்ராஸ், செலெரியோ டீசல் என இது அறிமுகம் செய்துள்ள மூன்று கார்களுமே 2015-ம் ஆண்டின் முக்கியமான கார்கள் என்பதோடு, இன்னும் பல ஆண்டுகளுக்கு மார்க்கெட் லீடராக இருக்கப்போகும் கார்கள். மேலும், தனது விலை அதிகமான கார்களை, மற்ற மாருதி சுஸூகி கார்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, நெக்ஸா என்ற பெயரில் ஷோரூமைத் தொடங்கி, கார் டீலர்ஷிப்பில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது மாருதி சுஸூகி. புதுப் புது கார்கள் மூலம் மக்கள் மனதில் தொடர்ந்து இடம்பிடித்து வரும் மாருதிதான், 2016-ம் ஆண்டின் சிறந்த கார் தயாரிப்பு நிறுவனம்.

மோட்டார் விகடன் விருதுகள்!

சென்னை MIT-யில் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் மாணவரான கார்த்திக்தான் 2015-ம் ஆண்டின் நேஷனல் ஃபார்முலா 1600 ரேஸ் சாம்பியன். ஜூனியர் டூரிங் ரேஸில் கார் ஓட்டி ரேஸிங் உலகத்துக்குள் அடியெடுத்து வைத்தவர். அடுத்தடுத்து செய்த கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, 2014-ம் ஆண்டு ஃபோக்ஸ்வாகன் சாம்பியன் ஆனார் கார்த்திக். அடுத்து போலந்தில் நடைபெறும் ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் கப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். அதேபோல், ஜேகே - பிஎம்டபிள்யூ ரேஸிலும் கலந்துகொள்கிறார். ரேஸரான தன் அண்ணன் பிரஷாந்தைப் போலவே, வேர்ல்டு டூரிங் கார்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இவரது கனவும்!

மோட்டார் விகடன் விருதுகள்!

இந்த ஆண்டு யமஹா நடத்திய ஒன் மேக் ரேஸ் சாம்பியன்ஷிப் நோவிஸ் பிரிவில், ஒட்டுமொத்த சாம்பியனுக்கான விருதை வென்று சாதனை படைத்திருக்கிறார் கெவின் கண்ணன். 2012-ல் ரேஸ் ஓட்டத் தொடங்கிய கெவின் கண்ணன், சக பைக் ரேஸரான ஜெகன் உதவியுடன் 2014-ல் டிவிஎஸ் ரேஸிங் அணியில் இணைந்து, பல ரேஸ்களில் பரிசுகள் வென்றிருக்கிறார். தற்போது 2015 முதல் மோட்டார் யமஹா ரேஸிங் அணி சார்பாக போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 19 வயதான கெவின் கண்ணனுக்கு, படிப்படியாக முன்னேறி உச்சம் தொட வேண்டும் என்பது லட்சியம்!