Published:Updated:

பிரெஸ்ஸா... ஓகேவா?

ஃபர்ஸ்ட் ரைடு: மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா பி.ஆரோக்கியவேல், படங்கள்: கே.சக்திவேல்

பிரீமியம் ஸ்டோரி

 மாருதியா? ஓகே! எஸ்யுவியா? ஓகே! டீசலா? டபுள் ஓகே! விலை? ஓகே ஓகே! - என்று விட்டாரா பிரெஸ்ஸா வெளிவருவதற்கு முன்பே, மாருதியின் ரசிகர்கள் ஓகே சொல்லிவிட்டார்கள். அவர்களுக்கு நன்றிகூறும் விதமாக, ஆச்சரியப்படும்படியான விலையில் விட்டராவைக் களம் இறக்கிவிட்டது மாருதி. இதனால், விட்டாராவை புக் செய்ய மாருதி ஷோரூம் செல்பவர்களின் எண்ணிக்கை கூடுதலானது. இதைப் பார்த்து மிரண்ட ஃபோர்டு, எக்கோஸ்போர்ட்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் அளவில் விலைக் குறைப்பு செய்தது.

பலருக்கு விட்டாராவைப் பிடித்திருப்பதன் முதல் காரணம், இதன் ஃப்ளோட்டிங் ரூப் ஸ்டைலும் டிஸைனும்தான். காளையின் கொம்புகளை நினைவுபடுத்தும் இதன் ஹெட்லைட்ஸ், இதன் ஹைலைட். கதவுகளுக்குக் கீழேயும் காரின் பின்பக்கத்திலும் கிளாடிங் கொடுத்து, இந்த காம்பேக்ட் எஸ்யுவிக்குக் கரடுமுரடான தோற்றத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறது மாருதி. போட்டியாளர்களைப்போல ஸ்பேர் வீலை பின்பக்கக் கதவின் மீது வைக்கவில்லை. அதனால், விட்டாராவின் டெயில் கேட்டை மேல் நோக்கித் திறக்கும்படி வடிவமைத்திருக்கிறது மாருதி.

பிரெஸ்ஸா... ஓகேவா?

நான்கு மீட்டர் நீளத்துக்கு உட்பட்ட இதில், பின்னிருக்கைகளில் தாராளமான இடம் இருக்கிறது. ஸ்டீயரிங் வீல், பவர் விண்டோஸ் ஸ்விட்ச் ஆகியவை பழைய ஸ்விஃப்ட்டை நினைவுப்படுத்துகின்றன.

110bhp சக்தியை வெளிப்படுத்தும் 1 லிட்டர் திறன்கொண்ட பெட்ரோல் இன்ஜினோடு விட்டாரா பிரெஸ்ஸா வரும் என்று சொல்லப்பட்டாலும் இப்போது விற்பனைக்கு வந்திருப்பது, 89bhp சக்தியை அளிக்கும் ஃபியட்டின் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் விட்டாராதான். இப்போதைக்கு ஃப்ரன்ட் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே! ஆனால், ஆல் வீல் டிரைவ் விட்டாரா வருவதற்கான சாத்தியம் உண்டு.

இந்த இன்ஜின், மிட்-ரேஞ்சில் அள்ளுகிறது. 1,195 கிலோ எடைகொண்ட இது, 0-100 கி.மீ வேகத்தை 13 விநாடிகளுக்கு முன்னதாகவே தொட்டுவிடுகிறது. அதேபோல, 40 - 100 கி.மீ வேகத்தை நான்காவது கியரில் 15.2 விநாடிகளில் தொட்டுவிடுகிறது. ஆனால், ஃபோர்டு எக்கோஸ்போர்ட் இதே வேகத்தை எட்டிப் பிடிக்க மேலும் நேரம் எடுத்துக்கொள்கிறது. ஆக, நெடுஞ்சாலைகளில் விட்டாராவை ஓட்டுவதும் முன்னே செல்லும் வாகனங்களை ஓவர்டேக் செய்வதும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

பிரெஸ்ஸா... ஓகேவா?

ஆனால், 2,000 ஆர்பிஎம்-க்கு குறைவாக விட்டாராவைச் செலுத்தும்போது, டர்போ லேக் தலை காட்டுகிறது.

இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 198 மிமீ என்பதாலும், இதன் பின்பக்க சஸ்பென்ஷன் மெக்பர்ஸன் ஸ்ட்ரட் டார்ஷன் பீம் என்பதாலும் பயணத்தில் அலுப்பு தெரியவில்லை. இதன் 215/60 R16 அப்பல்லோ டயர்களும் குண்டு குழிகளைச் சமாளிக்க உதவிசெய்கின்றன. காரை ஓட்டும்போது இன்ஜின் சத்தம், வெளிச்சத்தம் என்று எதுவும் காருக்குள் கேட்கவில்லை. மாருதி சொல்வதுபோல, இது மட்டும் 24.3 லிட்டர் மைலேஜ் கொடுத்தது என்றால், இதன் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு