Published:Updated:

ZICA - டிஸைனில் பக்கா!

ஃபர்ஸ்ட் டிரைவ் டாடா ஸீகாவேல்ஸ், படங்கள்: கே.கார்த்திகேயன்

ZICA - டிஸைனில் பக்கா!

ஃபர்ஸ்ட் டிரைவ் டாடா ஸீகாவேல்ஸ், படங்கள்: கே.கார்த்திகேயன்

Published:Updated:

ப்பான் மற்றும் கொரியன் கார்களோடு டாடா கார்கள் போட்டி போட்டு ஜெயிக்க வேண்டும்’ என்ற ஒற்றை லட்சியத்தோடு தயாரிக்கப்பட்டதுதான் டாடா ஸீகா. டாக்ஸி கார் என்ற முத்திரை, இண்டிகா விஸ்டாவின் அடையாளம் என எல்லாவற்றையும் மறக்கச் செய்வது, ஒரே மூச்சில் தாண்டிவிடக்கூடிய தூரம் அல்ல. அதனால்தான் தன் பழைய அடையாளங்களில் இருந்து விடுபட, டாடா சில மாதங்களுக்கு முன்பு ஜெஸ்ட் மற்றும் போல்ட் ஆகிய கார்களைக் களம் இறக்கியது. இவை டாடாவின் முந்தைய கார்களைவிட டிஸைனிலும் தோற்றத்திலும் புதிதாகவே இருந்தன. என்றாலும், டாடா விஸ்டாவின் அதே பிளாட்ஃபார்மில்தான் இவை தயாரிக்கப்பட்டன. அதாவது, அவை ரீ-இன்ஜினீயரிங் செய்யப்பட்ட கார்களாக மட்டுமே இருந்தன. இந்த நிலையில்தான், மிட் சைஸ் காம்பேக்ட் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் நடக்கும் பரபரப்பான ஆட்டத்தில் மாற்றம் கொண்டுவர, முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் ஸீகாவைக் களம் இறக்க இருக்கிறது டாடா. ‘இது ஒரு ஃப்ரெஷ்ஷான தோற்றம்கொண்ட மின்னல் கார்!’ என்பதைச் சொல்லும் விதமாக ZIPPY CAR என்ற அர்த்ததில், அதைச் சுருக்கி ZICA எனப் பெயரிட்டிருக்கிறது டாடா.

டிஸைன்

டாடாவின் சம்பிரதாயமான வளைவு நெளிவுகள் இதில் தப்பித் தவறிக்கூட இடம்பெற்றுவிடக் கூடாது என்பதால், ஒரு ரெஃபரன்ஸுக்காகக்கூட டாடா கார்களின் டிஸைன் இல்லாமல், முழுக்க முழுக்க இங்கிலாந்து மற்றும் இத்தாலியின் டிஸைன் ஸ்டுடியோக்களில் இந்த காரை டிஸைன் செய்திருக்கிறார்கள், புனேயில் உள்ள டாடா இன்ஜினீயர்கள். டிஸைன் முற்றிலும் புதிதாக இருக்க வேண்டும் என்பதால், டாடாவின் இலச்சினையை, அதாவது லோகோவைக்கூட இந்த காருக்காக முப்பரிமாணத் தோற்றம் கொண்டதாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மாற்ற மறந்த ஒரு விஷயமும் உண்டு. அது, காரின் கிரில் டிஸைன்.

ZICA - டிஸைனில் பக்கா!

ஸீகாவை பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, இதன் வீல் ஆர்ச்சும், 14 இன்ச் அலாய் வீல்களும் இதற்கு ஒரு ஸ்போர்ட்டியான லுக் கொடுக்கின்றன. இதன் ஷோல்டர் லைன் மற்றும் வெய்ஸ்ட் லைன் ஆகியவையும் கவர்ச்சியாக இருக்கின்றன. ஒரு சிலருக்கு ஸீகாவை பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, ஃபோர்டு ஃபிகோ நினைவுக்கு வரலாம். ஆனால், ஸீகாவின் ஹைலைட்டே அதன் பின்பக்கத் தோற்றம்தான். இதன் அட்டகாசமான ஸ்பாய்லர், ரசனையுடன் செதுக்கப்பட்டிருக்கும் டெயில் கேட், டெயில் லைட்ஸ் என அனைத்துமே 5 ஸ்டார் ரேட்டிங் வாங்குகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ZICA - டிஸைனில் பக்கா!

முக்கியப் போட்டியாளரான மாருதி செலெரியோவைவிட, ஸீகா நீளமான கார். அதாவது, செலெரியோ 3,600 மிமீ என்றால், ஸீகாவின் நீளம் 3,746 மிமீ. அதேபோல, ஹூண்டாய் i10 காரின் 3,585 மிமீ நீளத்துடன் ஒப்பிட்டாலும் ஸீகா நிச்சயம் நீளமான கார்தான். ஆனால், செலெரியோவின் வீல்பேஸைவிட (2,425 மிமீ) ஸீகாவின் வீல்பேஸ் சற்று குறைவு. அதாவது, 2,400 மிமீ.
போட்டி கார்களைவிட ஸீகா எடை அதிகம். அதாவது, இதன் பெட்ரோல் மாடல் 1,012 கிலோ. டீசல் மாடல் 1,080 கிலோ.

உள்ளலங்காரம்

உண்மையான ஆச்சரியம் காரின் கேபினுக்குள்தான். ‘இது டாடா காரா?’ என்று வியக்கும் அளவுக்கு, இதன் சீட் ஃபேப்ரிக் மற்றும் ரூஃப் லைனிங், டேஷ்போர்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்ஸ் மற்றும் திருகுகள் என அனைத்துமே தரமானதாக இருக்கின்றன. ஸ்போர்ட்டியான ஃபீலிங் கொடுக்க வேண்டும் என்பதால், ஸ்டீயரிங் வீல் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாலைகள் நன்றாகத் தெரிய வேண்டும் என்பதை மனதில் வைத்து, டேஷ்போர்டு மற்றும் ஜன்னல்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது காரை மேலும் விசாலமானதாகக் காட்டுகிறது. காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஹர்மான் நிறுவனம் வடிவமைத்திருக்கும் ஆக்ஸ்-இன், USB மற்றும் ப்ளூ-டூத் வசதிகள் உள்ளன. மொபைல்போன் அல்லது பென் டிரைவ் ஆகியவற்றை இணைத்துக்கொண்டால், நாம் விரும்பும் பாடலை இதன் 4 ஸ்பீக்கர்களும், 4 ட்வீட்டர்களும் அட்டகாசமாக அலற விடுகின்றன. காரில் நான்கு பேர் பயணித்தால், நான்கு பேரின் மொபைல்போனையும் இதோடு இணைத்துக்கொள்ள முடிகிறது. ஆனால், ஏ.சி வேகமாக தன் வேலையைச் செய்யவில்லை. குளிர்ச்சியும் போதுமானதாக இல்லை.

போல்ட் காரில் பொருட்களை வைக்க போதுமான இடம் இல்லை என்ற விமர்சனம் எழுந்ததாலோ என்னவோ, ஸீகாவில் ஒவ்வொரு கதவிலும் இரண்டு வாட்டர் பாட்டில்கள் வைக்க இடம் கொடுத்திருக்கிறார்கள். கியர் லீவர் அருகே இரண்டு கப் -ஹோல்டர்கள் இருக்கின்றன. க்ளோவ் பாக்ஸில் குளிர்பதன வசதி இருப்பதால், குளிர்பானங்களை அதில் வைத்துக்கொள்ள முடியும். ஐபேட் போன்றவற்றையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் க்ளோவ் பாக்ஸில் தனி இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்ஜின்

போல்ட் மற்றும் ஜெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே ரெவோட்ரான் சீரிஸ் இன்ஜின்தான் இதிலும் என்றாலும், அதே 4 சிலிண்டர் இன்ஜின் இல்லை. பெட்ரோல் - ஸீகாவில் டாடா பொருத்தியிருப்பது முற்றிலும் புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின். ‘சிட்டி’ மற்றும் ‘எக்கோ’ என்று இரண்டுவிதமான செட்டிங்கில் வைத்து ஸீகாவை ஓட்ட முடியும். இது 6,000 ஆர்பிஎம்-ல் 83.8bhp சக்தியையும் 11.6kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 0-100 கி.மீ வேகத்தை 15.27 விநாடிகளில் கடக்கும் ஸீகா, போதுமான அளவுக்கு சக்தியைக் கொடுக்கிறது. 30-50 கி.மீ்் வேகத்தை எட்ட செலெரியோ வெறும் 3.8 விநாடிகள்தான் எடுத்துக்கொள்கிறது. ஆனால், ஸீகா - இதே வேகத்தை எட்ட 5.26 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. அதேபோல, 50 - 70 கி.மீ வேகத்தை எட்ட செலெரியோ 6.52 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. ஆனால், ஸீகா எடுத்துக்கொள்வதோ 7.86 விநாடிகள். இதுதான் ஸீகா இன்ஜினின் திறன் என்று சொல்லும்போது, இதை ZIPPY CAR என்று சொல்லுவது எப்படிப் பொருந்தும்? எக்கோ செட்டிங்கில் வைத்து ஸீகாவை ஓட்டினால், அது ARAI கணக்குப்படி லிட்டருக்கு 23.5 கி.மீ கொடுப்பதாக டாடா சொல்கிறது. இந்த மைலேஜுக்காக ஸீகா பெர்ஃபாமென்ஸில் நிறைய சமரசம் செய்துகொண்டிருப்பது நன்கு தெரிகிறது.

ZICA - டிஸைனில் பக்கா!

பெட்ரோல் இன்ஜின் பொருத்தப் பட்ட காரைப் போலவே, டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட ஸீகா காரையும் ‘சிட்டி’ மற்றும் ‘எக்கோ’ என்று இரண்டு விதமான செட்டிங்கில் வைத்து ஓட்ட முடியும். 4,000 ஆர்பிஎம்-ல் 69bhp சக்தியையும் 14.27kgm டார்க்கையும் கொடுக்கும் ஸீகாவின் ரெவோடார்க் இன்ஜின், செலேரியோ மற்றும் செவர்லே பீட் ஆகிய கார்களைவிட பெட்டராகவே இருக்கிறது. ஓட்டுதல் தரத்தில் போட்டி கார்களைவிட ஸீகா ஒரு படி மேலே இருக்கிறது.

முதல் தீர்ப்பு:

பார்க்க கவர்ச்சியாக இருக்கிறது; ஏராளமான சிறப்பம்சங்கள் இருக்கின்றன; கேபின் தாராளமாகவும் தரமானதாகவும் இருக்கிறது; மேடு பள்ளங்களையும் நன்கு சமாளிக்கிறது; ஆனால், நல்ல மைலேஜ் கொடுக்க வேண்டும் என்பதற்காக, சுவாரஸ்யம் இல்லாத இன்ஜினைக் கொண்டதாக இருக்கிறது. இதன் விலை மட்டும் சாதகமானதாக இருந்துவிட்டால், ஸீகா ஜெயிப்பது நிச்சயம்!