Published:Updated:

பிச்சாவரத்துக்கு சாகாவரம் கொடுத்த மரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிச்சாவரத்துக்கு சாகாவரம் கொடுத்த மரம்!
பிச்சாவரத்துக்கு சாகாவரம் கொடுத்த மரம்!

ரீடர்ஸ் கிரேட்: எஸ்கேப் பென்ஸ் C க்ளாஸ்தமிழ், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

பிரீமியம் ஸ்டோரி

பென்ஸ் என்றாலே க்ளாஸ். அதிலும் பென்ஸ் C க்ளாஸ், டிஸைனிலேயே அப்ளாஸ் அள்ளும். ‘‘நாங்க எல்லோருமே பென்ஸ் லவ்வர்ஸ்!’’ என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள் - ராமசுப்ரமணியன், இளங்கோ, ஹரிபாபு. இந்த மாதம் கிரேட் எஸ்கேப்புக்காக சென்னையைச் சேர்ந்த ராமசுப்ரமணியன், தனது பென்ஸ் C க்ளாஸையும் தனது நண்பர்களையும் நமக்கு அறிமுகப்படுத்தினார். ‘‘2000-த்தில் டிவிஎஸ் 50-ல் ஒரு மெடிக்கல் ரெப் ஆக என் பயணத்தை ஆரம்பிச்சேன். அப்புறம் சுஸூகி மேக்ஸ் 100, மாருதி ஆல்ட்டோ, இண்டிகா, ஃபேபியா, ஸைலோ, க்ரெட்டா - இப்போ பென்ஸ். அடுத்து பென்ஸ் S க்ளாஸ். என்ன மாப்ள... நான் சரியாத்தான் பேசுறனா?’’ என்று C க்ளாஸின் ரிமோட் சாவியை ஆன் செய்தார் ராமசுப்ரமணியன்.

மண் அடுப்பு காலத்தில் இருந்து மின் அடுப்பு காலம் வரை அனைவரையும் பென்ஸ் கவர்ந்திழுப்பதற்குக் காரணம் - இதன் கட்டுமானமும், சீஸனுக்கு சீஸன் மாறும் புரொஃபஷனலான டிஸைனும்தான். பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், ஆடி A4, வால்வோ S60 போன்ற கார்களுக்குப் போட்டியாக ஆன்ரோடில் ஓடும் பென்ஸ் C க்ளாஸ், CKD முறையில் விற்பனை செய்யப்படுகிறது என்றாலும், எல்லாவற்றையும்விட விலை கொஞ்சம் அதிகம். அதே நேரத்தில், வசதிகளும் அதிகம். துல்லியமான ரிவர்ஸ் கேமரா ஸ்க்ரீன், மெரிடியன் ஆடியோ சிஸ்டம், 7 காற்றுப் பைகள், சன் ரூஃப் என்று பக்கா புரொஃபஷனல் காராக மிளிர்கிறது C க்ளாஸ். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ், ஓட்டும்போது செம ஜாலி மூடுக்கு நம்மைக் கொண்டுபோகிறது. 50 லட்ச ரூபாய் காரில் ‘ஃபன் டு டிரைவ்’ இருப்பதை ஆச்சரியமாகச் சொல்ல வேண்டியது இல்லை என்றாலும், ஹை ரேஞ்சில்கூட எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கும் பவர், 41.0kgm டார்க் என்று இந்தியா முழுக்க ECR இருந்தாலும் பென்ஸ் ஒரு கை பார்க்கும்.

பிச்சாவரத்துக்கு சாகாவரம் கொடுத்த மரம்!
பிச்சாவரத்துக்கு சாகாவரம் கொடுத்த மரம்!

பின்பக்கம் 3 ஹெட்ரெஸ்ட்டுகள், சீட் பெல்ட்டுகள் 3 இருந்தாலும், மூன்று பேர் வசதியாக உட்கார்ந்து பயணம் செய்வதற்கு, மற்ற கார்களைப்போல பென்ஸும் உடன்படவில்லை. ரியர் ஏ.சி வென்ட், நடுவில் இருந்த ஹரிபாபுவுக்குக் கொஞ்சம் சிரமத்தைத் தந்திருக்க வேண்டும். ‘‘இதுக்காகவே சீக்கிரம் S க்ளாஸ் வாங்கிடுங்க ராம் சார்!’’ என்றார். ஃபெராரி, ரோல்ஸ்ராய்ஸ் போல படு பிரீமியம் கார் கிடையாது; ஆனால், பென்ஸின் ஹார்ன் சவுண்ட் கேட்டதுமே திரும்பிப் பார்த்து மரியாதையாக வழிவிடுகிறார்கள் மக்கள். ‘‘20 வருஷத்துக்கு முன்னால டிவிஎஸ் 50-ல் போகும்போது ஹார்ன் அடிச்சா, ‘பெரிய பென்ஸ் வெச்சிருக்கான்; ஹார்ன் அடிக்கிறான்’னு கிண்டல் பண்ணுவாங்க. இப்போ உண்மையிலேயே பென்ஸ்ல போறேன்; அதுவும் மோட்டார் விகடன்கூட!’’ என்று ரொம்பப் பெருமிதமாகச் சொன்னார் ராமசுப்ரமணியன்.

பக்கா செடான் கார் என்பதால், ஆஃப் ரோடு இதற்குச் சரிவராது என்றும், சிதம்பரத்துக்குப் பக்கத்தில் உள்ள பிச்சாவரம் டூரிஸ்ட் ஸ்பாட் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ‘‘பாண்டிச்சேரி வழியா பிச்சாவரம் ரூட் ஜிபிஎஸ்-ஸில் செட் பண்ணிட்டேன்!’’ என்றார் முன்னால் அமர்ந்திருந்த இளங்கோ.

கானல் நீராகத் தெரிந்த ஈசிஆரில் காட்டாறுபோல பறந்து சென்றது பென்ஸ். கிழக்குக் கடற்கரைச் சாலையில், ராமசுப்ரமணியனுக்குச் சொந்தமான பந்தாவான ரெஸார்ட்டுக்குப் பக்கத்தில் போட்டோ ஷூட் நடந்து கொண்டிருந்தது. ‘‘சினிமா விகடனுக்கு ஒரு ஸ்கூப் நியூஸ் சொல்லட்டுமா சார்? என் ரிஸார்ட்டுக்கு அடுத்து இருக்கிற இடத்தை நயன்தாரா 5 கோடிக்கு வாங்கியிருக்காங்க! இனிமே யாராச்சும் என் வீடு எங்கேனு கேட்டா, நயன்தாரா வீட்டுக்குப் பின்னாலனு சொல்லிக்கலாம்!’’ என்று சிரித்தார் ராமசுப்ரமணியன்.

பிச்சாவரத்துக்கு சாகாவரம் கொடுத்த மரம்!

மகாபலிபுரம் செல்லாமல் வலது புறமாகத் திரும்பி, விருட்டென பாண்டிச்சேரி வந்தடைந்தோம். பாண்டிச்சேரியில் பாட்டில் விலைதான் குறைச்சல்; ஆனால், தங்கும் இடங்கள் காஸ்ட்லியாகவே இருக்கின்றன. குறைந்தபட்சம் 1,500 ரூபாயில் இருந்து 6,000 வரை ரூம்கள் தெறிக்கவிடுகின்றன. முழுவதுமாகத் தமிழ் பேசும் வேறு ஒரு மாநிலம் இருக்கிறது என்றால், அது பாண்டிச்சேரிதான். தமிழகத்துக்கும் புதுவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதும் மிகப் பெரிய ஒற்றுமை. அதேபோல், தேர்தல் பணப் புழக்கம் சம்பந்தமாக பயங்கர ரெய்டு நடந்து கொண்டிருந்தது. போக்குவரத்து விதிகளும் மிகக் கடுமையாகவே கடைப்பிடிக்கப்படுகின்றன. நமது பென்ஸைத் தடவித் தடவி சோதனை செய்தனர் போலீஸார். ‘‘ட்ரக், லாரியில பணம் கடத்துறது ஓல்டு ஸ்டைல் சார்.. காஸ்ட்லி காரும் இப்போ எங்க டார்கெட். ஸாரி சார்... இது எங்க கடமை!’’ என்று வழியனுப்பி வைத்தனர் காவல்துறையினர்.

மறுநாள் காலை கிளம்பியபோது, கடலூர் தாண்டி இன்னொரு எலெக் ஷன் செக்கிங். ‘‘பென்ஸ் எவ்வளவு சார் ஆகுது?’’ என்று ஆதங்கமாக விசாரித்தார் தமிழக காவல்துறை அதிகாரி ஒருவர். சிதம்பரத்துக்குச் செல்லும் வழியில் ஜாலியாக ஸ்டீயரிங்கை இடதுபுறம் திருப்பி 11 கி.மீ பயணித்தால், பிச்சாவரம்.  ஏழை, பணக்கார பாரபட்சமின்றி ‘வாங்க... வாங்க’ என்று கால் நனைக்கச் சொல்லி வரவேற்கிறது பிச்சாவரம் காயல்.

பிச்சாவரத்துக்கு சாகாவரம் கொடுத்த மரம்!

பிச்சாவரத்தில் குறைந்த விலையில் ஒரே ஒரு தங்கும் இடம் உண்டு. சிதம்பரம் பக்கத்து டூரிஸ்ட் ஸ்பாட் என்பதால், பெரும்பாலும் இங்கு யாரும் வந்து தங்குவது இல்லை என்பதால், முறையாகப் பராமரிக்காமல் வைத்திருக்கிறார்கள்.

வெயில் நேரத்தில் வதைக்கும், மழை நேரத்தில் மயக்கும் ஒரு மீனவ கிராமம், தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் இடம் பிடித்து மனத்தைக் கொள்ளை கொள்வது அதிசயிக்கத்தக்க விஷயம்தான். இதற்குக் காரணம், இங்குள்ள ஏரியும் மாங்குரோவ் ஃபாரஸ்ட் எனப்படும் சுரபுன்னைக் காடுகளும். ‘என்ன சொல்ல வர்றீங்க... போட்டிங் போகலாம்... அவ்வளவுதானே’ என்று சாதாரணமாக பிச்சாவரத்தை ஒதுக்கிவிட முடியாது. கிட்டத்தட்ட 40 - 50 அடி ஆழம் வரை உள்ள ஏரிகளில் வெறிச்சென போட்டிங் செல்வதற்கும், நான்கு அடி ஆழம் வரை மட்டுமே இருக்கும் பிச்சாவரம் ஏரியில் வெரைட்டியாக மீன்களையும், பறவைகளையும், மரங்களையும் பார்த்தபடி போட்டிங் செல்வதற்கும் எக்கச்சக்க வித்தியாசம் உண்டு.

பிச்சாவரத்தை மிடில் க்ளாஸ்காரர்களும் என்ஜாய் செய்யலாம்; பென்ஸ் க்ளாஸ் சீரிஸ் கார்கள் வைத்திருக்கும் ஹைக்ளாஸ் ஆசாமிகளும் கொண்டாடலாம். ஏனென்றால், படகுச் சவாரி 200 ரூபாயில் இருந்து 2,000 வரை இருக்கிறது. போட்டிங் செல்வதற்கு முன்பு, டவரில் ஏறி நின்று சுரபுன்னைக் காடுகள் ஏரியில் அழகாகத் தஞ்சம் புகுவதைப் பார்த்தால், ‘தம்பி, கடல் நீரின் மீது ஒரு காடு’ என்று 1960-ல் அறிஞர் அண்ணா எழுதிய கட்டுரை நினைவுக்கு வருகிறது.

இதை ‘அலையாத்திக் காடுகள்’ என்றும் குறிப்பிடுகிறார் அண்ணா. அதாவது, கடலில் எவ்வளவு பெரிய அலைகள் வந்தாலும் அதைத் தடுத்துவிடும் ஆற்றல் கொண்டவை இந்த மரங்கள். சுனாமியின் சீற்றத்தின்போது பிச்சாவரத்துக்கு சாகாவரம் கொடுத்ததே இந்த சுரபுன்னைக் காடுகள்தான் என்கிறார்கள். உலகின் மிகப் பெரிய அலையாத்திக் காடுகள், பிரேசில் நாட்டில் உள்ளன. அதன் பரப்பளவு சுமார் 26,000 சதுர கி.மீ. அதற்கடுத்து, சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில், உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடுகளைக்கொண்ட இடம் பிச்சாவரம். இந்தக் காடுகளில் உள்ள செடிகளும், குறுமரங்களும், தாவரங்களும் கடல் நீருக்கு உள்ளேயே வளரும் தன்மை கொண்டவை. இவற்றின் தண்டுகளிலும் கிளைகளிலும் உள்ள துளைகள் வழியாக, உயிர்க் காற்றை உறிஞ்சுகின்றன இந்த மரங்கள். மலைப் பாம்புகள்போல பின்னிப் பிணைந்து, தண்ணீருக்கு அடியிலும் மேலாகவும் வளர்ந்திருக்கும் மரக் கிளைகளை விலக்கி, ‘பார்த்து... பார்த்து’ என்று மிதமான எச்சரிக்கையுடன் படகில் பயணித்து உற்சாக மிகுதியில் திளைப்பது ஒவ்வொருவருக்கும் பம்பர் சீட்டுப் பயணம். ‘‘இந்த மரத்தோட சயின்டிஃபிக் நேம் ‘ஏவிசினியா மெரினா’... (Avicennia marina) சரியா சார்?’’ என்று தனது அறிவைக் காட்டினார் ராமசுப்ரமணியன்.

பிச்சாவரத்துக்கு சாகாவரம் கொடுத்த மரம்!

சுற்றுலாவாசிகளுக்கு ஒரு முக்கியமான விஷயம், “இங்குள்ள கிளைகளை ஒடித்தாலோ, சேதப்படுத்தி வீட்டுக்கு எடுத்துப் போனாலோ மிகப் பெரிய குற்றம்” என்று தானாக ஒடிந்து படகில் விழுந்த கிளைகளை திரும்பவும் தண்ணீரிலேயே விட்டார் நமது படகோட்டி.

‘தசாவதாரம்’, ‘சூரியன்’, ‘சின்னவர்’ போன்ற படங்கள் மூலம் பிச்சாவரம் புகழ் பெற்றாலும், 1975-லேயே எம்ஜிஆர் தனது ‘இதயக்கனி’ படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகளை இங்கேதான் படமெடுத்தாராம்.

கட்சி இல்லாத ஊர்வலமா? பட்சி இல்லாத வனமா? ஊருக்கு ஊர் கட்சி ஊர்வலம்போல், பிச்சாவரத்தில் பட்சிகள் ஊர்வலமும் களை கட்டுகிறது. படகுச் சத்தம் கேட்டு வெரைட்டியாக, கலர் கலராக பறவைகள் சிறகடித்துப் பறப்பது அழகழகு. ஆண்டுதோறும் இங்கு 170 வகையான பறவைகள் வந்து போவதாகச் சொன்னார் நமது படகோட்டி. 

தண்ணீரில் பாம்பு வகைகள் மிகவும் அரிது என்கிறார்கள். இங்குள்ள சுரபுன்னைக் காடுகளில் பாம்புகள், முதலைகள் ஊர்ந்து செல்வது ஒவ்வாமையை ஏற்படுத்துவதால், பாம்பு வரத்து குறைவுதானாம். ஆனால், மூக்கு கோலா என்னும் மீன்களும், நண்டு இனங்களும் பிச்சாவரம் ஏரியில் ஃபேமஸ். சின்னக் குச்சிபோல் இருக்கும் மூக்கு கோலா மீன்கள், ஆழத்தில் நீந்த முடியாது என்பதால், மேலோட்டமாக இங்கே நிறையக் காணலாம். ‘‘நைட்டு நேரம் வந்தீங்கன்னா, காலைல வரைக்கும் எக்கச்சக்கமா மூக்கு கோலா பிடிக்கலாம் சார். ஆனா, இதுக்கு பெர்மிஷன் வாங்கணும்!’’ என்றார் படகோட்டி.

சிதம்பரம் சந்தையில் நண்டுகள் செம டிமாண்டில் விற்பனை செய்யப்படுகின்றன. எல்லாமே பிச்சாவரம் நண்டுகள். இங்கு நண்டு பிடிக்கும் முறையே வித்தியாசமாக இருக்கிறது. கூடைபோல் உள்ள நரம்பு வலைகளில் மீன் துண்டுகளை வைத்து ஏரிக்குள் அமிழ்த்தி விடுகிறார்கள். மீன்களைச் சாப்பிட வரும் நண்டுகளை கூடையோடு அலேக்காக மேலே தூக்கினால், நண்டுகள் வெளியேற வாய்ப்பே இல்லை.

படகு சவாரி முடிந்து வெளியே வந்தால் பிச்சாவரம் பூங்கா. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், வெயில் நேரத்திலும் காதலர்கள் சிலர், கடல் காற்றைக் காதல் காற்றாக மாற்றியபடி லயித்திருந்தார்கள். ‘‘கேரளா மாதிரி படகு வீடுகள் கட்டி பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் ஆக்கி, தமிழக அரசும் பிச்சாவரத்துக்கு சாகாவரம் கொடுக்கலாமே?’’ என்று ஐடியா கொடுத்தார் ராமசுப்ரமணியன்.
‘அழுக்குகளைச் சேர்த்த குளம் அல்ல; எல்லாவற்றையும் சுருட்டி எடுத்து கடலில் வீசும் நீர்க் கலம் நான்!’ என்று கம்பீரமாகச் சொல்வதுபோல் இருந்த ஏரியில் கடைசியாகக் கால் நனைத்தபோது, நம்மை வழியனுப்ப மனம் இல்லாமல், திரும்பவும் வரவேற்றதுபோலவே இருந்தது பிச்சாவரம்.

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044  66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு