Published:Updated:

பல்ஸர் 220-ல் 120 நாள்!

சாதனை : பைக் பயணம் ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி

கோவையைச் சேர்ந்த பாலாஜி, பொறியியல் பட்டதாரி. பைக்கில் பயணம் செய்வது என்றால் ரொம்ப இஷ்டம்.

2011-ம் ஆண்டு பஜாஜ் பல்ஸர் 220 பைக் வாங்கிய பிறகு, ஒருமுறை கோவாவுக்கு நான்ஸ்டாப்பாக ஆக்ஸிலரேட்டர்  முறுக்கினார். திருப்தி அடையாத பாலாஜிக்கு, திடீரென உதித்தது அந்த யோசனை. ‘இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பல்ஸரை விரட்டினால் என்ன?’

ஆனால், தனியே பயணம் செல்வதில் நிறைய இடர்பாடுகள் உண்டு. ஆனாலும், ‘‘இடர்பாடுகளை எல்லாம் வென்று திரும்புவதுதான் உண்மையான பயணம்!’’ என்கிறார் பாலாஜி. 120 நாட்கள்; மொத்தம் 19,787 கி.மீ தூரம். முழுமையாக, வட கிழக்கு மாநிலங்களை ஆற அமர ரசித்து முடித்துவிட்டு வந்தவரைச் சந்தித்தோம்.

‘‘கடந்த மூன்று ஆண்டுகளாகவே வடகிழக்குப் பயணம் தொடர்பாகத் திட்டமிட்டு வந்தேன். இதற்காக சம்பளப் பணத்தில் இருந்து கணிசமான தொகையையும் சேகரித்துவைத்தேன். 45 நாட்களில் இந்தப் பயணத்தை முடிக்க வேண்டும் என்பது திட்டம். கோவையில் இருந்து 2015 நவம்பர் 4-ம் தேதி கிளம்பினேன்.

பைக் பயணம் சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதால் இந்தோனேசியாவில் இருக்கும் எனது நண்பர் ஒருவர், பைக்கில் சில மாற்றங்களைச் செய்து கொடுத்திருந்தார்.
முன்பக்க VENDOR, விண்ட் ஷீல்ட், ஹேண்டில்பார் கிட், முன்பக்க ஃபோர்க்கின் உயரத்தை அதிகரிக்கும் EXTENDER, பின்பக்க சஸ்பென்ஷனின் உயரத்தை அதிகரிக்கும் EXTENDER, க்ராஷ் ஃப்ரேம், ரேஸிங் ஸ்டீல் BRAIDED பிரேக் லைன், இரிடியம் ஸ்பார்க் ப்ளக், SADDLE பேக் கிட், ரைடிங் கியர் என பக்காவாக ரெடியாகி இருந்தேன்.

பல்ஸர் 220-ல் 120 நாள்!

இரவு நேரப் பயணங்களைப் பெரும்பாலும் தவிர்த்தேன் என்றாலும் நாட்கள் செல்லச் செல்ல, அங்கிருக்கும் சாலைகள் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப, அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. இது தவிர உணவு, இருப்பிடம், உடல்நிலை, படங்கள்/வீடியோ, பைக் பராமரிப்பு என அனைத்தும் ‘நமக்கு நாமே’ திட்டம்தான்.

சிக்கிம், பூட்டான், அருணாச்சலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, மியான்மர், சீனாவின் எல்லை ஆகிய இடங்களை முழுவதுமாகச் சுற்றிப்பார்த்து விட்டேன். பயண வழியை வரைபடங்கள் மற்றும் நண்பர்கள் வாயிலாகத் திரட்டினேன். முதல்கட்டமாக, சற்று சாய்வான நேபாள எல்லை நோக்கிப் பயணிக்கும்போது, பைக்கின் கிளட்ச் பிளேட் உடைந்துவிட்டது.

6 டிகிரி அளவுக்குக் கடும் குளிரில் செய்வதறியாது நின்றேன். அந்த இரவு நேரத்தில் தங்குமிடத்தை [TENT] அமைக்க முடியாததால், என்னிடமிருந்த ஜெர்கினை உடுத்திக்கொண்டு, அலுமினிய [FOIL] பேப்பரை என் மீது சுற்றிக்கொண்டு அப்படியே சாலை ஓரமாக உறங்கிவிட்டேன். சாலைகள் மோசமாக இருந்தாலும், நான் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவே உணர்ந்தேன்.

அதன் பிறகு, இந்தியாவின் உயரமான மலைச் சிகரம் எனப்படும் கஞ்சன்ஜங்காவைச் சென்றடைந்தேன். அந்த இடத்துக்கு ஃபோர் வீல் டிரைவ் வசதியுள்ள வாகனங்களால் மட்டுமே செல்ல முடியும். ஆனால், அந்த இடத்தை எனது பைக்கிலேயே பயணித்து எட்டியது பெருமையாக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக ஆயில் லீக் ஆக, அடிக்கடி இன்ஜின் ஆயிலை நிரப்ப வேண்டியது வந்தது.

வடக்கு சிக்கிமில் இருக்கும் உயரமான ஏரிகளில் ஒன்றான குருபோங்மார் உள்ளே செல்வதற்கு மத்திய அரசின் உள்துறை அனுமதி தேவை. ஏனெனில், இந்த இடம் சரியாக 17,100 அடி உயரத்தில் இருப்பதால், ஆக்ஸிஜன் அளவு குறைவு. அங்கிருந்து சீனாவின் எல்லை வெறும் 4 கி.மீ தூரம். அங்கிருக்கும் ‘பழைய பட்டுப் பாதை’ அதாவது ‘ஓல்ட் சில்க் ரூட்’ இந்தியா - சீனா இடையே பட்டு வர்த்தகம் நடைபெற்ற இடம். பூட்டானில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதுடன், சாலைகள் முழுவதும் மண் சூழ்ந்து இருப்பதால், பொறுமையுடன் சென்றேன். இதனால், 420 கி.மீ தூரத்தைக் கடக்க ஒன்றரை நாட்கள் ஆனது.

பல்ஸர் 220-ல் 120 நாள்!

அடுத்தபடியாக அஸாமைச் சென்றடைந்த போது, அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மிசோரம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான இன்லைன் பெர்மிட் இருந்தால் மட்டுமே மேலே செல்ல முடியும் எனத் தெரியவந்தது. Land of rising sun என்றழைக்கப்படும் அருணாச்சலப் பிரதேசம், பெரிய பரப்பளவைக்கொண்டிருந்தாலும், மக்கள் தொகை குறைவாக இருந்தது. அருணாச்சலப் பிரதேசத்தில் நான் செலவழித்த 23 நாட்களில், ஒரு நாளைக்கு 200 கி.மீ விதம் 4,700 கி.மீ தூரத்தைக் கடந்தேன். இவ்வுளவு கால தாமதத்துக்கு, சேறும் சகதியுமான சாலைகளே காரணம். இங்கு மூங்கில் வீடுகளைப் பார்த்தேன். மேலும் தூய்மையான காற்று மற்றும் இயற்கை படர்ந்துள்ள இந்த இடத்தில், மக்கள் தங்கள் அன்றாட வருமானத்திற்காக விவசாயம் செய்தாலும், பணம் சேமித்து வைக்கும் பழக்கம் அறவே இல்லாதது கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தது.

இதனருகே இருக்கும் தவாங்கில் இருந்து 40 கிமீ பயணித்தால், பம்லாபாஸை அடைந்துவிடலாம். இதன் உயரம் 14,500அடி என்பதுடன், முழுக்க பனி சூழ்ந்துள்ள இடம். எனவே, பனியில் பைக் வழுக்காமல் இருப்பதற்காக, டயர்களில் சணல் கயிற்றைச் சுற்றிக்கொண்டேன். இங்குதான் 2,000 வருடப் பாரம்பரியமிக்க கோன்யார்க் பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

‘இந்தியாவின் விளிம்பு’ என திரிபுராவை அழைக்கலாம். இந்தியா - மியான்மர் எல்லையில் தமிழ்ச் சங்கம் அமைந்திருக்கிறது. அங்கே எனக்கு நல்ல வரவேற்பை அளித்ததுடன், சுவையான நமது பாரம்பரிய உணவையும் அளித்தனர் சங்கத்தினர். நான் அசைவம் சாப்பிடுபவன் என்பதால், மாறிக்கொண்டே வரும் உணவுச் சூழலுக்கு ஏற்ப என்னால் பழகிக்கொள்ள முடிந்தது.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், வண்டுகள், எலிகள் போன்ற ஜந்துக்களை சில நேரத்தில் வேறு வழியின்றி உண்ண நேர்ந்தது. மியான்மர் மற்றும் இந்தியாவைப் பிரிக்கும் எல்லையான ஜுனாபிட்டோவில், தீவிரவாதிகளின் தொடர் அச்சுறுத்தல் நிலவியதன் காரணமாக, 350 கி.மீ தூரத்தை இடையில் எங்கும் நிற்காமல் ஒரே மூச்சாகக் கடந்தேன்.

பல்ஸர் 220-ல் 120 நாள்!

அதன் பின்னர் நாகலாந்து - மணிப்பூர் - மியான்மர் - மிசோரம் - திரிபுரா - மேகாலயா - அஸ்ஸாம் - கொல்கத்தா - மேற்கு வங்காளம் - விசாகப்பட்டினம் - விஜயவாடா - ஹைதராபாத் - திருப்பதி - சென்னை என்பது நான் பயணித்த வழி.

வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் பாச உணர்வு மிக்கவர்கள். ஒருமுறை நான் தங்குவதற்குக் கூடாரத்தைக் கட்டிக் கொண்டிருந்தபோது, அவர்களாகவே முன்வந்து தங்கள் வீட்டில் நான் தங்கிக்கொள்வதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்ததுடன், நான் கேட்காமலேயே உணவையும் அளித்தனர்.  அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளில் மின்சார வசதி மற்றும் மொபைல் நெட்வொர்க் என எதுவும் இல்லை.

பல்ஸர் 220-ல் 120 நாள்!

ஒரு ஆச்சரியமான ஒரு விஷயம்,  என் பைக் ஒருமுறைகூட பஞ்சர் ஆகவில்லை. பலவிதமான இன்ஜின் ஆயில், மூன்று கிளட்ச் பிளேட், முன்பக்கம் 6 மற்றும் பின்பக்கம் 12 பிரேக் பேடுகள் ஆகியவை நான் பயணத்தின்போது பைக்கில் மாற்றிய விஷயங்களாகும்.

பயணம் மேற்கொண்ட 120 நாட்களில், கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்துவிட்டேன். பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்ட பிறகு, இவ்வளவு தூரத்தை யாருமே இதுவரை தனியாகப் பயணித்தது இல்லை என்று அறிந்தபோது பெருமையாக இருந்தது!” என்றார் பாலாஜி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு