Published:Updated:

’தெறி’ பேபி! நுவோஸ்போர்ட்! - காம்பேக்ட் எஸ்யுவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
’தெறி’ பேபி! நுவோஸ்போர்ட்!  - காம்பேக்ட் எஸ்யுவி
’தெறி’ பேபி! நுவோஸ்போர்ட்! - காம்பேக்ட் எஸ்யுவி

ரோடு டெஸ்ட், மஹிந்திரா நுவோஸ்போர்ட்தொகுப்பு / ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி
’தெறி’ பேபி! நுவோஸ்போர்ட்!  - காம்பேக்ட் எஸ்யுவி

ஹிந்திரா, தனது முதல் காம்பேக்ட் எஸ்யுவியான குவான்ட்டோவை 2012-ல் அறிமுகப்படுத்தியது. மக்களிடையே அது போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதனால், கடந்த ஆண்டு செப்டம்பரில்
TUV3OO காம்பேக்ட் எஸ்யுவியை, முற்றிலும் புதிய லேடர் ஃப்ரேம் ஃப்ளாட்ஃபார்மில் தயாரித்து வெளியிட்டது மஹிந்திரா. இதில், சில குறைகள் இருந்தாலும், மோனோகாக் சேஸியைக் கொண்ட காம்பேக்ட் எஸ்யுவிகளுக்கு மாற்றாக இருக்கிறது.

தற்போது நுவோஸ்போர்ட் எனும் பெயரில் களமிறங்கியிருக்கிறது மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி. குவான்ட்டோவின் இடத்தை நிரப்ப வந்திருக்கும் நுவோஸ்போர்ட், அதன் பேஸ்லிஃப்ட் எனச் சொல்ல முடியாது. காரணம், புதிய சேஸி, புதிய முன்பக்க டிஸைன் எனப் பல விஷயங்களைப் புதிதாகப் பெற்றிருக்கிறது நுவோஸ்போர்ட்.

டிஸைன்

குவான்ட்டோ மற்றும் ஸைலோவின் டல்லான தோற்றத்துடன் ஒப்பிடும்போது, நுவோஸ்போர்ட்டின் முன்பக்கம் ஹைலுக்கில் இருக்கிறது. ஷார்ப்பான ஹெட்லைட்கள், உயர்த்தப்பட்ட பானெட், அதில் இன்டர்கூலருக்குக் காற்றை அனுப்ப இன்டேக், கண் புருவத்தை நினைவுபடுத்தும் டே டைம் ரன்னிங் லைட்ஸ், அகலமான கிரில் மற்றும் ஏர்டேம், வட்டமான பனி விளக்குகள் ஆகியவை காருக்கு ஒரு எஸ்யுவி லுக் கொடுக்கின்றன. புதிய 16 இன்ச் அலாய் வீல்கள், கறுப்பு நிற D-பில்லர் மற்றும் டெயில் லைட், பாடி கிளாடிங் தவிர, நுவோஸ்போர்ட்டின் பக்கவாட்டுப் பகுதி மற்றும் பின்பக்கம் அப்படியே குவான்ட்டோவின் ஜெராக்ஸ்தான். ஸ்கார்ப்பியோ மற்றும் TUV3OO கார்களில் இருக்கும் மூன்றாவது தலைமுறை ஹைட்ரோஃபார்ம் செய்யப்பட்ட லேடர் ஃப்ரேமில், காரின் பாடி இணைக்கப்பட்டுள்ளது. எனவே, குவான்ட்டோவைவிட (1,640 கிலோ) நுவோஸ்போர்ட் திடமாக இருப்பதுடன், 30 கிலோ எடையும் (1,670 கிலோ) அதிகரித்திருக்கிறது. ஆக, போட்டி கார்களைவிட 500 கிலோ அதிக எடையை இந்த கார் சுமந்து கொண்டிருக்கிறது.

’தெறி’ பேபி! நுவோஸ்போர்ட்!  - காம்பேக்ட் எஸ்யுவி
’தெறி’ பேபி! நுவோஸ்போர்ட்!  - காம்பேக்ட் எஸ்யுவி

TUV3OO காரில் இருக்கும் அதே ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷன் செட்-அப்தான் நுவோஸ்போர்ட்டிலும் இடம்பெற்றுள்ளது. குவான்ட்டோவின் பாடி பேனல்களும்,
TUV3OO காரின் மெக்கானிக்கல் பாகங்களும் சேர்ந்த கலவைதான் நுவோஸ்போர்ட்.

உள்பக்கம் & சிறப்பம்சங்கள்

நுவோஸ்போர்ட்டின் கதவைத் திறந்தவுடன் நம்மை வரவேற்பது, 2009-ல் அறிமுகமான ஸைலோவில் இருக்கும் டேஷ்போர்டுதான். குவான்ட்டோவின் பாடி பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயரமான டேஷ்போர்டு, முறையற்ற வடிவத்தில் இருக்கும் ஏ.சி வென்ட்கள், பழைய சென்டர் கன்ஸோல், சின்ன டோர் பாக்கெட்ஸ் எனக் குறைகள் இருந்தாலும், உபயோகமான கப் ஹோல்டர்கள், க்ரோம் வட்டத்துடன் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள், TUV3OO-ல் இருக்கும் ஏ.சி கன்ட்ரோல் மற்றும் டிரைவிங் மோடு சுவிட்சுகள், 6.2 இன்ச் கென்வுட் டச் ஸ்கிரீன், லெதர் உள்ளலங்காரம் என ப்ளஸ்களும் இருப்பது ஆறுதல்.

’தெறி’ பேபி! நுவோஸ்போர்ட்!  - காம்பேக்ட் எஸ்யுவி

உட்கார்ந்த இடத்தில் இருந்து ஃப்யூல் டேங்க்கின் மூடியை நாம் இயக்குவதற்கு பட்டன் இருந்தாலும், கேபினில் டோர் லாக்குகளை இயக்கக்கூடிய சென்ட்ரல் லாக்கிங் பட்டனை எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. மல்ட்டி இன்ஃபர்மேஷன் டிஸ்பிளேவை இன்ஸ்ட்ரூமென்ட் டயல்களுக்கு இடையே பார்த்துப் பழக்கப்பட்டுவிட்டதால், சென்டர் கன்ஸோலின் மேலே இருப்பது வசதியாக இல்லை. டேஷ்போர்டு பிளாஸ்டிக்குகள் நீண்ட நாள் உழைக்கும் திறன் இருந்தாலும், ஃபிட் & ஃபினிஷில் மிகவும் பின் தங்கியிருக்கிறது. நுவோஸ்போர்ட்டின் நீள, அகல, உயர அளவுகள் TUV3OO காரைப் போலவே இருந்தாலும், அதைவிட 80 மிமீ கூடுதல் வீல்பேஸைக் கொண்டிருக்கிறது. எனவே, நடு வரிசை இருக்கைகளின் லெக்ரூம் அதிகமாகியிருக்கிறது.

TUV3OO காரில் 384 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்க, நுவோஸ்போர்ட்டில் சற்று அதிகமான 412 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கிறது. மற்ற லேடர் ஃப்ரேம் கொண்ட மஹிந்திரா கார்களைப்போலவே, இதன் இருக்கைகளை ஏறித்தான் அடைய வேண்டியிருக்கிறது. வெளிச்சாலை தெளிவாகத் தெரியும் வகையிலான சீட்டிங் பொசிஷன் கிடைப்பதால், இது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை, ஆனால், உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு இது சற்று வசதிக் குறைபாடாகத் தெரியலாம். 60:40 ஸ்பிளிட் வசதி கொண்ட நடு வரிசை இருக்கையில் மூன்று பேர் தாராளமாக உட்கார முடிகிறது. எவ்வளவு உயரமானவர்களுக்கும், உடல் பருமனானவர்களுக்கும் காரில் போதுமான ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் கிடைக்கும் என்பதே உண்மை. கடைசி வரிசையில் இருக்கும் இரண்டு இருக்கைகளை மடக்கினால் மட்டுமே நடு வரிசை இருக்கைகளை அட்ஜஸ்ட் செய்ய முடியும். மூன்றுவிதமாக பொசிஷன்களைக் கொண்ட கடைசி வரிசை இருக்கைகளை, பூட் ஸ்பேஸை அதிகரிக்க, பயணிகள் உட்கார, நடுவரிசை இருக்கையை அட்ஜஸ்ட் செய்ய எனத் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். கடைசி வரிசை இருக்கைகளுக்கு சீட் பெல்ட் வழங்கப்படாததை ஏற்றுக்கொள்ள முடியாது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஏபிஎஸ் மற்றும் 2 காற்றுப் பைகள் ஆரம்ப வேரியன்ட்டில் ஆப்ஷனலாகவும், மற்ற வேரியன்ட்களில் ஸ்டாண்டர்டு ஆகவும் இருக்கின்றன.

’தெறி’ பேபி! நுவோஸ்போர்ட்!  - காம்பேக்ட் எஸ்யுவி

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

TUV3OO - நுவோஸ்போர்ட் இடையே  உள்ள ஒற்றுமைகளில், 1,493 சிசி 3 சிலிண்டர் இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்/ ரிக்கார்ட்டோ தயாரித்த 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸும் அடக்கம். ஆனால், TUV3OO காரில் mHawk80 என்ற பெயரில் இருக்கும் இந்த இன்ஜின், நுவோஸ்போர்ட்டில் mHawk100 என்ற பெயரில் அதிகரிக்கப்பட்ட பவர் (101bhp) மற்றும் டார்க்குடன் (24kgm) பொருத்தப்பட்டுள்ளது. இதே செயல்திறனைத்தான் குவான்ட்டோவும் கொண்டிருந்தது என்றாலும், மைலேஜ் மற்றும் இன்ஜின் ஸ்மூத்னெஸ் ஆகியவற்றில் முன்னேற்றம் செய்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இன்ஜினை ஸ்டார்ட் செய்த உடனே, டீசல் கார்களுக்கே உரிய சத்தம் மற்றும் கியர் லீவரில் அதிர்வுகள் தெரிந்தாலும், ஐடிலிங்குக்குப் பிறகு சத்தம் குறைந்துவிடுகிறது. டூயல் ஸ்டேஜ் டர்போ சார்ஜர் மற்றும் டூயல் மாஸ் ஃப்ளைவீல் ஆகியவை குறைவான வேகங்களில் இன்ஜினின் செயல்பாட்டை சிறப்பானதாக்குகின்றன. ஆனால், 3,000 ஆர்பிஎம் தாண்டியவுடன் பவர் வெளிப்பாடு மற்றும் ஸ்மூத்னெஸ் குறையத் துவங்குவதுடன், 3,800 ஆர்பிஎம்-க்குப் பிறகு, இன்ஜின் சத்தம்தான் அதிகமாக இருக்கிறதே தவிர, வேகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேனுவல் கியர்பாக்ஸும் பயன்படுத்த துல்லியமாக இல்லை. ஆனால், காரில் நபர்கள் மற்றும் பொருட்களால் நிரப்பிய பிறகும்கூட, போதுமான வேகத்தில் செல்வதற்கு ஆரம்ப கட்ட பவர் மற்றும் டார்க் துணைபுரிகிறது. இதனால், நெரிசல் மிக்க நகர டிராஃபிக்கில் இந்த காரைப் பயன்படுத்துவது சுலபம்.

TUV3OO காரில் சீரற்ற முறையில் இயங்கிய AMT கியர்பாக்ஸ், நுவோஸ்போர்ட்டில் ஸ்மூத்தாக இயங்குகிறது. ஆனால், ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் காட்டும்போது, கியர்பாக்ஸ் உடனடியாகச் செயல்பட மறுக்கிறது. அதிக பவர் காரணமாக, TUV3OO காரைவிட 0-60 கி.மீ வேகத்தை (6.92) 0.8 விநாடிகள் மற்றும் 0-100 கிமீ வேகத்தை (17.22) 2.3 விநாடிகளுக்கு முன்பாகவே எட்டிவிடுகிறது நுவோஸ்போர்ட். கியர்களுக்கு இடையேயான வேகமும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இதுவே கூடுதல் மைலேஜைத் தரக்கூடிய எக்கோ மோடில் காரை ஓட்டும்போது, 0-100 கி.மீ வேகத்தை மிகப் பொறுமையாக 25.62 விநாடிகளில்தான் எட்ட முடிகிறது.

’தெறி’ பேபி! நுவோஸ்போர்ட்!  - காம்பேக்ட் எஸ்யுவி

ஓட்டுதல் தரம் - கையாளுமை, மைலேஜ்

புதிய சேஸி, நுவோஸ்போர்ட்டின் ஓட்டுதல் அனுபவத்தை சற்று மேம்படுத்தியிருக்கிறது. ஆனால், காரின் அதிக எடை, பாக்ஸ் போன்ற வடிவம், லேடர் ஃப்ரேம் ஆகியவை காரணமாக, பாடிரோல் அதிகமாக இருக்கிறது. ஸ்டீயரிங், ஓட்டுநருக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் செயல்படுகிறது. அதற்காக இதனை துல்லியமான கையாளுமை, ஓட்டுவதற்கு எளிதான மோனோகாக் சேஸியைக்கொண்ட காம்பேக்ட் எஸ்யுவி கார்களுடன் ஒப்பிடக் கூடாது. சஸ்பென்ஷன் மென்மையாக செட் செய்யப்பட்டிருப்பதால், மோசமான சாலைகளில் குவான்ட்டோவைவிட  நுவோஸ்போர்ட்டின் ஓட்டுதல் தரம் நன்றாக இருக்கிறது. ஆனால், பெரிய பள்ளங்களில் இறங்கி ஏறும்போதும்; அதிக வேகத்தில் செல்லும்போதும் கார் ஆட்டம் காண்கிறது.

4 மீட்டர் நீளத்துக்குள்ளான காம்பேக்ட் எஸ்யுவி என்றாலும், எடை அதிகமான லேடர் ஃப்ரேம் சேஸியைக்கொண்டிருப்பதன் விளைவாக, நுவோஸ்போர்ட்டின் அராய் மைலேஜ் (17.45kmpl), இதன் போட்டியாளர்களான ஃபோர்டு எக்கோஸ்போர்ட் (22.27kmpl) மற்றும் மாருதி சுஸூகி விட்டாரா ப்ரெஸ்ஸா (24.3kmpl) ஆகியவற்றின் அராய் மைலேஜைவிடக் குறைவாக இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட நுவோஸ்போர்ட், நகரத்தில் 11.45 கி.மீ, நெடுஞ்சாலையில் 14.16 கி.மீ மைலேஜ் தருகிறது. AMT கியர்பாக்ஸ் கொண்ட நுவோஸ்போர்ட், நகரத்தில் 10.68 கி.மீ, நெடுஞ்சாலையில் 13.61 கி.மீ மைலேஜ் தருகிறது. இன்ஜின் ட்யூன் செய்யப்பட்ட விதத்தினால் இந்த மைலேஜ் சாத்தியமாகி இருக்கலாம். மேனுவல் கியர்பாக்ஸ் உள்ள மாடலில், நகரத்தில் பயணிப்பதற்கு ஏற்ற எக்கோ மோடு

’தெறி’ பேபி! நுவோஸ்போர்ட்!  - காம்பேக்ட் எஸ்யுவி

மற்றும் ஸ்டார்ட் -  ஸ்டாப் சிஸ்டம் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்தி கூடுதல் மைலேஜ் பெறலாம்.

லைஃப் ஸ்டைல் வாகனமாக பொசிஷன் செய்யப்பட்டுள்ள நுவோஸ்போர்ட்டின் விலை, 8.67 லட்சம் - 11.99 லட்ச ரூபாய் (சென்னை ஆன் ரோடு) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டஃப் எஸ்யுவியாக பொசிஷன் செய்யப்பட்டுள்ள TUV3OO-ன் விலை, வேரியன்ட்டுக்கு ஏற்ப நுவோஸ்போர்ட்டைவிட 30 ஆயிரம் - 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகமாக இருக்கிறது. எனவே, மஹிந்திராவிடமிருந்து மற்றொரு காம்பேக்ட் எஸ்யுவி தேவையா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால், TUV3OO காரைவிட சிறப்பம்சங்கள், பவர், இடவசதி, டிஸைன் ஆகியவற்றில் நுவோஸ்போர்ட் முன்னிலை வகித்தாலும், டேஷ்போர்டு டிஸைன் மற்றும் தரம் ஆகியவை மனநிறைவைத் தரவில்லை. எடை குறைவான மோனோகாக் எஸ்யுவிகளுடன் ஒப்பிடும்போது... சிறிய, ஆனால் உறுதியான எஸ்யுவி வேண்டும் என்பவர்களுக்கு மத்தியில், TUV3OO தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தது. அதே இடத்தை, அதிக விலையில் மக்களிடம் பிடிக்க முற்படும் நுவோஸ்போர்ட் எடுபடுமா என்பதை காலம் தான் உணர்த்தும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு