Published:Updated:

முதல் சுற்று... - ரெஹானா ரியா

சாதனை: ரேஸ்தமிழ், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

பிரீமியம் ஸ்டோரி

‘‘பொண்ணுங்களை புரொஃபைல் பிக் ஷர்ல சாந்தமா பார்த்திருப்பீங்க... பியூட்டி பார்லர்ல அழகா பார்த்திருப்பீங்க... சமையல் ரூம்ல வியர்க்க விறுவிறுக்கப் பார்த்திருப்பீங்க... ஏன், ஸ்கூட்டியில பல்ஸரை முந்துறதைக்கூடப் பார்த்திருப்பீங்க... ஆனா, ரேஸ் டிராக்கில் ‘வ்வ்ர்ர்ரூம்’னு பறக்கறதைப் பார்த்திருக்கீங்களா? வெறித்தனமா ஜெயிக்கிறதைப் பார்த்திருக்கீங்களா? ரெஹானாவைப் பார்ப்பீங்க!’’ என்று தினசரிகளில் முழுப் பக்க விளம்பரம் கொடுக்கலாம் - இதற்கு நிச்சயம் பொருத்தமானவர் ரெஹானா ரியா.

யமஹா R15-லும், டீன்-ஏஜின் விளிம்பிலும், (அதாவது ஸ்வீட் 19) மென்மை + பெண்மை என்று பயணிக்கும் ரெஹானாவுக்கு, இன்னொரு பக்கம் இருக்கிறது. அது - ரேஸிங்! ‘சின்ன வயசுல இருந்தே பிராக்டிஸ் பண்ணி பெரிய புரொஃபஷனல் ரேஸரா இருப்பாங்களோ’ என்று நினைத்துப்போனால், ‘‘நக்கல் பண்ணாதீங்க ப்ரோ!’’ என்று சிரிக்கிறார் ரியா.

முதல் சுற்று - முதல் ரேஸ் - முதல் வெற்றி - இனி நேஷனல் சாம்பியன்! -  சுருக்கமாக இதுதான் ரெஹானாவின் ஹிஸ்டரி. அண்மையில் சென்னையில் ஹோண்டா நடத்திய ஒன்-மேக் ரேஸில் பெண்களுக்கான பிரிவில் கலந்துகொண்டு, ஆரம்பமே அதிரடியாக தனது முதல் ரேஸிலேயே வின்னராகி, நேஷனல் போட்டிகளுக்கு த்ராட்டில் முறுக்கிக் கொண்டிருக்கிறார் ரியா.

முதல் சுற்று... - ரெஹானா ரியா

‘‘சின்ன வயசுலேயே பைக் ஓட்டுறதுனா ரொம்ப இஷ்டம். எனக்கு இன்ஸ்பிரேஷன், ரோல்மாடல் எல்லாமே என் அண்ணா அப்துல் வஹாப்தான். ஏன்னா, அவனும் ஒரு ரேஸர். அவன் பின்னால பைக்ல உட்கார்ந்து போறதுனா ரொம்பப் பிடிக்கும். ‘அண்ணா, எனக்கும் பைக் ஓட்டச் சொல்லிக் குடுடா’னு பல தடவை கெஞ்சுவேன். ‘முதல்ல ஸ்கூட்டர் ஓட்டக் கத்துக்கோ; அப்புறம் லைசென்ஸ் எடு; சொல்லித் தர்றேன்’னு சத்தியம் செஞ்சான். சொன்ன மாதிரியே பைக் ஓட்டவும் சொல்லிக் கொடுத்தான். நான் முதன்முதலா ஓட்டின பைக் R15. அப்புறம் யாராவது பைக் வெச்சிருந்தா, அவங்ககிட்ட கடன் வாங்கி பைக் ஓட்ட ஆரம்பிச்சேன். ‘பொல்லாதவன்’ படத்துல தனுஷ் கெஞ்சுவாரே... அதேமாதிரிதான் என் வாழ்க்கையிலயும் நடந்திருக்கு. பசங்ககிட்ட பைக் கேட்டா, ‘இப்பதான் ரியா இன்ஸ்டால்மென்ட்ல வாங்கியிருக்கேன். வீட்ல தெரிஞ்சா திட்டுவாங்க’னு ஓவரா பண்ணுவானுங்க. அசிங்கமா இருக்கும். அதையும் மீறி ஹோண்டா, கேடிஎம், யமஹா, ஹீரோனு எல்லா பைக்கையும் கடன் வாங்கியே ஓட்டிட்டேன்.

அப்புறம் என்ன... நான் பைக் ஓட்டுறது ஏரியாவில் வைரல் ஆயிடுச்சு. ‘சென்னை to பெங்களூர் போகணும்’னு ஒரு தனியார் கம்பெனியில இருந்து ராலியில் பைக் ஓட்டக் கூப்பிட்டாங்க! பைக்கும் அவங்களே தர்றேன்னு சொன்னா, விடுவேனா என்ன? சென்னையில் இருந்து 90 நிமிஷத்துல வேலூர் போயிட்டு வெயிட் பண்ணினேன். ‘இது ராலிமா... இவ்வளவு ஸ்பீடா எல்லாம் பைக் ஓட்டக் கூடாது. ரூல்ஸ் ஃபாலோ பண்ணணும்’னு அட்வைஸ் பண்ணாங்க. ஆனா, அதுல இருந்த ஒருத்தர், ‘நீ செமயா பைக் ஓட்டுறே? உனக்கு கார்னரிங் நல்லா வருது. நீ ரேஸ்ல கலந்துக்கலாமே’னு ஐடியா கொடுத்தார். அப்புறம்தான் எனக்கும் ரேஸ் ஐடியா வந்தது.

முதல் சுற்று... - ரெஹானா ரியா

அப்போதான், ஹோண்டாவில் இருந்து பெண்களுக்காக ரேஸ் டிரெயினிங் தர்றாங்கனு கேள்விப்பட்டேன். வீட்ல சொன்னப்போ, செம சண்டை. ‘உனக்கு பைக் ஓட்டச் சொல்லிக் கொடுத்தது தப்பாப் போச்சுடி’னு அண்ணா சத்தம் போட்டான். பசங்க ரேஸுக்குப் போனாலே வீட்ல அம்மா-அப்பா பயப்படுவாங்க. எங்க அண்ணா அடிக்கடி கை, கால் முறிஞ்சு ரத்தத்தோட வருவான். ‘வேணாம்.. விட்டுடுடா’னு அழுவாங்க அம்மா. எனக்குச் சுத்தமா சம்மதிக்கவே இல்லை. அப்புறம் அண்ணனை ஒரு வழியா தாஜா பண்ணி, அவன்கிட்டயே ரேஸுக்கு டிப்ஸும் வாங்கிக்கிட்டேன்.

நீங்க நினைக்கிறது மாதிரி பல வருஷம் டிரெயினிங் எடுத்து, ராத்திரி பகலா கண்ணு முழிச்செல்லாம் இந்த ரேஸில் ஜெயிக்கலை. ஒரு நாள் வெள்ளிக்கிழமை டிரெய்னிங் முடிச்சு எல்லாரும் வீட்டுக்குக் கிளம்புறப்போ, கோச், ‘ஞாயிற்றுக்கிழமை ரேஸ் இருக்கு. கலந்துக்க நினைக்கிறவங்க கலந்துக்கலாம்’னு சொன்னாரு. பாதி பேரு வெளிமாநிலம்ங்கிறதால கிளம்பிப் போயிட்டாங்க. நாங்க பத்து பேரு மட்டும்தான் இருந்தோம். அடுத்த நாளே பிராக்டிஸிங் ரேஸ், குவாலிஃபைடு ரேஸ்னு கலந்துக்க ஆரம்பிச்சோம். சோதனைக்காகவே சனிக்கிழமை நடந்த பிராக்டிஸ்ல கீழ விழுந்து செம அடி... பைக்கும் காலி!

முதல் சுற்று... - ரெஹானா ரியா

கோச்கிட்ட செமயா திட்டு வாங்கினேன். ‘உன்கிட்ட வேகம் மட்டும்தான் இருக்கு; விவேகமும் வேணும்’னு டிப்ஸ் கொடுத்தார். அப்புறம் வேற பைக் கொடுத்து, ‘அடுத்து குவாலிஃபைடு நடக்கப் போகுது; நீ இதுல ஃபர்ஸ்ட் வரக்கூடாது; உனக்கு முன்னால ரெண்டு பேர் ரொம்ப புரொஃபெஷனல். அவங்க எப்படி ஓட்டுறாங்கனு பாரு. அவங்களுக்குப் பின்னால மூணாவது இடம்தான் வரணும்’னு சொன்னாரு. சொன்ன மாதிரியே மூணாவதா வந்தேன். மறுநாள் ஃபைனல்ல மூணாவதா இருந்து ஆரம்பிச்சேன். திடீர்னு பார்த்தா என் பின்னால யாருமே இல்லை. என்னடானு பைக்கை ஸ்லோ பண்ணிட்டுப் பார்த்தா, நான்தான் வின்னர்னு அறிவிச்சாங்க. அண்ணா என்னைக் கட்டிப்பிடிச்சு வாழ்த்துச் சொன்னான். இதோ இப்போ மீடியா என்னைத் தேடி வந்திருக்கீங்க! இதை அனுபவிச்சுப் பார்த்தாதான் அதோட ஆனந்தம் புரியும். தேங்க்ஸ் டு அண்ணா!’’ என்று பரவசத்தோடு பேசினார் ரியா.

முதல் சுற்று... - ரெஹானா ரியா

ரியாவுக்குப் பிடித்த ரேஸ் வீரர்கள் - ‘தல’ அஜீத், யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ. எப்படியாவது அஜீத்தையும் லாரன்சோவையும் சந்திக்க வேண்டும் என்பதுதான் ரியாவின் ஆசை.
‘‘நான் தல ஃபேன். சினிமாவுல இல்லை. ரேஸ்ல! செம கெத்து அவரு!” என்றவர், “ஓகே பாஸ்... ஜூன் மாசம் நேஷனல் சாம்பியன்ஷிப்; அடுத்து ஏசியன் கப்; அடுத்து இன்டர்நேஷனல்... பிராக்டிஸுக்கு நேரம் ஆச்சு! இறுதிச் சுற்றுல சந்திப்போம். சரியா?’’ என்று திராட்டில் முறுக்கிப் பறந்தார் ரியா.

பின்றீங்களேம்மா!

ரியா தரும் பெண்களுக்கான ரேஸ் டிப்ஸ்...

* முதலில் கேலிகளை, கிண்டல்களைப் புறம்தள்ள வேண்டும். பைக் ஓட்டும் பெண்களைக் கிண்டல் செய்து அசிங்கப்படுத்துபவர்கள், நிச்சயம் பொறாமையில்தான் சொல்வார்கள். எனவே, அசிங்கம் நல்லது.

* பைக் ஓட்டும்போது ஜாலியாக ஃபீல் செய்ய வேண்டும்.

* நீங்கள் பைக் ஓட்டுவதில் கில்லி என்றாலும், சாலைகளில் ஓட்டுவதற்கும் டிராக்கில் பைக் ஓட்டுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எனவே, கோச் வைத்துக் கொள்வதுதான் சிறந்தது.

* எடை குறைவாக இருப்பதுதான் பைக்கில் பறப்பதற்குப் பெரிதும் உதவும். அதேநேரம், கார்னரிங்கின்போது பைக்கை ஹேண்டில் செய்யும் அளவுக்கு உடலில் வலு இருக்க வேண்டியது அவசியம்.

* வாயைத் திறந்தபடி பைக் ஓட்டினால், விரைவில் களைப்படைந்துவிடுவீர்கள். எனவே சிக்லெட், பபுள்கம் போன்றவற்றை வாயில் தள்ளினால் களைப்பு தெரியாது.

* குறைந்த வேகத்தில் அதிக கியரிலும், குறைந்த கியரில் அதிக வேகத்திலும் செல்வதைத் தவிருங்கள்.

* தரமான சூட், ஹெல்மெட் மட்டுமே பாதுகாப்பு.

* முக்கியமாக, உங்களுக்கு அண்ணன்கள் இருந்தால் பெஸ்ட்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு