Published:Updated:

ஆக்‌ஷன் அவதார்!

ராலி ரேஸர்: ஆஃப் ரோடிங்ஞா.சுதாகர் படங்கள்: எல்.ராஜேந்திரன், ரா.ராம்குமார்

ஆக்‌ஷன் அவதார்!

ராலி ரேஸர்: ஆஃப் ரோடிங்ஞா.சுதாகர் படங்கள்: எல்.ராஜேந்திரன், ரா.ராம்குமார்

Published:Updated:

ந்தியாவில் எங்கு ராலி பந்தயங்கள் நடந்தாலும், இவரது பெயரும் வெற்றியாளர்களில் பட்டியலில் நிச்சயம் இருக்கும். கடந்த பல ஆண்டுகளாக, பல்வேறு ராலி போட்டிகளில் வென்று அசத்திவருகிறார் குகன் செட்டி. ஆஃப் ரோடு பந்தயங்கள், ராலிகள், பாரா மோட்டாரிங், ஜெட்ஸ்கி எனும் நீரில் செல்லும் வாகனம் என எல்லா அட்வென்ச்சர்களிலும், ஒரு கை பார்க்கும் குகனை, திருநெல்வேலியில் சந்தித்தோம்.

“சின்ன வயதில் சைக்கிளை சாலையில் ஓட்டியதைவிட, மண் தரைகளிலும் ரயில் தண்டவாளங்களிலும் ஓட்டியதுதான் அதிகம். 80-களில் ரூபவாஹிணி சேனல் மிகவும் பிரபலம்.  அதில் பைக் - கார் பந்தயங்கள் எல்லாம் பார்ப்பேன்.

1989-ல் கவாஸாகி KB100 பைக்கை வாங்கிய கையோடு, கோவையில் சிஸர் ஆக்ஷன் ராலியில் பங்கேற்றேன். அடுத்து 1992-ல் யமஹா RX100 பைக்கில், கொச்சினில் ஒரு பந்தயத்தில் கலந்துகொண்டேன். அதன்பிறகு நிறைய ஆஃப் ரோடு ரேஸ்களில் கலந்துகொண்டேன்!” என நிறுத்தியவர், தனது ராலி அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்ந்துகொண்டார்.
“2013-ல் இலங்கையில் RFC எனும் ‘ரெயின் ஃபாரஸ்ட் சேலஞ்ச்’ ராலி நடைபெற்றது. சர்வதேச அளவில் நிறைய வீரர்கள் வந்திருந்தனர். அதில் இந்தியாவில் இருந்து கலந்துகொண்ட ஒரே போட்டியாளர் நான் மட்டும்தான். பெட்ரோல், டீசல், யுடிவி பிரிவு என மூன்று வகையான பிரிவுகள் உண்டு. அதில் நான் யுடிவி பிரிவில் கலந்துகொண்டேன். அதன் மூலம், நிறைய புதிய விஷயங்கள் என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது. பிறகு, இந்தியாவில் எங்கு ராலி நடந்தாலும், தவறாமல் கலந்துகொள்வேன்.

ஆக்‌ஷன் அவதார்!

இந்தியாவில் நடக்கும் ராலி பந்தயங்களில் மிகவும் சவாலானவை மூன்றுதான். முதலாவது, ‘ரைடு தி ஹிமாலயா’ எனும் ராலி. இது முழுக்க முழுக்க இமயமலைப் பகுதிகளில் நடக்கும். ஜில்லென்று நடுக்கும் குளிரில் ஏழு நாட்கள் பந்தயம் நடக்கும். அடுத்து 1,200 கி.மீ பயணம் கொண்ட, ‘ராயல் ராஜஸ்தான்’ ராலி. இது, அப்படியே இமயமலை ராலிக்கு நேர்மாறாக இருக்கும். பகலில் வெப்பம் வெளுத்து வாங்கும். உடலில் நீர் முழுதும் குறைந்து சோர்வாகிவிடுவோம். மாலையில் கடும் குளிர் வாட்டும். அடுத்து ‘டெஸர்ட் ஸ்டார்ம்’ ராலி. இதுவும் பாலைவனத்தில்தான் நடக்கும். மைனஸ் 2 டிகிரி வெப்பம்தான் மாலை நேரங்களில் இருக்கும். இமயமலை போன்ற பகுதிகளில் இருக்கும் குளிருக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள்  இருக்கிறது. இந்தக் குளிரில், காற்றில் ஈரப்பதமே இல்லாமல், வறட்சியாக இருக்கும். இதுபோன்ற பந்தயங்களில் கலந்துகொள்ள மன உறுதி, உடல் உறுதி ஆகிய இரண்டுமே முக்கியம். அதற்கு யோகா பயிற்சிகள், நல்ல உணவுப் பழக்கங்கள்தான் உதவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமது முழுப் பொறுமையையும், திறமையையும் இந்த ராலிகள் சோதித்து விடும். பாலைவனங்களில் ஓட்டும் ராலியில், பலமுறை ஏன் இதில் கலந்துகொண்டோம் என வெறுக்கும் அளவுக்கு மனம் மாறிவிடும். பாலைவனங்களில் எல்லா பகுதியும் ஒரே மாதிரி இருப்பதால், நாம் எங்கு இருக்கிறோம் என்பதே  தெரியாது. வழிமாறிச் சென்றால்கூட, உடனே உணர முடியாது. இடையில் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். மாறும் வெப்பநிலைக்கு ஏற்ப உடலும் மனமும் தயாராக  வேண்டும். இப்படி நிறைய சவால்கள் களத்தில் உண்டு. டெஸர்ட் ஸ்டார்ம் ராலியில் ஒரு முறை என்னுடைய ஜி.பி.எஸ் முழுக்க செயலிழந்துவிட்டது. பிறகு, வழிகாட்டிப் புத்தகம் மட்டும் வைத்துக்கொண்டே பந்தயம் முழுக்கப் பயணம் செய்து, அதில் மூன்றாவது பரிசு வாங்கினேன். அது என்னால் மறக்கவே முடியாத அனுபவம்.  ஒவ்வொரு போட்டிக்கும், இந்தியாவில் ஒவ்வொரு பகுதியில் இருந்து பொருத்தமான நண்பர்களை உடன் அழைத்துச் செல்வேன். இதுவரைக்கும் 20 ராலிகளுக்கு மேல் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன்!’’ என ராலி பந்தயங்கள் பற்றிச் சிலாகித்தவர், தன் மற்ற சாகச அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

 “ராலி, பாரா மோட்டரிங் போன்றவைகளில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பங்கேற்பர். அதையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை 2012-ம் ஆண்டு வந்தது. இந்தியக் கடற்படையில் பாரா மோட்டரிங் பயிற்சியளிக்கும் சுனில்ஹாசன் என்ற அதிகாரி தன் ஓய்வு நேரங்களில் கேரளாவின் வாகமன் கடற்கரையில் எனக்குப் பயிற்சி அளித்தார். பாரா மோட்டரிங் என்பது பாரா ஜம்ப் போல மேலிருந்து குதிப்பது கிடையாது. விமானம் மாதிரியே தரையில் இருந்து மேலே எழும்புவது. காற்றின் வேகம், வானிலை, ஈரப்பதம், பறக்கும் வேகம் ஆகியவற்றின் தன்மைகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். இந்த சாகசத்தைச் செய்ய நிறைய பயிற்சியும் அனுபவமும் முக்கியம். பாதுகாப்பும் ரொம்பவே முக்கியம். எனவே, இதைச் செய்வதற்கு முன்பே இதைப் பற்றி நிறைய தியரியாகப் படிக்க வேண்டும். இப்படிப் பறப்பதற்கு லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதற்கு ‘பாரா கிளைடிங் அசோசியேஷன் ஆப்  இந்தியா’ எனும் (PAI) அமைப்பு லைசென்ஸ் வழங்குகிறது.

ஆக்‌ஷன் அவதார்!

நிலம், வானம் - அடுத்து நீரையும் விடக் கூடாது என துபாயில் இருந்து ஜெட்ஸ்கி வாகனத்தை வாங்கினேன். இதற்கும் முறைப்படி இந்தியன் மரைன் அகாடமியிடம், லைசென்ஸ் பெற வேண்டியது அவசியம்!’’ என்றவர், ராலி பந்தயங்களில் கலந்து கொள்வது எப்படி என்று பற்றி சில டிப்ஸ்களும் கொடுத்தார்.

“ராலி பந்தயங்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை இந்தியாவில் எங்கேயாவது ஓர் இடத்தில் நடந்து கொண்டேதான் இருக்கும். இதில் பெரிய தடையாகத் தெரிவது பொருளாதாரம். போட்டிகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டால், நமக்கு ஸ்பான்ஸர் செய்ய முன்வருவார்கள். எனக்கு போலாரிஸ், மாருதி போன்ற நிறுவனங்கள் ஸ்பான்ஸர் செய்துவருகின்றன.

என்னுடைய முக்கியமான கனவு, தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்றைத் துவக்கி ராலி, மோட்டோகிராஸ், பாரா மோட்டாரிங், ஜெட்ஸ்கி போன்ற விஷயங்களை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்’’ என முடித்தார் குகன்.