Published:Updated:

DATSUN redi-Go - ஜூன் மாதம் ரெடி!

ஃபர்ஸ்ட் லுக் - டட்ஸன் ரெடி-கோராகுல் சிவகுரு, படங்கள்: தி.விஜய்

பிரீமியம் ஸ்டோரி
DATSUN redi-Go - ஜூன் மாதம் ரெடி!

ரெடி-கோ கான்செப்ட்டை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய டட்ஸன், தற்போது அதன் தயாரிப்பு வெர்ஷனை வெளியிட்டுள்ளது. மாருதியுடன் போட்டியிடும் வகையில், 2.5 லட்சத்துக்கும் குறைவான ஆரம்ப விலையில், ஜூன் மாதத்தில் ரெடி-கோ விற்பனைக்கு வரும் என்றும், இந்த காரின் பராமரிப்புச் செலவுகள் மாருதி சுஸூகியின் ஆல்ட்டோவைவிடக் குறைவாக இருக்கும் என்றும் டட்ஸன் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவை பிரதானச் சந்தையாகக்கொண்டு, ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு வந்த நிஸானின் டட்ஸன் நிறுவனம், 2014-ல் கோ ஹேட்ச்பேக்கையும், 2015-ல் கோ+ எம்பிவியையும் களமிறக்கியது. ஆனால், இன்றுவரை அவர்களால் இங்கு ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. இப்போது, ரெடி-கோ கார் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளது டட்ஸன்.

DATSUN redi-Go - ஜூன் மாதம் ரெடி!

டிஸைன்

ரெனோ க்விட் தயாரிக்கப்படும் அதே  புதிய CMF-A பிளாட்ஃபார்மில் ரெடி-கோவையும் தயாரித்திருக்கும் டட்ஸன், டிஸைனில் க்விட்டைப் பின்பற்றவில்லை. மினி டஸ்ட்டர்போல வடிவமைக்கப்பட்டிருக்கும் க்விட் கார்போல இல்லாமல், 185மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், முன்பக்க ஸ்கிட் பிளேட் என க்ராஸ்ஓவர் போல இருக்கிறது ரெடி-கோ.  நீள, அகல, உயர அளவுகள் ஒரு ஹேட்ச்பேக்கையும் நமக்கு நினைவுப்படுத்துகின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால், செவர்லே பீட் துவக்கி வைத்த டிரெண்டின் தொடர்ச்சியே ரெடி-கோ எனலாம். அறுகோண வடிவிலான D-cut க்ரில், இண்டிகேட்டர் உடனான ஷார்ப்பான ஹெட்லைட்ஸ் ஆகியவை டட்ஸன் ஸ்பெஷல். முன்பக்க பம்பர், கிரில்லுடன் அழகாகப் பொருந்திப் போகிறது. பானெட் பகுதி காரோடு இணையும் விதம், விண்டோ லைன், முன்பக்கக் கதவில் இருந்து தொடங்கி டெயில் லைட் வரை நீளும் பாடி லைன் ஆகியவை காரின் பக்கவாட்டு டிஸைனைச் சிறப்பாகக் காட்டுகின்றன.

உள்பக்கம்

காரின் வெளிப்புறத்தில் இருந்த ஈர்ப்பு, கேபினில் வடிவமைப்பில் இல்லை. அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய மூன்று வட்ட வடிவ ஏ.சி வென்ட்களுடன், சென்டர் கன்ஸோலில் ஃபிக்ஸட் ஏ.சி வென்ட் டேஷ்போர்டில் இடம்பெற்றுள்ளது. இரண்டு மூடி இல்லாத ஸ்டோரேஜ் ஸ்பேஸ்கள் பெரிதாக இருந்தாலும், க்ளோவ்பாக்ஸ் சிறிதாக இருப்பது நெருடல். க்விட் மற்றும் ரெடி-கோ என இரண்டு கார்களும் தயாராகும் பிளாட்ஃபார்ம் ஒன்றுதான் என்பதால், பல பாகங்கள் இரண்டுக்கும் ஒன்றுதான். உதாரணமாக ரெடி-கோவின் டெயில் கேட், க்விட்டில் இருப்பதுதான் என்றாலும், டிஸைனில் சின்ன வித்தியாசம் இருக்கிறது. இப்படிப் பலவற்றில் டட்ஸன் தனது வித்தையைக் காட்டியிருக்கிறது. ரெனோ க்விட்டில் பலரது வரவேற்பைப் பெற்ற டச் ஸ்கிரீனுக்குப் பதிலாக, டட்ஸன் ரெடி-கோவில் சிங்கிள் DIN மியூஸிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, டேஷ்போர்டு புதுமையாகத் தெரிந்தாலும், பாட்டில் ஹோல்டர் அல்லது பாக்கெட்கள் இல்லாத சிம்பிளான டோர் பேட்கள், விண்ட் ஷீல்டுக்கு ஒரே வைப்பர், கேபினில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்ஸ் ஆகியவை, இது ஒரு பட்ஜெட் கார் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

DATSUN redi-Go - ஜூன் மாதம் ரெடி!
DATSUN redi-Go - ஜூன் மாதம் ரெடி!

காரின் அளவுகள்

கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கும் கோ மற்றும் க்விட்டில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, ரெடி-கோவின் நீளத்தைக் குறைத்துவிட்டது டட்ஸன். ரெனோ க்விட்டைவிட டட்ஸன் ரெடி-கோ 250 மிமீ நீளம் குறைவு. என்றாலும், ஆச்சரியப்படும் வகையில் க்விட்டைவிட 8 மிமீ அதிக வீல்பேஸைக்கொண்டிருக்கிறது ரெடி-கோ. உயரத்திலும் ரெடி-கோ, க்விட்டைவிட 62 மிமீ அதிகமாக இருக்கிறது. ஆனால், க்விட்டைவிட 19 மிமீ குறைவான அகலத்தில் இருக்கும் ரெடி-கோவின் இடவசதி, போதுமான அளவிலேயே இருக்கிறது. கேபினில் இருந்து வெளிச்சாலை தெளிவாகத் தெரியும் வகையில், முன்பக்க இருக்கைகள் பொசிஷன் செய்யப்பட்டுள்ளன. ஹெட்ரூம் அற்புதமாக இருந்தாலும், லெக்ரூம் குறைவாகவே இருக்கிறது.

இன்ஜின் - கியர்பாக்ஸ் - சஸ்பென்ஷன்

ரெனோ க்விட்டில் இருக்கும் அதே இன்ஜின்  - கியர்பாக்ஸ் கூட்டணிதான் (800சிசி, 5ஸ்பீடு, 54bhp, 7.2kgm) இந்த காரிலும் இருக்கிறது. அதனால், போதுமான பெர்ஃபாமென்ஸையும், மைலேஜையும் எதிர்பார்க்கலாம். 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட க்விட்டில் இருந்த 1.0 லிட்டர் இன்ஜின் - AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனை, உடனடியாக இதில் சேர்க்கும் முடிவில் டட்ஸன் இல்லை. மேலும், க்விட்டின் AMT மாடலில் இருந்த மாடர்ன் டயல் கன்ட்ரோலுக்குப் பதிலாக, வழக்கமான கியர் லீவரையே ரெடி-கோவில் பயன்படுத்த உள்ள டட்ஸன், இந்த காரின் அதிக உயரத்தைக் கருத்தில் கொண்டு சஸ்பென்ஷன் செட்-அப்பைச் செய்துள்ளதாகக் கூறியுள்ளது.

DATSUN redi-Go - ஜூன் மாதம் ரெடி!

முதல் தீர்ப்பு

ரெனோ - நிஸான் கூட்டணிக் கொள்கைக்கு ஏற்ப, ரெடி-கோவின் ஆரம்ப மாடலின் விலை, க்விட்டைவிடக் குறைவாகவே இருக்கும். முன்பு சொன்னபடியே 2.5 லட்சத்தில் அறிமுகமானால், இதைவிடச் சற்று அதிக விலையிலான க்விட், ஆல்ட்டோ, இயான் கார்களுக்கு நேரடிச் சவால் காத்திருக்கிறது. என்னதான் ஆல்ட்டோவின் டிஸைன் க்விட் அளவுக்கு அதிரடியாக இல்லாவிட்டாலும், மாருதியின் டீலர் நெட்வொர்க் மற்றும் நம்பகத்தன்மையே அதனை வெற்றியாளராக மாற்றியிருக்கிறது. அதனைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும் டட்ஸன்,  தனது டீலர் நெட்வொர்க்கை அதிகரிக்கும் பொருட்டு, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தனது டீலர்களின் எண்ணிக்கையை 300-ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. மே 1 முதல் புக்கிங் தொடங்கும் என்றும், ஜூன் 1 முதல் அதிகாரப்பூர்வமாக கார் விற்பனைக்கு வரும் எனவும் டட்ஸன் தெரிவித்துள்ளது. 1.25 லட்சம் புக்கிங்குகளைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கும் க்விட் பெற்ற அதே வரவேற்பை, ரெடி-கோ பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு