Published:Updated:

எந்திரன் - 16

CRDi என்றால் என்ன?தொடர்: தொழில்நுட்பம்பரணி ராஜன்

பிரீமியம் ஸ்டோரி

 டீசல் இன்ஜின்களில் எப்போதும், டீசல் மட்டுமே தனியாக ஃப்யூல் இன்ஜெக்டர் (Fuel injector) மூலம் தெளிக்கப்படும். இந்த எரிபொருள், சிலிண்டரின் உள்ளே அழுத்தப்பட்ட உயர்வெப்பக் காற்றுடன் சேரும்போது எரிதல் நடக்கும். பெட்ரோல் இன்ஜின்களில் இருக்கும் ஸ்பார்க் பிளக்குக்குப் பதிலாக, இங்கு ஃப்யூல் இன்ஜெக்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலையைத் தாங்கும் தன்மை கொண்டது. டீசல் டேங்க்கில் இருந்து, ஃப்யூல் பம்ப் வழியாக அழுத்தத்துடன் வரும் டீசல், உயர் அழுத்தக் குழாய்களின் வழியாக ஃப்யூல் இன்ஜெக்டரில் வந்து நிரம்பும். பழைய டீசல் இன்ஜின்களில் ஒவ்வொரு சிலிண்டருக்கும் ஒரு ஃப்யூல் பம்ப் இருக்கும். இ்ன்ஜெக்‌ஷன் டைமிங்கின்போது (கம்ப்ரஸன் ஸ்ட்ரோக் முடியும் நேரத்தில்), ஃப்யூல் இன்ஜெக்டரில் இருக்கும் நாஸிலை (Nozzle) அழுத்திக்கொண்டிருக்கும் ஸ்பிரிங் மேலே தூக்கப்படும். ஏற்கெனவே அழுத்தப்பட்டிருக்கும் டீசல், தனக்கு வழி கிடைத்த சந்தோஷத்தில் நாஸில் வழியாக, சிலிண்டர் ஹெட்டிலோ, பிஸ்டனின் மேற்புறத்திலோ தெறிக்கும். இவை அனைத்தும் மெக்கானிக்கல் உபகரணங்கள் மூலமே இயக்கப்படுவதால், சத்தம் மற்றும் தேய்மானம் அதிகமாகவும், எரிதல் திறன் குறைவாகவும் இருக்கும். இந்தக் குறைகளைக் களையும் படியாக வந்ததுதான் CRDI (Common Rail Direct Injection) அமைப்பு.

எந்திரன் - 16

முந்தைய மெக்கானிக்கல் அமைப்பில், ஒவ்வொரு சிலிண்டருக்கும் ஒரு ஃப்யூல் பம்ப் இருக்கும் என்று சொன்னேன்.ஆனால், இந்த CRDI அமைப்பில் அனைத்து சிலிண்டர்களுக்கும் சேர்த்து ஒரே காமன் ரெயில் (Common rail) இருக்கும். எரிபொருள் டேங்க்கில் இருந்து வரும் டீசல், இந்த காமன் ரெயிலுக்குள் வரும். இங்கு ஒற்றை ரெயில் அமைப்பில், மொத்த டீசலும் அதிக அழுத்தத்தில் இருக்குமாறு வைக்கப்பட்டிருக்கும். இந்த CRDI தொழில்நுட்பத்திலும் சென்ஸார்கள் உண்டு. இவையும் ஆக்ஸிலரேட்டர் பொசிஷன், இன்ஜின் வேகம், க்ராங்க்‌ ஷாஃப்ட் பொசிஷன், மேனிஃபோல்டில் காற்றின் அழுத்தம், வெளிவரும் வாயுக்களில் ஆக்ஸிஜன் அளவு போன்றவற்றைக் கண்டறிந்து ECU-க்கு அனுப்பும். அதன் பின் இன்ஜினின் தேவைக்கேற்ப என்ன அழுத்தத்தில் டீசல் அனுப்பப்பட வேண்டும் என்பதை ECU கணக்கிட்டு அனுப்பும். இதனால், எல்லா சிலிண்டர்களுக்கும் தேவையான டீசல், ஒரேவிதமான உயர் அழுத்தத்தில் வைக்கப்பட்டிருக்கும். அதன் பின்பு, எந்த சிலிண்டருக்குத் தேவையோ, ஃபயரிங் ஆர்டர் (Firing order) முறைப்படி, அந்த சிலிண்டரில் இருக்கும் ஃப்யூல் இன்ஜெக்டரில் இருக்கும் சொலினாய்ட் வால்வை (solenoid valve) இயக்கி, நாஸில் மூலமாக டீசல் தெறிக்க வைக்கும். இங்கு வாகனத்தின் வேகம், பளுவுக்கு ஏற்ப (Load) தேவையான எரிபொருள் கணக்கிடப்பட்டு அனுப்பப்படுவதால், மைலேஜ் அதிகமாக இருக்கும். வெளிவரும் மாசுக்களும் குறைவாக இருக்கும். CRDI என்பது பொதுவான பெயர். ஒவ்வொரு நிறுவனமும் கொஞ்சம் வித்தியாசமாக CRDe / DICOR / Turbojet / DDIS / TDI எனப் பெயர்கள் வைத்து வணிகப்படுத்துகின்றன.

எந்திரன் - 16

ஸ்பார்க் ப்ளக் இல்லாததால், தானாகவே அழுத்தத்தில் தீப்பற்றிக்கொள்ளும் டீசலானது, குளிர்காலங்களில் அல்லது காலை நேரங்களில், தன் எரிதலுக்குத் தேவையான வெப்பநிலையை அடைவது கடினம். அந்தச் சமயங்களில் டீசல், Glow plug எனும் சிறிய எலெக்ட்ரானிக் முடுக்கி மூலம் தீப்பற்ற வைக்கப்படும். இதனை கோல்டு ஸ்டார்ட்டிங் (Cold starting) எனச் சொல்வார்கள்.

ஃபயரிங் ஆர்டர் (Firing Order)

ஃபயரிங் ஆர்டர் என்பது, பல சிலிண்டர்கள் இருக்கும் இன்ஜினில், ஒவ்வொரு சிலிண்டரிலும் பவர் ஸ்ட்ரோக் நடக்கும் ஆர்டராகும். இது இன்ஜினில் தேவையற்ற அதிர்வுகள், அதிக சத்தத்தைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, மூன்று சிலிண்டர் இருந்தால், முதல் சிலிண்டரில் பவர் ஸ்ட்ரோக் நடந்தால், அடுத்த பவர் ஸ்ட்ரோக் உடனே இரண்டாவது சிலிண்டரில் இருக்காது. மூன்றாவது சிலிண்டரில் நடக்கும். இதனால், இன்ஜினில் முறையான பவர் ஸ்ட்ரோக்குகள் சிலிண்டர்களுள் நடந்து, அதிர்வுகள் மட்டுப்படும். 1-3-4-2 அல்லது 1-3-2-4 என்பது 4 சிலிண்டர் இன்ஜின்களின் ஃபயரிங் ஆர்டர். 1-5-3-6-2-4 அல்லது 1-4-3-6-2-5 என்பது 6 சிலிண்டர் இன்ஜின்களின் ஃபயரிங் ஆர்டர். இதையே வேறு சில வகையிலும் வடிவமைப்பார்கள்.

- எந்திரன் பேசுவான்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு