Published:Updated:

இது வேற லெவல் அப்பாச்சி!

இது வேற லெவல் அப்பாச்சி!
பிரீமியம் ஸ்டோரி
இது வேற லெவல் அப்பாச்சி!

ஃபர்ஸ்ட் டிரைவ்: டிவிஎஸ் அப்பாச்சி RTR 200ராகுல் சிவகுரு, படங்கள்: பா.காளிமுத்து

இது வேற லெவல் அப்பாச்சி!

ஃபர்ஸ்ட் டிரைவ்: டிவிஎஸ் அப்பாச்சி RTR 200ராகுல் சிவகுரு, படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
இது வேற லெவல் அப்பாச்சி!
பிரீமியம் ஸ்டோரி
இது வேற லெவல் அப்பாச்சி!

டிவிஎஸ் நிறுவனத்துக்கு அப்பாச்சி மிக முக்கியமான பைக். அதனாலேயே டிஸைன், வேகம், கையாளுமை போன்ற விஷயங்களில், மற்ற டிவிஎஸ் பைக்குகளைவிட இது முன்னணியில் இருக்கிறது.

2006-ல் 150சிசி கம்யூட்டர் பைக்காக அறிமுகமான அப்பாச்சி, RTR என்ற அடைமொழியுடன் ஸ்போர்ட்டியான 160சிசி பைக்காக உருவெடுத்தது. ஏபிஎஸ் பிரேக்குகளுடன் 180சிசி பைக்காக வளர்ந்த அப்பாச்சியின் உச்சம்தான், புதிய 200சிசி அப்பாச்சி. 

‘போட்டி நிறுவனங்கள் புது வாகனங்களைக் களமிறக்கிய பின்புதான் டிவிஎஸ் தனது புதிய தயாரிப்புகளை வெளியிடும்’ என்ற விமர்சனத்துக்கு ஏற்றபடிதான் அவர்களது செயல்பாடும் இருக்கிறது. ஆனால், போட்டியாளர்களின் விற்பனை தடுமாறினாலும், நிலையான விற்பனை எண்ணிக்கையால் சாதித்துவிடுகிறது டிவிஎஸ். சரி, அப்பாச்சி RTR200 பைக் எப்படியிருக்கிறது? டிவிஎஸ்ஸின் ஓசூர் தொழிற்சாலையில் உள்ள டெஸ்ட் ட்ராக்கில் புதிய அப்பாச்சியை டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

இது வேற லெவல் அப்பாச்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிஸைன், சிறப்பம்சங்கள்

பைக்கைப் பார்த்ததுமே வியக்கும்படி இருக்கிறது டிஸைன். கச்சிதமான அளவுகளுடன் கட்டுமஸ்தான தோற்றத்தைக் கொண்டிருக்கும் புதிய அப்பாச்சியின் முன்பக்கம், டுகாட்டியின் நேக்கட் ஸ்ட்ரீட் பைக்குகளை நினைவுபடுத்துகிறது. ஹெட்லைட்டுக்கு மேலே டிஜிட்டல் மீட்டர் மிக அழகாகப் பொருத்தப்பட்டுள்ளது. டேக்கோ மீட்டர், ஸ்பீடோ மீட்டர், கியர் ஷிஃப்ட் லைட் மற்றும் கியர் இண்டிகேட்டர், 0-60 கி.மீ டைமர், லேப் டைமர், டாப் ஸ்பீடு மற்றும் வேகமான லேப் டைமிங் போன்ற பல தகவல்களை ரைடருக்குத் தெளிவாகத் தருகிறது. அப்பாச்சி RTR 200-ன் கட்டுமானத் தரம் சூப்பர் என்பதுடன், ஒவ்வொரு பாகத்தையும் பார்த்துப் பார்த்து ரசனையுடன் வடிவமைத்திருக்கிறது டிவிஎஸ். ஷார்ப்பான பெட்ரோல் டேங்க், பெட்ரோல் டேங்க்கின் மூடி, ரியர் டிஸ்க் பிரேக்கை சிறு கற்களிடம் இருந்து காப்பாற்ற கவர் எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம். புதிய க்ளிப்-ஆன் ஹேண்டில்பாரில், தொடுவதற்கு மென்மையான கைப்பிடிகள், தரமான அலாய் லீவர்கள், சரியாக இயங்கும் கன்ட்ரோல்கள், இன்ஜின் கில் ஸ்விட்ச், அகலமான ரியர் வியூ மிரர்கள் என அனைத்துமே பயன்படுத்த வசதியாக உள்ளன.

12 லிட்டர் கொள்ளளவுடன் கூடிய பெட்ரோல் டேங்க்குக்குக் கீழே, ஆயில் கூலர் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்பிளிட் சீட், ஸ்பிளிட் கிராப் ரெயில், இன்ஜின் கவுல் ஆகியவை இதிலும் தொடர்கின்றன. அலாய் வீல்கள், இன்ஜின், எக்ஸாஸ்ட், பின்பக்க மட்கார்டு ஆகியவை கறுப்பு நிறத்தில் உள்ளன. முன்பக்க ஃபோர்க் தங்க நிறத்தில் மின்னுகிறது. இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எக்ஸாஸ்ட் சற்று நீளமாக இருந்தாலும், அது வெளிப்படுத்தும் சத்தம் ரசிக்கும்படி இருக்கிறது. 5 மேட் ஃபினிஷ் (சிவப்பு, வெள்ளை, மஞ்சள், கறுப்பு, கிரே) மற்றும் வழக்கமான இரு (வெள்ளை, கறுப்பு) நிறங்களில் இந்த பைக் விற்பனையாக இருக்கிறது. பைக்கின் எடையைக் குறைப்பதற்காக (148 கிலோ) ஹேண்டில்பார், ஃபுட் ரெஸ்ட், லீவர்கள் போன்றவை அலாயில் உள்ளன. 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பதால், வேகத் தடைகளைக் கண்டு கவலைப்படத் தேவை இல்லை.

இது வேற லெவல் அப்பாச்சி!

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

புதிதாகத் தயாரிக்கப்பட்ட சிங்கிள் சிலிண்டர், SOHC, 197.75 சிசி இன்ஜின், அப்பாச்சி RTR 200-ல் இடம்பெற்றுள்ளது. டிவிஎஸ் வரலாற்றில் முதன்முறையாக ஆயில் கூலர், 4 வால்வுகள், பேலன்ஸர் ஷாஃப்ட் ஆகியவை பயன்பாட்டுக்கு வந்திருப்பது கவனிக்கத் தக்கது. மேலும், சூப்பர் பைக்குகளில் காணப்படும் RAM AIR கூலிங் முறையுடன் ஆயில் கூலர் இணைந்து இன்ஜின் வெப்பத்தை 10 டிகிரி வரை குறைக்க முடியும் என்கிறது டிவிஎஸ். கெய்ஹின் (KEIHIN) கார்புரேட்டர் மற்றும் பாஷ் எலெக்ட்ரானிக் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் ஆப்ஷனும் இருக்கின்றன. இவற்றின் உதவியுடன் 20.2bhp@8,500rpm (EFI பைக் - 20.7bhp) பவரையும், 1.85kgm@7,000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது புதிய அப்பாச்சி.

ஆரம்பம் மற்றும் மிட் ரேஞ்ச் வேகத்துக்காக ட்யூன் செய்யப்பட்டிருக்கும் இந்த இன்ஜினின் ஆக்ஸிலரேஷன், ஸ்ட்ராங்காக இருக்கிறது. வேகம் செல்லச் செல்ல உறுமல் சத்தத்துடன் சீறுகிறது பைக். போதுமான பவர் இருப்பதால், இன்ஜினை விரட்டி ஓட்டுவதற்கான தேவை ஏற்படவில்லை. அதிகபட்சமாக 120 கி.மீ வேகம் வரை டெஸ்ட் ட்ராக்கில் செல்ல முடிந்தது. அதிர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சம்.

கிளட்ச் எடை குறைவாக இருப்பதுடன், 1 டவுன் 4 அப் முறையில் அமைந்துள்ள 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் சிறப்பாக வேலை செய்கிறது. 0 - 60 கி.மீ வேகத்தை 3.95 விநாடிகளிலும், 0 - 100 கி.மீ வேகத்தை 12 விநாடிகளிலும் அப்பாச்சி RTR 200 எட்டும் என்கிறது டிவிஎஸ்.

ஓட்டுதல் தரம், கையாளுமை

ஹேண்டில்பார் சரியான உயரத்தில் இருப்பதுடன், ஃபுட் ரெஸ்ட் சற்று பின்னோக்கி இருப்பதால், ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷனைக் கொண்டுள்ளது அப்பாச்சி RTR 200. SPLIT DOUBLE
CRADLE சேஸி அமைப்பு, இறுக்கமாகவும் உறுதியாகவும் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், டிவிஎஸ் பைக்குகளிலேயே முதன்முறையாக பின்பக்கம் KYB மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் இடம்பெற்றுள்ளன.

இது வேற லெவல் அப்பாச்சி!
இது வேற லெவல் அப்பாச்சி!

முன் பக்கம் 270மிமீ பெட்டல் டிஸ்க், பின்பக்கம் 240மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்குகளுடன், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் ஆப்ஷனலாக அளிக்கப்படுகிறது. இது தவிர, டிவிஎஸ்ஸின் சொந்த REMORA ட்யூப்லெஸ் டயர்களுடன், உலகளவில் புகழ்பெற்ற பைரலி டயர்கள் ஆப்ஷனும் அளிக்கப்படுகிறது. ஆக திடமான சேஸி, கிரிப்பான டயர்கள், திறன்மிக்க பிரேக்குகள், குறைவான எடை காரணமாக, அப்பாச்சி RTR 200 பைக்கைக் கையாள்வது அற்புதமான அனுபவமாக இருக்கிறது. நிலைத்தன்மை சிறப்பாக இருப்பதால், திருப்பங்களில் அதிக வேகத்தில் நம்பிக்கையுடன் பைக்கைச் செலுத்த முடிகிறது. பிரேக்குகளின் செயல்பாடு திருப்தியாக இருக்கின்றன.

அசரடிக்கும் டிஸைன், அதிரடியான பெர்ஃபாமென்ஸ், அற்புதமான ஹேண்ட்லிங் என ஒரு அசத்தலான பேக்கேஜாக அப்பாச்சி RTR 200 திகழ்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது அப்பாச்சி. ஆனால், டிவிஎஸ்ஸின் போட்டியாளரான பஜாஜ், AS200 மற்றும் RS200 பைக்குகள் மூலமாக, 200சிசி பைக் செக்மென்ட்டில் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், ஆரோக்கியமான போட்டி உருவாகியிருக்கிறது!