Published:Updated:

தெறி (2) - ட்ரையம்ப்!

ரைடு: ட்ரையம்ப் த்ரக்ஸ்ட்டன் R தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி

வனித்திருக்கிறீர்களா..? எம்.ஜி.ஆர் பாடல்களை அப்படியே கேட்பதைவிட, அதை ரீமிக்ஸ் செய்து வழங்கினால்தான் இந்தக் கால இளைஞர்களுக்குப் பிடிக்கிறது. அதேபோல், பழைமையின் அழகுடன், புதுமையையும் சேர்த்துத் தரும் மாடர்ன் - ரெட்ரோ பைக்குகள்தான் இப்போதைய ட்ரெண்ட். இப்படி புதிதாக களமிறங்கியிருக்கும் பைக்தான் டிரையம்ப் த்ரக்ஸ்ட்டன் R.

டிஸைன்

புதிய த்ரக்ஸ்ட்டன் R பைக்கைப் பார்த்ததுமே மனதைப் பறிகொடுக்க வேண்டியுள்ளது. லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களுடன், பழைமையான சாயல்களும் கொண்ட டிஸைன் செம ஜில். எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும், இது ஒரு பெர்ஃபாமென்ஸ் பைக் என்பது தெளிவாகத் தெரிகிறது. 17-இன்ச் வயர் ஸ்போக் வீல்கள், க்யூட்டான கஃபே ரேஸர் ஸ்டைல் ஃப்யூல் டேங்க், க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் என டிஸைன் அம்சங்கள் அசத்தல். இந்த R மாடல் பைக்கில் உள்ள ஃப்ரஷ்டு மெட்டல் ஃபினிஷ் (எக்ஸாஸ்ட்டுக்குக் கூடக் கொடுத்திருக்கிறார்கள்) ரொம்பவே ஸ்பெஷல். வீட்டில் சும்மா நிறுத்தி வைத்தால்கூட பார்க்க கெத்தாக இருக்கும்.

தெறி (2) - ட்ரையம்ப்!

பெர்ஃபாமென்ஸ்

பைக்கின் ரைடிங் பொசிஷன் ஸ்போர்ட்டியாக இருந்தாலும், தற்கால ஸ்போர்ட்ஸ் பைக்குகளைப்போல ஓவராக இல்லை. டேங்க் ரொம்பவே ஸ்லிம்மாக இருப்பதால், தொடைகளுக்கு ஏதுவான க்ரிப் இல்லை. ‘பார்க்க அழகா இருக்கே... பெர்ஃபாமென்ஸ்?’ என்ற கேள்விக்கு, திராட்டிலை முறுக்கினால் பதில் கிடைக்கிறது. போனவில் பைக்கில் இருக்கும் அதே இன்ஜின்தான் என்றாலும், கம்ப்ரஷன் ரேஷியோ 10.0:1-ல் இருந்து 11.0:1 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ECU ரீமேப் செய்யப்பட்டுள்ளது. இந்த 1,200 சிசி பேரலல் ட்வின் இன்ஜின் 96bhp சக்தியை அளிக்கிறது. 7,000 ஆர்பிஎம் ரெட்லைன் வரை டார்க் சீராக வெளிபடுகிறது. மணிக்கு 160 கி.மீ வேகமாக இருந்தாலும் க்ரூஸ் செய்ய எளிதாக இருக்கிறது. ஆனால், ஃபேரிங் இல்லாததால் காற்று முகத்தில் அடிக்க, அதற்கு மேல் வேகமாக ஓட்ட வசதியாக இல்லை. பைக்கின் எடை வெறும் 203 கிலோ மட்டுமே இருக்க, 11.4 kgm டார்க் குறைந்த ஆர்பிஎம்களிலேயே கிடைப்பது வரம். அதனால், சிட்டி டிராஃபிக்கில் ஓட்ட கடினமாக இல்லை.

பெர்ஃபாமென்ஸ் அதிகம் என்பதால், அதைக் கட்டுக்குள் வைக்க தேவையான எலெக்ட்ரானிக்ஸ் விஷயங்களையும் சேர்த்துள்ளது டிரையம்ப். டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், கிரிப் ரொம்பவே குறையும்போது மட்டுமே தலையிடுகிறது. ரைடிங் மோடுகள் பவர் டெலிவரியில் மட்டுமே கை வைக்கின்றன. ஒட்டுமொத்த பவரில் கை வைப்பது இல்லை. ஸ்போர்ட் மோடில் வளைவு நெளிவான சாலைகளில் ஓட்ட சூப்பர்.

தெறி (2) - ட்ரையம்ப்!

கையாளுமை

பெர்ஃபாமென்ஸ் பட்டையைக் கிளப்ப, கையாளுமை கைகொடுப்பதுதான் த்ரக்ஸ்ட்டன் R பைக்கின் மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட். ஸ்டீயரிங் ஜியாமெட்ரி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வீல்பேஸும் 1,414 மிமீதான். எனவே, பைக்கைச் சாய்த்து, வளைத்து ஓட்ட ரொம்பவே எளிதாக இருக்கிறது. பைரலி ரோஸோ டயாப்லோ டயர்கள் செம க்ரிப்பி.

முன்பக்கம் உள்ள 43 மிமீ ஷோவா பிஸ்டன் ஃபோர்க் சஸ்பென்ஷன், பின்பக்கம் உள்ள ஓலின்ஸ் ஷாக் அப்ஸார்பர்களைத் தேவைக்கேற்றபடி அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். போனவில் பைக்கைவிட இறுக்கமான ஓட்டுதல் தரம் இருந்தாலும், முதுகு வலிக்காத அளவுக்கு சொகுசாகவே இருக்கிறது.

தெறி (2) - ட்ரையம்ப்!
தெறி (2) - ட்ரையம்ப்!

பிரெம்போ M4.34 மோனோ பிளாக் பிரேக் கேலிபர்கள், முன்பக்கம் உள்ள 310 மிமீ ஃப்ளோட்டிங் டிஸ்க் பிரேக்குகளை நச்சென பிடித்துக்கொள்கின்றன. ஒட்டுமொத்த பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாகவே உள்ளது.

 ரெட்ரோ - மாடர்ன் பைக்குகள் பிடிக்காத வர்களும்கூட, த்ரக்ஸ்ட்டன் R பைக்கை ஓட்டிப் பார்த்தால் ஒருமுறை யோசிப்பார்கள். நல்ல பெர்ஃபாமென்ஸ், அதற்குக் கைகொடுக்கும் கையாளுமை, ரெட்ரோ டிஸைன். இதற்கு மேல் என்ன வேண்டும் மக்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு