Published:Updated:

செம சூப்பர்ப் டிரைவ்!

ஃபர்ஸ்ட் ரைடு: ஸ்கோடா சூப்பர்ப்தமிழ், படங்கள்: கே.ராஜசேகரன்

பிரீமியம் ஸ்டோரி

ங்களூர் விமான நிலையத்தில் இருந்து ‘தலைக்காவேரி’ என்று சொல்லக்கூடிய கூர்க் வரை செல்ல, காரில் 3.50 மணி நேரம் என்றது ஜிபிஎஸ். ஆனால், 3 மணி நேரத்தில் கூர்க்கில் இருந்தோம். காரணம், ஸ்கோடா சூப்பர்ப். 35 லட்ச ரூபாய்க்குள்ளான பிரீமியம் செடான் கார்கள், இப்போது இந்தியாவில் குறைவுதான். அக்கார்டு, பஸாத் போன்ற கார்கள் விற்பனையில் இல்லாத நிலையில், மார்க்கெட்டில் தன்னந்தனியாக வீற்றிருப்பது டொயோட்டா கேம்ரி மட்டுமே! கேம்ரிக்கும் இப்போது போட்டியாக வந்துவிட்டது - சூப்பர்ப்!

விற்பனையில் ஏற்கெனவே இருந்த சூப்பர்ப் காரின் நெக்ஸ்ட் ஜென் மாடல்தான் இப்போது களமிறங்கியிருக்கிறது. டாப் மாடல்களான சூப்பர்ப் காரின் பெட்ரோல்/டீசல் விலைகள் முறையே 34.88, 38.04 லட்சத்துக்கு விற்பனைக்கு வந்திருக்கும் நிலையில், சூப்பர்ப் காரை மங்களூர் டு கூர்க் வரை டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

செம சூப்பர்ப் டிரைவ்!

டிஸைன், வசதிகள்

‘பழைய சூப்பர்ப் காரா இது?’ என்று 360 டிகிரி சுற்றிச் சுற்றிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாதபடி, மொத்த டிஸைனும் மாறியுள்ளது. பின் பக்கம் லேசாக ஃப்ளூயன்ஸை நினைவுப்படுத்தினாலும், ஆக்டேவியாவின் எல்டர் பிரதர் போலவே இருக்கிறது. 17 இன்ச் வீல்களும், 4,861 மிமீ நீளமும் சூப்பர் சைஸ் செடான் காருக்கே உரிய ப்ளஸ். பேஸ் மாடலுக்கு 5 ஸ்போக் அலாயும், L&K டாப் வேரியன்ட்டுக்கு மல்ட்டி ஸ்போக் அலாய் வீல்களும் கொடுத்திருக்கிறது ஸ்கோடா. பை ஸெனான் ஹெட்லைட்ஸ், இரவு நேரப் பயணத்தில் நல்ல வெளிச்சம். கார் கதவைத் திறந்து மூடுவதிலேயே ஸ்கோடாவின் கட்டுமானம் புலப்படுகிறது. உள்ளே நுழைந்து, ‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?’ என்று நினைத்தால்... யெஸ்... அப்படியே ஆக்டேவியாதான். ஃபோக்ஸ்வாகனின் MQB பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுவதால், ஆக்டேவியாவின் டேஷ்போர்டைப் பார்ப்பதுபோலவே இருக்கிறது. சென்டர் கன்ஸோல், ஸ்டீயரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் பழசுதான் என்பதால், ஆக்டேவியாவைப் பார்க்காதவர்கள் மட்டுமே ரசிக்க வாய்ப்பு உண்டு. எக்ஸ்ட்ராவாக, மர வேலைப்பாடுகள், க்ரோம் ஃபினிஷிங் போன்றவை கவர்ச்சி ரகம்.

மற்றபடி பனோரமிக் சன்ரூஃப், 12 Way சீட் அட்ஜஸ்ட்மென்ட், 6.5 இன்ஃபொயிட்டென்மென்ட் டச் ஸ்க்ரீன், ஆண்ட்ராய்டு/ஆப்பிள் கார்ப்ளே, ESC, 8 காற்றுப் பைகள் போன்றவை விலை குறைந்த வேரியன்ட்டிலேயே ஸ்டாண்டர்டாக உள்ளன.

செம சூப்பர்ப் டிரைவ்!
செம சூப்பர்ப் டிரைவ்!

உள்ளே

ஸ்கோடாவின் பாட்டில் ஹோல்டர்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான். பாட்டில்கள் ஆடாமல் அசையாமல் ஃபிட் ஆவதால், மேடு/பள்ளங்களில் வாட்டர் பாட்டில் ஆடும் சத்தம் கிடையாது. முக்கியமான விஷயம் - பூட் திறக்க/மூட சாவியிலோ, சீட்டுக்கு அடியிலோ ஸ்விட்ச்சைத் தேட வேண்டியது இல்லை. பின்பக்க பம்பரின் சென்ஸார்களுக்குக் கீழே காலை லேசாக ஆட்டினாலே பூட் தானாகத் திறக்கும். பூட்டின் ஓரத்தில் இருக்கும் பட்டனைத் தட்டினால்... தானாகவே மூடிக்கொள்கிறது பூட் கதவு. குறைவான சீலிங் உயரம்கொண்ட பார்க்கிங் ஏரியாவில் திறக்கும்போதும் கவலைப்பட வேண்டியது இல்லை. உயரத்துக்குத் தகுந்தாற்போல் திறக்கிறது கதவு. 625 லிட்டர் என்பதால், கிட்டத்தட்ட ஆறேழு லக்கேஜ் பைகளை வைக்கலாம். இதுவே சீட்டை மடிக்கும்போது, 1,760 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது.

இரவு நேரப் பயணங்களில் டிரைவரை ஓட்டச் சொல்லிவிட்டு, 2 பேர் கொண்ட குடும்பம் படுத்துக்கொண்டே பயணிக்கும் வசதிகொண்டது இது. பழைய காரைப்போலவே இதிலும் ஸ்கோடாவின் ஸ்பெஷலான குடைகள் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த முறை 2 குடைகள். பின்பக்கம் வழக்கம்போல், ரியர் ஏ.சி டனல் தொந்தரவாகத்தான் இருக்கும். லெக் ரூம், ஹெட் ரூம் எல்லாமே நீளம்தான். எனவே, பின்னால் பயணிக்க எந்தச் சிரமமும் இல்லை. பழைய சூப்பர்பில் ‘B’ பில்லர்களில் ஏ.சி வென்ட் இருந்தது. அது புது சூப்பர்ப்-ல் மிஸ்ஸிங்.

செம சூப்பர்ப் டிரைவ்!

இன்ஜின்

பெட்ரோல், டீசல் என்று இரண்டு மாடல்களில் வருகிறது சூப்பர்ப். 1.8 TSI எனும் பேட்ஜில் மேனுவல்/ஆட்டோமேட்டிக் என்று முறையே 6 ஸ்பீடு கியர்பாக்ஸிலும் 7 ஸ்பீடு DSG-யிலும் இருக்கிறது பெட்ரோல் மாடல். ஹைவேஸில் ‘இது ஓடாது; பறக்கும்’ என்று நிரூபிக்கிறது 177bhp பவர். பெட்ரோல் இன்ஜினின் ரிஃபைன்மென்ட், காரை ஓட்டும்போதே கால்களுக்கு ஃபீல் ஆகிறது. லோ, மிட், ஹை என்று எல்லா ரேஞ்ச்களிலும் பவரும் டார்க்கும் புதிதாகக் கிடைப்பதுபோல் இருப்பதால், சட் சட் என ஓவர்டேக்குவது செம ஃபன். ஆனால், வேகங்களில் கியர் குறைவதும் கூடுவதும் ஆட்டோமேட்டிக் காரில் ஃபீல் செய்ய முடிகிறது. மேனுவலில் 32.63kgm டார்க்கும், ஆட்டோமேட்டிக்கில் 25.49kgm டார்க்கும் இருப்பது, சூப்பர்ப் போன்ற பெரிய கார்களுக்கு ஆஹா ரகம் இல்லை; ஓகே ரகம்தான். நல்ல விஷயம் என்னவென்றால், கியர்பாக்ஸும் இன்ஜினும் பார்ட்னர்ஷிப் வைத்து வேலை பார்க்கிறது. பெட்ரோல் மாடலில்கூட டர்போ லேக் இருப்பது தெரிகிறது. ஏனென்றால், 2,000 ஆர்பிஎம்-க்கு மேலேதான் இன்ஜின் விழிக்கிறது.

டீசல் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மட்டும்தான். 2.0 லிட்டர் இன்ஜின்கொண்ட டீசலில், பெட்ரோலைவிட 3bhp மட்டுமே குறைவு. அதாவது 174. ஸ்கோடாவில் இந்தியாவிலேயே டீசலில் அதிக பவரைக் கொண்டுள்ள கார் சூப்பர்ப்தான். ஆனால், டீசலில் கன்னா பின்னாவென டர்போ லேக் இருப்பதை ஸ்கோடா கொஞ்சம் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம், பெரிய டர்போ பயன்படுத்தி இருப்பதுதான். பெர்ஃபாமென்ஸ் என்று வரும்போது அசத்தலாக இருக்கிறது சூப்பர்ப். மிட் ரேஞ்சில் பவர் கொப்புளிக்கிறது. ஆரம்பத்தில் தடதட ஒலி இருந்தாலும், போகப் போக ஸ்மூத் ஆகிறது டீசல் இன்ஜின். ஏ.சி-யைக் குறைவாக வைத்திருந்தாலோ, ஆடியோ சிஸ்டம் ஆஃப் ஆகி இருந்தாலோ - இன்ஜின் சூடாகும்போது ரேடியேட்டர் ஃபேனின் தடதட ஒலி, ஓட்டுபவர்களுக்குப் பீதியைக் கிளப்பலாம். இதன் டார்க் 35.69kgm. பெட்ரோல் ஆட்டோ, மேனுவல், டீசல் (1,494, 1,540, 1,565) என்று எடை வித்தியாசம் இருப்பதால், ஒவ்வொரு காரிலும் நூலிழையில் பெர்ஃபாமென்ஸும் வேறுபடுகிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

வழக்கம்போல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் டிரைவ்/ஸ்போர்ட்ஸ் மோடு என்று இரண்டு ஆப்ஷன்கள் உண்டு. மேனுவல் பிரியர்களுக்கு மேனுவல் ஆப்ஷன், பேடில் ஷிஃப்டர் இரண்டையும் என்ஜாய் செய்யலாம். இதிலுள்ள மேனுவல் கியர் செட்டிங்கில், நீங்கள் கியர்களைக் கூட்டினால் மட்டும் போதும்; காரின் வேகம் குறையும்போது, கியரும் தானாகக் குறைந்துகொள்கிறது. கியர் அலெர்ட் ஆப்ஷன் இருப்பதால், ‘தப்பான கியரில் செல்கிறோமோ?’ என்கிற கவலை வேண்டியது இல்லை. நெடுஞ்சாலைகளில் ரிலாக்ஸ்டாக காலை வைத்துக்கொள்ள டெட் பெடல் உண்டு. 2,841 மிமீ நீளமான வீல்பேஸ் என்பதால், ஹைவேஸில் ரிலாக்ஸ் ஆகப் பயணிக்கலாம். காரின் நீளமும் அதிகம் என்பதால், நெடுஞ்சாலைகளில் நேர் திசைகளில் கார் அலைபாயவில்லை; ஸ்டெபிலிட்டி பக்கா! ஆனால், சாஃப்ட்டான சஸ்பென்ஷன், ஃப்ரன்ட் வீல் டிஃப்ரன்ஷியல் போன்றவை திருப்பங்களில் பாடி ரோலை உண்டாக்குவதால், பயணிகள் சீட் பெல்ட்டைத் தாண்டி வளைந்து நெளிந்து பயணிக்க வேண்டியுள்ளது. நீங்கள் கார்னரிங் செய்து என்ஜாய் செய்பவர்கள் என்றால், உங்களுக்கு சூப்பர்ப் சரியான சாய்ஸ் இல்லை. ஆனால், சஸ்பென்ஷன் உயரமான சாலைகளுக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டிருப்பதால், மேடு பள்ளங்களில் ‘தடால் புடால்’ சத்தங்கள் இல்லை.

எந்த வகையில் சூப்பர்ப் நம்மை உற்சாகமாக்குகிறது என்றால், பிரேக்ஸ்! எந்த வேகத்தில் சென்றாலும், தைரியம் அளிக்கிறது இதன் பிரேக்கிங். 17 இன்ச் பெரிய வீல்கள் பிரேக் அடித்த இடத்தில் அப்படியே ஃபுல் க்ரிப்போடு நிற்கின்றன. செடான் காருக்கே உரிய குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் (பெ:164, டீ:149 மிமீ) மேடு பள்ளங்களில் ‘பீ கேர்ஃபுல்’ என்கிறது. டர்னிங் ரேடியஸ் அதிகம் (11.1 மீ) என்பதால், வளைவுகளில் மிகக் கவனமாக இருப்பது அவசியம்.

செம சூப்பர்ப் டிரைவ்!

சீட் அட்ஜெஸ்ட்மென்ட் பக்கா. ஒல்லியானவர்கள், பருமனானவர்கள் என்று எல்லோருக்கும் ஏற்றபடி ‘12way மெமரி சீட்’டில் செட் செய்துகொள்ளலாம். பேனட் நீளமாக இருந்தாலும் சாலை தெளிவாகத் தெரிகிறது.

பாதுகாப்பு

ஃபேபியா முதல் சூப்பர்ப் வரை பில்டு குவாலிட்டியில் ஸ்கோடாவைச் சந்தேகப்பட வேண்டியது இல்லை. பாதுகாப்புக்கு 8 காற்றுப் பைகள், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், மலைப் பாதைகளில் ஏற உதவும் ஹில் ஹோல்டு கன்ட்ரோல், EBD, டிராக்ஷன் கன்ட்ரோல், இரவு நேரங்களில் வெளிச்சத்தைக் கொட்டும் பை ஸெனான் கார்னரிங் ஹெட்லைட்ஸ் - அதாவது, கார் திரும்புவதற்கு ஏற்ப திரும்பும் லைட்ஸ் போன்றவை பாதுகாப்பில் கில்லி. உச்சபட்சமாக, ‘அட்டென்ஷன் அசிஸ்ட்’. பென்ஸ் சீரிஸ்களில் இருக்கும் வசதி இது. டிரைவர் களைப்படைந்தாலோ, தூங்கி வழிந்தாலோ அலார்ம் லைட் ஆன் ஆகி, காபி கப் சிம்பல் வந்து அலெர்ட் செய்கிறது. இதை, ‘டிரைவர் அசிஸ்ட் ஃபேட்டிக் டிடெக்ஷன்’ என்கிறது ஸ்கோடா. இது L&K வேரியன்ட்டில் மட்டும்தான் உண்டு.

முதல் தீர்ப்பு

கட்டுமானம், பாதுகாப்பு, ரைடிங் என்று எல்லாவற்றிலும் கெட்டிக்காரனாக இருக்கும் சூப்பர்ப், விலை விஷயத்திலும் கறார் காட்டுவது வாடிக்கையாளர்களை யோசிக்க வைக்கலாம். சூப்பர்பின் டாப் வேரியன்ட்டான L&K  பெட்ரோல் மாடல் 35 லட்சத்துக்கும், டீசல் மாடல் 38 லட்சத்துக்கும் வந்திருக்கிறது. ‘இந்த விலைக்கு ஆடி A3 கார் நெருங்கி வருகிறதே’ என்று வாடிக்கையாளர்கள் நினைக்காதவரை, சூப்பர்ப் சூப்பராக விற்பனையாக வாய்ப்பு உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு