Published:Updated:

KB 100 - 20,000 ரூபாய் பொக்கிஷம்!

க்ளாஸிக் பைக்: கவாஸாகி பஜாஜ் KB100இரா.த.சசிபிரியா, படங்கள்: தே.தீட்ஷித்

பிரீமியம் ஸ்டோரி
KB 100 - 20,000 ரூபாய் பொக்கிஷம்!

வாஸாகி - பஜாஜ் கூட்டணியில் 1986-ம் ஆண்டு வெளிவந்த முதல் பைக், KB100. டிவிஎஸ் - சுஸூகியின் இண்ட் சுஸூகி, யமஹாவின் RX100 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக வெளியான பைக், KB100. கவாஸாகி என்றாலே, இந்தியாவின் வேகமான பைக் என்று இருந்த காலம் அது.

பொதுவாக, மோட்டார் பைக்குகள் வேகமாகச் செல்லும். ஆனால், சில பைக்குகளே சீறிப் பாயும். அப்படி இளைஞர்களின் மனதில் சீறிப் பாய்ந்த பைக்தான் சீட்டா (Cheetah) என வர்ணிக்கப்பட்ட KB100. அதிக சக்தி, நல்ல மைலேஜ், நீளமான வீல் பேஸ், ரோட்டரி வால்வு இன்ஜின், டேக்கோ மீட்டர் என இந்த பைக்கின் நவீன அம்சங்கள் உடனடியாக வெற்றியடைய வைத்தன. பின்பு, இதன் இன்ஜின் அளவு அதிகரிக்கப்பட்டு, சக்தி வாய்ந்த ‘KB125’ பைக்காகவும் உருவெடுத்தது. தரம், வேகம், துல்லியம், ஸ்மூத் இன்ஜின் எனப் பெயர் பெற்ற KB100 பைக், 30 ஆண்டுகளைக் கடந்து இன்றும் சாலையில் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

திருச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஸ்டீபன் வின்சன், கடந்த 25 ஆண்டுகளாக KB100 பைக்கைப் பயன்படுத்தி வருபவர். அவரிடம் பேசினோம். “நான் ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் பைக் வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. பைக் ஒன்று வாங்கலாம் என முடிவுசெய்து எந்த பைக் வாங்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தபோது, என்னுடைய சீனியர் ஒருவர் சொல்லித்தான் கவாஸாகி பஜாஜ் பற்றித் தெரிந்தது. நான் எதிர்பார்த்த மாதிரியே இருந்ததால், 1990 ஏப்ரல் மாதத்தில் என்னுடைய முதல் பைக்கான இதை வாங்கினேன்.

முதன்முறையாக ஓட்டும்போதே இதன் பெர்பெக்ட் பேலன்ஸ், கன்ட்ரோல், ஹேண்ட்லிங் என அனைத்துமே என்னைக் கவர்ந்தன. பைக்கை ஓட்டும்போது இன்ஜினில் சத்தமே இருக்காது. சில சமயங்களில், பைக் இன்ஜின் இயங்குகிறதா இல்லையா என்றே தெரியாத அளவுக்கு ஸ்மூத்தாக இருக்கும். புறப்பட்ட சில விநாடிகளிலேயே டாப் ஸ்பீடும் எட்டிவிடும். இதன் குறைவான எடை, பேலன்ஸ் செய்வதற்கு இலகுவாக இருக்கும்.

என் மகன் பஜாஜ் பல்ஸர் 180 பைக் பயன்படுத்துகிறான். அவன்கூட, ‘இவ்வளவு பழைய பைக்கை வெச்சிருக்கீங்களே... எவ்வளவு புது பைக் வந்துருக்கு... இதை மாத்திட்டு புது பைக் வாங்குங்க’ என்று சொல்வான். எனக்கு வேறு பைக்குகளில் விருப்பம் இல்லை. ‘எப்படி 25 வருஷமா ஒரே பைக்கை ஓட்டிட்டு இருக்கீங்க?’ என்று சிலர் கேட்பார்கள். உண்மை என்னவென்றால், இந்த பைக்கில் கிடைக்கும் திருப்தி, எனக்கு வேற எந்த பைக்கிலும் கிடைக்கவில்லை.

இந்த பைக்கில்தான் முதல்முறையாக சென்டர் லாக், பார்க்கிங் லைட், டேக்கோ மீட்டர், இன்ஜின் கில் ஸ்விட்ச் போன்ற அம்சங்கள் அறிமுகமாயின.

இதன் ப்ளஸ் என்றால், இவ்வளவு ஆண்டுகள் கடந்தும் இதன் தரம், பவர், பிரேக் என எதுவும் மாறாமல், வாங்கும்போது எப்படி இருந்ததோ அப்படியே இருப்பதுதான். 25 ஆண்டுகளாக ஒரே பைக் பயன்படுத்துகிறோம் என்ற எண்ணம் எனக்கு வந்ததே இல்லை. இதன் லாங் வீல்பேஸ் பைக் ஸ்கிட் ஆகாமல் பாதுகாப்பான பயணத்துக்கு ஏற்றதாக இருக்கிறது. பைக்கில் மைனஸ் என எதுவும் சொல்ல முடியாது. அப்படி இருந்திருந்தால், வேறு பைக் வாங்கிருப்பேன். இதைப் பராமரிப்பதில் எந்தச் சிரமும் இருந்தது இல்லை. ஆனால், இதன் உதிரி பாகங்கள்தான் கிடைப்பதே இல்லை.

இதை அப்போது 20,000 ரூபாய்க்கு வாங்கினேன். ஆனால், இன்று இந்த பைக் எனக்குக் கிடைத்த பொக்கிஷம். மீண்டும் கவாஸாகி பைக் இந்த செக்மென்டில் மார்க்கெட்டுக்கு வந்தால், நிச்சயம் அதைத்தான் வாங்குவேன்!” என்கிறார் ஸ்டீபன் வின்சன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு