Published:Updated:

அஞ்சுருளிக்கு வாரீகளா?

அஞ்சுருளிக்கு  வாரீகளா?
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சுருளிக்கு வாரீகளா?

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் : மஹிந்திரா பொலேரோதமிழ் , படங்கள்: வீ.சக்தி அருணகிரி

அஞ்சுருளிக்கு வாரீகளா?

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் : மஹிந்திரா பொலேரோதமிழ் , படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:
அஞ்சுருளிக்கு  வாரீகளா?
பிரீமியம் ஸ்டோரி
அஞ்சுருளிக்கு வாரீகளா?

சாது மிரண்டால் காடு கொள்ளாது; என் பொலேரோவை ஓட்டுறதுக்குக் காடு பத்தாது!’’ - இந்த மாதம் ‘ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்’ பகுதிக்கு இப்படித்தான் உற்சாகமாகக் கிளம்பினார் மதுரையைச் சேர்ந்த சூரியகுமார். ‘‘என்னது பொலேரோவா? அது ஜீப் டைப் ஆச்சே! அந்த டீசல் சத்தம் நமக்கு செட் ஆகாதுங்க!’’ என்று அசட்டை செய்யும் செடான் கார் பிரியர்களுக்கு மத்தியில், ‘‘பொலேரோதான் எனக்குப் பிடிச்ச கார்! அப்பிடியே டார்க் கொப்புளிக்கும் பாருங்க...’’ என்று உருகும் பொலேரோ வெறியர்கள் எக்கச்சக்கம் இருக்கிறார்கள். இவர்களால்தான் மாதம் 7,000 கார்கள் விற்பனையாகி, டாப்-10 கார் விற்பனைப் பட்டியலில் மாதந்தோறும் 7 முதல் 8-வது இடத்தைப் பிடித்துக்கொண்டு இருக்கிறது பொலேரோ. அப்படிப்பட்ட ஒரு பொலேரோ வெறியர்தான் சூரியகுமார்.

‘‘நான் லவ் மேரேஜ் சார்... அதே மாதிரிதான் பொலேரோவையும் லவ் பண்ணி வாங்கினேன். என் பொலேரோவைப் பத்தி தப்பா சொன்னா எனக்குக் கோபம் வந்துப்புடும்ங்க!’’ என்று உணர்ச்சிவசப்படும் சூரியகுமார், ‘‘நான் XLX வாங்கும்போது என் கார்தான் மிட் வேரியன்ட். இப்போ ZLX-னு சொல்லி ஏபிஎஸ், CRDe-னு ஏகப்பட்ட மாற்றம் வந்திடுச்சு சார்... கிளம்பலாம்ங்களா?’’ என்று டீட்டெய்ல் சொல்லியபடி பயணத்துக்குப் பரபரத்தார் சூரியகுமார்.

அஞ்சுருளிக்கு  வாரீகளா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல வருடங்களாக உருவத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தாலும், இன்னும் பலராலும் பொலேரோ விரும்பப்படுவதற்குக் காரணம்  - கெத்தான டீசல் இன்ஜினும், இதன் டார்க்கும், ‘தட தட’ ஆஃப் ரோடு தன்மையும்தான். இப்போது விற்பனையில் இருக்கும் CRDi இன்ஜினில் சத்தம் குறைவாக இருப்பதாகச் சொன்னாலும், பழைய DI இன்ஜினின் ‘தடதட’ பீட் சத்தம் இன்னும் பலருக்கு கிக் ஏற்படுத்தக்கூடியது.

‘‘இவரு என் நீண்ட நாள் நண்பர்... பகவதி... ரொம்ப நல்லவர்; ஆனா வக்கீல்!’’ என்று ‘பாபநாசம்’ கமல் பாணியில் கிண்டலடித்து, தனது நண்பரை அறிமுகப்படுத்தினார் சூரியகுமார்.

காற்றுப் பை, ஏபிஎஸ், ஸ்டீரியோ, ப்ளூடூத் என்று எந்த உற்சாக அம்சங்களுமே இல்லாத பொலேரோவை ஓட்டினால், உற்சாகம் பிறந்துவிடுகிறது. காரணம், இதன் டார்க். ஆரம்ப கால பொலேரோக்களில் இருந்து 2.5 லிட்டர் இன்ஜின், பவர், டர்போ சார்ஜர் என்று எல்லாமே ட்யூன் செய்யப்பட்டிருந்தாலும், மாற்றமே இல்லாத ஒரே விஷயம் இதன் 19.38 kgm டார்க்தான். ஆஃப் ரோடு பிரியர்களுக்கு இதனால்தான் பொலேரோவைப் பிடிக்கிறது. 2,000 ஆர்பிஎம்-மில் நான்காவது கியரில்கூட ஓவர்டேக் செய்யத் துடிக்கிறது பொலேரோ. இது வால்வோ, ஆடி போன்ற பிரீமியம் கார்களில் உள்ள அம்சம். ஆனால், பவர் (63bhp) - சின்ன கார்களில் இருப்பதுபோல் குறைவாக இருப்பதால், நெடுஞ்சாலைகளில் எவ்வளவு மிதித்தாலும் பவர், அரசின் வெள்ள நிவாரண நிதி மாதிரி ‘தண்ணி’ காட்டுகிறது. 110 கி.மீயைத் தாண்டவே முக்கியது பொலேரோ.

தேனியில் நமது புகைப்பட நிருபரைச் சேர்த்துக்கொண்டு மதிய உணவு முடித்துவிட்டுக் கிளம்பியபோதுதான், பயணத் திட்டமே ஞாபகம் வந்தது. ‘‘அஞ்சுருளி ஃபால்ஸ்னு கூகுள்ல பார்த்தேன் சார்... அநேகமா பொலேரோ மட்டும்தான் போக முடியும்னு நினைக்கிறேன்! பாருங்க...’’ என்று முந்தின இரவு வாட்ஸ்-அப்பில் அனுப்பியிருந்த புகைப்படத்தைக் காட்டினார் சூரியகுமார். மொபைலில் உள்ள ஜிபிஎஸ்-ஸில் ரூட் மேப்பும் போடப்பட்டது. சின்னமனூர் தாண்டி குமுளி போகாமல், கம்பத்தில் இருந்து வலதுபுறமாகத் திரும்பினால், கம்பம் மெட்டு. சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் இரண்டு வழியைத் தேர்ந்தெடுப்பார்கள்; தேக்கடி அல்லது கம்பம் மெட்டு.

அஞ்சுருளிக்கு  வாரீகளா?

கம்பம் செக்போஸ்ட்டில் செம அலெர்ட்டாக இருந்தது காவல்துறை. ‘‘அது ஒண்ணுமில்லை சார்... கொஞ்ச நாளைக்கு முன்னால இந்தப் பக்கமா கஞ்சா கடத்துறதா தகவல் வந்தது. உண்மையும் அதுதான்... ஏகப்பட்ட வண்டியைப் பிடிச்சுட்டோம்!’’ என்று நம்மை வழியனுப்பி வைத்தனர் காவல்துறையினர். ஆனால், வாகனத்தின் முன்னால் ஐயப்பன் படமோ, மாலையோ, உள்ளுக்குள் கதர் சாமிகள் நெருக்கியடித்து உட்கார்ந்திருந்தாலோ, செக்கிங் கிடையாது. அதாவது, சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விதிவிலக்கு உண்டு.

அஞ்சுருளிக்கு  வாரீகளா?

கம்பம் மெட்டு மலைப் பகுதி, பொலேரோவுக்காகவே பராமரிக்கப்பட்டதுபோல (அதாவது பராமரிக்கப்படாமலேயே) இருக்கிறது. ‘‘இந்த ரோடு வேண்டாம்; குமுளி வழியாவே போயிடலாம்..’’ என்று சாதாரண செடான் கார்கள் நிச்சயமாகப் பின்வாங்கிவிடும் சாலை.  ‘சிறுத்தையின் வேகத்தையும், பருந்தின் பார்வையையும் சந்தேகப்படக் கூடாது’ என்பதுபோல், இங்கே பொலேரோவின் டர்போ சார்ஜரைச் சந்தேகப்பட வேண்டியது இல்லை. நாம் ஏறிய 28 கொண்டை ஊசி வளைவுகளிலும் டர்போ லேக்கைத் தலைகாட்ட விடவில்லை பொலேரோ. பாதைபோல் கரடுமுரடாக இல்லாமல், ஒவ்வொரு வளைவுகளுக்கும் தாழம்பூ, வஞ்சிப் பூ, குறிஞ்சிப் பூ என்று மென்மையான பூக்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தன. 28 பூ வளைவுகளிலும், பூவில் இருந்து வெடித்துக் கிளம்பும் விதைபோல் இரண்டாவது கியரில்கூட வெடித்துக் கிளம்பி ஏறியது பொலேரோ.

கம்பம் மெட்டு செக் போஸ்ட்டில் இருந்து வலதுபுறம் திரும்பினால், செல்லும் வழியில் க்ராஸ் ஆகிறது ராமக்கல் மெட்டு. இதை மேடு என்றும் சொல்கிறார்கள். அதாவது, ராமரின் கால் பட்ட கல். ‘இலக்கில்லாமல் நடப்பதற்குப் பாதை எதற்கு?’ என்பதைப்போல், பாதையில்லாத பாதைகளிலேயே பயணித்துக் கொண்டிருந்தது பொலேரோ. ஆனால், இங்கும் தமிழகத்தில் இருந்து பஸ்கள் வருகின்றன என்பது ஆச்சரியம். கம்பத்தில் இருந்து இங்கு நேரடியாக பஸ்கள் விடப்படுகின்றன. நெடுங்கண்டம் எனும் ஊரில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ராமக்கல்மெட்டுக்கு பஸ்ஸில்கூடப் பயணிக்கலாம். கண்ணைக் கவரும் டூரிஸ்ட் ஸ்பாட் இது கிடையாது என்றாலும், பயணிகளின் லேசான ஆரவாரத்தோடு லேசான பரபரப்போடு ‘பெரிய டூரிஸ்ட் ஸ்பாட்டோ’ என்று நினைக்க வைக்கிறது ராமக்கல் மெட்டு. பார்க்கிங்கில் பொலேரோவை நிறுத்தியபோது, கல்விச் சுற்றுலாவாக வந்திருந்தார்களோ என்னவோ, ஒரே மாணவர் கூட்டம்! செல்லமாக மூச்சு வாங்கியபடி, தெளிந்த நீரோடைபோல் சின்ன சலசலப்புடன் ராமக்கல் மெட்டு மலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியமான வியூ பாயின்ட் - ராமக்கல்மெட்டு. இந்த மலை முகட்டில் உள்ள குறவன் - குறத்தி சிலைக்கு அருகே செல்ஃபிகள் க்ளிக்கிக் கொண்டிருந்தார்கள் ஜோடிகள் சிலர். இங்கிருந்து தமிழக மலைப் பகுதிகளை பைனாகுலரில் பார்த்தால், ரொம்ப அம்சமாக இருக்கிறது. தடிமனாக ஒரு முகடு... மலைக்கு இந்தப் பக்கம் கேரளா... அந்தப் பக்கம் தமிழ்நாடு என்று இயற்கை உயில் எழுதியதைப்போல் சுற்றிலும் வீற்றிருந்தன மலைகள். இங்குள்ள மலை முகட்டில்தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் தனது பரிவாரங்களுடன் தங்கியிருந்ததாக வரலாறு சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது குழந்தைகளுக்கு. சில ஆண்டுகளுக்கு முன், இப்போது ‘கோல்டன் க்ளோப்’ விருது வென்ற ஹாலிவுட் நடிகர் (டைட்டானிக்) லியானார்டோ டிகாப்ரியோ இங்கு வந்து செல்ஃபி எடுத்துக்கொண்டபடி, ‘‘பூமியில் சொர்க்கம் என்ற ஒன்று இருக்கிறதென்றால், அது இதுதான்!’’ என்று புகழ்ந்துவிட்டுச் சென்ற வரலாற்றையும் டூரிஸ்ட்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தனர் கைடுகள். கீழிறங்கி பழ பஜ்ஜி கொறித்துவிட்டு டீ அடித்தபோது, மார்கழி மாதக் குளிர் தயங்கியபடி நம்மைத் தழுவ ஆரம்பித்திருந்தது. ‘‘இத்தர தணுக்குனல்லோ... அய ராமர் பாவமல்லே?’’ என்று தனது தந்தையிடம் ‘உச்’ கொட்டியது ஒரு மலையாளத் தெய்வத் திருமகள்.

அஞ்சுருளிக்கு  வாரீகளா?

குளிரைக் கிழித்தபடி கிளம்ப ஆரம்பித்தது பொலேரோ. கட்டப்பனை வந்திருந்தது. ஏற்கெனவே கட்டப்பனையில் தங்குவதாகத் திட்டம் தீட்டியிருந்தோம். மலையாளக் கரையோரத்தில் கட்டப்பனை, ஐவரி புடவை கட்டிய ஓனம் பெண்கள்போல எப்போதும் நளினமாகவே காட்சியளிக்கிறது. இப்படியெல்லாம் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. தூய்மைதான் இங்கு பிரதானம். ‘‘ஒரு பானை சோத்தைக் குழைச்சு அடிக்கலாம்டா மாப்ள..’’ என்று வடிவேலு சொல்வதுபோல், சாலையெங்கும் அவ்வளவு தூய்மை. பான்பராக்கைக் குதப்பி, ‘சளக் புளக்’ என்று கண்டமேனிக்கு சாலையில் எச்சில் துப்பும் சேட்டன்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. சிக்கன், மீன் மற்றும் கருவாட்டுக் கடைகளில்கூட செம டீசன்ட்டாக வியாபாரம் நடைபெறுகிறது. சுற்றுலாவாசிகளைக் கவர இந்தத் தூய்மை ஐடியா என்றார்கள். இத்தனைக்கும் கட்டப்பனை டூரிஸ்ட் ஸ்பாட் கிடையாது. ஆனால், டூரிஸம் வரும் மிடில் கிளாஸ் மக்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையில் ரூம்கள் கிடைக்கும் நகரம் கட்டப்பனை. இங்கு 3 ஸ்டார் கேட்டகிரியில் வரும் ஹோட்டல்களுக்குக்கூட வெறும் 1,500 ரூபாய்தான் கட்டணம். ரொம்ப சிக்கனமாக, 300 ரூபாயில் இருந்தும் ரூம்கள் கிடைக்கின்றன. எடசேரி எனும் 3 ஸ்டார் ரெஸார்ட்டில், மிதமான மார்கழிக் குளிரை அனுபவித்துவிட்டு, மறுநாள் கிளம்பினோம்.

‘‘அஞ்சுருளிதான சார் அடுத்து...?’’ என்று சூரியகுமார், ஜிபிஎஸ் செட் செய்தார். 21 கி.மீ என்று சொல்லியது கூகுள் மேப். அஞ்சுருளி அருவி மிகவும் அறியப்படாத, பிரபலமாகாத இடம். செல்லும் வழியெங்கும் ஏலக்காய் மற்றும் மிளகு வாசம். இங்கு பிரதானமாகப் பயிரிடப்படுவது இவைதான். இடுக்கி ஆர்ச் அணையின் கேட்ச்மென்ட் ஏரியா - அதாவது நீர் தேங்கும் இடத்தில் இருக்கிறது அஞ்சுருளி. ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் புராஜெக்ட், கெட்டிக் கிடக்கும் இந்த அணையில் இருந்து நடைபெறுகிறது. மலையைக் குடைந்து, டனல் வழியாக ஆற்றுநீரை வரவழைத்து, அருவியாகக் கொட்டி, அணையாகக் கெட்டி ‘வாவ்’ என வியக்கவைப்பது அஞ்சுருளி அதிசயம். பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு கொஞ்சூண்டு ட்ரெக்கிங் போனால், அஞ்சுருளியைத் தரிசிக்கலாம். காரே செல்ல முடியாத பாதையில் பொலேரோவை வலுக்கட்டாயமாக இறக்கச் சொல்லி, அணைக்கருகில் ஃபோட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்தார் நமது புகைப்பட நிபுணர். ‘‘ ஈ தடத்து எங்ஙன கார் வன்னு?’’ என்று டூரிஸ்ட்கள் சிலர் வியந்த வண்ணம் சென்றனர்.

‘ஐந்து பாத்திரங்கள்’ என்பதுதான் அஞ்சுருளியின் விரிவாக்கம். இந்த ஆறு பயணிக்கும் ஐந்து சின்ன மலைகள், ஐந்து பாத்திரங்களைப்போல் இருப்பதால் அஞ்சுருளி. இந்த டனல் வழியாக வரும் நீர், இரட்டையாறு என்னும் ஆற்றிலிருந்து வந்து, ஐந்து கானகத்து வளங்களை எல்லாம் வாரி இறைத்துப் பயணித்து, இடுக்கி அணைக்கு வந்து விழும் அழகு, இயற்கை விரும்பிகளுக்கு செம தீனி. நம்மைப்போல் டூரிஸ்ட் வந்த தமிழர்கள் சிலர் டனலுக்குள் எட்டிப் பார்த்தபடி, ‘‘செம ஐடியால்ல!’’ என்று வியந்தபடி சென்றனர்.

‘எதுக்கு ரிஸ்க்?’ என்று நினைத்தீர்கள் என்றால், டனல் ஓரமாக வரும் ஓடையில் ஜில்லென்ற குளியல் போடலாம். அட்வென்ச்சர் விரும்பி என்றால், தைரியமாக டனலுக்குள் செல்லலாம். நான்கரை கி.மீ தூரத்துக்குச் செல்லும் டனல் வழியாக குகைப் பயணம் செய்வது, ‘இண்டியானா ஜோன்ஸ்’ படத்தில் வருவதுபோல் செம த்ரில்லிங். இதில் பயணம் செய்வது சில நேரங்களில் உயிரைப் பணயம் வைப்பதற்குச் சமம். வழுக்கும் அருவி நீர் எந்நேரமும் ஆளை இழுத்துக்கொண்டு போகும் அபாயம் உண்டு. கேட்பாரற்றுக் கிடக்கும் இந்த ஆழமான அணையில் சிலர் உயிரைவிட்ட சம்பவத்தையும் சொன்னார்கள். மழை நேரங்களில் இன்னும் அழகும் ஆபத்தும் நிறைந்தது அஞ்சுருளி. எனவே, காஞ்சியாரில் உள்ள டிவிஷனல் ஃபாரஸ்ட் அலுவலகத்தில் முறைப்படி அனுமதி வாங்கிவிட்டு அஞ்சுருளியில் ட்ரெக்கிங் போவதுதான் பாதுகாப்பு. அணையில் மீன் பிடித்தலுக்கு எக்ஸ்ட்ரா அனுமதி வாங்கலாம்.

எதிர்காலத்தின் வளத்தைத் தீர்மானிப்பது விஞ்ஞானமோ, இன்டர்நெட்டோ இல்லை என்பதற்குச் சரியான சாட்சியாகச் சலசலத்துக் கொண்டிருந்தது அஞ்சுருளி. நாலு தூத்தலுக்கே நானூறு கவிதை எழுதும் கவிஞர்கள் கண்ணில் அஞ்சுருளி பட்டால்... அவ்வளவுதான்!

அஞ்சுருளிக்கு  வாரீகளா?