Published:Updated:

C க்ளாஸா... 3 சீரிஸா?

ஒப்பீடு: BMW 3 சீரிஸ் Vs மெர்சிடீஸ் பென்ஸ் C க்ளாஸ்தொகுப்பு / ர.ராஜா ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி
C க்ளாஸா... 3 சீரிஸா?

மீண்டும் இந்த இரண்டு கார்களுக்கும் இடையே கம்பாரிஸனா என்று பதறாதீர்கள்; பொறுமை! இங்கே இருக்கும் பென்ஸ் C கிளாஸ், சமீபத்தில் விற்பனைக்கு வந்த C250d மாடல். 220d மாடலில் இருக்கும் அதே 2.1 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின்தான் இதிலும். ஆனால், இப்போது 204bhp சக்தியையும் 50.98kgm டார்க்கையும் அளிக்கிறது C கிளாஸ். அதேபோல், பென்ஸின் புதிய 9G-ட்ரானிக் 9-ஸ்பீடு கியர்பாக்ஸ்கொண்ட முதல் C கிளாஸ் இதுதான்.

BMW 320d - இதிலும் சில மாற்றங்கள். சஸ்பென்ஷன் இப்போது ரீ-ட்யூன் செய்யப் பட்டுள்ளது. மேலும், கேபினிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பிஎம்டபிள்யூவின் லேட்டஸ்ட் 2.0 லிட்டர், 4சிலிண்டர் டீசல் இன்ஜின் இப்போது, 190bhp சக்தியையும் 40.78kgm டார்க்கையும் அளிக்கிறது.

இந்த இரண்டு கார்களுடன் ஜாகுவார் XE காரையும் ஒப்பிட்டால், பட்டையைக் கிளப்பியிருக்கலாம். ஆனால், XE காரில் டீசல் இன்ஜின் இல்லையே!

C க்ளாஸா... 3 சீரிஸா?
C க்ளாஸா... 3 சீரிஸா?

இன்ஜின்

ஏற்கெனவே கூறியது போல, மெர்சிடீஸ் பென்ஸ் C250d காரிலும், C220d காரிலும் ஒரே இன்ஜின்தான். ஆனால், C250d மாடலில் அதிக சக்தி என்பது, ஓட்டும்போது வெளிப்படையாகவே தெரிகிறது. முன்பைவிட குறைந்த ஆர்பிஎம்-ல் இன்ஜின் ரெஸ்பான்ஸிவ்வாக இருக்கிறது. மிட்-ரேஞ்ச் ஸ்ட்ராங். புதிய 9-ஸ்பீடு கியர்பாக்ஸின் ரேஷியோ நெருக்கமாக இருப்பதால், எல்லா வேகங்களில் இருந்தும் ஆக்ஸிலரேஷன் சூப்பர். பேடில் ஷிஃப்டர்கள் மூலம் விரட்டி ஓட்டுவது இன்னும் ஜாலி.

பிஎம்டபிள்யூ 3 சீரீஸ் காரின் இன்ஜின், முன்பைவிட இப்போது அதிக சத்தத்துடன் இயங்குகிறது. ஆனால், பழைய 320d இன்ஜினின் ‘கரகர’ உணர்வு இப்போது இல்லை என்றாலும், ஒட்டு மொத்தமாக இன்ஜின் சத்தம் அதிகம்தான். குறைந்த ஆர்பிஎம்-ல் பவர் குறைவாக இருப்பதை, 8-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஓரளவுக்குச் சமாளிக்கிறது. ஆனால், 1,500 ஆர்பிஎம் தாண்டியதும், இன்ஜின் சீறுகிறது. ஸ்போர்ட்+ மோடில் 5,400 ஆர்பிஎம் வரை சீராக ரெவ் ஆகிறது இந்த இன்ஜின். நல்ல ஸ்போர்ட்டியான பவர் டெலிவரி. 

பவர் நம்பரில் பென்ஸை விட பிஎம்டபிள்யூ பின்தங்கி இருந்தாலும், ஆன்-ரோடு பெர்ஃபாமென்ஸில்  பிஎம்டபிள்யூதான் கில்லி. லாஞ்ச் கன்ட்ரோல் வசதி இருப்பதால், 0-100 கி.மீ வேகத்தை 7.25 விநாடிகளில் கடக்கிறது பிஎம்டபிள்யூ. பென்ஸ் 0.6 விநாடிகள் தாமதமாகத்தான் அதே வேகத்தை அடைகிறது.

இரண்டு கார்களிலும் அதிக கியர்கள் இருப்பதால், க்ரூஸிங் சிறப்பாக இருக்கின்றன. ஆனால், அமைதியான கேபின் என்றால், பென்ஸ்தான்.

C க்ளாஸா... 3 சீரிஸா?
C க்ளாஸா... 3 சீரிஸா?

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

320d காரை ஸ்போர்ட்+ மோடில் ஓட்டினால், ஸ்டீயரிங் எடை அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. வேகம் அதிகரிக்க அதிகரிக்க, ஸ்டீயரிங் ஃபீட்பேக் செம சூப்பர். வளைவுகளில் கிரிப் சிறப்பாக இருப்பதால், காரை ஜாலியாக ஓட்டலாம். காரின் எடை முன்பக்கமும் பின்பக்கமும் சமமாக இருப்பதால், டைனமிக்ஸ் அருமை.

பிஎம்டபிள்யூ அளவுக்கு பென்ஸ் கார்கள் ஓட்ட  எப்போதுமே ஜாலியாக இருந்தது இல்லை. ஆனால், இந்த C-கிளாஸின் ஸ்டீயரிங் நன்றாகவே இருக்கிறது. காரின் ஒட்டுமொத்த டைனமிக்ஸ் சிறப்பாக இருந்தாலும், பிஎம்டபிள்யூ அளவுக்கு ‘ஷார்ப்’ இல்லை. பென்ஸின் டயர்களும் அந்த அளவுக்கு கிரிப்பாக இல்லை.

புதிய பிஎம்டபிள்யூ 320d காரின் சஸ்பென்ஷன் இப்போது ரீ-ட்யூன் செய்யப்பட்டுள்ளது. அதனால், ஓட்டுதல் தரம் முன்பைவிட இப்போது சூப்பர். அதிக வேகங்களில் நல்ல ஸ்டெபிலிட்டி.
பென்ஸ், குறைந்த வேகங்களில் இறுக்க மான ஓட்டுதல் தரம் கொண்டிருக்கிறது. க்ரூஸ் செய்யும்போதுகூட, பிஎம்டபிள்யூ அளவுக்கு ஸ்டெபிலிட்டி இல்லை. பெரிய பென்ஸ் கார்களில் இருக்கும் ஸ்மூத்தான ஓட்டுதல் தரம், இந்த காரில் இல்லை.

உள்பக்கம்

பின்னிருக்கை சொகுசில் 320d கார்தான் நம்மை வசீகரிக்கிறது. இருக்கையின் சப்போர்ட்டும், கால்களுக்கு இட வசதியும் அதிகம். C-கிளாஸின் பின்னிருக்கை சொகுசும், ஹெட்ரூமும் கொஞ்சம் குறைவு. ஆனால், பென்ஸின் கேபின் பிரீமியமாக இருக்கிறது. மர வேலைப்பாடுகள், சுவிட்ச்சுகள் என அனைத்தும் சூப்பர்.

பென்ஸின் 7.0 இன்ச் இன்ஃபோ டெயின்மென்ட் சிஸ்டம், அதன் அழகான டேஷ்போர்டில் கச்சிதமாகப் பொருந்தவில்லை. போனின் 3G/4G நெட்வொர்க்கைப் பயன்படுத்தி இன்டர்நெட் ரேடியோ ஸ்டேஷன்கள், இன்டர்நெட் ஆகியவற்றை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் பயன்படுத்தலாம்.

பிஎம்டபிள்யூவின் iDrive இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம், பென்ஸ் அளவுக்கு அதிக வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், பயன்படுத்த வசதியாக இருக்கிறது. பென்ஸைவிட பெரிய 8.7 இன்ச் ஸ்க்ரீன் கொண்டுள்ளது. மேலும், பார்த்துப் பார்த்து பழகிய பிஎம்டபிள்யூவின் கேபினை, கொஞ்சமாவது ஃப்ரெஷ்ஷாகக் காட்டுவது இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான். மினிமலிஸம் டிஸைனைக்கொண்ட டேஷ் போர்டு, பார்க்க ஸ்போர்ட்டியாக இருந்தாலும், பென்ஸின் பிரீமியம் ஃபீல் இல்லை.

இரண்டு கார்களிலும் முன்பக்கம் பவர்டு சீட்கள் இருந்தாலும், எலெக்ட்ரானிக் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட் இல்லை. லெதர் இருக்கைகள், LED ஹெட்லைட்ஸ், பேடில் ஷிஃப்டர், டிரைவ் மோடு, நேவிகேஷன், சன்ரூஃப் ஆகிய வசதிகள் இரு கார்களிலும் உள்ளன.

C க்ளாஸா... 3 சீரிஸா?

ஆனால், பென்ஸின் LED ஹெட்லைட்ஸில் உள்ள பிரத்யேகத் தொழில்நுட்பம், எதிரே வரும் வாகனங்களுக்கு கிளார் அடிக்காமல் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறது. மேலும், பனோரமிக் சன்ரூஃப், ரிவர்ஸ் கேமரா வசதிகள் பென்ஸில்தான். பிஎம்டபிள்யூவில் சின்ன சன்ரூஃப் மற்றும் ரியர் பார்க்கிங் சென்ஸார்கள் மட்டுமே உள்ளன. 20 ஜிபி ஆன்-போர்டு மியூஸிக் ஸ்டோரேஜ், லாஞ்ச் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் பிஎம்டபிள்யூவில் மட்டும் உள்ளன. ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே இங்கே நாம் டெஸ்ட்

C க்ளாஸா... 3 சீரிஸா?

செய்த M-ஸ்போர்ட் மாடலில் மட்டும் கிடைக்கிறது. அதேபோல், மற்ற 3-சீரீஸ் கார்களில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்ட, 18-இன்ச் வீல்கள், ஸ்போர்ட்டியான பாடி கிட் கொண்டிருக்கிறது.

பிஎம்டபிள்யூவில் நல்ல ஓட்டுதல் தரம், வசதியான பின்னிருக்கை, ஸ்போர்ட்டியான கையாளுமை இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பென்ஸ் தரும் ‘முழுமை’ இந்த பிஎம்டபிள்யூவில் இல்லை. 56.40 லட்சம் (சென்னை ஆன்ரோடு) விலை கொஞ்சம் அதிகம்தான்.

பென்ஸ் C250d மாடலின் உத்தேச விலை 55.06 லட்சம் ரூபாய். சிறப்பான கேபின், அமைதியான ஓட்டுதல் தரம், பவர் ஃபுல்லான இன்ஜின், பயன்படுத்த எளிதாக இருப்பது என ஆல்-இன்-ஆல் காராக இருக்கிறது பென்ஸ். நம் தேர்வு, மெர்சிடீஸ் பென்ஸ் C250dதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு