Published:Updated:

விக்ராந்தின் விஷ்வரூபம்!

ஃபர்ஸ்ட் டிரைவ் : பஜாஜ் V15 ராகுல் சிவகுரு, படங்கள்: தி.விஜய்

புதிய அவென்ஜர் 150 பைக்கை இப்போதுதான் பார்த்ததுபோல இருக்கிறது. அதற்குள் பஜாஜ் நிறுவனத்திடம் இருந்து மற்றொரு 150சிசி பைக்காக வெளிவந்திருக்கிறது V15. அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில் பைக் கிடைப்பதால், அவென்ஜர் 150 க்ரூஸர் பைக்கின் மாதாந்திர விற்பனை, பஜாஜ் எதிர்பார்த்ததைவிட அதிகம். இந்தியாவின் பிரபல போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த்தின் இரும்பைக் கொண்டு V15 பைக்கின் பெட்ரோல் டேங்க்கைத் தயாரிக்கும் பஜாஜ், இதைச் சரியான நேரத்தில் களமிறக்கியிருக்கிறது. இந்தியக் கடற்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள், கடற்படையின் மீது மரியாதை வைத்திருப்பவர்கள் என பலரையும் V15 பைக்கின் உரிமையாளர்களாக மாற்ற, பஜாஜ் முயற்சி செய்துவருகிறது.

டிஸைன், சிறப்பம்சங்கள்

சுருக்கமாகச் சொல்வது என்றால், பலவித பைக்குகள் சேர்ந்த கலவையாக இருக்கிறது V15 பைக்கின் ஸ்டைல். முன்பக்கம் டிஸ்கவர் போலவும், பக்கவாட்டுத் தோற்றம் Moto Guzzi பைக்குகளைப்போலவும், பின்பக்கம் அவென்ஜர்போல தாழ்வான வடிவம் கொண்டும் கலந்துகட்டி அடித்திருக்கிறது பஜாஜ். ஆனால், ஒட்டுமொத்த பைக்காகப் பார்க்கும்போது, இந்தக் குறைகள் அனைத்தும் மறந்துபோகின்றன. பைக்கில் உள்ள லோகோ, கிராப் ரெயில், கிராஃபிக்ஸ் படு ஸ்மார்ட். V15 பைக்கின் ஃபிட் & ஃபினிஷ், கட்டுமானத் தரம், பெயின்ட் தரம் ஆகியவை நிறைவாக உள்ளன.

விக்ராந்தின் விஷ்வரூபம்!

ஹேண்டில்பாரில் இருக்கும் ஸ்விட்சுகள், லீவர்கள், ரியர் வியூ மிரர்கள், கைப்பிடிகள் அனைத்தும் பயன்படுத்த வசதியாகவும், தரமாகவும் இருக்கின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் தெளிவாக இருப்பதுடன், டேங்க்கில் இருக்கும் பெட்ரோலின் அளவுக்கு ஏற்ப, பச்சை அல்லது சிவப்பு நிறத்திற்கு மாறும் LED பல்புகளால் ஆன ஃப்யூல் கேஜ் உபயோகமானதாக இருக்கிறது. 10 ஸ்போக் அலாய் வீல்களில், முன்பக்கம் 18 இன்ச், பின்பக்கம் 16 இன்ச் அளவும் ட்யூப்லெஸ் டயர்களாக இடம்பிடித்திருக்கின்றன. சீட்டில் செய்யப்பட்டுள்ள நூல் வேலைப்பாடுகள் அருமை. பின்பக்க சீட்டின் மேலே இருக்கக்கூடிய கவுலை MANDATORY ACCESSORY ஆக அளித்திருக்கும் பஜாஜ், அதை அகற்றுவதற்கான சாவியை (ALLEN KEY) இக்னீஷன் சாவியுடன் இணைத்துள்ளது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

எந்த செக்மென்ட்டை எடுத்துக்கொண்டாலும், அதில் பஜாஜின் பைக்குகள் பவர்ஃபுல்லாகவே இருக்கும். ஆனால், அந்த விதியானது V15 பைக்குக்காகத் தளர்த்தப்பட்டிருக்கிறது. ஆம், V15 பைக்கில் DTS-i வசதியுடன், சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு - கார்புரேட்டட் 149.5சிசி இன்ஜினைப் பொருத்தியுள்ள பஜாஜ், அதனை ஆரம்ப மற்றும் மித வேகத்துக்காக ட்யூன் செய்திருக்கிறது.

11.8bhp@7,500rpm பவர் மற்றும் 1.3kgm@5,500rpm டார்க் அளவுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. அதனால், எதிர்பார்த்தபடியே நெரிசலான நகர டிராஃபிக்கில் எளிதாகப் பயணிக்க முடிவதுடன், குறைவான இன்ஜின் சுழற்சியிலேயே அதிக டார்க் கிடைப்பதால், பைக்கை ஓட்டுவது நல்ல அனுபவமாக இருக்கிறது.

லைட்டான கிளட்ச் உதவியுடன், பைக்கின் 5 கியர்களையும் ஸ்மூத்தாக மாற்ற முடிகிறது. ஆனால், 5 கியர்களும் மேலே என்ற அமைப்பில் இருக்கும் கியர் மாற்றும் விதம்தான் எரிச்சலாக இருக்கிறது. பைக்கின் ஆரம்பகட்ட பெர்ஃபாமென்ஸை நம்பி, க்ரூஸர்போல இயங்கும் பைக்கின் ஆக்ஸிலரேட்டரை, ஸ்போர்ட்ஸ் பைக்போல இயக்கினால், பவர் குறைபாட்டை உணர முடிகிறது. V15 பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தத்தை ரசிக்கலாம். சமீபத்திய பஜாஜ் பைக்குகளைப் போலவே, இந்த பைக்கின் இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குவதுடன், அதிர்வுகள் பெருமளவில் கட்டுப் படுத்தப்பட்டிருக்கின்றன.

விக்ராந்தின் விஷ்வரூபம்!

ஓட்டுதல் தரம், கையாளுமை

உயரமான ரைடிங் பொசிஷன், கச்சிதமான இருக்கை, கைக்கு எட்டும் தூரத்தில் ஹேண்டில்பார் என பக்காவான கம்யூட்டர் பைக்காக இருக்கிறது பஜாஜ் V15. இரும்பால் ஆன டபுள் கிரேடில் சேஸியில், முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன்; பின்பக்கம் இரட்டை கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்ஸார்பர் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சேரும்போது, ரைடருக்கு நம்பிக்கை அளிக்கும் கையாளுமை, ஓட்டுதல் தரம் கிடைக்கிறது. இருக்கைகள் தாழ்வாக இருக்கும் காரணத்துக்காக, அவற்றில் அவென்ஜரின் சொகுசுத் தன்மையை எதிர்பார்க்கக் கூடாது. 240மிமீ முன்பக்க பெட்டல் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க 130மிமீ டிரம் பிரேக்கின் செயல்பாடு, போதுமான அளவில் இருக்கின்றன.

விக்ராந்தின் விஷ்வரூபம்!

முதல் தீர்ப்பு

தனித்தன்மை மிக்க கம்யூட்டர் பைக்காகத் திகழ்கிறது V15. போட்டியாளர்கள் யாரும் இல்லாதபடி பைக்கை வடிவமைத்து, அதனை சந்தைப்படுத்திய விதத்திலும் பஜாஜ் தனது திறமையை நிரூபித்துள்ளது. V15 பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை, 73,604 ரூபாய். இது, பஜாஜின் மற்ற 150சிசி பைக்குகளான பல்ஸர் 150 பைக்கைவிட 11,000 ரூபாயும், அவென்ஜர் 150 பைக்கைவிட 15,000 ரூபாயும், பல்ஸர் AS150 பைக்கைவிட 20,000 ரூபாயும் குறைவு. இந்த விலை வித்தியாசம் மற்றும் டிஸைன் ஆகியவை, V15 பைக்கை வெற்றியாளராக மாற்றலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு