Election bannerElection banner
Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

 நான்கு லட்ச ரூபாயில், யூஸ்டு கார் ஒன்றை வாங்கலாம் என இருந்தேன். ஆனால், பழைய காரை சர்வீஸ் செய்து உபயோகப்படுத்துவதைவிட, புதிய கார் வாங்குவது சரியாகப்பட்டது. எனவே, என் பட்ஜெட்டுக்குள் அடங்கும் ரெனோ க்விட் RXL, மாருதி சுஸூகி ஆல்ட்டோ 800 VXI ஆகிய இரண்டில் எது பெஸ்ட்?

எஸ்.பி. ரமேஷ் - இமெயில்


இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காரான ஆல்ட்டோ 800 - விலை, மைலேஜ், பராமரிப்புச் செலவு, ரீ-சேல் வேல்யூ போன்ற விஷயங்களில் சிறந்த கார். ஆனால், ஆல்ட்டோவின் மிகப் பெரிய மைனஸ், இடவசதிதான். பூட் ஸ்பேஸும் குறைவு. நான்கு பேர் மட்டுமே காரில் உட்கார முடியும். ஆனால், அளவில் பெரிதாக இருக்கும் க்விட், எதிர்பார்த்தது போலவே ஆல்ட்டோவைவிட அதிக இடவசதி மற்றும் பூட் ஸ்பேஸைக் கொண்டிருக்கிறது. எனவே, ஐந்து பேர் பொருட்களுடன் பயணிக்க ஏதுவான கார், ரெனோ க்விட். அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்களில் முதல் இடத்தை க்விட் பெற்றுள்ளது. தவிர, ரெனோவின் ஸ்பேர் பார்ட்ஸ் விலை, மாருதியைவிட குறைவு என்பதால், பராமரிப்புச் செலவுகள் ஒரு பிரச்னையாக இருக்காது. எனவே, உங்கள் தேவைகளை, உங்கள் பட்ஜெட்டிலேயே பூர்த்தி செய்யும் ரெனோ க்விட், நல்ல சாய்ஸ்.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

  ஒரு பெட்ரோல் செடான் வாங்கலாம் எனத் தீர்மானித்திருக்கிறேன். நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, 14 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட், ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி ஆகிய கார்களை இறுதி செய்துள்ளேன். வென்ட்டோவின் டீஸன்ட்டான தோற்றம், ரேபிட்டின் கட்டுமானத் தரம், வெர்னாவின் ஸ்மூத் இன்ஜின் மற்றும் சிறப்பம்சங்கள், சிட்டியின் டிஸைன் மற்றும் பவர்ஃபுல் இன்ஜின் ஆகியவை எனக்குப் பிடித்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, எனது பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த கார் எது?

கேசவ் ஜோஷ்ராம், இமெயில்.


கடந்த 18 ஆண்டுகளாக இந்த செக்மென்டில் கோலோச்சிக்கொண்டிருக்கும் கார், ஹோண்டா சிட்டி. பவர், மைலேஜ், சொகுசு, இடவசதி, சிறப்பம்சங்கள், ரீ-சேல் வேல்யூ ஆகியவற்றில் வாடிக்கையாளரின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது சிட்டி. வென்ட்டோ மற்றும் ரேபிட், அடிப்படையில் ஒரே கார்கள் என்றாலும் இன்ஜின், கியர்பாக்ஸ் விஷயத்தில் ஃபோக்ஸ்வாகன் முன்னிலை வகிக்கிறது. இரு கார்களின் கேபின் தரமும் கட்டுமானத் தரமும் சூப்பர். ஆனால், இதன் சர்வீஸ் நெட்வொர்க் விசாலமாக இல்லை என்பது மைனஸ். வெர்னாவின் விற்பனை சரிந்துவிட்டாலும் ஸ்டைல், சிறப்பம்சங்கள், பாதுகாப்பு, தரம், குறை சொல்ல முடியாத பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என ஆல்ரவுண்டராக இருக்கிறது. உங்களுக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் என்றால், ஃபியட் லினியாவைக்கூடப் பரிசிலிக்கலாம். ஆனால், நீங்கள் கூறியதில் சிறந்த காரைத் தேர்வு செய்வது என்றால், ஹோண்டா சிட்டியே பொருத்தமானதாக இருக்கும்.

  110சிசி அல்லது 125சிசியில், ஒரு தரமான கம்யூட்டர் பைக் வாங்க விரும்புகிறேன். சுஸூகி ஹயாத்தே, யமஹா சல்யூட்டோ, டிவிஎஸ் விக்டர், ஹோண்டா லிவோ ஆகியவற்றில் தரமான இன்ஜின், நிறைவான பெர்ஃபாமென்ஸ் - மைலேஜ் என அசத்தும் பைக் எது?

மணி, மதுரை.


முற்றிலுமாக மேம்படுத்தப்பட்ட சுஸூகி ஹயாத்தே பைக்கை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு முன்பாக அறிமுகப்படுத்திய சுஸூகி, அது எப்போது விற்பனைக்கு வரும் என்பதை அறிவிக்கவில்லை. யமஹா சல்யூட்டோ குறை சொல்ல முடியாத பைக். ஆனால், எதிலுமே தனித்துத் தெரியாதது மைனஸ். ஹோண்டா லிவோ ஸ்டைலான பைக் என்றாலும், பைக்கின் அதிக விலை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். புதிய வடிவத்தில் மறுபிரவேசமாகியுள்ள டிவிஎஸ் விக்டர், சரியான விலையில் தரமான பைக்காகக் களமிறங்கியிருக்கிறது. மேலும், இதிலுள்ள 110சிசி இன்ஜினில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தியுள்ள டிவிஎஸ், நல்ல பெர்ஃபாமென்ஸ், மைலேஜை அளிக்கும் விதத்தில் வடிவமைத்திருக்கிறது. எனவே, டிவிஎஸ் விக்டர் கச்சிதமான தேர்வாக இருக்கும்.

 எனது உயரம் 164 செ.மீ. ஸ்டைலாகவும், பாதுகாப்பானதாகவும், நல்ல ஓட்டுதல் தரத்துடனும் ஒரு ஸ்கூட்டர் வாங்க விரும்புகிறேன். பியாஜியோ வெஸ்பா 125/150, ஹோண்டா டியோ, யமஹா ஃபஸினோ, ஹோண்டா ஆக்டிவா ஆகியவற்றில் எது எனக்கேற்றதாக இருக்கும்?   

கோகிலா, சென்னை.


டிஸைன் மற்றும் பாடி பேனல்களின் கட்டுமானத்துக்காகப் பயன்படுத்தப் பட்டிருக்கும் மெட்டீரியலைத் தவிர, டியோ (ஃபைபர்) மற்றும் ஆக்டிவா (மெட்டல்) ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களுமே மெக்கானிக்கலாக ஒன்றுதான். இவை ஸ்மூத்தான இன்ஜின், போதுமான பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், நல்ல இடவசதி, ரீ-சேல் வேல்யூவைப் பெற்றிருந்தாலும் சஸ்பென்ஷன் விஷயத்தில் பின்தங்கிவிடுகின்றன. கட்டுமானத் தரம், கிளாஸிக் டிஸைன், பவர்ஃபுல் இன்ஜின் என ஸ்பெஷலான ஸ்கூட்டராக இருக்கும் வெஸ்பாவின் அதிக விலை, அதன் விற்பனையைப் பாதித்திருக்கிறது. கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைக்கும் ஃபஸினோ - ரெட்ரோ ஸ்டைல், பவர், மைலேஜ், ஓட்டுதல் தரம் போன்றவற்றில் நல்ல மதிப்பெண்களைப் பெறுகிறது. உங்கள் உயரத்துக்கும், தேவைகளுக்கும் ஏற்ற ஸ்கூட்டர், யமஹா ஃபஸினோ.

 நான் தற்போது ஸ்விஃப்ட் டீசல் காரைப் பயன்படுத்தி வருகிறேன். அதனை மாற்றிவிட்டு 7 பேர் உட்காரக்கூடிய எம்பிவி ஒன்றை வாங்க உள்ளேன். மாதம் 2,000 கி.மீ-க்கு மேல் அதனைப் பயன்படுத்துவேன் என்பதால், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் மிக முக்கியம். 15 லட்ச ரூபாயில் புதிய காரை வாங்குவதா அல்லது யூஸ்டு கார் மார்க்கெட்டில் செவர்லே கேப்டிவா எஸ்யுவியை வாங்குவதா என ஒரே குழப்பமாக இருக்கிறது.

நிர்மல் சக்கரவர்த்தி - இமெயில்.


உங்கள் பட்ஜெட்டில் புதிய கார் வாங்குவதே புத்திசாலித்தனம். ஆனால், செவர்லே கேப்டிவா எஸ்யுவியைப் பற்றிச் சொல்வதென்றால், அதிக இட வசதி மற்றும் சிறப்பம்சங்கள், அசத்தல் பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், நல்ல ஓட்டுதல் தரம், கையாளுமை என ஈர்த்தாலும், இது தயாரிப்பு நிறுத்தப்பட்ட கார். எம்பிவி செக்மென்ட்டில் இருக்கும் பல ஆப்ஷன்களில் ரெனோ லாஜி உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில், போதுமான பவர், மைலேஜை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், நெடுஞ்சாலையில் க்ரூஸ் செய்வதற்கு வசதியான 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அற்புதமான ஓட்டுதல் தரம், கையாளுமை, நிறைவான இடவசதி, சிறப்பம்சங்கள் என சூப்பர் பேக்கேஜாக இருக்கிறது.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

நான் மற்றும் எனது மனைவி பயன்படுத்தும் வகையில் ஸ்கூட்டர் ஒன்றை வாங்க முடிவெடுத்துள்ளேன். என் உயரம்  6.3’’.எனது மனைவியின் உயரம்  5.2’’ - இருவருக்கும் பொருந்தும் ஸ்கூட்டராகவும், ரீ-சேல் வேல்யூ, ஸ்டைல், மைலேஜ் ஆகியவை சிறப்பாக இருப்பதும் அவசியம். டிவிஎஸ் ஜூபிட்டர் அல்லது ஜெஸ்ட், ஹோண்டா ஆக்டிவா, யமஹா ஃபஸினோ ஆகியவற்றில் எது சிறந்தது?

எஸ். குமாரவேல், சேலம்.


ரீ-சேல் வேல்யூ மற்றும் மைலேஜ் விஷயத்தில் ஆக்டிவாவை அடித்துக்கொள்ள முடியாது. ஆனால், ஸ்டைல் மற்றும் ஓட்டுதல் தரத்தில் அது பின்தங்கி இருக்கிறது. பெண்களுக்கான ஸ்கூட்டராக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஜெஸ்ட் மற்றும் ஃபஸினோ, உங்கள் உயரத்திற்குப் பொருந்துவது சந்தேகம். பெரிய 12 இன்ச் வீல்கள், முன்பக்க டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், உறுதியான ஸ்டீல் பாடி, குறை சொல்ல முடியாத பவர், மைலேஜ் என இருபாலரும் பயன்படுத்தக்கூடிய கச்சிதமான ஸ்கூட்டராக டிவிஎஸ் ஜூபிட்டர் இருக்கும்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2.

மெயில்: motor@vikatan.com

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு