Published:Updated:

லாரி டிரைவர் இல்லை; ட்ரக் ரேஸர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
லாரி டிரைவர் இல்லை;  ட்ரக் ரேஸர்!
லாரி டிரைவர் இல்லை; ட்ரக் ரேஸர்!

கா.பாலமுருகன்

பிரீமியம் ஸ்டோரி

ஃபார்முலா ஒன் ரேஸுக்கும் மோட்டோ ஜீபி ரேஸுக்கும் இணையாக, ட்ரக் ரேஸும் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் லாரி தயாரிப்பில் அசோக் லேலாண்ட், டாடா, மஹிந்திரா, ஐஷர் ஆகிய இந்திய நிறுவனங்களுடன் பாரத் பென்ஸ், AMW, ஸ்கானியா, வால்வோ, மான், இசுஸூ என வெளிநாட்டு நிறுவனங்களும் கடுமையாகப் போட்டி போடுகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் டாடா, ட்ரக் ரேஸை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்திவருகிறது.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ரேஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம் - இதில் இருக்கும் த்ரில் மட்டும் அல்ல... ரேஸ் ட்ராக்தான் இவற்றுக்குப் பரிசோதனைச் சாலை. டாடா, இந்த ட்ரக் ரேஸை நடத்துவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பிரமாண்டமான லாரியைக் கட்டுப்படுத்தி ஓட்ட வேண்டும் என்ற ஆசை, சிறுவர்களாக இருக்கும் பருவம் தொட்டே பலருக்கும் அரும்பும். என்றாலும் ‘லாரி டிரைவர்கள்’ மீது சமூகம் கொண்டிருக்கும் பார்வை வேறு மாதிரி இருப்பதால், நாளடைவில் பலருக்கும் இந்தத் தொழில் மீது இருக்கும் ஈர்ப்பு நீர்த்துவிடுகிறது. ‘ட்ரக் டிரைவர் தொழில் என்பது த்ரில்லிங்கான தொழில் மட்டுமல்ல... கவுரவமான தொழிலும்தான்’ என்பதை மக்கள் மனதில் பதிய வைப்பதற்கான முயற்சியும் டாடா நடத்தும் இந்த ட்ரக் ரேஸுக்குப் பின்னால் இருக்கிறது.

லாரி டிரைவர் இல்லை;  ட்ரக் ரேஸர்!
லாரி டிரைவர் இல்லை;  ட்ரக் ரேஸர்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக டாடா நடத்தும் T1 ப்ரைமா ட்ரக் ரேஸிங்கின் சீஸனின் மூன்றாவது ஆண்டு இது. இதில்தான் புதிய முன்னெடுப்பைச் செய்துள்ளது டாடா. நாடு முழுவதும் உள்ள ப்ளீட் ஆபரேட்டர்களிடம் உள்ள டாடா ப்ரைமா ட்ரக் ஓட்டும் டிரைவர்களில், 45 வயதுக்கு உட்பட்ட, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது டிரைவர் அனுபவம் உள்ளவர்களை இந்த ரேஸுக்கு அது தேர்ந்தெடுத்திருக்கிறது.

விண்ணப்பித்த 543 பேரில், சோதனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, முதற்கட்டமாக 147 பேரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது டாடா. இதில், டிரைவர்களின் ட்ரக் ஓட்டும் திறமையை மதிப்பிட்டு, அதில் 132 பேருக்கு முறையான பயிற்சி அளித்திருக்கிறது. அதில் சிறப்பாக வாகனம் ஓட்டிய 64 பேரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்ற டாடா, இவர்களுக்கு செமி ஃபைனல் போட்டி ஒன்றை வைத்து, அதில் தேர்வான 26 பேருக்கு, ஒரு ரேஸருக்கு அளிக்க வேண்டிய அத்தனை பயிற்சிகளையும் அளித்திருக்கிறது. இதில் வெற்றி பெற்ற 12 பேர், இறுதிப் போட்டியில் கலந்துகொண்டார்கள்.

போட்டியில் கலந்துகொண்ட டிரைவர்களின் ஊர்களில் இருந்து உறவினர்களும் நண்பர்களுமாக, ஃபார்முலா ரேஸ் நடப்பதைப்போன்ற கூட்டம் ஆர்வமாகக் கூடியிருந்தது ஆச்சரியம். பீகார், உ.பி, ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இந்த 12 டிரைவர்களின் குடும்பப் பின்னணியும் சூழலும் வெவ்வேறானவை. குடும்பத்தைக் காப்பாற்ற நெடுஞ்சாலையில் பசி, தூக்கம் மறந்து வாழ்வை நகர்த்துபவர்கள். வகுப்பறை, உடற்பயிற்சி, ரேஸ் ட்ராக், விமானப் பயணம் என அவர்களுக்கு இது முற்றிலும் வேறான உலகம். அவர்களிடம் இருந்த பிரமிப்பும் கூச்சமும் மக்கள் ஆரவாரங்களுக்கு நடுவே, ட்ராக்கில் அவர்களை ஊர்வலமாக அழைத்துவந்தபோது கண்ணீரை வரவழைத்தது.

லாரி டிரைவர் இல்லை;  ட்ரக் ரேஸர்!

இந்திய டிரைவர்களுக்கான ரேஸ், இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு ஆறு பேர் வீதம் நடத்தப்பட்டது. இந்தியாவில், இந்தியர்களால், இந்திய டிரைவர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த ரேஸை, பஞ்சாப் கிங்ஸ் லெவன் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்களும், ஹார்லி டேவிட்சன் பைக் கிளப்பினர்களும் வந்து வாழ்த்த... பலத்த எதிர்பார்ப்புடன் ரேஸ் தொடங்கியது. 2.5 கி.மீ நீளம் கொண்டது ஒரு லேப். மொத்தம் 8 லேப்கள். இந்தப் போட்டியின் 20 கி.மீ தூரத்தைக் குறைவான நேரத்தில் கடப்பவர்கள்தான் வின்னர்.

முதல் பிரிவில் கலந்துகொண்ட டிரைவர்களில், ஹரியானாவைச் சேர்ந்த ஜகத்சிங் தகுதிச் சுற்று அடிப்படையில், போல் பொசிஷனில் முதல் இடத்தில் இருந்தார். பச்சைக் கொடி காட்டப்பட்டதும் சீறிப் பறந்தன ட்ரக்குகள். ரேஸ் ஆரம்பித்தபோது, யார் எந்த பொசிஷனில் இருந்தார்களோ, அதே பொசிஷன்தான் 8-வது லேப் வரை நீடித்தது. 15.33 நிமிடங்களில் வெற்றிக் கோட்டை ஜெகத்சிங் தாண்டியதும், கரகோஷம் விண்ணைப் பிளந்தது. இரண்டாம் இடம் பிடித்த உ.பி-யைச் சேர்ந்த மல்கீத்சிங்குக்கும் இவருக்கும் 15 விநாடிகள்தான் வித்தியாசம். அதேபோல், இவருக்கும் மூன்றாம் இடம் பிடித்த பீகாரைச் சேர்ந்த ராஜ்குமார் மஹதாவுக்கும் 1 விநாடிதான் வித்தியாசம்.

லாரி டிரைவர் இல்லை;  ட்ரக் ரேஸர்!

இரண்டாவது பிரிவில் கலந்து கொண்ட ஆறு பேரில் ஆந்திராவைச் சேர்ந்த நாகர்ஜுனா 15.19 நிமிடங்களில் வெற்றிக்கோட்டைத் தொட்டார். இரண்டாவது இடத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த பாக்சந்த்தும், மூன்றாம் இடத்தை ஹரியானாவைச் சேர்ந்த ஆனந்தும் பெற்றனர். இவர்களுக்குள் 4 மற்றும் 6 விநாடிகள்தான் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, ஒரு வட இந்தியரும் ஒரு தென்னிந்தியரும் முதல் இடத்தைப் பிடித்து இந்திய ட்ரக் ரேஸ் உலகில் முதல் முத்திரையைப் பதித்துள்ளனர்.

இனி, ட்ரக் டிரைவர்கள் உலகம் ட்ரக் ரேஸைப் பற்றியும் பேசும்!

இன்டர்நேஷனல் டிரைவர் ரேஸ்!

இன்டர்நேஷனல் டிரைவர்களுக்கான  போட்டி, வழக்கம்போல விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் 24 பேர் கலந்துகொண்ட ரேஸ், இரண்டு பிரிவுகளாக நடத்தபட்டது. முதல் பிரிவில் டேவிட் ஜென்கிஸன் என்ற ரேஸர் முதல் இடம் பிடித்தார். இரண்டாவது பிரிவில் மேட் சம்மர்ஃபீல்டு என்பவர் முதல் இடம் பிடித்தார்!

இரண்டே மாதங்களில் பயிற்சி!

டிரைவர் தேர்வு கடந்த ஜனவரி 8-ம் தேதிதான் துவங்கியுள்ளது. இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேர்களுக்கும் - ‘மோமா’ எனும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிபுணர்களைக் கொண்டு இரண்டு மாதம் பலவிதமான பயிற்சிகளை அளித்திருக்கிறது டாடா.

லாரி டிரைவர் இல்லை;  ட்ரக் ரேஸர்!

பயிற்சி அளித்தவர்களில் முக்கியமானவர், ஃபார்முலா ஒன் ரேஸ் வீரரான கரூண் சந்தோக்கின் அப்பா விக்கி சந்தோக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு