Published:Updated:

100 ரூபாய்க்கு வின்டேஜ் ரைடு!

வின்டேஜ் ரைடுதமிழ், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

 ‘‘இது எந்த வருஷ மாடல்?’’

‘‘காமராஜர் இந்த கார்தானே வச்சிருந்தாரு?’’

‘‘இதுல ஒரு ரைடு போனா செமயா இருக்கும்ல?’’

- இப்படித்தான் தேனாம்பேட்டை சிக்னலில் நின்ற அந்த 1946 செவர்லே ப்ளைமவுத் காரில் உள்ளவரிடம் கேள்விகளாகத் துளைத்துக் கொண்டிருந்தார்கள் மக்கள். கிட்டத்தட்ட பல்ஸரின் பவரில் சீறிக்கொண்டு கிளம்பிய அந்த வின்டேஜ் மாடல் காரை ஃபாலோ செய்ததில், அன்றைக்கு ஒரு புண்ணிய கவரேஜ் கிடைத்ததில் ஆசிரியரிடம் பாராட்டு வாங்கியது தனிக் கதை!

இனி ஓவர் டு ‘வின்டேஜ் ஆன் வீல்ஸ்’ புரோகிராம்!

சென்னை WCC கல்லூரி வளாகத்தில், அந்தக் கத்திரி வெயிலிலும் செம கூட்டம். ‘நயன்தாரா வந்திருப்பாங்களோ’ என்று நினைத்தால், ஆண்ட்ரியா வந்திருந்தார். மைதானத்தையும் அவரையும் சுற்றி 50-க்கும் மேற்பட்ட வின்டேஜ் மற்றும் கிளாஸிக் கார்கள். கூடவே, 1000-க்கும் அதிகமான டீன்ஏஜ் பெண்கள். ‘‘ஹலோ கேர்ள்ஸ்... வின்டேஜ் கார்கள் என்பது காலத்தால் அழியக் கூடாதவை. நம் கலாசாரம் போற்றக்கூடியவை. ஹேட்ஸ் ஆஃப் டு தி ஓனர்ஸ் ஆஃப் தி கார்ஸ்... இது ஒரு அரிய வாய்ப்பு. இதை நீங்கள் பயன்படுத்தி, இந்தச் சமூகத்துக்கு உதவக் கடமைப்பட்டுள்ளீர்கள்!’’ என்று லெக்சர் கொடுத்து, கொடியசைத்து அந்த நிகழ்ச்சியைத் துவங்கிவைத்தார் அவர்.

100 ரூபாய்க்கு வின்டேஜ் ரைடு!
100 ரூபாய்க்கு வின்டேஜ் ரைடு!
100 ரூபாய்க்கு வின்டேஜ் ரைடு!

‘‘ராலியில் என்ன வாய்ப்பு? இதில் சமூகத்துக்கு எப்படி உதவ முடியும்?’’ என்று WCC கல்லூரியின் HOD பிலிஃப்பைச் சந்தித்தோம்.

‘‘நீங்கள் நினைப்பதுபோல் இது ராலி இல்லை. இது கேன்சரில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வின்டேஜ் நிகழ்ச்சி. இதில் கல்லூரிப் பெண்கள் யாரும் கலந்து கொண்டு, தங்களுக்குப் பிடித்த காரில் ரைடிங் போகலாம். ஒவ்வொருவருக்கும் 100 ரூபாய் கட்டணம். இதன் மூலம் கிடைக்கும் நிதியை கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்குக் கொடுக்க இருக்கிறோம்!’’ என்ற ஃபிலிஃப்பிடம் ‘கங்கிராட்ஸ்’ சொல்லிவிட்டு, ‘எப்படி இந்த ஐடியா?’ என்பதுபோல் பார்த்த நம்மைப் புரிந்தவராய் மேலும் தொடர்ந்தார்.

100 ரூபாய்க்கு வின்டேஜ் ரைடு!

‘‘என் வகுப்பைச் சேர்ந்த சில மாணவிகள் கேன்சரில் பாதிக்கப்பட்டு, என் கண் முன்னாலேயே இறந்துபோனது என் வாழ்வில் மிகக் கொடூரமான விஷயம். கொடூரம் என்னவென்றால், அந்த மாணவிகள் பலரும் சிகிச்சை பலனின்றி இறந்து போகவில்லை; சிகிச்சைக்குப் பணமின்றி உயிர் பிரிந்தார்கள். அப்போதுதான் எனக்கு இந்த எண்ணம் உதயமானது. வின்டேஜ் கார்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தி, அதில் வரும் பணத்தை ஏழை மாணவிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். உடனே மெட்ராஸ் கிளப்பில் பேசினேன். 50-க்கும் மேற்பட்ட கார்களின் உரிமையாளர்கள் பேசினார்கள். இது கேள்விப்பட்டு, பைக் கிளப்களைச் சேர்ந்தவர்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்கிறார்கள். என் வாழ்நாளில் இது சந்தோஷமான நாள்!’’ என்று கார்களுக்கும், உரிமையாளர்களுக்கும், பைக் கிளப்பினருக்கும் பாசத்துடன் நன்றி தெரிவித்தார்.

‘‘ஹே... இதுல ஒரு ரைடு போகலாம்.’’ என்று சில மாணவிகள் கும்பலாக அந்த 1930 மாடல் ஃபோர்டு காரில் ஏறியபோது ஒரு க்ளிக். ‘‘ஃபோர்டுதான் எங்க பேவரைட்’’ என்று மொத்தமாக தம்ஸ் அப் காட்டினர் பெண்கள்.

இதன் உரிமையாளர் அபிநவ் கிருஷ்ணனிடம், ஃபோர்டு தவிர நான்கு வின்டேஜ் கார்கள் வைத்திருக்கிறார். ‘‘என் கார்கள் எத்தனையோ ராலிகளில் கலந்திருக்கின்றன. இப்போது அவை மருத்துவச் சிகிச்சைக்கு உதவுகின்றன என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது’’ என்று தனது ஃபோர்டை வாஞ்சையாகத் தடவினார்.

‘‘இந்த பச்சை டாட்ஜ் கார் செமையா இருக்குல்ல’’ என்று 1920 மாடல் டாட்ஜ் காரைச் சுற்றி ஒரு பெண்கள் கூட்டம். ‘‘வாவ்...மோட்டார் விகடனா... எங்க அப்பா 1-ம் தேதி வாங்கிடுவாரு சார்... சர்ப்ரைஸா இருக்கட்டும்!’’ என்று டாட்ஜ் காருக்குப் பக்கத்தில் நின்றபடி போஸ் கொடுத்தார் கொரட்டூரில் இருந்து வந்த ஷாலினி.

100 ரூபாய்க்கு வின்டேஜ் ரைடு!

செவர்லே இம்பாலா, ப்ளைமவுத், டாட்ஜ், ஃபோர்டு, ஃபியட், பென்ஸ் என்று கலர் கலராக எல்லா கார்களிலும் ஹாயாக 5 கி.மீ ரைடு போய்விட்டு வந்து, வெயிலில் செல்ஃபி எடுத்தபடி, ஃபேஸ்புக்கில் அப்டேட்டியபடி, லைக்ஸ்களைக் கணக்கிட்டபடி கார்களுடனான தங்கள் நேசத்தைக் காட்டிக் கொண்டிருந்தனர் கல்லூரி மாணவிகள்.

‘வெறும் கார் மட்டும்தானா?’ என்று தேடியபோது, மைதானத்தில் ஜாவா பைக்குகள், பார்வையாளர்களை ‘செல்ஃபி எடுக்க வா வா’ என்று அழைப்பதுபோல் வரிசை கட்டி நின்றிருந்தன. தானாக முன் வந்தார் ரோரிங் ரைடர்ஸ் கிளப்பின் ஆர்கனைஸர் னிவாசன். ‘‘ஜாவா, யெஸ்டி பைக்குகளை உயிர்போல் நேசிக்கும் 50 பேர் எங்கள் கிளப்பில் இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் எங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், இதில் ரைடு போனால் சிக்கலாகி விடும். எனவே, நாங்கள் 50 பேரும் டிக்கெட் எடுத்து கேன்சர் சிகிச்சைக்காக எங்களால் இயன்ற உதவியைச் செய்துள்ளோம்!’’ என்றார் ஸ்ரீனிவாசன். கார்களுக்கு இணையாக, பைக்குகளின் மீதும் பெண்களுக்கு கிரேஸ் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

100 ரூபாய்க்கு வின்டேஜ் ரைடு!

டைம்பாஸ் ஜாலி ராலிக்காக இல்லாமல், ஏதோ ஒரு சமூக நோக்கத்தின் பொருட்டு வின்டேஜ் கார்களைக் களமிறக்கியது பாராட்டுக்குரியது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு