Published:Updated:

கார் உங்கள் சாய்ஸ்!

தொகுப்பு: ராகுல் சிவகுரு

கார் உங்கள் சாய்ஸ்!

தொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:
கார் உங்கள் சாய்ஸ்!

ஆல்ட்டோ 800, பொதுவாக எல்லோருக்குமே பிடித்த சிம்பிள் டிஸைன் கொண்டதாக இருக்கிறது. இதன் குறுகிய உள்பக்கம், 1990-களில் வெளிவந்த கார்களை நினைவுபடுத்துகிறது. சிறப்பம்சங்கள் அற்ற காராக மட்டும் இல்லாமல், ஃபிட் அண்டு ஃபினிஷிலும் பின்தங்கியிருக்கிறது ஆல்ட்டோ. தாழ்வான பின் இருக்கைகளில் அமர்பவர்களுக்கு ஹெட்ரூம் அதிகமாக இருந்தாலும், மூன்று பேர் பின் இருக்கைகளில் அமர்ந்தால், நெருக்கியடித்துத்தான் உட்கார வேண்டியிருக்கும். டிக்கியிலும் இடவசதி குறைவு. அதாவது 177 லிட்டர் மட்டுமே!

 32 ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கும் இன்ஜின் என்றாலும், ஆரம்பம் முதல் இறுதி வரை, பவர் டெலிவரி சீராக இருக்கிறது. ஆனால், இன்ஜின் சத்தம் காருக்குள் அதிகமாகக் கேட்கிறது. ஸ்டீயரிங், ஓட்டுநரின் சொல்பேச்சு கேட்கிறது என்பதால், திருப்பங்களில் நம்பிக்கையுடன் காரைச் செலுத்த முடிகிறது. சஸ்பென்ஷன் இறுக்கமாக இருந்தாலும், சாலையில் உள்ள மேடு  பள்ளங்களை நன்றாகச் சமாளிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார் உங்கள் சாய்ஸ்!

க்விட் காரின் ஸ்பேர் பார்ட்ஸ் விலை, ஆல்ட்டோவின் ஸ்பேர் பார்ட்ஸ் விலையைவிட 19% குறைவு. எஸ்யுவி போன்ற வடிவமைப்பு இன்னொரு பலம். உள்ளலங்காரம் மிரட்டவில்லை. ஆனால், ஆல்ட்டோ போல சாதாரணமாகவும் இல்லை. காரணம், இதில் இருக்கும் 7 இன்ச் டச் ஸ்கிரீனில், மியூஸிக்-நேவிகேஷன் வசதி இருக்கிறது. ஆனால், அடிப்படை அம்சங்களான தானாக உள்ளே இழுக்கும் சீட் பெல்ட், பக்கவாட்டுக் கண்ணாடிகளை உள்ளே இருந்து அட்ஜஸ்ட் செய்ய முடியாதது போன்றவை மைனஸ்.

5 பேர் வசதியாக அமர்வதற்கான இடவசதி உண்டு. டிக்கியில் 300 லிட்டர் கொள்ளளவு இடம் இருக்கிறது. க்விட்டின் மிட் ரேஞ்சில் பவர் இல்லை. அதிக ஆக்ஸிலரேஷன் கொடுத்துத்தான், போதுமான வேகத்தை எட்ட வேண்டியிருக்கிறது. இந்த நேரத்தில், இன்ஜின் சத்தம் மற்றும் வெளிச்சத்தமும் காருக்குள் அதிகமாகக் கேட்கிறது. மோசமான சாலையில், அற்புதமான ஓட்டுதல் தரம் ஆச்சரியப்படுத்துகிறது. நெடுஞ்சாலை ஸ்டெபிலிட்டியிலும் விலை உயர்ந்த கார்களுக்கு இணையாக இருக்கிறது க்விட்.

GenX நானோ காரின் டிஸைனில் புதிய அம்சங்கள் இருந்தாலும்,  அடிப்படையான தோற்றத்தில் மாற்றம் இல்லை. இருக்கைகள் உயரமாக இருப்பதால், காருக்குள் ஏறுவதும் இறங்குவதும் சுலபம். டிரைவர் சீட்டில் இருந்து சாலையைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. கேபின் தரம், பழைய நானோவைவிட பல மடங்கு முன்னேறி இருக்கிறது. ஜெஸ்ட்டில் உள்ள ஸ்டீயரிங் வீல் - கியர் லீவர்தான் நானோவிலும் என்பது ப்ளஸ். சின்ன கார்தான்; ஆனால், இடவசதியில் பெரிய கார்களுடன் போட்டி போடுகிறது. தவிர, பின்னிருக்கையில் மூன்று பேர் உட்காரலாம்.

நானோவின் டிக்கியைத் திறக்க முடியும் என்றாலும், அங்கு அதிக இடம் இல்லை. ஆல்ட்டோவைவிட சின்ன இன்ஜின் - அதிக எடை காரணமாக, பவர் டெலிவரி சுமார். கூடுதலாக, 2 சிலிண்டர் இன்ஜினின் சத்தமும், மந்தமான கியர் பாக்ஸ் சத்தமும் எரிச்சல் ஏற்படுத்துகிறது. நானோவின் எலெக்ட்ரிக் ஸ்டீயரிங், சிட்டி டிராஃபிக்குக்கு ஏற்றவாறு லைட்டாகவும், கையாள அருமையாகவும் இருக்கிறது. இதன் சஸ்பென்ஷன் செட்-அப் நன்றாக இருந்தாலும், சின்ன வீல்கள், ஓட்டுதல் தரத்தைக் குலைத்துவிடுகின்றன.

கார் உங்கள் சாய்ஸ்!

ஆல்ட்டோ K10 காரின் டிஸைன், பிராக்டிக்கலாக இருக்கிறது.  பாடி பேனல்கள் நன்கு வடிவமைக்கப்பட்டிருந்தாலும், காரின் கட்டுமானத் தரம் சுமார்தான். இதன் கேபின் தரம், வழக்கமான ஆல்ட்டோவைவிட நன்றாக உள்ளது. ஆடியோ சிஸ்டத்துக்கு பியானோ பிளாக் ஃபினிஷ் கொடுத்திருப்பது சூப்பர். ஆல்ட்டோவின் பின்னிருக்கை, இரண்டு பேருக்கு மட்டுமே வசதியாக இருக்கும். டிக்கி கொள்ளளவு, 177 லிட்டர் என்பதால், ஒரு சூட்கேஸை மட்டும்தான் வைக்க முடியும்.

K10 இன்ஜின், நானோ இன்ஜினைவிட ரெஸ்பான்ஸிவ் ஆகவும், நெடுஞ்சாலையில் க்ரூஸ் செய்வதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது. ஆல்ட்டோ K10 காரில் உள்ள AMT கியர்பாக்ஸ், செலரியோவில் இருப்பதைவிட ஸ்மூத்தாக இயங்குகிறது. மேலும், ஸ்டீயரிங் ஃபீட்பேக் படு சுமார் ரகம். ஆனால், வேகமாக வளைவுகளில் திருப்பும்போது, அகலமான பாடி மற்றும் டயர்கள் ஓட்டுநருக்கு நம்பிக்கையைத் தருகின்றன. சஸ்பென்ஷன் சற்று இறுக்கமாக இருப்பதால், ஷார்ப்பான மேடுகளில் ஏறி இறங்கும்போது, கார் அதிகமாகக் குலுங்குகிறது.

இதுவரை மாருதி சுஸூகி தயாரித்த ஹேட்ச்பேக் கார்களிலேயே சிறந்த தோற்றம்கொண்ட கார் பெலினோ. அதேபோல, மற்ற மாருதி கார்களுடன் ஒப்பிடும்போது, வித்தியாசமான வடிவமைப்புடன் கூடிய டேஷ்போர்டு மற்றும் ஆச்சரியப்படும் வகையிலான இடவசதியைக் கொண்டிருந்தாலும், பவர் விண்டோஸ் ஸ்விட்ச், ஸ்டீயரிங் வீல் ஆகியவை, விலை குறைவான மாருதி கார்களில் இருந்து பெறப்பட்டிருப்பது நெருடல்.

ஐபோனுடன் இணையும் திறன் படைத்த பெலினோவின் டச் ஸ்கிரீன், பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதுடன், தெளிவாகவும் இருக்கிறது. மேலும், ஆரம்ப மாடல் முதலே பாதுகாப்புச் சாதனங்கள் இடம்பெற்றிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். பூட் ஸ்பேஸ் 339 லிட்டர். முற்றிலும் புதிய சேஸியில் தயாராகி இருக்கும் பெலினோவின் எடை, வெறும் 890 கிலோதான். பவர் டெலிவரி சீராக இருப்பதால், நகரம் மற்றும் நெடுஞ்சாலையில் பிரச்னையின்றி ஓட்ட முடிகிறது. இறுக்கமான சஸ்பென்ஷன் செட்-அப் காரணமாக.அனைத்து வேகங்களிலும், காரின் பாடி கன்ட்ரோல் மற்றும் நிலைத்தன்மை சிறப்பாக இருக்கிறது.

கார் உங்கள் சாய்ஸ்!

சாலைகளில் அதிகமாகக் காணப்படும் கார் என்றாலும்கூட, இன்னும் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது எலீட் i20. தரமான பிளாஸ்டிக்குகளால் செய்யப்பட்ட எலீட் i20 காரின் இரட்டை வண்ண டேஷ்போர்டின் ஃபிட் அண்டு ஃபினிஷ், அசத்தல் ரகம்.பெலினோவில் டச் ஸ்கிரீன் வருகிறது எனத் தெரிந்தவுடன், டாப் வேரியன்ட்டில் உடனடியாக டச் ஸ்கிரீனை ஹூண்டாய் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

குறைவான இடவசதி மற்றும் தாழ்வான இருக்கைகள் காரணமாக, பின் வரிசை இருக்கையில், இரண்டு பேர் மட்டுமே வசதியாக அமர முடிகிறது. 285 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டிருக்கிறது எலீட் i20.காரின் எடை 1,080 கிலோ என்பதால், இன்ஜின் கூடுதல் எடையை இழுக்க வேண்டிய கட்டாயத்தால், பவர் டெலிவரி வீக்காக இருக்கிறது. குறைவான ஸ்டீயரிங் எடை மற்றும் மென்மையான சஸ்பென்ஷன் இருப்பதால், நகரத்தில் எலீட் i20 காரை ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. பாதுகாப்புச் சாதனங்களைப் பொறுத்தவரை, எலீட் i20 காரின் டாப் வேரியன்ட்டில் மட்டுமே இரண்டு காற்றுப் பைகள் மற்றும் ஏபிஎஸ் கிடைக்கின்றன.

முழுக்க முழுக்க மிட் சைஸ் காரைப்போல  வடிவமைக்கப்பட்டிருக்கிறது எக்ஸென்ட். ஹூண்டாயின் டேஷ்போர்டு தரமாக இருப்பதுடன், பொருட்கள் வைப்பதற்கான இடமும் அதிகம். கன்ட்ரோல்கள் அனைத்தும் கைகளுக்கு எளிதாக எட்டும் வகையில், வசதியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. எக்ஸென்ட் 407 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கிறது. ஆனால், உள்பக்க இடவசதியில் எக்ஸென்ட், ஆஸ்பயரை நெருங்கவே முடியாது.

ஏனெனில், பின்பக்கம் கால்களை நீட்டி அமர்வதற்கு இடம் இருந்தாலும், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அகலம் குறைவான கேபின் என்பதால், இடநெரிசலாக இருப்பதோடு இருக்கைகளும் தட்டையாக இருக்கின்றன. பாதுகாப்புக்காக, எக்ஸென்ட்டின் விலை உயர்ந்த வேரியன்ட்டில் இரண்டு காற்றுப் பைகள், ஏபிஎஸ் உள்ளன. ஆஸ்பயரைவிட எக்ஸென்ட் ஸ்மூத்தான இன்ஜின்-கியர்பாக்ஸையும், லைட்டான கிளட்ச்சையும் கொண்டிருக்கிறது. காரின் கையாளுமை படு சுமார் என்பதுடன், சஸ்பென்ஷன் காருக்குள் அலுங்கல் குலுங்கல்களை ஏற்படுத்துகிறது.

கார் உங்கள் சாய்ஸ்!

ஆஸ்ட்டன் மார்ட்டினில் இருப்பதுபோன்ற கிரில் முன்பக்கத்துக்கு அழகூட்டினாலும், ஆஸ்பயரின் பக்கவாட்டு மற்றும் பின்பக்கத் தோற்றம் மிகவும் சுமார். போட்டி கார்களைவிட அதிக வீல்பேஸ் கொண்டிருப்பதால், கால்களை, நீட்டி மடக்கி உட்கார அதிக இடம் இருக்கிறது. எக்ஸென்ட்டுடன் ஒப்பிடும்போது, ஆஸ்பயர் இருக்கைகளின் சொகுசுத்தன்மையை, பெஸ்ட் என்றே சொல்லலாம்.

ஆனால், ஹூண்டாயின் கேபின் தரத்துடன் ஒப்பிடும்போது, ஆஸ்பயர் பின்னுக்குப் போய்விடுகிறது. டயல்கள் மிகச் சின்னதாக இருப்பதோடு, சென்டர் கன்ஸோலில் ஏகப்பட்ட பட்டன்கள் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. காரின் பாதுகாப்புக்காக, இதன் விலை உயர்ந்த வேரியன்ட்டில், ஆச்சரியப்படும் வகையில், 6 காற்றுப் பைகள் இருக்கின்றன. போட்டியாளர்களுக்குச் சமமான இன்ஜின் பவரைக் கொண்டிருந்தாலும், வேகப் போட்டியில் கடைசி இடத்தில் இருக்கிறது. அதிர்ச்சி என்னவென்றால், ஆஸ்பயரின் கையாளுமை சுமார் ரகம்தான் என்றாலும் ஓட்டுதல் தரத்தைப் பொறுத்தவரை, இதன் சஸ்பென்ஷன் மோசமான சாலைகளிலும் பெரிய அதிர்வுகள் எதையும் கேபினுக்குக் கடத்தாமல் சமாளிக்கிறது.

மைக்ரா, பார்க்க சின்ன கார்போல இருக்கிறது. ஜாஸுடன் ஒப்பிடும்போது, டிஸைனும் அவ்வளவு ஸ்போர்ட்டியாக இல்லை.  மேலும், ஜாஸ் அளவுக்கு மைக்ராவில் இடம் இருக்காது என்பது, காரைப் பார்க்கும்போதே புரியும். ஆனால், இடநெருக்கடி இல்லாத அளவுக்குப் போதுமான இடவசதியுடன் இருக்கிறது மைக்ரா. இருக்கைகள் சொகுசாக இருப்பதால், இரண்டு பேர் மட்டுமே வசதியாக உட்கார்ந்து நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும்.

டிக்கியில் பொருட்கள் வைக்க இடம் குறைவாகவே இருக்கிறது. இதன் டேஷ்போர்டு பழைய டிஸைனில் இருப்பதுடன், ஜாஸ் அளவுக்கு டேஷ்போர்டு மற்றும் பாகங்களின் தரம் இல்லை. 3 சிலிண்டர் இன்ஜின் என்பதால், சத்தம் அதிகம். ஜாஸைவிட சக்தி குறைவு என்றாலும் குறைவான எடை காரணமாக, ஆரம்ப வேகத்தில் ஜாஸைவிட சிறப்பாக இருக்கிறது மைக்ரா. சாலையில் உள்ள மேடு பள்ளங்களை ஓரளவுக்குச் சமாளிப்பதுடன், நெடுஞ்சாலையில் வேகமாகப் பறக்கும்போது ஸ்டெபிலிட்டியில் சிறப்பாக இருக்கிறது மைக்ரா.

கார் உங்கள் சாய்ஸ்!

புதிய ஜாஸ், எதிர்காலத்துக்கு ஏற்ற டிஸைனுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. காரின் கதவைத் திறந்த உடனே, ‘இவ்வளவு இடமா!’ என வியக்க வைக்கும் அளவுக்கு, ஒரு மிட் சைஸ் செடானின் இடவசதியுடன் ஈர்க்கிறது ஜாஸ். மூன்று பேர் கால்களை நீட்டி மடக்கி உட்கார இடம் இருப்பதோடு, நீண்ட தூரம் உட்கார்ந்து பயணிக்கும் வகையில், இருக்கைகள் சொகுசாக இருக்கின்றன. ஹேட்ச்பேக் கார்களிலேயே, டிக்கியில் 354 லிட்டர் கொள்ளளவு இடம் இதில் மட்டும்தான் இருக்கிறது.

காரின் டேஷ்போர்டு, விலை அதிகமான கார் என்கிற உணர்வைத் தருகிறது. இதன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (CVT) ஆரம்பத்தில் மந்தம். ஆனால், ஆக்ஸிலரேட்டரை மிதிக்க ஆரம்பித்தால், சீற ஆரம்பிக்கிறது. இந்த நேரத்தில் இன்ஜின் சத்தம் காருக்குள் அதிகமாகக் கேட்கிறது. பெரிய காராக இருக்கும் ஜாஸை, திருப்பங்களில் வேகமாக வளைத்துத் திருப்பி ஓட்டலாம். சஸ்பென்ஷன் செட்டிங் ஸ்டிஃப்பாக இருந்தாலும், மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது அலுங்கல் குலுங்கல் அதிகமாக இல்லை.

டாடா போல்ட், விஸ்டாவை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும், பாடி பேனல்கள் புதியவை என்பதால்,  கார் பார்ப்பதற்கு ப்ரெஷ்ஷாக இருக்கிறது. போல்ட்டின் உயரம் அதிகம் என்பதால், காருக்குள் சென்று வருவது எளிது. இருக்கைகளும் சொகுசாக உள்ளன. ஆனால், மிகக் குறைவான 210 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டுள்ளது.

டச் ஸ்கிரீன் கொண்ட சென்டர் கன்ஸோல் கவனத்தை ஈர்க்கிறது. மேலும் டேஷ்போர்டு பிளாஸ்டிக்கின் தரம், ஃபிகோவைவிட சிறப்பாக இருந்தாலும், பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட விதம் நன்றாக இல்லை. போல்ட்டில் உள்ள ஃபியட்டின் 1.3 லிட்டர் டீசல் இன்ஜினிலிருந்து பவர் சீராக வெளிப்படுவதால், நெடுஞ்சாலையிலும் ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது. பலதரப்பட்ட சாலைகளில் சத்தமின்றி ஸ்மூத்தாகப் பயணிக்கும் வகையில் இருக்கிறது காரின் சஸ்பென்ஷன். போல்ட்டின் ஸ்டீயரிங், ஆச்சரியம் அளிக்கும் வகையில் குறைவான வேகங்களில் எடை குறைவாகவும், அதிக வேகங்களில் துல்லியமாகவும் இருக்கிறது. இதனால், வளைவுகளில் நம்பிக்கையுடன் காரைச் செலுத்த முடிகிறது.

கார் உங்கள் சாய்ஸ்!

ஃபோர்டு ஃபிகோவின் தோற்றம் நமக்கு ஆஸ்பயர் மூலம் பழக்கப்பட்டு இருந்தாலும், கார் பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக இருக்கிறது. காரின் கட்டுமானத் தரம் சூப்பர். அதிக வீல்பேஸ் காரணமாக, இடவசதி சிறப்பாக இருக்கிறது. இருக்கைகள் மென்மையாக உள்ளன. ஆனால், ஃபிகோவின் டேஷ்போர்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்கின் தரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. மேலும், ஸ்டீயரிங் வீல், சென்டர் கன்ஸோல், SYNC சிஸ்டம் என அனைத்துமே எக்கோஸ்போர்ட்டில் இருந்து பெறப்பட்டிருக்கின்றன. இதில் 257 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கிறது.

கூடுதலாக பாட்டில் ஹோல்டர், கப் ஹோல்டர், க்ளோவ் பாக்ஸ் போன்றவை தேவையான அளவுக்கு இருக்கின்றன. காரின் 1,041 கிலோ எனும் குறைந்த எடையுடன், பிரீமியம் ஹேட்ச்பேக்குக்கு இணையான பவர் சேர்வதால், பெர்ஃபாமென்ஸ் அசத்தலாக இருக்கிறது. ஃபிகோவின் சஸ்பென்ஷன் இறுக்கமாக இருப்பதுபோலத் தோன்றினாலும், ஓட்டுதல் தரம் குறை சொல்ல முடியாதபடி இருக்கிறது. ஆனால், ஸ்டீயரிங் துல்லியமாக இல்லாதது மைனஸ்.

எலீட் i20 காரை, மிக ஸ்டைலான காராக வடிவமைத்துள்ளது ஹூண்டாய். எல்லா ஹூண்டாய் கார்களின் பலம்தான் எலீட் i20 காரின் பலமும். அதாவது, சிறப்பம்சங்கள் மற்றும் டேஷ்போர்டு தரம். காரின் இருக்கைகள் சொகுசாகவும், டேஷ்போர்டு சரியான உயரத்திலும் இருக்கின்றன. கூடுதலாக, காரின் பின் சீட்டில் உட்காருபவர்களைக் குளிர்விக்க, ஏ.சி வென்ட் உண்டு.

ஆனால், இடவசதி ஜாஸ் அளவுக்கு இல்லாதது நெருடல். ஹூண்டாயில் என்ன டீசல் இன்ஜின் இருக்கிறது என்பது எல்லோருக்குமே மனப்பாடம் ஆகியிருக்கும். ஜாஸில் இருப்பதுபோல இல்லாமல், சத்தம் இல்லாத இன்ஜினாக இருக்கிறது எலீட் i20யின் டீசல் இன்ஜின். டர்போ லேக் காரணமாக, காரை ஓட்டுவது நகரத்தில் கடினமாகவும், நெடுஞ்சாலையில் எளிதாகவும் இருக்கிறது. நகருக்குள் குறைந்த வேகத்தில் ஓட்டும்போது, i20 காரின் ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை சிறப்பாக இருக்கிறது. நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் பயணிக்கும்போது, நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது. ஆனால், காரின் பாதுகாப்புக்கு ஏபிஎஸ் பிரேக்குகளும், 2 காற்றுப் பைகளும் உள்ளன.

கார் உங்கள் சாய்ஸ்!

ஒரு எம்பிவி கார் போன்ற தோற்றத்துடன் இருந்தாலும், ஸ்போர்ட்டியாக இருக்கிறது ஜாஸ். சிட்டியின் டேஷ்போர்டை  காப்பி-பேஸ்ட் செய்து கொண்டு வந்திருக்கிறது ஹோண்டா. கால்களை நீட்டி மடக்கி உட்கார்ந்து பயணிக்க, பின்பக்கம் தாராளமான இடவசதி. எல்லா இருக்கைகளையும் மடக்கிவிட்டால், போதும் போதும் எனச் சொல்லும் அளவுக்கு பூட் ஸ்பேஸ் இருக்கிறது.

ஹோண்டா அமேஸில் 1.5 லிட்டர் இன்ஜினுடன் டீசல் கணக்கைத் துவக்கிய ஹோண்டா, அதே இன்ஜினை சிட்டி, மொபிலியோ மற்றும் ஜாஸ் கார்களிலும் பொருத்தியிருக்கிறது. இந்த டீசல் இன்ஜின், சத்தம் போடும் இன்ஜினாக இருப்பதுதான் மிகப் பெரிய பலவீனம். ஆனால், மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, அலுங்கல் குலுங்கல் இல்லாத காராகவும், திருப்பங்களில் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு ஏற்ற கையாளுமையுடன் ஜொலிக்கிறது ஜாஸ். இதன் உயரமான டேஷ்போர்டு மற்றும் தடிமனான A-பில்லர் வளைவுகளில் பார்வையை மறைக்கிறது. எலீட் i20 போலவே, காரின் பாதுகாப்புக்கு ஏபிஎஸ் பிரேக்குகளும், 2 காற்றுப் பைகளும் உள்ளன.

காரின் பின் பக்கம் கொஞ்சம் அஷ்டகோணலாக இருப்பதால், அதே முன்பக்கத்தைக் கொண்டிருந்தாலும், போல்ட்டில் இருந்த கவர்ச்சி - ஜெஸ்ட்டில் மிஸ்ஸிங். ஓட்டுநருக்குத் தேவையான தகவல்களைத் தரும் டயல்கள், டச் ஸ்கிரீன் சிஸ்டம் என சிறப்பான டேஷ்போர்டு கொண்டு, ஆஸ்பயரை உள்பக்கத்தில் எளிதாக வீழ்த்துகிறது ஜெஸ்ட்.

இடவசதியைப் பொறுத்தவரை, பின் இருக்கைகளில் மூன்று பேர் வசதியாக அமரும் வகையில், போட்டியாளர்களைவிட ஒருபடி மேலே இருக்கிறது. சற்று அதிகமான எடை என்பதால், பெர்ஃபாமென்ஸ் மிரட்டலாக இல்லை. கிளட்ச் லைட்டாக இருப்பதால், நகருக்குள் கியர்களை மாற்றி ஓட்டுவது ஈஸியாகவே இருக்கிறது. பெர்ஃபாமென்ஸில்  பின்தங்கினாலும், சத்தம் போடாத மற்றும் காருக்குள் இருப்பவர்களுக்கு எந்த அசௌகர்யமும் ஏற்படுத்தாத சஸ்பென்ஷன் காரணமாக, ஓட்டுதல் தரம் மற்றும் நிலைத்தன்மையில் முதல் இடத்தில் இருக்கிறது ஜெஸ்ட். குறை என்றால், தண்ணீர் பாட்டில் மற்றும் கப்புகள் வைக்க போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் காரில் இல்லை.

கார் உங்கள் சாய்ஸ்!

ஆஸ்பயரின் அசத்தலான முன்பக்கத்துக்கு ஏற்ப, காரின் பக்கவாட்டு மற்றும் பின்பக்கத் தோற்றம் இல்லாதது மைனஸ்தான். மேலும் டேஷ்போர்டு டிஸைன் நிறைவாக இருந்தாலும், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்கின் தரமும், பட்டன்களால் சூழப்பட்ட சென்டர் கன்ஸோலும், அந்த எண்ணத்தைக் கெடுப்பது போல இருக்கின்றன. ஆனால், காரில் 4 பேர் மட்டுமே வசதியாக உட்கார முடிந்தாலும், இருக்கைகளின் சொகுசுத்தன்மை மற்றும் ஸ்டோரேஜ் ஸ்பேஸ்களைப் பொறுத்தவரை ஆஸ்பயர்தான் லீடிங்.

122 கிலோ குறைவான எடை மற்றும் 10bhp கூடுதல் பவர் காரணமாக, நெடுஞ்சாலையில் ஜெஸ்ட்டைவிட ஆஸ்பயர் வேகமான காராக இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிகிறது. கிளட்ச் ஹெவியாக இருப்பதால், கால்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தலாம். இதன் சஸ்பென்ஷன், மேடு பள்ளங்களை நன்கு சமாளிக்கிறது என்றாலும், ஜெஸ்ட் அளவுக்கு இல்லை. எடை குறைவு என்பதால், மற்ற ஃபோர்டு கார்களுக்கு இணையான கையாளுமை மற்றும் நிலைத்தன்மையை ஆஸ்பயரில் எதிர்பார்க்க முடியாது. 

ரூஃப் ரெயில்ஸ், கரடுமுரடான பம்பர்கள், பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ள ஸ்பேர் வீல் என பார்க்க மினி எஸ்யுவி போலவே இருக்கிறது அவென்ச்சுரா. டேஷ்போர்டு டிஸைன் அழகாக இருந்தாலும், தரம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இல்லை. இடவசதி மற்றும் பொருட்களை வைப்பதற்கான இடம் குறைவு என்றாலும், இருக்கைகளின் குஷனிங் அருமையாக இருக்கிறது. 280 லிட்டர் பூட் ஸ்பேஸ், போதுமானதாக இருக்கிறது.  ஆனால், பின்பக்கக் கதவு திறக்கும் விதம்தான் எளிதாக இல்லை

சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, பாஸ் மார்க் வாங்குகிறது அவென்ச்சுரா. ஆரம்ப வேகத்தைத் தாண்டிய பிறகு, பவர் டெலிவரி ஸ்ட்ராங்காக இருக்கிறது. ஸ்டீயரிங் கணிசமான எடையுடன் இருக்கிறது. திருப்பங்களில் செல்லும்போது, பாடி ரோல் ஆனாலும், இறுக்கமான சஸ்பென்ஷன் காரணமாக, மோசமான சாலைகளில் கார் குலுங்காமல் ஸ்டேபிளாகச் செல்கிறது. ஆக்டிவ் போலவே விலை உயர்ந்த வேரியன்ட்டில்தான் பாதுகாப்பு அம்சங்களான 2 காற்றுப் பைகள், ஏபிஎஸ் ஆகியவை கிடைக்கின்றன.

கார் உங்கள் சாய்ஸ்!

அலுமினியம் ரூஃப் ரெயில்ஸ், மிரட்டலான பம்பர்கள், பாடி கிளாடிங், LED ரன்னிங் லைட்ஸ், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், கார்னரிங் லைட்ஸ் என சாதாரண i20யுடன் ஒப்பிடும்போது, அதிக வசதிகளுடன் இருக்கிறது ஆக்டிவ். ஸ்மார்ட்டான கறுப்பு மற்றும் நீல வண்ண டேஷ்போர்டின் தரம் சூப்பர். சொகுசான இருக்கைகள் மற்றும் அதிக இடவசதி, ஸ்டோரேஜ் ஸ்பேஸ் என ஈர்க்கிறது உள்பக்கம்.

வழக்கம்போல, போட்டியாளர்களைவிட அதிக சிறப்பம்சங்களை காரில் சேர்த்திருக்கிறது ஹூண்டாய். இந்த காரில் உள்ள ஸ்மூத்தான டீசல் இன்ஜினின் நல்ல மிட் ரேஞ்ச், பவர் டெலிவரி காரணமாக, நெடுஞ்சாலையில் இன்ஜினை விரட்ட வேண்டிய அவசியம் இல்லை. மற்ற ஹூண்டாய் கார்களைப் போலவே, ஸ்டீயரிங் லைட்டாக இருப்பதுடன், மோசமான சாலைகளில் கொஞ்சம் குலுங்கியபடி செல்கிறது ஆக்டிவ். சாதாரண i20 காரைவிட அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பதால், திருப்பங்களில் பாடி ரோல் ஆவதை உணர முடிகிறது. i20 ஆக்டிவ் காரின் டிக்கி கொள்ளளவு 285 லிட்டர். தவிர, விலை உயர்ந்த வேரியன்ட்டில்தான், பாதுகாப்பு அம்சங்களான 2 காற்றுப் பைகள், ஏபிஎஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

ஒரு மிட் சைஸ் காருக்கு உண்டான டிஸைனைத் தாண்டி, ஒருமுறை பார்த்ததும் ‘அட’ எனத் திரும்பப் பார்க்க வைக்காதது சியாஸின் பலவீனம். தவிர, இந்த காருடைய பின்பக்க விளக்குகளின் வடிவமைப்பு, சிட்டியின் அப்பட்டமான காப்பியாக இருக்கிறது. ஆனால், இதுவரை எந்த மாருதி காரிலும் பார்த்திராத கேபினை, இதில் பார்க்க முடிகிறது. அதிக இடவசதியுடன் பளிச்சென மின்னும் இரட்டை வண்ண டேஷ்போர்டுடன், விலை உயர்ந்த காரின் கேபினுக்குள் நுழைவது போன்ற ஃபீல் கொடுக்கிறது சியாஸ்.

தண்ணீர் பாட்டில், பேப்பர்கள் வைத்துக்கொள்ள காருக்குள் அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பவர் அதிகம் இல்லையென்றாலும், காரின் எடை குறைவு என்பதால், நகரம் மற்றும் நெடுஞ்சாலையில் இதன் பெர்ஃபாமென்ஸ் குறை சொல்ல முடியாதபடி இருக்கிறது. மோசமான மேடு பள்ளங்களில் ஓட்டும்போது, காருக்குள் அதிர்வுகள் தெரியாமல் பார்த்துக்கொள்வதால், ஓட்டுதல் தரத்தில் சிறந்த காராக இருக்கிறது சியாஸ். காரின் பாதுகாப்புக்காக அனைத்து வேரியன்ட்டிலும், ஏபிஎஸ் மற்றும் 2 காற்றுப் பைகள் இருப்பது நல்ல விஷயம்.

கார் உங்கள் சாய்ஸ்!

‘ஹேய்... அது ஹோண்டா சிட்டி’ என ஒருமுறை பார்த்தவர்களையும் நினைவில் வைத்துக்கொள்ளும்படியான, கிளாஸான டிஸைனுடன் அசத்துகிறது சிட்டி. பானெட் மீது படர்ந்திருக்கும் க்ரோம் க்ரில், கொஞ்சம் ஓவர் அலங்காரமோ என்று எண்ணவைக்கிறது. இதன் உள்பக்கம், ப்ளஸ் - மைனஸ் இரண்டும் கலந்தது. அதாவது, அதிக இடவசதி மற்றும் பொருட்களை வைக்க முடிந்தாலும், டேஷ்போர்டு பிளாஸ்டிக்ஸ், 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமான காரில் இருக்கும் தரத்துடன் இல்லை.

இருக்கைகளின் குஷனிங் மிகவும் சிறப்பாக இருப்பதால், சொகுசாக உட்கார்ந்து பயணிக்க முடிகிறது. பவர் டெலிவரி சீராக இருப்பதால், அதிரடியான வேகம் செல்லாவிட்டாலும், பெர்ஃபாமென்ஸ் நிறைவாகவே இருக்கிறது. ஆனால், ஹோண்டாவின் டீசல் இன்ஜின், ஓவராகச் சத்தம் போடுகிறது. மேலும், சிட்டியைப் பொறுத்தவரை, ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை ஓகே ரகம்தான். சியாஸ் போலவே காரின் பாதுகாப்புக்காக அனைத்து வேரியன்ட்டிலும் ஏபிஎஸ், 2 காற்றுப் பைகள் மற்றும் 510 லிட்டர் டிக்கி கொள்ளளவு உள்ளன.

எந்த டிஸைன் சொதப்பலும் இல்லாமல், சிம்பிளான டிஸைனைக் கொண்டுள்ளது வென்ட்டோ. அதேபோல, ஓவர் அலங்காரம் எதுவும் இல்லாமல் இருக்கிறது இதன் உள்பக்கம். பொருட்கள் வைக்க அதிக இடம் இருப்பதுடன், சொகுசான இருக்கைகள் மூலம் இடவசதியும் சிறப்பாக இருக்கிறது. டிக்கியும் போதுமானதாக இருக்கிறது.

ஆனால், சென்டர் கன்ஸோல் டனல் பின்பக்கம் வரை நீள்வதால், பின்பக்க இடவசதி குறைந்துவிடுகிறது. ஐடிலிங்கில் இருக்கும்போதே டீசல் இன்ஜின் என்பதைக் காட்டிக் கொடுக்கும் தேவையற்ற சத்தம், வேகம் செல்லச் செல்ல கூடிக்கொண்டே போகிறது. ஆனால், ஓட்டுநர்களை ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு இருக்கிறது இதன் பெர்ஃபாமென்ஸ். கியர்பாக்ஸ் நன்றாக இருந்தாலும், கிளட்ச் எடை அதிகம் என்பதால், டிராஃபிக் நெருக்கடிகளில் காரை ஓட்டுவது  கடுப்பாக இருக்கிறது. ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் பெரிதாகக் குறை சொல்ல முடியாது. காரின் கட்டுமானத் தரம் சூப்பர். மேலும், பாதுகாப்புக்காக அனைத்து வேரியன்ட்டிலும் 2 காற்றுப் பைகளை வழங்குகிறது ஃபோக்ஸ்வாகன்.

கார் உங்கள் சாய்ஸ்!

டிஸைன் விஷயத்தில், ஹூண்டாய்தான் வாடிக்கையாளர்களின் மனதைச் சரியாகக் கணித்து வைத்திருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு அறிமுகமான மேம்பட்ட வெர்னாவில், ஃப்ளூயிடிக் வெர்னாவின் பளபளப்பு இல்லை. தரத்தில் சிறந்த இரட்டை வண்ண டேஷ்போர்டு மற்றும் சிறப்பம்சங்கள் அதிகம் கொண்ட கார், வெர்னாதான். இந்த செக்மென்ட்டில் வெர்னாவின் உள்பக்கம்தான் பெஸ்ட். இதில் பின் இருக்கைகளில் உட்கார்ந்துகொண்டே முன் இருக்கைகளை முன்பக்கமாகத் தள்ளும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வசதி முதலில் வென்ட்டோவில்தான் கொடுக்கப்பட்டது.

பவர்ஃபுல் கார் என்பதால், வேகப் போட்டியில் எளிதாக ஜெயிக்கிறது வெர்னா. கியர்கள் உடனுக்குடன் மாறுவதுடன், கிளட்ச்சும் ஹெவியாக இல்லாததால், காரின் ஓட்டுதல் அனுபவம் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த காரின் மற்றொரு முக்கிய பலம், அதிக சத்தம் போடாத டீசல் இன்ஜின். மற்ற ஹூண்டாய் கார்களைப் போலவே, சஸ்பென்ஷனில் பல விஷயங்கள் மாறியிருந்தாலும், இன்னமும் ஸ்டெபிலிட்டி, கையாளுமை, ஓட்டுதல் தரத்தில் முன்னேற்றம் தேவை. பிரேக்கிங் நன்றாக இருப்பது ஆறுதல்.

உயரமான பானெட், நீளமான ஹெட்லைட்ஸ், பெரிய எஸ்யுவிகளில் இருப்பதுபோன்ற க்ரில், அதன் அடிப்பகுதியில் இடம் பிடித்திருக்கும் பிளாஸ்டிக் கிளாடிங் என பக்காவான மினி எஸ்யுவியாக மிளிர்கிறது டஸ்ட்டர். 4-வீல் டிரைவ் ஆப்ஷன் இதனை உறுதிப்படுத்துகிறது. ஆனால், பில்டு குவாலிட்டி சுமார் ரகம்தான். டேஷ்போர்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பு வந்த டிஸைன் போன்று இருப்பதுடன், ஃபிட் அண்டு ஃபினிஷும் நன்றாக இல்லை. சிறப்பம்சங்களும் குறைவு.

மேலும், பொருட்கள் வைப்பதற்கான இடங்கள் காரில் மிகக் குறைவாகவே உள்ளன. ஒரே ஆறுதல் என்னவென்றால், 5 பேர் அமரக்கூடிய இடவசதி இருப்பதுதான். டர்போ லேக் காரணமாக டஸ்ட்டரின் பெர்ஃபாமென்ஸ் மிரட்டலாக இல்லாவிட்டாலும், கியர்களுக்கு இடையேயான வேகம் அசத்தல் ரகம். சிறப்பான சஸ்பென்ஷன் காரணமாக, ஓட்டுதல் தரம் மற்றும் ஸ்டெபிலிட்டி சிறப்பாக இருக்கிறது. 475 லிட்டர் டிக்கி கொள்ளளவு மற்றும் காரின் பாதுகாப்புக்காக அனைத்து வேரியன்ட்டிலும் 2 காற்றுப் பைகள், ஏபிஎஸ் ஆகியவை இருப்பது, உண்மையிலேயே நல்ல விஷயம்.

கார் உங்கள் சாய்ஸ்!

ஹூண்டாயின் பெரிய எஸ்யுவியான சான்டாஃபீ காரை அடிப்படையாகக்கொண்டு க்ரெட்டா வடிவமைக்கப்பட்டிருப்பதால், ஒரு எஸ்யுவி காருக்கான குணாதிசயங்களோடு நிறைவாக இருக்கிறது. சிறப்பம்சங்கள் நிறைந்த தரமான இரட்டை வண்ண டேஷ்போர்டு காருக்கு ரிச்னெஸ் கூட்டுகிறது. எல்லா கன்ட்ரோல்களுமே கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கின்றன. இடவசதி மிகச் சிறப்பாக இருந்தாலும், காரில் 4 பேர் மட்டுமே சொகுசாகப் பயணிக்க முடியும்.

இதன் அதிர்வுகளற்ற டீசல் இன்ஜின் ஐடிலிங்கில் சத்தமின்றி இயங்குவதுடன், போட்டியாளர்களைவிட அதிக சக்தி காரணமாக, நகரம், நெடுஞ்சாலையில் காரை ஓட்டுவதற்கு அதிகம் மெனக்கெடத் தேவை இல்லை. மற்ற ஹூண்டாய் கார்களுடன் ஒப்பிடும்போது, ஓட்டுதல் அனுபவம், ஸ்டெபிலிட்டி, கையாளுமையில் முன்னேற்றம் தெரிகிறது. 405 லிட்டர் பூட் ஸ்பேஸ், போதுமானதாக இருக்கிறது. போட்டியாளர்களை மிஞ்சும் வகையில், க்ரெட்டாவின் பாதுகாப்புக்காக விலை உயர்ந்த வேரியன்ட்டுகளில் 6 காற்றுப் பைகள் உள்ளன.

அமேஸ் தயாரிக்கப்படும் அதே  பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் எம்பிவி கார்தான் மொபிலியோ. அதனால், காரின் முன்பக்கம் கிட்டத்தட்ட அமேஸ் போலவே இருக்கிறது. மற்ற எம்பிவிகளுடன் ஒப்பிடும்போது, ஸ்டோரேஜ் ஸ்பேஸ் அதிகமாக இருக்கிறது. ஆனால்,  விலை குறைவான அமேஸில் இருக்கும் அதே டேஷ்போர்டு, இதிலும்  இடம்பிடித்திருப்பது உறுத்தல். நடுவரிசை இருக்கைகளின் இடவசதி நன்றாக இருந்தாலும், மூன்றாவது வரிசை சிறுவர்களுக்குப் பொருத்தமாக இருக்கிறது. ஆனால், மூன்று வரிசையில் ஆட்கள் உட்கார்ந்த பிறகும், டிக்கியில் பெரிய சூட்கேஸ்கள் வைக்கும் அளவுக்கு இடம் இருக்கிறது.

ஆரம்பம் முதலே சீரான பவர் டெலிவரியைக் கொண்டிருக்கும் டீசல் இன்ஜின், அதிகமாகச் சத்தம் போடுவதுதான் பிரச்னை. பள்ளங்களை காருக்குள் தெரியாமல் சமாளிப்பதில் மட்டும் அல்ல, திருப்பங்களில் வேகமாக ஓட்டுவதற்கு ஏற்ற காராக இருப்பதால், நகரம், நெடுஞ்சாலை என எல்லாவிதமான சாலைகளிலும் ஸ்டேபிளாகப் பயணிப்பதற்குச் சிறந்த காராக இருக்கிறது மொபிலியோ.

கார் உங்கள் சாய்ஸ்!

லாஜி பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன், காருக்குள்ளே சென்றால் டஸ்ட்டரின் அதே டேஷ்போர்டு நம்மை வரவேற்கிறது. நடுவரிசையில் மூன்று பேர் உட்காரும் அளவுக்கு இடவசதி தாராளம். மொபிலியோவுடன் ஒப்பிடும்போது, போதுமான இடவசதியை அளிக்கும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்குள் நுழைவது ஈஸி. தவிர, பொருட்கள் வைப்பதற்கான இடமும் அதிகம்.

டஸ்ட்டரில் உள்ள அதே அதிர்வுகள் இல்லாத, மொபிலியோ அளவு அதிகம் சத்தம் போடாத இன்ஜினில், டர்போ லேக் உண்டு. எந்த எம்பிவியிலும் இல்லாத சிறப்பம்சமான 6 ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொண்டிருக்கிறது லாஜி. அதனால், நெடுஞ்சாலையில் ஓட்டுவதற்குப் பிடித்தமானதாகவும், ஓட்டுதல் தரத்தில் சிறந்தும் விளங்குகிறது லாஜி. நீளமான வீல்பேஸ், காருக்கு அதிக ஸ்டெபிலிட்டியைத் தருவதோடு, திருப்பங்களில் காரை வேகமாகச் செலுத்துவதற்கு நம்பிக்கையைத் தருகிறது. நீளமான, பெரிய காரான லாஜி, கையாளுமையில் அசத்துவது ஆச்சரியமான உண்மை.

ஸ்விஃப்ட் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் எம்பிவி கார், எர்டிகா. ஆனால், ஸ்விஃப்ட்டில் இருந்து முழுமையாக எர்டிகாவை மாற்றிக் காட்டியிருக்கிறது மாருதி. ஸ்விஃப்ட்டின் டேஷ்போர்டுதான் இதிலும் என்றாலும், இரட்டை வண்ணங்கள் காரணமாக, உள்பக்கம் பளிச்சென இருக்கிறது. போட்டியாளர்களைவிட அளவில் சிறிது என்பதால், ஐந்து பெரியவர்கள், இரண்டு சிறுவர்கள் அமர்வதற்குத்தான் இடவசதி இருக்கிறது. மூன்று வரிசையிலும் ஆட்கள் உட்கார்ந்துவிட்டால், டிக்கியில் பொருட்கள் வைக்க இடம் இல்லை.

சியாஸில் இருக்கும் அதே 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின்தான் எர்டிகாவிலும். டர்போ லேக் காரணமாக, ஆரம்ப வேகத்தில் பவர் இல்லாமல் தத்தளிக்கிறது. மேலும், நெடுஞ்சாலையில் முழுச் சுமையோடு வேகமாகப் பயணிப்பதற்கான பவர் காரில் இல்லை. கையாளுமையைப் பொறுத்தவரை கார் போல ஓட்டுவதற்கு சுலபமாக இருப்பதோடு, ஸ்டெபிலிட்டியிலும் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், மேடு பள்ளங்களில் அலுங்கிக் குலுங்குகிறது எர்டிகா.

கார் உங்கள் சாய்ஸ்!

இனோவா டாக்ஸியில் அதிகம் பயணித்தவர்களுக்கு, அதன் விலை உயர்ந்த மாடலைப் பார்க்கும்போது கட்டாயம் வியப்பு ஏற்படும். ஏனெனில், 10 ஆண்டுகளைக் கடந்த டிஸைன் தனித்து நிற்கிறது. நடுவரிசையில் 3 பேர் மற்றும் மூன்றாவது வரிசையில் 2 பேர் வசதியாக உட்கார முடிகிறது. இருக்கைகளின் சொகுசுத்தன்மை அட்டகாசம். மூன்று வரிசையிலும் ஆட்கள் உட்கார்ந்த பிறகும், டிக்கி கொள்ளளவு மற்றும் பொருட்கள் வைப்பதற்கான இடம், போதுமானதாக இருக்கிறது.

 போட்டியாளர்களைவிட பெரிய இன்ஜினைக் கொண்டிருந்தாலும், சராசரியான பவர் காரணமாக, நெடுஞ்சாலைகளில் மிதமான வேகத்தில் பயணிக்கவே வாட்டமாக இருக்கிறது. அதிக வேகத்தில் செல்லும்போது, காரில் அதிர்வுகள் தென்படுகின்றன. சின்னச் சின்னப் பள்ளங்களை, இனோவாவின் சஸ்பென்ஷன் ஈஸியாகச் சமாளித்துவிடுகிறது. மேலும், நகருக்குள் காரைக் கையாள்வது எளிதாகவும், நெடுஞ்சாலையில் ஓட்டுவதற்கு ஸ்டேபிளாகவும் இருக்கிறது.

2015-ம் ஆண்டு துவக்கத்தில், மேம்படுத்தப்பட்ட ஜெட்டா காரை அறிமுகப்படுத்தியது ஃபோக்ஸ்வாகன். வெளிப்பக்கத்தில் செய்யப்பட்டுள்ள கணிசமான மாற்றங்கள் காரணமாக, ஜெட்டாவின் டிஸைன், விலை உயர்ந்த பஸாத் காரை நினைவூட்டுகிறது. கூடுதலாக மெருகேற்றப்பட்ட உள்பக்கத்தின் தரம் சூப்பர். இடவசதி அதிகமாக இருந்தாலும், அது சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. அதற்குச் சிறந்த உதாரணம், ஜெட்டாவின் 510 லிட்டர் பூட் ஸ்பேஸ்.

ஆரம்ப வேகம் சிறப்பாக இல்லாவிட்டாலும், மிட் ரேஞ்ச் எட்டியவுடன் பவர் டெலிவரி அட்டகாசமாக இருக்கிறது. ஜெட்டாவின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பேடில் ஷிஃப்டர்கள் அளிக்கப்படுவது, கார் ஆர்வலர்களை மகிழ்விக்கும். பிரீமியம் கார்களுக்கான பிரத்யேகமான சஸ்பென்ஷன் காரணமாக, ஓட்டுதல் தரம் அருமை என்பதுடன், சஸ்பென்ஷன் சத்தமின்றி இயங்குகிறது. மேலும், அதிக வேகங்களில் கார் ஸ்டேபிளாகச் செல்கிறது. எடை அதிகமான ஸ்டீயரிங் என்பதால்,  திருப்பங்களில் காரின் செயல்பாடு, ஆக்டேவியா அளவுக்கு இல்லை.

கார் உங்கள் சாய்ஸ்!

ஸ்கோடா ஆக்டேவியாவின் டிஸைன் ரொம்பவும் அலட்டாத, அதேசமயம் மனதுக்குப் பிடிக்கிற டிஸைன். மேலும், இதன் டேஷ்போர்டு பார்க்க ஸ்டைலாக இருந்தாலும், தரத்தில் ஜெட்டா அளவுக்கு இல்லை. ஜெட்டாவைவிட நீளமான வீல்பேஸ் என்பதால், இடவசதி அதிகமாக இருக்கிறது. ஸ்பெஷலான டிக்கி கதவு வடிவமைப்பு காரணமாக, 590 லிட்டர் பூட் ஸ்பேஸைப்  பயன்படுத்த சுலபமாக இருக்கிறது.

ஜெட்டாவில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்றாலும், ஆரம்ப வேகங்களில், ஆக்டேவியாவின் இன்ஜின்தான் உயிரோட்டமாக இயங்குகிறது. 65 கிலோ குறைவான எடை, நல்ல மிட் ரேஞ்ச் பவருடன் இணைவதால், வேகப் போட்டியில் ஆக்டேவியாதான் நம்பர் ஒன். சாதாரணமான கார்களில் இருக்கும் சஸ்பென்ஷன் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், குறைந்த வேகங்களில் ஓட்டுதல் தரம் கொஞ்சம் சுமார்தான். ஆனால், வேகம் எடுத்தவுடன் ஸ்மூத்தானதாக மாறிவிடுகிறது. எடை குறைவான ஸ்டீயரிங் இருப்பதால், திருப்பங்களில் காரைக் கையாள்வது நல்ல அனுபவம்.  அதிக வீல்பேஸ், காரின் நிலைத்தன்மையை அதிகரித்திருக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே, ஃபார்ச்சூனரை வீழ்த்தக்கூடிய பெரிய சைஸ் எஸ்யுவிக்கான டிஸைன் ஈர்க்கவைக்கிறது. மேலும், காரின் பின்பக்கத்தில் ஃபார்ச்சூனரின் தாக்கம் அதிகம். கறுப்பு மற்றும் பழுப்பு வண்ணம் கொண்ட காரின் உள்பக்கத் தரம், குறை சொல்ல முடியாதபடி உள்ளது. இருக்கைகள் சொகுசாக இருப்பதுடன், 5 பேர்  வசதியாக அமரும் வகையில் முன்பக்க, நடுவரிசைகளின் இடவசதி அசத்தல் ரகம். ஆனால், கடைசி வரிசை இருக்கைகளை எட்டுவது சிரமமாக இருக்கிறது. ஸ்டோரேஜ் ஸ்பேஸ் அதிகமாக இருந்தாலும், அனைத்து இருக்கைகளும் பயன்பாட்டில் இருக்கும்போது, பூட் ஸ்பேஸ் மிகக் குறைவாக இருக்கிறது.

இன்ஜின் பவர் - டார்க், ஃபார்ச்சூனரைவிட அதிகம் என்பதால், அதிக எடை ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அதிக வேகத்தில் இன்ஜின் சத்தம் காருக்குள் கேட்கிறது. மிதமான வேகங்களில், ஓட்டுதல் தரம் அருமை. ஆனால், அதிக வேகங்களில், காரின் பின்பக்கம் நிலையாக இல்லை. திருப்பங்கள் மற்றும் நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும்போது பாடி ரோல் அதிகமாக இருந்தாலும், கார் அலைபாயாமல் ஸ்டேபிளாகச் செல்கிறது.

கார் உங்கள் சாய்ஸ்!

மிரட்டலான டிஸைன், குறுகலான ஹெட்லைட்ஸ், அகலமான க்ரோம் க்ரில், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை ஃபார்ச்சூனருக்கு சீரியஸான லுக்கை அளிக்கின்றன. மேலும் ஆஃப் ரோடர் சமாச்சாரங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பதால், காரின் எடை, 2 வீல் டிரைவ் மாடலுடன் ஒப்பிடும்போது, கணிசமாக அதிகரித்துவிட்டது. கறுப்பு வண்ணத்தில் உள்பக்கம் ஸ்போர்ட்டியாக இருந்தாலும், 30 லட்சம் ரூபாயைத் தாண்டும் காருக்கான தரத்தில் இல்லை.

முன்பக்க, நடுவரிசைகளில் இடவசதி, சொகுசு ஆகியவை போதுமான அளவில் உள்ளன. மூன்றாவது வரிசை இருக்கையை அடைவது சிரமமாக இருக்கிறது. இதன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், காரை சீறவிடாமல் நிதானமாக இயங்கவைக்கிறது. ஆனால், நல்ல மிட் ரேஞ்ச் மற்றும் இன்ஜின் ட்யூனிங் காரணமாக, துணிந்து ஆஃப்ரோடிங் செல்லலாம். நல்ல எடைகொண்ட ஸ்டீயரிங், குறைவான பாடி ரோல் என ஓட்டுதல் தரம், கையாளுமை சிறப்பாக அமைந்துள்ளது. இவ்வுளவு பெரிய காருக்கு ஏற்றவாறு, பிரேக்குகள் ஷார்ப்பாக இல்லாதது மைனஸ்.

ஒரு முழுமையான எஸ்யுவியாக இருக்கிறது ஆடி Q3. அதற்குச் சிறந்த உதாரணம், இதில் உள்ள 4 வீல் டிரைவ் சிஸ்டம். இரட்டை வண்ண டேஷ்போர்டு டிஸைன் டல் அடிப்பதுடன், ஆடிக்கான தரத்தில் இல்லை. 4 பேர் உட்காரக்கூடிய இருக்கைகளின் சொகுசு, இடவசதி அசத்தலாக இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் ரியர் ஏ.சி வென்ட் இருக்கும் ஒரே கார் என்பதால், கேபின் சில்லென இருக்கிறது. ஸ்பேர் வீல் காருக்கு அடியில் இருப்பதால், 460 லிட்டர் டிக்கியில் அதிக பொருட்களை வைக்க முடிகிறது.

இந்த காரின் இன்ஜின் - கியர்பாக்ஸ் கூட்டணி, நிதானமாக ஓட்டினாலும் சரி; விரட்டி வேலை வாங்கினாலும் சரி; அதிரடி பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்துகிறது. டிரைவ் செலெக்ட் மூலம், நார்மல் மோடைத் தேர்ந்தெடுத்து ஓட்டினாலே, நல்ல ஓட்டுதல் தரத்தையும் கையாளுமையையும் வழங்குகிறது Q3. டைனமிக் மோடில் வைத்து ஓட்டினால், சஸ்பென்ஷன் இறுக்கமாகிவிடுகிறது. நெடுஞ்சாலையில், அதிக வேகங்களில் கார் ஸ்டேபிளாகச் செல்கிறது என்றாலும், இன்ஜின் சத்தத்தைவிட, சஸ்பெஷன் சத்தம் அதிகமாக காருக்குள் கேட்கிறது.

கார் உங்கள் சாய்ஸ்!

பிஎம்டபிள்யூ X1 காரின் தோற்றம், ஒரு எஸ்டேட் காரை வலுக்கட்டாயமாக எஸ்யுவியாக மாற்றியதுபோல இருக்கிறது. காரின் தரமான உள்பக்கத்தில், மற்ற பிஎம்டபிள்யூ கார்களில் இருக்கும் அதே இரட்டை வண்ண டேஷ்போர்டு டிஸைன் தொடர்கிறது. இந்த செக்மென்ட்டில் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி இருக்கும் ஒரே கார் X1தான். இருக்கைகள் தட்டையாக இருப்பதுடன், ட்ரான்ஸ்மிஷன் டனல் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால், பின் இருக்கைகளில் இடவசதி குறைவு. இதற்கு காரின் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம்தான் காரணம்.

X1 காரின் 420 லிட்டர் டிக்கியில், பொருட்களை ஏற்றி இறக்குவது சுலபம். மேலும், ரன் ஃப்ளாட் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், ஸ்பேர் வீல் கிடையாது. போட்டியாளர்களைவிட பவரில் முன்னே நிற்கிறது X1 . டீசல் இன்ஜின் செம ரெஸ்பான்ஸிவ் என்பதால், எந்த டிரைவ் மோடில் வைத்து ஆக்ஸிலரேட்டரை மிதித்தாலும் சீறுகிறது X1. இதன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் ஸ்மூத்தாக இயங்குகிறது. காரின் ஸ்டெபிலிட்டி சிறப்பாக இருந்தாலும், பின்பக்க சஸ்பென்ஷன் சாஃப்ட்டாக இருப்பதால், வேகம் பிடித்த பின்பு, காருக்குள் ஆட்டம் துவங்க ஆரம்பிக்கிறது.