Published:Updated:

ஒரு சிறிய வனம்... அதில் எங்கள் மனம்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: ஆடி A3தமிழ் , படங்கள்: வீ.சக்தி அருணகிரி

ஒரு சிறிய வனம்... அதில் எங்கள் மனம்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: ஆடி A3தமிழ் , படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:

 “கொள்ளு சூப், சாமை இட்லி, குதிரைவாலி பொங்கல், அருகம்புல் சாம்பார், ஆப்பிள் சட்னி, நிலவேம்புப் பொடி... எல்லாத்தையும் கடலூருக்கு வேன்ல பார்சல் பண்ணிடுங்க... நான் கிரேட் எஸ்கேப் போயிட்டு வந்துடுறேன்!’’ என்று தனது ஊழியர்களுக்கு பச்சை உணவை வைத்துப் பாடம் நடத்தியபடி பயணத்துக்குக் கிளம்பினார் வீரசக்தி. திருச்சியில் ‘ஆப்பிள் மில்லட்’ என்ற பெயரில் இயற்கை உணவகமும், காட்டேஜ்களும் நடத்திவரும் வீரசக்தி, இந்தப் புத்தாண்டு இதழுக்குத் தனது சிவப்பு நிற ஆடி A3 காரை, ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்புக்காகப் பளபளவென்று தயாராக்கி இருந்தார்.

‘‘நேத்து நைட்டுதான் கடலூருக்குப் போயிட்டு வெள்ள நிவாரணப் பணி முடிச்சுட்டு வந்தேன் சார். சென்னையிலேயும் கடலூர்லேயும் நல்லவங்க நிறையப் பேர் இருக்காங்கனு நினைக்கிறேன். அதான் மழை, காட்டு காட்டுனு காட்டிடுச்சு!’’ என தனது குடும்பத்தினரை அறிமுகம் செய்தார் வீரசக்தி. ‘‘அண்ணா, தேக்கடிதானே போறோம்? நேத்து நைட்ல இருந்து தூக்கம் வரலண்ணா... சீக்கிரம் கிளம்புவோம்... வாங்க... ப்ளீஸ்!’’ என்று நம்மை விரைவாகத் தயார்ப்படுத்தினான் 6-ம் வகுப்பு படிக்கும் அபிசரண்; வீரசக்தியின் 10 வயது மகன். பாட்டி, பேரன், அம்மா, அப்பா என்று நால்வரைச் சுமந்தபடி கிளம்பத் தயாரானது ஆடி A3.

யாராக இருந்தாலும் திரும்பவும் வைக்கும்; விரும்பவும் வைக்கும் - இதுதான் ஆடியின் அழகு. செடான் காருக்கே உரிய ஏரோடைனமிக் டிஸைன், அகலமான 17 இன்ச் டயர்கள், அலாய் வீல், LED DRL, பனோரமிக் சன்ரூஃப் என்று அங்கம் அங்கமாக வர்ணிக்கலாம் ஆடியின் அழகை! இன்டீரியரிலும் அப்படியே. இக்னீஷன் ஆன் செய்ததும் உள்ளிருந்து எழும் LED ஸ்க்ரீன், ஸ்டீயரிங் கன்ட்ரோல், கியர் நாப், லெதர் சீட்டுகள் என்று வாடிக்கையாளர்களை ஆடிப் போக வைக்கிறது ஆடியின் உள்பக்கம். ஆனால், 10 லட்ச ரூபாய் i20-யிலேயே பட்டன் ஸ்டார்ட் இருக்கும்போது, 44 லட்ச ரூபாய் A3-ல் பட்டன் ஸ்டார்ட் இல்லை என்பது ஏமாற்றம்தான். டீசல் இன்ஜின் என்றாலும், அதிர்வுகளில் அவ்வளவாக ஆட்டம் போடாதவை ஆடி கார்கள். இதற்குக் காரணம் - இன்ஜின் பே, பேனட், ஃப்ளோர் போர்டு போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள சவுண்ட் டேம்ப்பனிங் மெட்டீரியலும், இன்ஜினுக்குள் சென்ஸார் மூலமாகச் செயல்படும் ஃபீஸோ இன்ஜெக்ஷன் (Piezo Injector) சிஸ்டமும்தான். ‘‘பிஎம்டபிள்யூவில் இந்த வைப்ரேஷனும் சத்தமும்தான் மைனஸ்!’’ என்றார் வீரசக்தி.

ஒரு சிறிய வனம்... அதில் எங்கள் மனம்!

ஜிபிஎஸ்-ஸில் தேக்கடி செட் செய்துவிட்டு த்ராட்டில் செய்தபோது, கார் மிதப்பதுபோலவே இருந்தது. A3 - செடான் கார், முக்கியமாக டூரிங் கார் என்பதால் ஸ்போர்ட்ஸ் மோடு, க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு, மேனுவல் ஷிஃப்ட் என்று த்ரில்லிங் அம்சங்கள் ஆடியில் உள்ளன. அதே அளவு பாதுகாப்பான அம்சங்களுக்கும் குறைவு இல்லை. ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், ESC, ஆன்ட்டி ஸ்லிப் ரெகுலேஷன் (ASR), காற்றுப் பைகள், ப்ரீ சென்ஸ் பேஸிக் (அதாவது, விபத்து நேரங்களில் இறுக்கமாகும் சீட் பெல்ட்டுகள், தானாக மூடிக்கொள்ளும் கதவு மற்றும் சன் ரூஃப்) என்று நமது பயணத்தின் பாதுகாப்புக்கு கேரன்ட்டி தருகிறது A3. ‘‘ஆனால், இது எல்லாத்தையும்விட சீட் பெல்ட் போடுறதுதான் ரொம்ப முக்கியம்னு என் பையனுக்கு சொல்லியிருக்கேன்!’’ என்றார் வீரசக்தி.

ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்து ‘பத்து எண்றதுக்குள்ள’ 0-100-ஐத் தொட்டுவிடுகிறது A3. ஆடியின் நண்பனும் எதிரியும் - இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ்தான். நெடுஞ்சாலையில் ஆடாமலும் அசையாமலும்... மேடு-பள்ளங்களில் ஆடி அசைந்தும் செல்வதற்கு இதுதான் காரணம். ‘‘போடியில நம்ம ரெஸார்ட்ல தங்கிட்டுப் போயிடலாம் சார்!’’ என்று ஏற்கெனவே வீரசக்தி வேண்டுகோள் வைத்ததால், போடிக்குத் திரும்பியது ஆடி.

மூணாறு செல்லும் வழியில் சுற்றிலும் மேற்குத் தொடர்ச்சி மலை படுத்துக் கிடக்க, இயற்கையோடு இயைந்து இருக்கும் கிரீன் ராயல் ரெஸார்ட்டில் இரவைக் கழித்துவிட்டு... தேவாரம், கம்பம் வழியாக குமுளியை அடையத் திட்டம் தீட்டினோம். மறுநாள் அதிகாலை பாண்டிய நாட்டிலிருந்து சேர நாட்டு எல்லைக்குப் பயணிக்கத் தயாரானது A3.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு சிறிய வனம்... அதில் எங்கள் மனம்!

செல்லும் வழியில் பென்னி குயிக் மணிமண்டபம், தமிழகத் தண்ணீர் பருகும் ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய இடம். தமிழ்நாட்டில் அயல்நாட்டைச் சேர்ந்த தனக்கு மணிமண்டபம் கட்ட வைத்த பெருமைக்குரிய ஆங்கில அதிகாரி, ஜான் பென்னிகுயிக். முல்லைப் பெரியார் அணையின் தந்தை பென்னி குயிக், அணை கட்டுவதற்காக தனது வாழ்நாளையே தியாகம் செய்ததை விளக்கும் படங்களும், அணையின் மினியேச்சரும் நம்மை 1800-களுக்கு மத்தியில் அழைத்துச் செல்கின்றன. ‘முயற்சியைக் கைவிட முடியாது என்றால் எதுவும் முடியும்’ என்பதற்குப் பொருத்தமாக வாழ்ந்து காட்டியவர் பிரிட்டிஷ் இன்ஜீனியரான பென்னி குயிக். இரண்டு முறை அணை இடிந்தபோதும், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பண உதவி நிறுத்தப்பட்டபோதும், தனது சொத்துகளை விற்று முல்லைப் பெரியார் அணையைக் கட்டி, அனைவருக்கும் தண்ணி காட்டிய பெருமைக்குரியவர் பென்னி குயிக். இப்போதும் தேனி மாவட்ட விவசாயிகள் வருடா வருடம் பென்னி குயிக் பிறந்த நாளைக் கொண்டாடி தங்கள் நன்றியைத் தெரிவிக்கிறார்கள். ‘‘இந்த அங்கிளைப் பத்தி எங்க மிஸ் சொல்லிக் கொடுத்திருக்காங்க!’’ என்று வியந்தான் அபி.

நீரின் அருமை கோடையிலும், காரின் அருமை மலைப் பாதையிலும்தான் தெரியும் என்பதைப் போல், மலை ஏற்றங்களில்தான் ஆடியின் அருமையை உணர முடிந்தது. 2.0 லிட்டர் இன்ஜின் எந்தவிதத் திணறலும் இல்லாமல், 141bhp பவரை முன்பக்க வீல்களுக்குக் கடத்துகிறது. A3-ல் இருக்கும் ‘ஹில் ஹோல்டு’ ஆப்ஷன், மலை ஏறும் வாகனங்களுக்கு வழிவிடாமல் இறங்கும் கேரள வாகனங்களைக் கண்டு மெர்சல் ஆகாமல் ஏற உதவியது. குமுளி எல்லையிலேயே தேக்கடியின் வாடை அடிக்க ஆரம்பித்திருந்தது. ஐயப்ப சீஸன் என்பதால், வெற்றுடம்புடன், வெறும் காலுடன் நிறைய சாமிகள் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தார்கள். லாட்டரிச் சீட்டுகள், கேரள மஸ்கோத் அல்வா, நேந்திரக்காய் சிப்ஸ், பழ பஜ்ஜி, தேங்காய் எண்ணெய், மலையாள சினிமா போஸ்டர்கள் என்று கேரள மணத்தில் மனம் லயிக்க ஆரம்பித்திருந்தது. மங்கிய மாலையில் மூங்கில் காட்டுக்குள் நிலா புகுவதைப்போல், தேக்கடிக்குள் ஆடி புகுந்ததை அழகாக கேமராவுக்குள் சிக்க வைத்துக் கொண்டிருந்தார் நமது போட்டோகிராபர். கடல் மட்டத்தில் இருந்து 1,800 மீட்டர் உயரத்தில் இருக்கும் தேக்கடியில் - அம்பி, அந்நியன், ரெமோ ஸ்டைலில் மழை தூறுவதும் விடுவதும் வெயில் அடிப்பதுமாக கண்ணைக் கட்ட வைத்தது கிளைமேட்.

ஒரு சிறிய வனம்... அதில் எங்கள் மனம்!

‘‘அப்பா, போட்டிங் போகாம திருச்சிக்கு வர மாட்டேன்!’’ என்று அடம்பிடித்த சிறுவன் அபியால், பயணத் திட்டம் மேலும் ஒரு நாள் எக்ஸ்டெண்ட் செய்யப்பட்டது. தனியாகவோ, காதலியுடனோ, நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ... எப்படி என்றாலும் தேக்கடியில் தங்குவது பேரின்பம்தான். மெலடி, அதிரடி, குத்து, ரம்மியம் என்று கலந்து கட்டி மயக்கும் இளையராஜாவின் பாடல்கள்போல, வெரைட்டியாக ரூம்கள் தேக்கடியில் கிடைக்கின்றன. ‘‘இங்கு ட்ரீ ஹவுஸ் எனும் உயரமான மர வீட்டில் தங்கியபடி, கீழே புல்வெளிகளில் மான்கள், பைஸன்கள் மேய்வதை லாங் ஷாட்டில் வைத்தபடி செல்ஃபி எடுக்கலாம்’’ என்றார் ஒரு காட்டேஜ் ஓனர்.

நீங்கள் தேக்கடிக்குப் புதுசு என்றால், இதை நிச்சயம் கவனத்தில் கொள்ளுங்கள். இங்கு ஒருநாள் வாடகை என்பது - 12 மணி நேரம் மட்டுமே! 24 மணி நேரம் என்பது இரண்டு நாள் வாடகைக்குச் சமம். ‘‘சேட்டா, 1500தான் சொன்னதா... இப்போ டபுளாயிண்டு கேட்குது!’’ என்று அரைகுறை மலையாளத்தில் ஒருவர், காட்டேஜ் ஓனரிடம் முறையிட்டுக்கொண்டிருந்தார்.

தேக்கடியில் குறைந்தது 1,500-ல் இருந்து கிடைக்கின்றன தங்கும் இடங்கள். ஆனால், தேக்கடிக்கு இன்டீரியராகச் சென்று, போட் ஹவுஸ் பக்கத்தில் இருக்கும் ‘ஆரண்ய நிவாஸ்’ ஹோட்டலில் தங்கினீர்கள் என்றால், படகு சவாரியை ஈஸியாக அனுபவிக்கலாம். இது கேரள அரசின் ஸ்டார் ஹோட்டல். ‘போட்டிங் இல்லாமல் தேக்கடியா?’ என்ற மைண்ட்செட்டிலேயே அனைவரும் தேக்கடி வருவதால், ஒரு மணி நேர போட்டிங் பயணத்திற்கு, கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரை க்யூவில் நிற்கக்கூடிய சகிப்புத் தன்மை வேண்டும். காலை 7 மணி முதல் போட்டிங் ஆரம்பித்தாலும், கூட்ட நெரிசலைத் திருப்திப்படுத்தத் திணறி வருகிறது கேரள டூரிஸம்.

படகில் ஏறி, முழு ஏரியின் அழகையும் பார்க்கும்போது, வரிசையில் நின்ற அலுப்பெல்லாம் தீர்ந்துபோகிறது. சாதாரண பறவைகள்தான்; குரங்குகள்தான்... ஆனால், அதை தேக்கடியில் பார்க்கும்போது, தலை சாய்த்து ரசிக்கத் தோன்றுகிறது; விதவிதமாகப் படம் பிடிக்க கேமராவை க்ளிக்குகின்றன கைகள். குரங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது என்பது கேரள டூரிஸத்தின் கடுமையான வேண்டுகோள். ஆனால், மதிப்பதற்கும் மீறுவதற்கும்தானே விதிகள் என்பதுபோல், சிலர் குரங்குகளுக்கு டீ/காபியெல்லாம் ஆஃபர் செய்தார்கள்.

ஒரு சிறிய வனம்... அதில் எங்கள் மனம்!

முல்லை ஆறும் பெரியாறும் சங்கமித்துத் தேங்கிக் கிடப்பதால், தேக்கடி. ‘வர்ற வழியில ஒரு மான்கூடப் பார்க்க முடியலையே’ என்பவர்களுக்கு, இந்தப் படகுச் சவாரியில் நிச்சயம் அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்பு உண்டு. கரையோரங்களில் நீர் அருந்தக் குவிந்த யானை, மான் கூட்டம் ஒன்று - நமது படகில் பல புகைப்பட வல்லுநர்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. பலரது முகத்தில் தேக்கடி வந்ததற்கான சந்தோஷ திருப்தி. ஆனால், ‘காட்டு விலங்குகளைப் பார்க்கும் உற்சாகத்தில் கவனக்குறைவாக இருந்துவிட்டால் ஆபத்து’ என்று அறிவுறுத்தினார் படகோட்டி. ஒருமுறை காட்டெருமைக் கூட்டத்தைக் காண, அனைவரும் படகின் ஒரு ஓரமாகத் திரண்டு, படகு கவிழ்ந்து, சில்லென்ற ஏரியில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார். கிட்டத்தட்ட 673 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த பெரியாறு புலிகள் சரணாலயத்தில், புலிகளைப் பார்ப்பது என்பதெல்லாம் வாழ்நாள் அதிசயம். 40 கி.மீ-க்கு ஒரு புலி என்ற அளவில் கொஞ்சூண்டு புலிகள்தான் ராஜ்ஜியம் புரிவதாகச் சொன்னார்கள். ‘‘எப்போதாவது இரவு நேரங்களில் புலியின் உறுமல் கேட்கலாம்’’ என்றார் அதிகாரி ஒருவர்.

போட்டிங் முடித்துவிட்டு வாக்கிங், ட்ரெக்கிங், ராஃப்டிங் எல்லாவற்றையும் ஷூட்டிங் செய்துவிட்டு, யானைச் சவாரி செய்ய முடிவெடுக்கப்பட்டது. நீங்கள் தேக்கடி என்ட்ரன்ஸில் நுழையும்போதே, கார் ரிஜிஸ்ட்ரேஷன் எண்களை வைத்து அந்தந்த மாநில மொழிகளில் யானைச் சவாரிக்கு அழைக்கிறார்கள் கைடுகள். ஒரு நபருக்கு 250 ரூபாய் என்று, கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் யானைச் சவாரி நடக்கிறது. ‘யானையைக் கட்டித் தீனி போட முடியாது’ என்பார்கள். இங்கே மொத்தம் 15 யானைகளுக்குத் தீனி போட்டு வளர்க்கிறார் இந்த யானைச் சவாரி ஏரியாவின் உரிமையாளர் பிஜூ. தேக்கடிக்கு வருபவர்களை, யானைகளைக் கொண்டு வரவேற்கிறார் இவர்.

ஒரு சிறிய வனம்... அதில் எங்கள் மனம்!

‘‘கவர்ன்மென்ட் பெர்மிஷனோட இதைப் பண்றேன். இப்போதைக்கு எங்களுக்கு இந்த யானைகளும், டூரிஸ்ட்டும்தான் கடவுள்!’’ என்று தமிழில் சொன்னார் பிஜூ. மதமதவென்று நிமிர்ந்து நிற்கும் யானைகளைக் கண்டாலே தொடை நடுங்கிப் போவதுதான் மனித மரபு. ஆனால், இங்குள்ள யானைகளோ, ‘லெட்ஸ் டேக் செல்ஃபி’ என்று நம்மிடம் கேட்பதுபோல், படம் எடுக்கும் வரை பாசமாக ஒத்துழைக்கின்றன. ‘‘காட்டுக்குள்ள யானை மேல போகும்போது பயமே இல்லைப்பா!’’ என்று யானையைத் தடவித் தடவிக் கொடுத்தான் அபி.

யானைச் சவாரிக்குப் பிறகு தேக்கடியில் அனைவரையும் கவரும் ஒரு விஷயம் - களரி. தேக்கடியில் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆகிறதோ இல்லையோ, களரி திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல்லாகவே இருக்கின்றன. ஒரு மணி நேரம் கொண்ட ஒரு காட்சிக்கு 150 ரூபாய் டிக்கெட். கேரளாவின் பாரம்பரிய விளையாட்டான களரி, பார்ப்பதற்கு செம த்ரில்லிங்கான விளையாட்டு. மேலும் கதகளி, ஆயுர்வேத மஸாஜ், ட்ரெக்கிங் என்று தேக்கடியில் என்ஜாய் பண்ண நிறைய விஷயங்கள் உண்டு. இரவு 9 மணிக்குள் சாப்பாடு போன்றவற்றை முடித்துவிட்டு ரூமுக்குள் அடைந்துவிட வேண்டும். காரணம், 8 மணி வரை பரபரப்பாக ‘தூங்காவனமாக’ இருக்கும் தேக்கடி, 9 மணிக்குப் பிறகு தூங்கும் வனமாக மாறிவிடுகிறது.

மூங்கில் காட்டில் நுழைந்த நிலா மறைவதுபோல, இப்போது சேர நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது ஆடி. ‘ஒரு சிறிய மரம்; அதிலொரு வனம்; அதில்தான் என் மனம்’ என்ற மலையாளக் கவிஞர் குஞ்ஞுண்ணியின் கவிதைக்கேற்ப, வீடடைந்த பிறகும் அனைவரின் மனமும் தேக்கடியிலேயே தங்கியிருந்தது.

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044 - 66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!