அன்பு வணக்கம் !

திப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

இந்தியாவின் எங்கோ ஒரு கடைக்கோடியில் உற்பத்தியாகும் பொருளை, நம் சமையலறை வரை கொண்டுசேர்ப்பதில் லாரி டிரைவர்களின் பங்கு மிகக் கணிசமானது. குடும்பத்தைப் பிரிந்து, மாதக்கணக்கில் நெடுஞ்சாலைகளில் வசிக்கும் இவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் எண்ணற்ற சிக்கல்களும், அபாயங்களும் ஏராளம். இவர்களின் குரல் இதுவரை மேலெழும்பாமல் அமுக்கப்பட்டே வந்திருக்கிறது. படித்த இளைஞர்கள் இந்த வேலைக்குச் செல்ல இப்போது விரும்புவது இல்லை. ஏனென்றால், இந்த வேலைக்கு நம் நாட்டில் மதிப்பும் இல்லை; மரியாதையும் இல்லை.

வளர்ந்த உலக நாடுகளில், ட்ரக் டிரைவர்களுக்குத் தனி மரியாதை உண்டு. அவர்களின் வருமானமும் தன்மானத்தைக் காக்கும் அளவில் இருப்பதை இங்கே குறிப்பிட வேண்டும். அதேபோல், ட்ரக் டிரைவர்களுக்கு என நடக்கும் ரேஸ் போட்டிகள் அங்கே மிகவும் பிரபலம். ட்ரக் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் முன்னணி நிறுவனங்கள் அந்தப் போட்டியை அங்கே நடத்துகின்றன. அதேபோன்ற ஒரு முயற்சியை, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் முன்னெடுத்து நடத்திவருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லி அருகே நொய்டாவில் இருக்கும் ஃபார்முலா ஒன் ரேஸ் டிராக்கில், வெளிநாட்டு ட்ரக் டிரைவர்களைக்கொண்டு ட்ரக் ரேஸை நடத்திவந்தது டாடா. இந்த ஆண்டு, முதன்முறையாக இந்திய ட்ரக் டிரைவர்களுக்கு என தனி ரேஸ் போட்டியை நடத்தி, அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரக் ரேஸிங் இங்கே பிரபலமாகும்போதுதான் ட்ரக் டிரைவர்கள் சம்பந்தமான பார்வை மாறும். ஏராளமான இளைஞர்கள் இந்தத் துறைக்குள் நுழைவதை விரும்புவார்கள். அதற்கான அடித்தளத்தை டாடா மோட்டார்ஸ் செய்திருப்பதைப் பாராட்ட வேண்டும். கடந்த மாதம் ஃபார்முலா ஒன் ரேஸ் டிராக்கில் நடைபெற்ற ரேஸ் போட்டியில், இந்திய ட்ரக் வரலாற்றின் முதல் வெற்றியாளர்களான ஹரியானாவைச் சேர்ந்த டிரைவர் ஜெகத்சிங் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நாகார்ஜூனாவை வாழ்த்துவதில் பெருமைகொள்கிறோம்.

அன்புடன்

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு