Published:Updated:

செக்ஸி நெக்ஸான்! - டாடாவின் புது காம்பேக்ட் எஸ்யுவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செக்ஸி நெக்ஸான்! - டாடாவின் புது காம்பேக்ட் எஸ்யுவி
செக்ஸி நெக்ஸான்! - டாடாவின் புது காம்பேக்ட் எஸ்யுவி

ஃபர்ஸ்ட் லுக் : டாடா நெக்ஸான் தொகுப்பு: ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி

ந்தியச் சந்தையில் தான் இழந்த இடத்தை மீட்க, கற்பனைக் குதிரையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது டாடா மோட்டார்ஸ். அதன் வெளிப்பாடாக அற்புதமான டிஸைன்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. அதை சமீபத்தில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கண்கூடாகக் காண முடிந்தது. அங்கு வந்த அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்த்திய ஒரே கார், டாடாவின் முதல் காம்பேக்ட் எஸ்யுவியான நெக்ஸான். அப்போது அதிகமாகக் கேட்கப்பட்ட ஒரே கேள்வி, ‘நான் எப்போது காரை வாங்கலாம்?’ அந்தக் கேள்விக்கு டாடாவிடமே தெளிவான பதில் இல்லை.

டாடா, கார் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஒரு எல்லைக்குள் தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல், மாற்றி யோசித்ததன் விளைவை, 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலேயே பார்க்க முடிந்தது (போல்ட், நானோ ட்விஸ்ட், ஜெஸ்ட், நெக்ஸான், கனெக்ட்நெக்ஸ்ட் கான்செப்ட்). இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் மாருதி சுஸூகி கார்களின் ஸ்டைலிங், பெரும்பாலும் சதுர வடிவிலேயே இருந்தாலும், அது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும். முதல் கார் வாங்கும் இன்றைய இளைய தலைமுறைக்கான கார்களைத் தயாரிக்க, முழு முயற்சியுடன் தற்போது ஈடுபட்டுள்ள டாடா, மக்களின் கவனத்தைத் தனது பக்கம் திருப்ப வேண்டுமென்றால், இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் காம்பேக்ட் எஸ்யுவி செக்மென்ட்டில், மற்ற கார்களைப் புரட்டிப் போடும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது. 4 மீட்டர் நீளத்துக்குள்ளான கார்களின் பின்பக்க டிஸைனில் சமரசம் செய்ய வேண்டியிருக்கும். மேலும், எஸ்யுவி எனும்போது மக்கள் அதிக உயரம், அதிக இடவசதி ஆகியவற்றைக் கட்டாயம் எதிர்பார்ப்பார்கள். இந்தச் சவால்கள் அனைத்தையும் முறியடிக்கும் வகையில் எஸ்யுவி கூபேவாகத் தயாராகியிருக்கிறது நெக்ஸான்.

செக்ஸி நெக்ஸான்! - டாடாவின் புது காம்பேக்ட் எஸ்யுவி

டிஸைன் & உள்பக்கம்

கடந்த 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், கான்செப்ட் நிலையில் நெக்ஸான் காட்சிக்கு வைக்கப்பட்டபோதே, அது பலரது லைக்குகளைப் பெற்றது. எனவே, இந்த கார் தயாரிப்புக்கு வரும் போது, கான்செப்ட்டில் இருந்த டிஸைன் கோட்பாடுகள் அனைத்தும் இருக்க வேண்டும் என்பதில், டாடாவின் பிரதாப் போஸ் தலைமையிலான டிஸைன் குழு உறுதியாக இருந்திருக்கிறது. எனவேதான், இதுவரை பயன்படுத்தாத பல உத்திகளை, நெக்ஸானின் சிக்கலான பாடி பேனல்களைத் (வீல் ஆர்ச், ரூஃப் லைன், C-பில்லர்) தயாரிப்பதில் செயல்படுத்தியிருக்கிறது டாடா. இதனால், கார் உற்பத்தியில் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது டாடா.

காரைப் பார்த்த உடனே, அதை வாங்கிவிட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது நெக்ஸானின் டிஸைன். எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும் கார் அட்டகாசமாக இருக்கிறது. அகலமான கிரில், புரொஜெக்டர் ஹெட்லைட்களுடன் இணையும் விதம் அழகு. ஹெட்லைட்டில் டீட்டெய்லிங் அருமையாக இருப்பதுடன், இண்டிகேட்டர்களை வித்தியாசமாக பொசிஷன் செய்திருக்கிறது டாடா. கிரில்லின் கீழ்ப் பகுதி, பனி விளக்கு, விண்டோ லைன், டெயில் லைட்டை இணைக்கும் பட்டை ஆகிய பல இடங்களில் செராமிக் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் பக்கவாட்டுத் தோற்றம் கூபே போலவே இருக்கிறது. இதனை காரின் ரூஃப் டிஸைன் பறைசாற்றுகிறது.

செக்ஸி நெக்ஸான்! - டாடாவின் புது காம்பேக்ட் எஸ்யுவி
செக்ஸி நெக்ஸான்! - டாடாவின் புது காம்பேக்ட் எஸ்யுவி

C-பில்லர் காரின் பாடியுடன் சேருமிடத்தில், நான்கு வண்ணங்கள் சங்கமிக்கின்றன. பின்பக்க விண்ட் ஸ்கிரீன் சிறிதாக இருப்பதுடன், அதற்குக் கீழே சின்ன கறுப்புப் பட்டை இருப்பது பொருந்தாமல் இருப்பது போலத் தெரிந்தாலும், டைமண்ட் வடிவில் இருக்கும் டெயில் லைட்டை இணைக்கும் செராமிக் பட்டை, காருக்குத் தனி அடையாளத்தைக் கொடுக்கிறது. எஸ்யுவி என்பதை உறுதிப்படுத்தும் வகையில், பெரிய வீல் ஆர்ச்சுக்குக் கீழே 215/60 R16 எனும் அளவிலான டயர்கள் இடம்பிடித்துள்ளன.

இந்த கார் தயாராகும் X1 ப்ளாட்ஃபார்ம், அடிப்படையாகவே சற்று உயரம் அதிகம். ஜெஸ்ட்டில் உறுத்தலாக இருந்த பின்பக்கம், இங்கு பலமாக மாறியிருக்கிறது. காரின் உயரம் அதிகமாக இருப்பதால், காருக்குள் நுழைவது சுலபமாக இருந்தாலும், காரின் ரூஃப்லைன் குறைவு என்பதால், தலை பத்திரம். கூபே போன்ற வடிவத்தைக்கொண்டிருந்தாலும், இடவசதியில் அசத்துகிறது நெக்ஸான். விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எக்கோ ஸ்போர்ட்டைவிட ஹெட்ரூம், லெக்ரூம் அதிகமாக இருக்கிறது. ஆனால், உயரமான இருக்கைகளின் குஷனிங் காரணமாக, 4 பேர் மட்டுமே வசதியாக பயணிக்க முடியுமோ என்ற எண்ணம் எழுகிறது.

செக்ஸி நெக்ஸான்! - டாடாவின் புது காம்பேக்ட் எஸ்யுவி

பின்பக்க இருக்கையில் நடுவே அமர்பவருக்கு இடவசதி சற்று குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். காரின் பின்பக்க இருக்கையை முழுவதுமாக மடக்கினால், எக்கோஸ்போர்ட்போல இதிலும் பொருட்களை வைக்க முடிகிறது. சென்டர் கன்ஸோல் அருகே ஸ்டோரேஜ் ஸ்பேஸ், பெரிய க்ளோவ் பாக்ஸ், டோர் பாக்கெட் என பிராக்டிக்கலான கேபினைக் கொண்டிருக்கிறது நெக்ஸான். மற்ற டாடா கார்களில் மைனஸாக இருந்த Driver Footwell, இதில் டெட் பெடல் மற்றும் கூடுதல் இடவசதி இருக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

முன்பக்க இருக்கைகள் வசதியாக இருக்கின்றன. அவை உயரமாக இருப்பதால், வெளிச்சாலை தெளிவாகத் தெரிகிறது. காரின் வெளிப்புற டிஸைனில் மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கும் டாடா, உட்புற டிஸைனில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறது. MID உடனான இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள், ஸ்டீயரிங் வீல், பட்டன்கள், திருகுகள் ஆகியவை மற்ற டாடா கார்களில் இருந்து பெறப்பட்டிருக்கின்றன. ஆனால், டிரைவ் மோடுகளைத் தேர்ந்தெடுக்க, பட்டனுக்குப் பதிலாக வட்ட நாப், 6.5 இன்ச் Harman ConnectNext டச் ஸ்கிரீன் சிஸ்டம் அளித்திருப்பது மாடர்னாக இருக்கிறது. 4 வீல் டிரைவ் இல்லாவிட்டாலும், இதனைப் பயன்படுத்தி இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் (City, Eco, Sport), ஏபிஎஸ், ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் போன்றவற்றை செட் செய்யலாம். இவ்வகை கார்களில் இந்த வசதியை முதன்முறையாக நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என்கிறது டாடா.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

டாடா மோட்டார்ஸ் அதிகாரப் பூர்வமாக இன்ஜின் ஆப்ஷன்களை அறிவிக்காவிட்டாலும், டியாகோ ஹேட்ச்பேக்கில் இருக்கும் புதிய இன்ஜின்களை அடிப்படையாகக்கொண்டு, பவர்ஃபுல்லான பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களைத் தயாரித்திருக்கிறது. ஃபியட்டின் மல்ட்டிஜெட் இன்ஜின் இந்த காருக்குப் போதுமானதாக இருக்காது என்பதால், இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்திருக்கிறது.

செக்ஸி நெக்ஸான்! - டாடாவின் புது காம்பேக்ட் எஸ்யுவி

டியாகோவில் இருக்கும் 1.05 லிட்டர் 3 சிலிண்டர் டீசல் இன்ஜினில், கூடுதலாக ஒரு சிலிண்டரைச் சேர்த்து, 1.5 லிட்டர் டீசல் இன்ஜினாக வெளிவந்திருக்கும் இது, 110bhp பவரை வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் இன்ஜினைப் பொறுத்தமட்டில், டியாகோவில் இருக்கும் முழுக்க அலுமினியத்தால் ஆன 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜினில் டர்போசார்ஜர் சேர்க்கப்பட்டிருப்பதால், இன்ஜின் பவர் 85bhpல் இருந்து 110bhp ஆக அதிகரித்துள்ளது.

விட்டாராவில் 110bhp பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இன்ஜின் விரைவில் வரவிருக்கும் நிலையில், இதற்கெல்லாம் விதை போட்டது ஃபோர்டு எக்கோஸ்போர்டில் இருக்கும் எக்கோபூஸ்ட் இன்ஜின்தான். ஆனால், பொதுவாக டர்போ பெட்ரோல் இன்ஜின்களின் மைலேஜ் என்பது, தனிப்பட்ட ஒருவரின் டிரைவிங் ஸ்டைல் மற்றும் சிட்டி டிராஃபிக்குக்கு ஏற்ப மாறுபடும். இந்த இரண்டு இன்ஜின்களும், அதிக சக்தியைத் தாங்கும் வகையிலான புதிய 6 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளன. எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு மாடல்களிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை நாம் எதிர்பார்க்கலாம்.

ஓட்டுதல் தரம்

ஜெஸ்ட் மற்றும் போல்ட் தயாராகும் அதே X1 ப்ளாட்ஃபார்மில் நெக்ஸான் தயாரிக்கப்படவிருக்கிறது. எனவே, பாடி ஷெல்லைத் தவிர, மெக்கானிக்கலாக அந்த கார்களில் இருக்கும் அதே சஸ்பென்ஷன் செட்-அப்தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், காரின் அதிக எடை, பெரிய வீல்கள், முன்னேற்றப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸுக்காக (200மிமீ), சஸ்பென்ஷன் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. சிறந்த ஓட்டுதல் தரத்துக்குப் பெயர்பெற்ற ஜெஸ்ட் மற்றும் போல்ட்டில் இருக்கும் பலங்கள் அனைத்தும், நெக்ஸானில் வேற லெவலில் இருக்கும் என நம்பலாம்.

முதல் தீர்ப்பு

‘கார் எப்போது விற்பனைக்கு வரும்?’ இன்னும் டெஸ்ட்டிங் பணிகள் இருப்பதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில்தான் நெக்ஸானை டாடாவின் ஷோரூம்களில் பார்க்க முடியும். கடந்த மாதம் களமிறங்கிய விட்டாரா பிரெஸ்ஸா, அறிமுகமான 2 வாரங்களிலேயே 20 ஆயிரம் புக்கிங்குகளைக் கடந்துவிட்டது. எனவே, காலதாமதத்தை ஈடுகட்டும் வகையில், காரின் விலையை டாடா அதிரடியாக நிர்ணயிக்கும் என நம்பலாம். ஆனால், விலை கட்டுப்படியாகக்கூடிய அளவிலே இல்லாவிட்டாலும், நெக்ஸானின் மிரட்டலான டிஸைன் ஒன்றே காரை ஹிட்டாக்கும் எனத் தோன்றுகிறது. ஒட்டுமொத்த தரத்தில் சிக்ஸர் அடித்துவிட்டால், இந்த கார் வாயிலாக இந்திய சந்தையில் டாடாவின் செகண்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமாகத் துவங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு