Published:Updated:

கமான்... க்ரிஸ்டா!

ஃபர்ஸ்ட் டிரைவ் : டொயோட்டா இனோவா க்ரிஸ்டா MT/ATதொகுப்பு / ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி
கமான்... க்ரிஸ்டா!

க்ரிஸ்டா என்ற பெயரில் இந்த மாதம் களமிறங்கும் இரண்டாம் தலைமுறை இனோவாவின் விலை, எம்பிவி செக்மென்ட்டில் தனது 15 ஆண்டுகால ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையிலேயே இருக்கும். அதாவது, பழைய காரைவிட குறைந்தபட்சம் மூன்று லட்சமாவது அதிகமாக இருக்கும். முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் தயாராகியிருக்கும் இனோவா க்ரிஸ்டா, கூடுதல் விலையை நியாயப்படுத்தும் வகையில் இருக்கிறதா?

டிஸைன்

அகலமான கிரில், V வடிவ பானெட், ஷார்ப்பான ஹெட் லைட்ஸ் ஆகியவற்றால், காரின் முகப்புப் பகுதி ஸ்டைலானதாக மாறியிருக்கிறது. ஷோல்டர் லைன், D-பில்லர் கண்ணாடி, உப்பலான பின்பக்க வீல் ஆர்ச் போன்றவை, காரின் பக்கவாட்டுத் தோற்றத்துக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. பின்பக்கம், ஸ்மார்ட்டான டெயில் லைட்ஸ் இடம் பிடித்திருக்கின்றன. பழைய இனோவா மற்றும் இனோவா க்ரிஸ்டாவின் வீல்பேஸ் ஒன்றுதான் என்றாலும், நீளம் மற்றும் அகலத்தில் க்ரிஸ்டா வளர்ந்திருப்பதன் விளைவாக, இடவசதி கூடியிருப்பதாக டொயோட்டா கூறுகிறது. திடமான கட்டுமானத்துக்காக, பழைய இனோவாவைப் போலவே க்ரிஸ்டாவும் லேடர் ஃப்ரேம் சேஸியைக் கொண்டிருக்கிறது.

கமான்... க்ரிஸ்டா!

DOHC, 16 வால்வு அமைப்பைக்கொண்ட புதிய GD சீரிஸ் டீசல் இன்ஜின்களில் ரெஸ்பான்ஸிவ்வான டர்போ சார்ஜர், குறைவான உராய்வுத் தன்மையைக்கொண்ட டைமிங் செயின், ஒரு சிலிண்டருக்கு இரண்டு இன்டேக் போர்ட் ஆகியவற்றால், இன்ஜின் பவர் கூடியிருக்கிறது. டிப்ட்ரானிக் மோடு கொண்ட புதிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இடம் பெற்றிருந்தாலும், பழைய காரைப் போலவே இதிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இருப்பது, சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஏனெனில், 6-வது கியர் நெடுஞ்சாலையில் காரை ரிலாக்ஸாக க்ரூஸ் செய்வதற்கு உதவியாக இருந்திருக்கும்.

கமான்... க்ரிஸ்டா!
கமான்... க்ரிஸ்டா!

உள்பக்கம்

இனோவா க்ரிஸ்டாவின் கேபினும், இரண்டாவது தலைமுறையை எட்டியிருக்கிறது. கம்ஃபர்ட் மற்றும் லக்ஸூரியை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஹெட்ரூம், லெக்ரூம், ஷோல்டர் ரூம் ஆகியவை அதிகரித்துள்ளன. இருக்கைகளின் அளவும் உயர்ந்துள்ளதால், முதுகுக்கும் தொடைக்கும் நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. மிரர் லிங்க் வசதிகொண்ட 7 இன்ச் டச் ஸ்கிரீனும் சின்ன மல்ட்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளேவும் தெளிவாக இருக்கின்றன. இதில், சின்ன ஸ்கிரீனை நாம் ஸ்டீயரிங்கில் இருக்கும் பட்டன்கள் வழியே கன்ட்ரோல் செய்ய முடிகிறது.

கூடுதல் இடவசதி காரணமாக, நடு வரிசை இருக்கைகளின் சொகுசுத்தன்மையை முழுவதுமாக அனுபவிக்க முடிகிறது. முன் பக்க இருக்கைகளுக்குப் பின்னால், மடிக்கக்கூடிய டேபிள் வழங்கப்பட்டிருப்பதுடன் மூட் லைட்டிங், பின்பக்கப் பயணிகளுக்கெனப் பிரத்யேகமான கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், டோர் பேடுகள் மற்றும் டேபிள் மீது வுட் ஃபினிஷ் என நடு வரிசையில் இருப்பவர்களுக்கு ராஜ மரியாதை. ஆனால், பின்பக்க ஏ.சி வென்ட்கள் திருப்தியாக இல்லை. ஒரு லீவரைப் பிடித்து இழுத்தாலே, நடு வரிசை இருக்கைகள் முன்பக்கமாக மடிந்து கொள்வதால், கடைசி வரிசை இருக்கையை அடைவது தற்போது சுலபம்.

கமான்... க்ரிஸ்டா!

பாட்டில் ஹோல்டர்கள், கப் ஹோல்டர்கள், க்ளோவ் பாக்ஸ் என மொத்தம் 20 வாட்டர் பாட்டில்கள் வைக்க இடம் இருக்கிறது! பழைய காரைவிட, புதிய இனோவாவில் பூட் ஸ்பேஸ் அதிகமாகியிருக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மெட்டீரியல்களின் தரம், ஃபிட் & ஃபினிஷ் ஆகியவை சூப்பராக இருந்தாலும், ஜெர்மன் கார்களில் இருக்கும் சாஃப்ட் டச் பிளாஸ்டிக்ஸ் இல்லை. அதேபோல், க்ளோவ் பாக்ஸ் மற்றும் கப் ஹோல்டரைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக்ஸ் தரமாக இல்லை என்பது நெருடல். காரில் இருக்கும் 7 பேருக்கும் சேர்த்து, ஒரே ஒரு யுஎஸ்பி ஸ்லாட் மட்டுமே இருப்பதும், ஸ்பேர் வீல் - கேபினுக்கு வெளியே இருப்பதற்கான காரணம் ஏன் என்பதும் தெரியவில்லை.

கமான்... க்ரிஸ்டா!

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

எப்போதுமே பெர்ஃபாமென்ஸ் இனோவாவின் பலமாக இருந்தது இல்லை. என்னதான் இன்ஜின் ட்யூனிங் காரணமாக, நகரத்தில் காரை ஓட்டுவது நல்ல அனுபவமாக இருந்தாலும், ஷார்ட் கியரிங் என்பதால், நெடுஞ்சாலையில் க்ரூஸ் செய்ய இந்த இன்ஜின் சிரமப்பட்டது குறிப்பிடத்தக்கது. இனோவா க்ரிஸ்டாவில் 150bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 174bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.8 லிட்டர் டீசல் இன்ஜின்களைப் பயன்படுத்தி, அந்தக் குறைகளைச் சரிசெய்துவிட்டது டொயோட்டா. இவற்றில் 2.8 லிட்டர் இன்ஜினில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இருக்க, 2.4 லிட்டர் இன்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன.

பழைய காரைப்போலவே 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் தான். ஆனாலும், 2.4 லிட்டர் இன்ஜின் கொண்ட மாடலின் பெர்ஃபாமென்ஸ் பெப்பியாக இருக்கிறது. அதனால், 120 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் எளிதாகப் பயணிக்க முடிகிறது. நார்மல், எக்கோ, பவர் டிரைவ் மோடுகளை உபயோகப்படுத்தும்போது, க்ரிஸ்டாவின் பெர்ஃபாமென்ஸில் நல்ல வித்தியாசம் தெரிகிறது. பவர் மோடில் வைத்து ஓட்டும்போது, காரின் ஆரம்பகட்ட மற்றும் மிட் ரேஞ்ச் ஆக்ஸிலரேஷன் அற்புதமாக இருக்கிறது. இதனால், 0-100 கி.மீ வேகத்தை 13.11 விநாடிகளிலேயே எட்டிவிட முடிகிறது (பழைய இனோவா 0-100 கி.மீ வேகம் 17.5 விநாடிகள்). ஆனால், இதைவிட விலை குறைவான ரெனோ லாஜி (11.47 விநாடிகள்) மற்றும் மஹிந்திரா ஸைலோ (12.97 விநாடிகள்) ஆகியவை, இனோவா க்ரிஸ்டாவைவிட வேகமாக இருக்கின்றன.

கமான்... க்ரிஸ்டா!

நார்மல் மற்றும் எக்கோ மோடுகளில், க்ரிஸ்டாவின் செயல்பாடு ஓகே ரகம்தான். அதிலும் எக்கோ மோடு, டாக்ஸி ஓட்டுநர்களை மனதில் வைத்து தயாரித்ததுபோலவே இருக்கிறது. நகர நெரிசலில் பயணிக்க, இந்த டிரைவ் மோடு வசதியாக இருக்கிறது. நார்மல் மோடில் காரை ஓட்டும்போது, 1,600ஆர்பிஎம் வரை டர்போ லேக். அதன் பிறகு, 4,000 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரி ஒரே சீராக இருக்கிறது. ஆக மொத்தத்தில் நார்மல் மோடு, அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கிறது. ஆனால், 3,800 ஆர்பிஎம் தாண்டும்போது, இன்ஜின் அதிக சத்தம் போடுகிறது. குறைவான அளவில்தான் வெளிச்சத்தம் காருக்குள் கேட்பதால், இன்ஜின் சத்தம் மிக அதிகமாகத் தெரிகிறது. நிலையான வேகங்களில் க்ரூஸ் செய்யும்போது, காரின் இன்ஜின் சைலன்ட்டாக இயங்குகிறது. கிளட்ச்சின் எடை சற்று குறைந்ததுபோல இருந்தாலும், ஷார்ட்டான கியர் லீவரில் கூடுதல் அழுத்தம் கொடுத்துதான் கியர் மாற்ற வேண்டியுள்ளது.

அதிக சக்தியும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் வேண்டுபவர்களுக்கு, 2.8 லிட்டர் இன்ஜின் சரியான தேர்வாக இருக்கும். பவர் மோடில் ஓட்டும்போது, ஆக்ஸிலரேட்டரை சின்ன அளவு அழுத்தினாலே, கார் விருட்டென முன்னோக்கிச் செல்கிறது. 1.9 டன் எடையுள்ள இனோவா க்ரிஸ்டா, 0-100 கி.மீ வேகத்தை 11.46 விநாடிகளிலேயே எட்டிவிடுகிறது! 160 கி.மீ வேகத்தை அசால்ட்டாக எட்டுவதுடன், டிராக்‌ஷன் கன்ட்ரோலை ஆஃப் செய்துவிட்டால், பர்ன் அவுட் செய்ய முடிகிறது! 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் செம ரெஸ்பான்ஸிவ். ஒவ்வொரு கியர் மாற்றத்தையும் நம்மால் உணர முடிவதுடன், விரைவிலேயே அப் ஷிஃப்ட் மற்றும் டவுன் ஷிஃப்ட் ஆவதும் குறையாகத் தெரிகின்றன. டிப்ட்ரானிக் மோடில் மேனுவலாக கியர் மாற்றி ஓட்டும் போது, 4,500 ஆர்பிஎம் வரை கியர்களை ஹோல்டு செய்ய முடிகிறது; கியர்களையும் உடனடியாக மாற்றவும் முடிகிறது.

ஓட்டுதல் தரம் & கையாளுமை

நல்ல முறையில் அதிர்வுகளை உள்வாங்கக்கூடிய சஸ்பென்ஷனைக் கொண்டிருந்தது இனோவா. திடமான சேஸியையும், பெரிய டேம்பர்கள் மற்றும் வீல்களைக் (215/55 R17) கொண்டுள்ள இனோவா க்ரிஸ்டாவின் ஓட்டுதல் தரம், பழைய காரைவிடச் சிறப்பாக இருக்கிறது. லோ ப்ரொஃபைல் டயர்கள் காரணமாக, கற்கள் நிறைந்த சீரற்ற சாலைகளில் பயணிக்கும்போது சஸ்பென்ஷன் தளர்வதை உணர முடிகிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 167 மிமீதான் என்றாலும், பெரிய ஸ்பீடு பிரேக்கர்கள் மற்றும் பள்ளங்களில் செல்லும்போது காரின் அடிப்பகுதி எவ்வித பாதிப்பையும் சந்திக்கவில்லை. நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ற வகையில், க்ரிஸ்டாவின் நிலைத்தன்மை அட்டகாசமாக இருப்பதுடன், எந்த வேகத்திலும் நம்பிக்கையுடன் காரை கன்ட்ரோல் செய்ய முடிகிறது. திருப்பங்களில் செல்லும்போது பாடி ரோல் இருப்பது மைனஸ். காரின் பாதுகாப்புக்காக ஏபிஎஸ், ஈபிடி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், 7 காற்றுப் பைகள் உள்ளன.

முதல் தீர்ப்பு

பிரீமியமான வெளிப்புற டிஸைன், சிறப்பம்சங்கள் நிறைந்த சொகுசான உட்புறம் என வேறு லெவலுக்குச் சென்றிருக்கிறது இனோவா க்ரிஸ்டா. அதிகரிக்கப்பட்ட இடவசதி, ஸ்டோரேஜ் ஸ்பேஸ், பூட் ஸ்பேஸ், அட்ஜஸ்ட் செய்யக் கூடிய இருக்கைகள் என இதன் கேபின் பிராக்டிக்கலாகவும் ஈர்க்கிறது. பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் ஓட்டுநருக்கு உற்சாகம் அளிக்கக்கூடியவை. ஆனால், காரின் எடை சற்றுக் குறைவாகவும், இன்டீரியரில் சில பிளாஸ்டிக் பாகங்களின் தரம் நன்றாகவும் இருந்திருக்கலாம். டாப் வேரியன்ட்டின் விலை 23 லட்சத்தைத் தாண்டும் என்றாலும், அதிக விலையிலான டொயோட்டா கார்கள் அளிக்கும் நம்பகத்தன்மை மற்றும் மன அமைதி ஆகியவற்றுக்கு, மக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு