Published:Updated:

ராயல் என்ஃபீல்டின் அதிர்வுகள் இல்லாத முதல் பைக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராயல் என்ஃபீல்டின் அதிர்வுகள் இல்லாத முதல் பைக்!
ராயல் என்ஃபீல்டின் அதிர்வுகள் இல்லாத முதல் பைக்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் தொகுப்பு: ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி

ட்வென்ச்சர் பைக்குகள், இந்தியாவுக்கு ஏற்றது என்றாலும், பைக் தயாரிப்பாளர்கள் பலரும் நுழையத் தயங்கும் செக்மென்ட், இதுதான். வழக்கமான ஸ்ட்ரீட் பைக்குகளைவிட பார்க்க வித்தியாசமாக இருந்தாலும் சொகுசு, நம்பகத்தன்மை, பாதுகாப்பு, உயரமான சஸ்பென்ஷன், உறுதியான ஃப்ரேம் ஆகியவற்றைக் கொண்டுள்ள அட்வென்ச்சர் பைக்குகளை, ஓட்டிப் பார்த்தால்தான் உண்மையான திறன் புரியும். கச்சிதமாகப் பெயரிடப்பட்டிருக்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கை, இமாச்சல் பிரதேசத்தில் டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

டிஸைன்

அட்வென்ச்சர் பைக்கின் கோட்பாடுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருந்தாலும், ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கே உரிய ரெட்ரோ-க்ளாஸிக் தோற்றம் இதில் இருக்கிறது. ஸ்போக் வீல்கள் கொண்ட இந்த பைக்கை, எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டர் வேலை செய்யவில்லை என்றால், தள்ளிவிட்டுக்கூட ஸ்டார்ட் செய்யலாம். தவிர, பேட்டரியில் பவர் இல்லையென்றால்கூட ஹெட்லைட் ஒளிர்கிறது. வட்ட வடிவ ஹெட்லைட்டுக்கு மேலே இருக்கும் அட்ஜஸ்டபிள் விண்ட் ஸ்கிரீன், முகத்தில் காற்று அறைவதைத் தடுக்கிறது.

ராயல் என்ஃபீல்டின் அதிர்வுகள் இல்லாத முதல் பைக்!

இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் தெளிவாக இருப்பதுடன் ஸ்பீடு, இன்ஜின் RPM, பெட்ரோல் அளவு, டெம்பரேச்சர், 2 ட்ரிப் மீட்டர்கள், திசை காட்டும் காம்பஸ், பைக்கின் சராசரி வேகம் எனப் பயனுள்ள தகவல்களைத் தருகிறது. ஹிமாலயனில் தரமான ஸ்விட்சுகள், அலாய் லீவர்கள், மிருதுவான ஹேண்ட் கிரிப், தெளிவான  வட்ட வடிவ ரியர் வியூ மிரர்களைப் பொருத்தியிருக்கும் ராயல் என்ஃபீல்டு, கிளட்ச் ப்ளேவை அட்ஜஸ்ட் செய்யும் நட்டைச் சேர்த்திருந்தால், நீண்ட தூரப் பயணங்களுக்கு உபயோகமானதாக இருந்திருக்கும்.

ஒரு ரைடருக்கு அத்தியாவசிய தேவையான பெட்ரோல் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வைத்துக்கொள்ள, பெட்ரோல் டேங்க் அருகிலேயே ஸ்டாண்ட் வைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க்கின் வடிவம் நீளமாக, மெலிதாக இருந்தாலும் பைக்கில் அமர்ந்திருக்கும்போதும், ஃபுட் பெக் மீது ஏறி நிற்கும்போதும், கால்களுக்குப் போதுமான சப்போர்ட் அளிக்கிறது. ஹிமாலயனின் கட்டுமானத் தரம், ஃபிட் & ஃபினிஷ் ஆகியவை மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளைவிட ஒரு படி மேலே இருக்கிறது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

பைக்கை நாம் டெஸ்ட் செய்த இரு நாட்களில் வெயில், மழை, பனி என அனைத்துவிதமான சூழ்நிலைகளிலும், உத்தேசமாக கடல் மட்டத்தில் இருந்து 4,000 அடி முதல் 8,000 அடி உயரத்தில் உள்ள சாலைகளிலும் ஓட்டிப் பார்த்தோம். ஹிமாலயனில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட 2 வால்வு, LS411சிசி, SOHC, சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு இன்ஜினைப் பொருத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு. இது 24.5bhp@6,500rpm பவரையும், 3.3kgm@4,500rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஆஃப் ரோடு செல்வதற்கு இந்த பவர் போதுமானதாக இருந்தாலும், நெடுஞ்சாலையில் செல்லும்போது, பவர் குறைபாட்டை உணர முடிகிறது.

பைக்கின் சேஸிக்குக் கூடுதல் சக்தியைத் தாங்கிக்கொள்ளும் திறன் இருப்பதையும், ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் இடத்திலும், திக்காமல் திணறாமல் சென்றதையும் உணர முடிந்தது. எக்ஸாஸ்ட்டின் டிஸைன் ஸ்மார்ட் ஆகவும், சத்தம் ரசிக்கும்படியும் இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டின் அதிர்வுகள் இல்லாத முதல் பைக்!

புதிய இன்ஜினில் Counter Balancer இடம் பெற்றிருப்பதால், மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் மிகப் பெரிய குறையாகத் இருந்த அதிர்வுகள், இதில் பெருமளவில் குறைந்திருக்கிறது. பவர் டெலிவரி சீராக இருப்பதுடன், டார்க் வெளிப்பாடும் ஸ்மூத். ஆனால், 5 ஸ்பீடு கியர்பாக்ஸின் இயக்கம் துல்லியமாக இல்லை. கியர் மாற்ற கிளட்ச் லீவரில் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருப்பதால், முழங்கையில் வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு பக்காவான ராயல் என்ஃபீல்டு பைக்குக்கான குணாதிசயங்களைக் கொண்ட ஹிமாலயன் இன்ஜினை அதிகமாக ரெவ் செய்வதால், எந்தப் பயனும் இல்லை. ஒருமுறை இன்ஜின் ஆயில் மாற்றினால், 10,000 கி.மீ தூரம் வரை செல்லலாம் என்கிறது என்ஃபீல்டு.

ராயல் என்ஃபீல்டின் அதிர்வுகள் இல்லாத முதல் பைக்!

ஓட்டுதல் தரம், கையாளுமை

சொகுசான ரைடிங் பொசிஷன், குறைவான சீட் உயரம், நல்ல சஸ்பென்ஷன், இருவர் வசதியாக அமர்ந்து நீண்ட தூரம் பயணிப்பதற்கான இருக்கைகள் என ஹிமாலயனின் சேஸியைக் கச்சிதமாக வடிவமைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இந்த பைக்கின் எடை 182 கிலோ என்றாலும், முன்பக்கம் எடை குறைவாக இருப்பதால், ஆஃப் ரோடில் பைக்கைக் கையாள்வது சுலபமாக இருக்கிறது. குறைவான வேகத்தில் செல்லும்போது சஸ்பென்ஷன் (முன்பக்கம் 41மிமீ டெலிஸ்கோபிக் - பின்பக்கம் லிங்க் மோனோஷாக்) சற்று இறுக்கமாக இருப்பதுபோலத் தோன்றினாலும், அதிக வேகங்களில் செல்லும்போது, இந்த செட்-அப்தான் பைக்கை நிலையாக வைத்திருக்க உதவுகிறது. கரடுமுரடான சாலைகளில் பயணிப்பதற்கும், ஃபுட் பெக்கில் நின்றபடி செல்வதற்கும் நம்பிக்கையைத் தருகிறது ஸ்டீல் சேஸி. இன்ஜின் அடிபடாமல் பாதுகாப்பதற்காக Bash Plate பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 21 இன்ச் மற்றும் பின்பக்கம் 17 இன்ச் வீல்களில், ஆன் ரோடு, ஆஃப் ரோடுக்கு ஏற்ற சியட் டயர்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்போக் வீல்கள் என்பதால் ட்யூப் டயர்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், இவை அளிக்கும் க்ரிப் நிறைவாக இருக்கிறது. பிரேக்குகளின் செயல்பாடு ஓகே ரகம்தான்.ABS இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ராயல் என்ஃபீல்டின் அதிர்வுகள் இல்லாத முதல் பைக்!
ராயல் என்ஃபீல்டின் அதிர்வுகள் இல்லாத முதல் பைக்!

 நம் சாலைகளுக்கு ஏற்ற சரியான பைக்கை ராயல் என்ஃபீல்டு தயாரித்திருக்கிறது. ஏனெனில், எப்படிப்பட்ட நிலப்பரப்பிலும், பருவ நிலையிலும் ஹிமாலயனை நம்பி பயணிக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துவது, இதன் மிகப் பெரிய பலம். பைக் தயாரிப்பாளர்கள் ஒதுங்கியிருக்கும் அட்வென்ச்சர் பைக் செக்மென்ட்டில் துணிந்து களமிறங்கியிருக்கும் என்ஃபீல்டு, ஹிமாலயனின் விலையை 1.82 லட்ச ரூபாய் என சரியாக நிர்ணயித்திருக்கிறது. அதனால், பைக்கில் உள்ள சிறு குறைகளை நம்மால் மறுபரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ள முடிகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு