Published:Updated:

தெறி (3) - கவாஸாகி!

ஃபர்ஸ்ட் ரைடு: கவாஸாகி நின்ஜா ZX-14R தொகுப்பு: ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி

கவாஸாகி நின்ஜா ZX-14R.

1990-களில், பைக் நிறுவனங்களுக்கு இடையே, வேகப் போட்டி உச்சத்தில் இருந்தபோது வெளிவந்த பைக் இது. அன்றிலிருந்து இன்று வரை தயாரிப்பில் இருக்கும் பவர்ஃபுல்லான, வேகமான பைக்குகளில், கவாஸாகி  நின்ஜா ZX-14R பைக்கும் ஒன்று. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2013-ல் இந்தியாவில் களமிறங்கிய 2-வது தலைமுறை நின்ஜா ZX-14R பைக்கின், 2016-ம் ஆண்டுக்கான அப்டேட் வடிவம்தான் இது.

எப்படி இருக்கிறது 2016 கவாஸாகி நின்ஜா ZX-14R?

தெறி (3) - கவாஸாகி!

என்ன மாற்றம்?

கவாஸாகி நின்ஜா ZX-14R-ன் ஃபேரிங் மற்றும் பின்பக்கத்தில், கறுப்பு நிறத்தின் ஆதிக்கம் அதிகம். ஃபேரிங்கின் அடிப்பகுதி பச்சை நிறத்துக்கு மாறியுள்ளது. எனவே, பைக்கின் கலர் காம்பினேஷனைத் தவிர, டிஸைனில் எவ்வித மாறுதல்களும் இல்லை. இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல் அதேபோல இருந்தாலும், அதில் இருக்கும் டிஜிட்டல் ஸ்கிரீன் கறுப்பு நிறத்தில் இருந்து வெள்ளை நிறத்துக்கு மாறியுள்ளது. மெக்கானிக்கலாகப் பார்த்தால், கவாஸாகி  H2/H2R பைக்கில் இருக்கும் அதே முன்பக்க பிரெம்போ டிஸ்க் பிரேக் சிஸ்டம், ரிமோட் ப்ரீலோடு அட்ஜஸ்டர், கம்ப்ரெஷன் மற்றும் ரீபவுண்டு அட்ஜஸ்ட்மென்ட் ஆகிய வசதிகளைக்கொண்ட Ohlins பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன கிளட்ச் லைன், கியர் பொசிஷன் சென்ஸார் ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளன.

தெறி (3) - கவாஸாகி!

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

யுரோ-4 மாசுக் கட்டுப்பாடு விதிகளுக்காக, நின்ஜா ZX-14R எக்ஸாஸ்ட் மற்றும் ECU அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், பைக்கின் பெர்ஃபாமென்ஸில் மாறுதல் இருக்காது என்கிறது கவாஸாகி.

 இதில் உள்ள இன்லைன் 1,441 சிசி, 4 சிலிண்டர் இன்ஜின், பழைய பைக்கைப்போலவே 207bhp@10,000rpm பவரையும், 16.1kgm@7,500rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. குவாட்டர் மைல் (400 மீட்டர்) தூரத்தை வெறும் 10 விநாடிகளுக்குள்ளாக எட்டிப் பிடிக்கும் பைக்குகளில் இதுவும் ஒன்று. 6-வது கியரில் 40 கி.மீ வேகத்திலும் செல்ல முடியும் என்பது ஆச்சரியம். இதனால் நெரிசல் மிகுந்த நம் ஊர்ச் சாலைகளில், இந்த பைக்கை சிக்கல் இல்லாமல் ஓட்ட முடிகிறது. அதேநேரத்தில் 4,000 ஆர்பிஎம் தாண்டும்போது, பைக்கின் பெர்ஃபாமென்ஸ் வேற லெவலில் இருக்கிறது. இவ்வளவு பவரையும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, Wheelie Control உடன் 3 லெவல் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ், 2 ரைடிங் மோடுகள் [Full Power, Low Power] துணை புரிகின்றன.

ஓட்டுதல் தரம், கையாளுமை

பழைய பைக்கின் மிகப் பெரிய மைனஸ், ரைடிங் பொசிஷன். இது, புதிய பைக்கில் சரி செய்யப்பட்டுள்ளது. ஹேண்டில்பாரின் உயரம் 13.2 மிமீ மற்றும் அதிலுள்ள ஹேண்ட் கிரிப்பின் அகலம் 16.8 மிமீ அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், ரைடருக்கும், ஹேண்டில்பாருக்குமான இடைவெளி 13.3மிமீ குறைக்கப்பட்டிருப்பதால், உயரம் குறைவானவர்களும் பயன்படுத்த வசதியானதாக மாறியிருக்கிறது.

தெறி (3) - கவாஸாகி!

இவ்வுளவு பெரிய பைக்கை U-டர்ன் எடுப்பதும் சுலபமாகவே இருக்கிறது. GunFighter Seat என்ற புதிய இருக்கையை நின்ஜா ZX-14Rல் பொருத்தியுள்ள கவாஸாகி, அது நீண்ட தூரப் பயணங்களுக்கு சொகுசாகவும், அதிக வேகத்தில் செல்லும்போது (2.5 விநாடிகளில் 0 - 100 கி.மீ வேகம்) ரைடரை பைக்குடன் இணைத்திருக்கவும் உதவும் என்கிறது. ஏபிஎஸ் உடனான புதிய பிரேக்குகளின் செயல்பாடு சூப்பராக இருப்பதால், 269 கிலோ எடைகொண்ட கவாஸாகி நின்ஜா ZX-14R பைக்கின் வேகத்தை நினைத்த உடனே சட்டென குறைக்க முடிகிறது. திருப்பங்களில் பைக்கின் கையாளுமையையும், மோசமான சாலைகளில் பைக்கின் ஓட்டுதல் தரத்தையும் கணிசமான அளவில் முன்னேற்றியிருக்கிறது புதிய சஸ்பென்ஷன்.

இவ்வுளவு பெரிய பைக்கை நெருக்கடியான சாலைகள், குறுகிய திருப்பங்களில் ஓட்ட முடியுமா என்ற சந்தேகம் எழுந்தாலும், அந்த எண்ணம் அனைத்தையும் பைக்கை ஓட்டத் துவங்கிய நேரத்திலேயே தவிடுபொடியாக்கிவிடுகிறது கவாஸாகி நின்ஜா ZX-14R. இதற்கு பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 17 இன்ச் பிரிட்ஜ்ஸ்டோன் டயர்கள் ஒரு முக்கியக் காரணம்.

தெறி (3) - கவாஸாகி!

முதல் தீர்ப்பு

கவாஸாகி நின்ஜா ZX-14R ஓட்டுவது அலாதியான அனுபவம் என்றாலும், நம் சாலைகளில், பெரிய சைஸ் மற்றும் எடை அதிகமான பைக்கை குறைவான வேகத்தில் தொடர்ச்சியாக ஓட்டும்போது ஏற்படும் அயர்ச்சியைத் தவிர்க்க முடியவில்லை. ஹைப்பர் ஸ்போர்ட் டூரர் என்ற அடைமொழிக்குக் கச்சிதமாகப் பொருந்தும் இந்த பைக்கை, கவாஸாகியின்  H2/H2R பைக்கின் அறிமுகத்துக்குப் பிறகும் கூட ஸ்போர்ட்ஸ் பைக்காக மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே!

தெறி (3) - கவாஸாகி!

இந்த பைக்கின் முக்கிய போட்டியாளரான சுஸூகி ஹயபூஸாவின் விலை, உள்நாட்டிலேயே CKD முறையில் தயாரிக்கப்படுவதால், 2.4 லட்சம் ரூபாய் குறைந்து, 13.57 லட்சத்தில் இருக்கிறது (டெல்லி எக்ஸ் ஷோரும்). ஆனால், கவாஸாகி நின்ஜா ZX-14R பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரும் விலை 17.90 லட்ச ரூபாய். சுஸூகி பைக்கைவிட சுமார் 4.5 லட்சம் விலை அதிகம் என்பதும், ட்ராக் ரேஸுக்காகத் தயாரிக்கப்பட்ட பைக்கை டூரர் என வகைப்படுத்த இயலாது என்பதும் மைனஸ்கள்! இருந்தாலும், கவாஸாகி பைக்கில் உள்ள பவர்ஃபுல்லான இன்ஜின், அந்தக் குறைகள் அனைத்தையும் ஈடுகட்டிவிடுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு