Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்
மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

பிரீமியம் ஸ்டோரி

  நான் மாதம் 1,000 கி.மீ முதல் 1,200 கி.மீ வரை பயணம் மேற்கொள்வேன். டீசல் மாடல் கார்தான் வேண்டும். எனது பட்ஜெட்டில் அடங்கும் மாருதி சுஸூகி பெலினோ Alpha, ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் 1.5 டீசல் Titanium+ ஆகிய இரண்டில் எந்த கார் சிறந்தது? எனக்கு இரண்டுமே பிடித்துள்ளதால், எதை வாங்குவது என்பதில் குழப்பம்.

அருண் குமார் நாகராஜன், தர்மபுரி.

மாதம் சராசரியாக 2,000 கி.மீ-க்கு மேல் பயணம் செய்வீர்கள் என்றால்தான் டீசல் கார் வாங்குவது லாபமானது. நீங்கள் சொல்லும் கார்களில் பெலினோவின் பெட்ரோல் மாடலைக்கூட பரிசீலிக்கலாம். ஆனால், டீசல் கார்தான் வேண்டும் என்றால், ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் உங்களுக்கு சரியான காராக இருக்கும். ஏனெனில், காம்பேக்ட் செடான் டிஸைனுடன், 6 காற்றுப் பைகள், பவர்ஃபுல் டீசல் இன்ஜின், போதுமான இடவசதி மற்றும் சிறப்பம்சங்கள் என அசத்தல் பேக்கேஜாக விளங்குகிறது அது. 

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

  எனது உயரம் 6 அடி. ஹீரோ டூயட், டிவிஎஸ் ஜூபிட்டர் ஆகியவற்றில் எது எனக்குப் பொருத்தமானதாக இருக்கும்? நான் ஒரு நாளைக்கு 50 கி.மீ தூரம் பயணிப்பேன் என்பதால், பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜில் ஸ்கூட்டர் சிறந்து விளங்குவது அவசியம்.

ஷாகுல், இமெயில்


உங்களுக்கு பெர்ஃபாமென்ஸ்தான் முக்கியம் என்றால், புதிதாக வரவிருக்கும் சுஸூகி ஆக்ஸஸ் 125-க்காகக் காத்திருக்கலாம். அதிக மைலேஜ் வேண்டுமென்றால், 110சிசி ஸ்கூட்டர்களே சிறந்தது. நீங்கள் குறிப்பிடும் இரண்டு ஸ்கூட்டர்களுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், 12 இன்ச் வீல்கள், பின்பக்க LED டெயில்லைட், பின்பக்க கேஸ் சஸ்பென்ஷன், மேட் ஃபினிஷ் கலர்ஸ், குறைவான எடை, ஸ்பெஷல் சீட் மற்றும் பீஜ் வண்ண பாடி பேனல் என கூடுதல் சிறப்பம்சங்களைக்கொண்டிருக்கும் ஜூபிட்டர் சரியான சாய்ஸாக இருக்கும்.

  நான் 6-8 லட்சத்தில் கார் வாங்கத் திட்டமிட்டுள்ளேன். அதிக மைலேஜ், சிறப்பான ஓட்டுதல் தரம், நல்ல டிஸைன் அவசியம். ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் எலீட் ஐ20 இந்த இரண்டில் எது பெஸ்ட்?
தி.ராஜ், தண்ணீர்பந்தல்.

டிஸைன், சிறப்பம்சங்கள், இடவசதி, பெர்ஃபாமென்ஸ் - மைலேஜ், ஓட்டுதல் தரம் - கையாளுமை போன்ற விஷயங்களில் ஆல்ரவுண்டராக இருக்கும் மாருதி சுஸூகி பெலினோ, உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யும். மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க், ஹூண்டாய் மற்றும் ஹோண்டாவைவிடப் பெரியது என்பதால், பராமரிப்புச் செலவுகள் பற்றிக் கவலைப்படத் தேவை இல்லை. ஆரம்ப மாடல் முதலே பாதுகாப்பு சாதனங்கள் காரில் உண்டு என்பது கூடுதல் ப்ளஸ்.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

  நான் தற்பொழுது டிவிஎஸ் ஃபியரோ F2 பைக்கைப் பயன்படுத்திவருகிறேன். பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 220, ராயல் என்ஃபீ்ல்டு தண்டர்பேர்டு 350 போன்ற க்ரூஸர் பைக் வாங்க உள்ளேன். தரமான இன்ஜின், கையாளுமை, மைலேஜ், பராமரிப்பு, நீண்டகாலப் பயன்பாடு ஆகியவற்றை நிறைவாகத் தரும் பைக் எது?

டேவிட், ஈரோடு.


ஒரு லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் ஒரே க்ரூஸரான அவென்ஜர் 220 பைக்கில், பல்ஸரின் இன்ஜின், நிறைவான கையாளுமை, போதுமான மைலேஜ், குறைவான பராமரிப்புச் செலவுகள் என வாங்கத் தூண்டும் அம்சங்கள் அதிகம். தண்டர்பேர்டு 350 நல்ல பைக் என்றாலும் அவென்ஜர் பைக்குடன் ஒப்பிடும்போது, விலை மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகம். மேலும், இதன் அதிக எடை, உயரம் குறைவானவர்களுக்கு பைக்கைக் கையாள்வதைக் கடினமான அனுபவமாக மாற்றிவிடுகிறது.

  மனைவி, குழந்தையுடன் செல்வதற்கு ஏற்ற புதிய 150 சிசி பைக் வாங்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். ஹோண்டா யூனிகார்ன் 150/160, சுஸூகி ஜிக்ஸர், பஜாஜ் பல்ஸர் 150, ஹீரோ எக்ஸ்ட்ரீம் எனப் பல ஆப்ஷன்கள் இருப்பதால், எதை வாங்குவது என்பதில் குழப்பம். வாரம் ஒருமுறை 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊருக்குச் சென்றுவருவேன் என்பதால், பாதுகாப்பு,  மைலேஜ், தரம், சர்வீஸ் அனைத்திலும் சிறந்த பைக்காக இருப்பது அவசியம். எனக்கு ஹீரோ எக்ஸ்ட்ரீம் பிடித்துள்ளது. என் சாய்ஸ் சரியா?

பழனி, பொதட்டூர் பேட்டை.


எக்ஸ்ட்ரீம், பல்ஸர் 150, யூனிகார்ன் 150 ஆகிய மூன்று பைக்குகளுமே நீண்ட நாட்களாக பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் விற்பனையாகிவரும் பைக்குகள். இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வது என்றால், பல்ஸர் நல்ல சாய்ஸ். மாதம் 40 ஆயிரம் பைக்குகள் விற்பனையாகின்றன  என்பதே இதன் வெற்றிக்கு சாட்சி.  ஜிக்ஸரில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும். தவிர, பின்பக்க இருக்கையின் உயரம் சற்று  அதிகமாக இருப்பது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். நீங்கள் கூறியதிலே பெரிய இன்ஜின்கொண்ட ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கைக்கூட நீங்கள் பரிசீலிக்கலாம். 

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்

எனது குடும்பம் சற்று பெரியது. எனவே, பின்பக்க இடவசதி மற்றும் பூட் ஸ்பேஸ் அதிகமாக இருப்பது அவசியம். அதிகபட்சம் 8 லட்ச ரூபாயில், 5 பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய கார் எது? டொயோட்டா எட்டியோஸ் எனக்குப் பிடித்திருக்கிறது? எனது யூகம் சரியா?

டி. புருஷோத்தமன், கும்பகோணம்.


உங்கள் முடிவு சரியானதே. அதிக இடவசதி, போதுமான சிறப்பம்சங்கள், நிறைவான பெர்ஃபாமென்ஸ், நல்ல ஓட்டுதல் தரம் - கையாளுமை, ஒட்டுமொத்த தரம், பாதுகாப்பு வசதிகள், கட்டுபடியாகக்கூடிய பராமரிப்புச் செலவுகள் மற்றும் விலை என ப்ராக்டிக்கலான செடான் காராக ஈர்க்கிறது. எட்டியோஸின் தோற்றம் மற்றும் டேஷ்போர்டு டிஸைன் ஆகியவை காரின் விலையை நியாயப்படுத்தும் வகையில் இல்லாததுதான் மைனஸ். அதனை புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால், இது ஒரு பக்காவான ஃபேமிலி கார்.

மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு