Published:Updated:

செம ஸ்போர்ட்டி மச்சி!

ஒப்பீடு: டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 Vs பஜாஜ் பல்ஸர் RS200தொகுப்பு / ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி
செம ஸ்போர்ட்டி மச்சி!

ன்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்குகளான டிவிஎஸ் அப்பாச்சி RTR200 மற்றும் பஜாஜ் பல்ஸர் RS200 ஆகிய இரண்டுமே ஸ்போர்ட்டியாகவும், அன்றாடப் பயன்பாட்டை மனதில் வைத்தும் வசதியான இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டவை. பெர்ஃபாமென்ஸ் - கையாளுமை ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிப்பவை.

பல்ஸர் AS200 பைக்குக்குக் கிடைத்த வரவேற்பு, பல்ஸர் NS200 பைக்கின் விற்பனையை நிறுத்த வைத்தது. எனவே, ரேஸ் டிராக் அனுபவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள டிவிஎஸ் பைக் சிறந்ததா? நெடுஞ்சாலைகளுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பஜாஜ் பைக் சிறந்ததா? அப்பாச்சி RTR200, பல்ஸர் RS200 ஆகிய இரண்டு ஸ்போர்ட்டி ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் பைக்குகளை மோதவிட்டோம்.

செம ஸ்போர்ட்டி மச்சி!
செம ஸ்போர்ட்டி மச்சி!

டிஸைன் மற்றும் சிறப்பம்சங்கள்

டிஸைனில், இரண்டு பைக்குகளும் இரு துருவங்களாக இருக்கின்றன. இரட்டை புரொஜெக்டர் ஹெட்லைட்டிலும் புல் ஃபேரிங்கிலும் பல்ஸர் மிரட்ட, DRL ஹெட்லைட் உடன் நேக்கட் ஸ்ட்ரீட் பைக்காக கெத்து காட்டுகிறது அப்பாச்சி. பல்ஸர் RS200 பைக்கில் இருக்கும் ஒன்றோடு ஒன்று பொருந்தாத டிஸைன் அம்சங்கள் மற்றும் கிராஃபிக்ஸைக் கொண்டுள்ள ஃபுல் ஃபேரிங், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள LED டெயில் லைட் ஆகியவை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், சாலையில் செல்லும்போது, பலரது கவனத்தை பல்ஸர் RS ஈர்க்கும். பேக்லிட் சுவிட்சுகள், நீல வண்ண பேக்லிட்டில் அனலாக் டேக்கோ மீட்டருடன் இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் என பஜாஜ் பைக்குகளுக்கே உரித்தான விஷயங்கள் இதிலும் தொடர்கின்றன. ஆனால், சில 150சிசி பைக்குகளிலேயே இருக்கும் அம்சமான கியர் இண்டிகேட்டர், RS200-ல் இல்லாதது நெருடல்.

அப்பாச்சியின் ஷார்ப்பான எக்ஸ்டென்ஷன்களுடன் இருக்கும் பெட்ரோல் டேங்க் ஈர்க்கிறது. மேலும், பைக்கின் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட மஞ்சள் நிறம், ஆஃப்செட் செய்யப்பட்ட பெட்ரோல் டேங்க் மூடி, அலாய் லீவர்கள் க்ளாஸ் ரகம். வெள்ளை வண்ண பேக்லிட் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட்டில் டாப் ஸ்பீடு, லேப் டைமர், ஆக்ஸிலரேஷன் டைமர், கியர் இண்டிகேட்டர் எனப் பல வசதிகள் இருக்கின்றன.  ஃபிட் & ஃபினிஷ், கட்டுமானத் தரம் ஆகியவற்றில் இரண்டு பைக்குகளுமே சிறந்து விளங்குகின்றன.

செம ஸ்போர்ட்டி மச்சி!

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

இந்தியாவில் 200சிசி செக்மென்ட்டில்கூட, ஆக்ஸிலரேஷன் மற்றும் டாப் ஸ்பீடு முக்கியம் என்றாலும், மைலேஜும் அவசியம் என எதிர்பார்க்கப்படுவது இயல்பு. எனவே, இந்த பெர்ஃபாமென்ஸ் பைக்குகளைத் தினசரிப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலும் ட்யூன் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அப்பாச்சி RTR200 பைக்கில், 8,500 ஆர்பிஎம்-ல் 20.5bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 197.8சிசி ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பல்ஸர் RS200 பைக்கில் இருக்கும் மூன்று ஸ்பார்க் ப்ளக்குகளைக்கொண்ட 199.5 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின், 9,750 ஆர்பிஎம்-ல் 24.4bhp பவரை வெளிப்படுத்துகிறது. இரண்டு இன்ஜின்களிலுமே 4 வால்வுகள் மற்றும் அதிர்வுகளைக் கட்டுபடுத்தக்கூடிய கவுன்டர் பேலன்ஸர் ஷாஃப்ட் இடம்பிடித்துள்ளன. முதல் கியர் கீழே, மற்றவை மேலே என்ற விதத்தில் இயங்கக்கூடிய கியர்பாக்ஸ் மற்றும் எடை குறைவான கிளட்ச் ஆகியவை இரண்டு பைக்கிலுமே இருக்கின்றன. ஆனால், அப்பாச்சியில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருக்க, பல்ஸரில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருக்கிறது. இரண்டிலுமே ஃப்யூல் இன்ஜெக்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதால், திராட்டில் ரெஸ்பான்ஸ் மற்றும் ஆக்ஸிலரேஷன் ஒரே சீராக இருக்கின்றன.

ஆரம்ப வேகம் மற்றும் மிட் ரேஞ்சில் இரண்டு பைக்குகளுமே சமமாக இருக்கின்றன. பழைய அப்பாச்சியுடன் ஒப்பிடும்போது, புதிய அப்பாச்சியில் அதிர்வுகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மிட் ரேஞ்சைத் தாண்டிய பிறகு, பவர்ஃபுல்லான பல்ஸர் RS200 வேகப் போட்டியில் முன்னிலை பெறுவதுடன், ஸ்மூத்தான அதிர்வுகளற்ற பெர்ஃபாமென்ஸை வழங்குகிறது.

செம ஸ்போர்ட்டி மச்சி!

0-60 கி.மீ வேகத்தை பல்ஸர் 3.76 விநாடிகளிலும், அப்பாச்சி 4 விநாடிகளிலும் எட்டிப் பிடிக்கின்றன. 0 - 100 கி.மீ வேகத்தை பல்ஸர் (9.71 விநாடி), அப்பாச்சியைவிட (10.73 விநாடி) விரைவாகவே எட்டிவிடுகிறது. எனவே, எதிர்பார்த்தபடியே அப்பாச்சி RTR200 பைக்கின் அதிகபட்ச வேகமான மணிக்கு 128 கி.மீ, பல்ஸர்  RS200 பைக்கின் அதிகபட்ச வேகமான 137 கி.மீ-யைவிடக் குறைவாகவே இருக்கிறது. அதிக வேகத்தில் செல்லும்போது, காற்று, முகத்தில் அறைவதைத் தடுக்கும் பல்ஸரின் புல் ஃபேரிங் டிஸைன், ஸ்டைலாகவும் பயனுள்ள வகையிலும் இருக்கிறது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை

அப்பாச்சி மற்றும் பல்ஸரில் சொகுசான இருக்கைகள், ஓரளவு உயரமான டூ-பீஸ் ஹேண்டில்பார்கள் இருப்பதால், ஸ்போர்ட்டியான அனுபவத்துடன் கூடிய கம்யூட்டர் பைக்காக இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். 148 கிலோ எடையுள்ள நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான அப்பாச்சி RTR200, டூயல் க்ரேடில் ஸ்டீல் ஃப்ரேமைக் கொண்டிருக்கிறது. 165 கிலோ எடையுள்ள ஃபுல் ஃபேரிங் பைக்கான பல்ஸர் RS200, Perimeter ஸ்டீல் ஃப்ரேமைக் கொண்டிருக்கிறது.

செம ஸ்போர்ட்டி மச்சி!

சேஸியில் இரண்டு பைக்குகளுமே வித்தியாசமாக இருந்தாலும், சஸ்பென்ஷன் விஷயத்தில் (முன்பக்கம் - டெலிஸ்கோபிக், பின்பக்கம் - மோனோஷாக்) ஒற்றுமையைக் காண முடிகிறது. இரண்டு பைக்கின் ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை நன்றாக இருக்கின்றன. ஆனால், அப்பாச்சியின் சஸ்பென்ஷன் சற்று இறுக்கமாக இருப்பது, திருப்பங்களில் செல்லும்போது உதவுகிறது. பல்ஸரின் சஸ்பென்ஷன் சற்று மென்மையாக இருப்பது, மோசமான சாலைகளில் செல்லும்போது பயனுள்ளதாக இருக்கிறது. எடை குறைவான அப்பாச்சியை, திருப்பங்களில் கையாள எளிதாக இருக்கிறது. ஆனால், பல்ஸரின் அதிக எடை, வளைவுகளில் பைக்கின் நிலைத்தன்மைக்குத் துணை நிற்கிறது. அப்பாச்சி RTR பைக்கில் டிவிஎஸ்ஸின் சொந்தத் தயாரிப்பான ரிமோரா மற்றும் பைரலி டயர் ஆப்ஷன் (17 இன்ச்) இருக்க, பல்ஸர் RS200 பைக்கில் 17 இன்ச் MRF Soft Compound rubber டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

செம ஸ்போர்ட்டி மச்சி!
செம ஸ்போர்ட்டி மச்சி!
செம ஸ்போர்ட்டி மச்சி!

இவை வெளிப்படுத்தும் கிரிப் அட்டகாசமாக இருப்பதால், எப்படிப்பட்ட சாலையிலும், வேகத்திலும் இரண்டு பைக்குகளையும் நம்பிப் பயணிக்கலாம். இரண்டு பைக்கிலும் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் உள்ள பெட்டல் டிஸ்க் பிரேக்ஸும் நல்ல ஃபீட்பேக்கை அளிக்கின்றன. அப்பாச்சி

செம ஸ்போர்ட்டி மச்சி!

RTR200 பைக்கில் RLP (Rear LiftOff Protection) வசதியுடன் கூடிய ஏபிஎஸ் சிஸ்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது டிவிஎஸ். ஆனால், பல்ஸர் RS200 பைக்கில் முன்பக்க பிரேக்கில் மட்டும் சிங்கிள் சேனல் Bosch ஏபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

அனைத்து ஏரியாக்களிலும் சிறந்து விளங்கும் இரண்டு பைக்குகளை ஒப்பிட்டு, அதில் எது பெஸ்ட் என்பதைக் கூறுவது கொஞ்சம் கடினம்தான். ஆனால், அப்பாச்சி RTR200 பைக்கைவிட (ரூ.1.11 லட்சம் - 1.17 லட்சம்) அதிக விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பல்ஸர் RS200 (ரூ.1.39 லட்சம் - 1.52 லட்சம், சென்னை ஆன் ரோடு) பைக்கே வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறது. ஏனெனில், அதிர்வுகளற்ற பவர்ஃபுல் இன்ஜின், ஃபுல் ஃபேரிங், தொழில்நுட்பம், சிறப்பம்சங்கள் எனக் கூடுதல் விலையை நியாயப்படுத்த பல விஷயங்கள் பல்ஸரில் இருக்கின்றன. அப்பாச்சி நல்ல பைக் என்றாலும், ஒட்டுமொத்த பேக்கேஜாகப் பார்க்கும்போது, பல்ஸர் தனித்துத் தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு