Published:Updated:

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு...motor.vikatan.com

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு...motor.vikatan.com

Published:Updated:

மஹிந்திராவின் அடுத்த காம்பேக்ட் எஸ்யுவி!

மோட்டார் நியூஸ்

S101 என்ற புனைப் பெயரில் டெஸ்ட் செய்யப்பட்டு வந்த மஹிந்திராவின் காம்பேக்ட் எஸ்யுவியின் பெயர், KUV1OO [KOOL UTILITY VEHICLE] என மஹிந்திரா அறிவித்துள்ளது. இதில், எக்கோஸ்போர்ட்டின் சாயல் அதிகமாகத் தெரிகிறது. தவிர, செவர்லே பீட் காரில் இருப்பதுபோன்ற பின் பக்க கைப்பிடிகள், டட்ஸன் கோ காரில் இருப்பது போன்ற இருக்கை அமைப்பு ஆகியவற்றையும் பார்க்க முடிகிறது. ஏழு வண்ணங்களில் கிடைக்கும் இந்த காம்பேக்ட் எஸ்யுவியை, TUV3OO காருக்குக் கீழே பொசிஷன் செய்துள்ளது மஹிந்திரா. அதனால், மாருதி மற்றும் ஹூண்டாய் கார்களுடன் போட்டியிடும் வகையில், 4 லட்ச ரூபாய் எனும் குறைவான ஆரம்ப விலையை எதிர்பார்க்கலாம். முற்றிலும் புதிய mFALCON சீரிஸ் அலுமினியத்தால் செய்யப்பட்ட VVT பெட்ரோல், CRDE டீசல் இன்ஜின்களை,KUV1OO காருக்குக் கொடுத்துள்ளது மஹிந்திரா. இரண்டுமே, 3 சிலிண்டர் 1.2 லிட்டர் இன்ஜின் அளவைக்கொண்டிருந்தாலும், பவர் மற்றும் டார்க்கில் வித்தியாசம் உண்டு. அதாவது, பெட்ரோல் இன்ஜின் 82bhp சக்தியையும் 11.4kgm டார்க்கையும் வெளிப்படுத்த, டீசல் இன்ஜின் 77bhp பவர் மற்றும் 19kgm டார்க்கை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால், அனைத்து வேரியன்ட்டிலும் [K2, K2+, K4, K4+, K6, K6+, K8] ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுவதுடன், 2 காற்றுப் பைகள் ஆப்ஷனலாகச் சேர்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஜனவரி 15-ல் இது விற்பனைக்கு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1.68 லட்சத்துக்கு அறிமுகமானது பெனெல்லி TNT 25...

மோட்டார் நியூஸ்

நம் நாட்டில், பெனெல்லி நிறுவனத்தின் பட்ஜெட் பைக்காக, TNT25 பைக் அறிமுகமாகியிருக்கிறது. இதன் வடிவமைப்பு அதன் அண்ணனான TNT300 மாடலை நினைவுப்படுத்தினாலும், தனித்துவமான டிஸைன் அம்சங்களும் இருக்கின்றன. TNT25 பைக்கில் இருப்பது 249 சிசி, 4 ஸ்ட்ரோக், ஃப்யூல் இன்ஜெக்டட், லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின். இது 28.16bhp சக்தியை 9,800 ஆர்பிஎம்-லும், 2.16kgm டார்க்கை 8,000 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது. இந்த இன்ஜினில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. பைக்கின் எடை 159 கிலோதான் என்பதால், பவர் டு வெயிட் ரேஷியோ, பிரமாதமான 187.7bhp என்ற அளவில் உள்ளது.

 ட்ரெல்லிஸ் சேஸியில், முன் பக்கம் 41 மிமீ அப்சைடு-டவுன் ஃபோர்க்குகளும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளன. பைக்கின் பிரேக்கிங் தேவைகளுக்காக, முன் பக்கம் 280 மிமீ டிஸ்க்கும், பின் பக்கம் 240 மிமீ டிஸ்க்கும் உள்ளன. 17 லிட்டர் ஃப்யூல் டேங்க், நீண்ட தூரப் பயணங்கள் செல்பவர்களுக்கு வரப்பிரசாதம். பைக்கில் 110/70 R17 - 150/60 R17 என்ற சைஸில், MRF & METZELER நிறுவன டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. சிவப்பு மற்றும் வெள்ளை என இரு வண்ணங்களில் கிடைக்கும் இந்த பைக்கை, மஹிந்திரா மோஜோவுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. ஏற்கெனவே 250 பைக்குகள் புக்கிங் செய்யப்பட்டுள்ள நிலையில் ஹெல்மெட், லீவர்கள், க்ராஷ் கார்டு, ஸ்டிக்கர்கள் என TNT25 பைக்குக்குப் பொருத்தமான ஆக்சஸரீஸ்களையும் அறிமுகப் படுத்தியுள்ளது பெனெல்லி. இந்த பைக்கை, இந்தியாவில் உள்ள தனது தொழிற்சாலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது.  MRF டயர்கள் பொருத்தப்பட்ட பைக்கின் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) விலை, மோஜோவைப் போல ` 1.68 லட்சம்.  METZELER டயர்கள் பொருத்தப்பட்ட பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரும் விலை, ` 1.75 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உயர்கிறது இன்ஷூரன்ஸ் பிரீமியம்!

மோட்டார் நியூஸ்

சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய மெட்ரோ நகரங்களில் கார் வைத்திருப்போருக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி. ஏனெனில், கார்களின் இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகையை 15 சதவிகிதம் வரை உயர வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களுக்காக, மோட்டார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் வரை இழப்பீடு கேட்டு வந்திருப்பதுதான். இந்த இழப்பை ஈடுகட்டும் பொருட்டு, இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கிறது கார்களின் விலை!

இந்த மாதம் முதல் அதாவது, ஜனவரி 2016 முதல் ஹூண்டாய் நிறுவனம், தான் தயாரிக்கும் கார்களின் விலையை 30,000 ரூபாய் வரை அதிகரிக்கப் போவதாகக் கூறியுள்ளது. அதேபோல நிஸான், டட்ஸன், ரெனோ, பிஎம்டபிள்யூ, மினி, டொயோட்டா, ஸ்கோடா ஆகிய கார் நிறுவனங்களும், தாங்கள் தயாரிக்கும் கார்களின் விலையை 3 சதவிகிதம் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. மெர்சிடீஸ் பென்ஸ், செவர்லே ஆகிய நிறுவனங்கள் தங்கள் காரின் விலையை  2 சதவிகிதம் உயர்த்தவிருக்கின்றன. மாருதி சுஸூகி, டாடா மோட்டார்ஸும் எல்லா கார்களின் விலையையும் 20,000 வரை உயர்த்தப் போவதாகக் கூறியுள்ளன. ஹோண்டா, தனது கார்களின் விலையை 16 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த  முடிவு செய்திருக்கிறது. 

டீசல் கார்களுக்கு டெல்லியில் தடை!

‘வர்த்தக ரீதியில் இயக்கப்படும் 2005-க்கு முந்தைய வாகனங்கள் டெல்லியில் நுழையத் தடை விதிக்கப்படுகிறது’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘டீசல் கார்களின் பயன்பாட்டைக் குறைத்தாலே, காற்று மாசுபடுவதைக் குறைக்கலாம் என்பதால், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 2,000 சிசி-க்கும் அதிகமான செயல்திறன் கொண்ட கார்களின் விற்பனை மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால், டீசலில் இயங்கும் விலை உயர்ந்த பிரீமியம் கார்களான எஸ்யுவி மற்றும் செடான் ரக கார்கள், மார்ச் 31-ம் தேதி வரை டெல்லியில் பதிவு செய்யப்பட மாட்டாது. தலைநகரான டெல்லியில், பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பதற்கான காரணம், அங்கே தற்போது 85 லட்சம் கார்கள் வரை இயங்குவதால்தான். டெல்லியில் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள கார்களின் பட்டியல் கீழே!

மோட்டார் நியூஸ்

ஹோண்டா, செவர்லே கார்கள் ரீ-கால்!

மோட்டார் நியூஸ்

டிசம்பர் 2013 - ஜூலை 2015 காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட 64,428 ஹோண்டா சிட்டி டீசல் மற்றும் ஜூன் 2014 - ஜூலை 2015 காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட 25,782 மொபிலியோ டீசல் கார்களில், பாதிக்கப்பட்ட Fuel return pipe மற்றும் அது தொடர்பான பாகங்களை, மாற்றித் தருவதற்காக, ரீ-கால் செய்துள்ளது ஹோண்டா. ‘ஃப்யூல் ரிட்டன் பைப், பயன்படுத்தப்படாத டீசலை எரிபொருள் டேங்க்குக்குத் திருப்பி அனுப்பாமல், அதனை அப்படியே வெளியே தள்ளுவதால், டீசல் வீணாவதுடன், விரைவில் டேங்க் காலியாகிவிடும் வாய்ப்புகள் அதிகம். எனவே, மேற்கூறிய காலத்தில் கார் வாங்கியவர்களுக்கு தகவல்கள் அனுப்பப்படுகின்றன. டிசம்பர் 19 முதல் ஹோண்டா சர்வீஸ் சென்டர்களில் இது இலவசமாகச் சரிசெய்து தரப்படும்’ என ஹோண்டா அறிவித்துள்ளது.
டிசம்பர் 2010 - ஜூலை 2014 காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட 1,01,597 பீட் டீசல் கார்களில், பாதிக்கப்பட்ட கிளட்ச் பெடல் லீவர்களை மாற்றித் தருவதற்காக ரீ-கால் செய்துள்ளது செவர்லே.

மோட்டார் நியூஸ்