Published:Updated:

வெயிலோடு விளையாடாதே!

விழிப்பு உணர்வு: சம்மர் டிப்ஸ்ராகுல் சிவகுரு

வெயிலோடு விளையாடாதே!

வெயில் வறுத்தெடுக்கத் தொடங்கி விட்டது. வெயில், மனிதர்களுக்கு மட்டுமல்ல...வாகனங்களுக்கும் பிரச்னையைக் கொடுக்கும். வெயிலில் இருந்து நம்மைக் காத்துக்கொள்வது போல, பணம் கொடுத்து வாங்கிய வாகனத்தை முறையாகப் பராமரித்தால்தான் பயண வழியில் நிம்மதியாகச் செல்ல முடியும். இல்லாவிட்டால் கொளுத்தும் வெயிலில் மெக்கானிக்கைத் தேடி அலைய வேண்டிவரும்.

 முதல் வேலையாக, வெயிலுக்கு முன்பாக ஒரு முழு சர்வீஸ் செய்துவிடுங்கள். பிரேக் ஆயில், இன்ஜின் ஆயில், கியர்பாக்ஸ் ஆயில், ஸ்டீயரிங் ஆயில், கூலன்ட், வாஷர் லிக்விட் ஆகியவை சரியான அளவில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்யுங்கள். ஏ.சி, ரேடியேட்டர் ஃபேன் பெல்ட்டுகள் சரியான டென்ஷனில் இருக்க வேண்டும். இவை சேதமடைந்திருந்தாலோ, தளர்வாக இருந்தாலோ மாற்றிவிடுவது நல்லது.

 வெயிலில் வெகுநேரம் நின்ற காரைத் திரும்ப எடுக்கும்போது, முதலில் எல்லா ஜன்னல்களையும் திறந்துவிட்டு, இக்‌னீஷனை ஆன் செய்து ஏ.சி ஃபேனை ஃபுல் ஸ்பீடு செட்டிங்கில் இயக்கி, உள்ளே இருக்கும் வெப்பத்தை வெளியேற்றுங்கள். கேபினில் வெப்பம் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு, ஜன்னல்களை மூடிவிட்டு ஏ.சியை ஆன் செய்யலாம். இதனால், காரில் ஏ.சி கூல் ஆகும் நேரம் குறையும். அதேபோல், வெயிலில் காரை பார்க்கிங் செய்யும்போது, அரை இன்ச் அளவுக்கு இடைவெளிவிட்டு ஜன்னலை மூடினால், காருக்குள் வெப்பம் அதிகரிப்பது குறையும்.

 கார், பைக்கின் அப்பீலே வண்ணம்தான். அது மங்கினால், பழைய வாகனம்போலத் தோற்றம் அளிக்கும். காரின் வண்ணத்துக்கு எதிரி, வெயில் மற்றும் பறவைகளின் எச்சம். இந்த இரண்டில் இருந்தும் பாதுகாத்துவிட்டால், காரின் அழகு குலையாது. கோடைக்கு முன்பும், குளிர்காலத்துக்கு முன்பும் காருக்கு பாலீஷ் செய்ய வேண்டும் என்பதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.

 காரை வெயிலில் வாட்டர் வாஷ் செய்யக் கூடாது. நிழலில் வைத்துச் சுத்தம் செய்வதுதான் சரியான முறை. அதேபோல், வெயிலில் பயணித்த காரின் மேற்பரப்பு மிகச் சூடாக இருக்கும் சமயத்தில், குளிர்ந்த நீரை மேலே ஊற்றினால், அது பெயின்டைப் பாதிக்கும்.

 காலையில் முதலில் வாகனத்தை ஆன் செய்யும்போது, சிலர் ரெவ் செய்துகொண்டே இருப்பார்கள். இது தேவை இல்லை. முதலில் ஆன் செய்ததும் சிறிது நேரம் ஐடிலிங்கில்தான் ஓடவிட வேண்டும். பின்னர் நிதானமாக ஓட்டினாலே போதும்; இன்ஜின் அதனுடைய ஆப்டிமம் வெப்பத்தில் இயங்க ஆரம்பித்துவிடும். அதுவும் கோடை காலத்தில் இன்னும் விரைவாக வார்ம்-அப் ஆகிவிடும்.
 ரப்பருக்கும் வெப்பத்துக்கும் ஆகவே ஆகாது. இன்ஜின் பெல்ட், ரப்பர் பைப்புகள், வயர்கள் அதிக வெப்பத்தால் சேதமடைய வாய்ப்புகள் அதிகம். இறுகிக்கொண்டே வரும் ரப்பர் பைப்புகள், ஒரு கட்டத்தில் சேதமடைந்துவிடும். இவற்றை செக் செய்வது அவசியம்.

 டயர்கள் தேய்ந்த நிலையில் இருந்தால், அதை உடனே மாற்றிவிடுங்கள். வீல் அலைன்மென்ட், வீல் பேலன்ஸ் சோதித்துவிடுங்கள். வெயில் காலத்தில் அதிக வெப்பத்தால் டயர் பிரஷர் தானாகவே கூடும். அதனால், டயர் வெடிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே, வெயில் காலத்தில் குறைந்த வேகத்தில் செல்வது நல்லது.

 இன்ஜின் அதிகம் சூடானால், காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரை கொஞ்ச நேரம் ஐடிலிங்கிலேயே ஓடவிடுங்கள். இன்ஜினை ஆஃப் செய்ய வேண்டாம். இன்ஜினிலிருந்து புகை வந்தால் காரை ஆஃப் செய்யுங்கள். புகையோ அல்லது சத்தமோ நிற்கும் வரை பானெட்டைத் திறக்காதீர்கள். இன்ஜின் சூடாக இருக்கும்போது ரேடியேட்டர் மூடியைத் திறக்க முயற்சிக்காதீர்கள்.

  கோடை காலத்தில், பேட்டரிக்குள் இருக்கும் திரவம் மிக வேகமாக ஆவியாகும். எனவே பேட்டரி மட்டும் இல்லாமல், சார்ஜிங் சிஸ்டத்தில் பிரச்னை இருந்தாலும் சிக்கல்தான். வோல்டேஜ் ரெகுலேட்டரில் பிரச்னை இருந்தால்கூட, அதிகமாக சார்ஜ் ஏறி, பேட்டரி  ட்ரை ஆகிவிடும்.

 ஏ.சி கூலிங் சரியாக இல்லை என்றால், கேஸ் லீக்கேஜும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம்.

 சன் ஸ்க்ரீன், விண்டோ ஷேடு ஷீட்ஸ் வாங்கிப் பொருத்துவது அதிகப்படியான வெப்பத்தை காருக்குள் வரவிடாமல் தடுக்கும். ஆனால், வெளியே என்ன நடக்கிறது என்பதை மறைக்கும் அளவுக்கு இருக்கும் ஷேடுகளைப் பயன்படுத்த வேண்டாம்.

 பெட்ரோல் எளிதில் ஆவியாகக்கூடியது என்பதால், கோடை காலத்தில் பெரும்பாலும் இரவு நேரங்களில் எரிபொருள் நிரப்புங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு