Published:Updated:

மணலில் நடந்த அனல் போட்டி!

மாருதி சுஸூகி: டெஸெர்ட் ஸ்டார்ம் ராலிகா.பாலமுருகன், படங்கள்: தி.ஹரிஹரன்

பிரீமியம் ஸ்டோரி
மணலில் நடந்த அனல் போட்டி!

மாருதி சுஸூகி நிறுவனத்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரிவு, ஆண்டு முழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் ‘டெஸர்ட் ஸ்டார்ம்’ ராலி; ஜூலை - ஆகஸ்டில் கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, கோவா மாநிலங்களில் ‘தக்‌ஷின் டேர்’ ராலி; அக்டோபர் மாதத்தில் இமாச்சல், காஷ்மீர் மாநிலங்களில் ‘ரைடு டி ஹிமாலயா’ ஆகிய மூன்று முக்கியமான ராலிகளை நடத்துவதுடன், இந்த ஆண்டு முதல் ‘சூப்பர் லீக் TSD சாம்பியன்ஷிப்’ எனும் போட்டியை இந்தியாவில் ஆறு இடங்களில் நடத்துகிறது. அதேபோல், மோட்டோகிராஸ் பந்தயங்களையும் மாருதி நடத்துகிறது.

இந்த ஆண்டு மாருதி நடத்திய டெஸெர்ட் ஸ்டார்ம் ராலிக்கு, இது 14-வது ஆண்டு. மினி டக்கார் ராலி என வர்ணிக்கப்படும் இந்த ராலியின் டெரர் அனுபவங்களை ஈரோட்டைச் சேர்ந்த ராலி வீரர்கள் நமக்குச் சொல்லியிருந்தனர்.

டெஸெர்ட் ஸ்டார்ம் ராலிக்கு மோட்டார் விகடனுக்கு அழைப்பு வர... டெரர் அனுபவம் எப்படி இருக்கும் என பார்த்துவிடலாம் எனக் கிளம்பினோம். டெல்லி அருகே நொய்டாவில் உள்ள ‘கிரேட் இந்தியா பேலஸ்’ ஷாப்பிங் மாலில் மொட்டை வெயிலில் கார், பைக், ஏடிவி வாகனங்கள் அணிவகுத்து நிற்க... மாலை 3 மணிக்குக் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்கள். அங்கிருந்து 360 கி.மீ தொலைவில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஹனுமன்கர் எனும் ஊரை நோக்கி அணிவகுத்தன ராலி வாகனங்கள். அதிகாலை 2 மணிக்குப் போய்ச் சேர்ந்து, சில மணி நேரத் தூக்கத்துக்குப் பிறகு, காலை 11 மணிக்கு ராலி ஸ்டார்ட். 

மணலில் நடந்த அனல் போட்டி!

டெஸெர்ட் ஸ்டார்ம் ராலியை ‘அனல் பறக்கும் விளையாட்டு’ என்று சொல்லலாம். ஹனுமன்கரில் 4-ம் தேதி ஆரம்பமான போட்டி, பிக்கானீர்,  ஜெய்சல்மர் எனப் பயணித்து ஏப்ரல் 10-ம் தேதி ஜோத்பூரில் நிறைவடைந்தது. தார் பாலைவனத்தின் ஏப்ரல் மாத வெப்பமும், கண்ணை மறைக்கும் புழுதியும், இன்ஜின் சீறலுமாக 7 நாட்களும் அதகளப்படுத்தினர் ராலி வீரர்கள். எக்ஸ்ட்ரீம், மோட்டோ, எக்ஸ்ப்ளோர், எண்ட்யூர் ஆகிய நான்கு பிரிவுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் மெக்கானிக்கல் பிரச்னை, ஓவர் ஹீட், விபத்தில் வாகனம் சேதமடைந்தது என ரேஸை முடிக்க முடியாமல் பலர் வெளியேறினர். பாலைவனத்தின் வெப்பத்தில் ரேஸ் சூட் அணிவதால் ஏற்படும் வியர்வையால், சிலருக்கு உடல் நலம் இல்லாமல் போவதும்; தயாராக இருந்த ஆம்புலன்ஸில் குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டு மீண்டும் ராலியில் பங்கேற்பதும், ராலி வீரர்களுக்கு இந்த விளையாட்டில் இருக்கும் அதீத ஈடுபாட்டைக் காட்டியது. 

மணலில் நடந்த அனல் போட்டி!

ராலியின் முதல் நாள் ஹனுமன்கர் அருகே மணற்பாங்கான நிலத்தில், மாட்டு வண்டித் தடம்போல இருந்த பாதையில்தான் போட்டி. எக்ஸ்ட்ரீம் பிரிவில் கலந்துகொண்ட கார், பைக், போலாரிஸ் ஏடிவி வாகனங்கள் உறுமலும் சீறலுமாக மண்ணை வாரி இறைத்தபடி பறந்தன. எக்ஸ்ட்ரீம் கார் பிரிவில் எப்போதும் முன்னிலை வகித்துவரும் சுரேஷ் ரானா - அஷ்வின் நாயக் ஜோடி, முதல் நாள் நிகழ்வில் இரண்டாம் இடத்தையே பிடித்தது. முதல் இடத்தை அபிஷேக் மிஸ்ரா - ஸ்ரீநிவாச மூர்த்தி ஜோடி கைப்பற்றியது. எக்ஸ்ட்ரீம் T3 (ATV) பிரிவில் திருநெல்வேலியைச் சேர்ந்த குகன் செட்டி - ஈரோடு கணேச மூர்த்தி ஜோடி முன்னிலை பெற்றது. எண்ட்யூர் பிரிவில் அஜ்கர் அலி -ஈரோடு முகமது முஸ்தஃபா ஜோடியும், எக்ஸ்ப்ளோர் பிரிவில் சச்சின் சிங் - பிரகாஷ் ஜோடியும் முன்னிலை வகித்தன.

பைக் பிரிவில் டக்கார் ராலி வீரரான சி.எஸ்.சந்தோஷ் முதல் இடம் பிடித்தார். ஆனால், மொத்தம் ஆறு நாட்களில் நடக்கும் போட்டிகளில், யார் தொடர்ந்து நேரக் கணக்கில் முன்னிலை வகிக்கிறார்களோ, அவர்கள்தான் இறுதியில் வெற்றி பெற முடியும் என்பதால், முதல் நாள் ராலியைச் சரிவர முடிப்பது என்பதில்தான் கவனம் செலுத்தியதாக ராலி வீரர்கள் தெரிவித்தனர்.

இரண்டாம் நாள் பிக்கானீர் எனும் ஊரில் அனைவரும் தங்கிவிட்டு, காலையில் ராலிக்குத் தயாராகினர். ஓரளவுக்கு கெட்டியான மண் பாதையாக இருந்தாலும், வளைவு நெளிவுகள் அதிகமாக இருந்தன. முதல் நாள் முன்னிலை வகித்தவர்கள் இன்றும் தொடர... எக்ஸ்ப்ளோர் பிரிவில் மட்டும் பிரதாப் - நாகராஜன் ஜோடி முன்னிலை எடுத்தது. மூன்றாம் நாள் நடந்த ஒரு விபத்தில், ஏடிவி வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துபோனது. நான்காவது நாள் ஜெய்சல்மர் அருகே ராலி. அங்கே இன்னும் பாதை மோசமாக இருக்கும் என்று பேசப்பட்டாலும், ஆண்டுதோறும் இப்படி பல இக்கட்டான இடங்களில் சென்றிருப்பதால், ராலி வீரர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மணலில் நடந்த அனல் போட்டி!

ராலியைக் காண வந்த பத்திரிகையாளர்கள், ராலி துவங்குவதற்கு முன்பு போட்டி நடக்கும் வழியில் பாதுகாப்பான ஓரிடத்தில் நிறுத்தி வைக்கப்படுவர். பிறகு, போட்டி முடிந்து அனைத்து வாகனங்களும் சென்ற பிறகுதான் திரும்ப அழைத்துச் செல்வார்கள். பாலைவனத்தில் வெயிலில் ஒதுங்க இடம் இல்லாமல், வியர்க்க விறுவிறுக்க சின்ன செடியின் கீழ் எல்லாம் பதுங்கி அமர்ந்து ராலியைக் கண்ட அனுபவம் பத்திரிகையாளர்களுக்கு மிக வித்தியாசமான அனுபவம். அதிகாலை 3 மணிக்கு கும்மிருட்டில் நடந்த ராலிதான் திகில் அனுபவத்தைக் கொடுத்தது. பாலைவனத்தில் இரவில் அலையும் உயிரினங்கள் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் திக்பிரமை பிடித்து நின்றனர். அடிக்கடி செல்போனை உயிர்ப்பித்து காலடியில் எதுவும் நடமாடுகிறதா என்று கண்காணித்துக் கொண்டே இருந்தனர். ராலி டிரைவர்களுக்கோ எது பாதை; எங்கே திரும்ப வேண்டும் என்று திக்கு திசை தெரியாமல், ஜிபிஎஸ் வழிகாட்டி மூலம் நேவிகேட்டரின் கட்டளைக்கு ஏற்ப சீறிச் சென்றனர். அடுத்த நாள் இரவு 11 மணிக்கும் போட்டி நடக்க... பத்திரிகையாளர்கள் பலரும் எஸ்கேப்!

ராலி நடைபெறும் பகுதிகள் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதி என்பதால், செல்போன் சிக்னல் பல இடங்களில் இல்லை. இணையதள இணைப்பு முக்கிய நகரங்களில் மட்டுமே கிடைத்தது. ஜெய்சல்மரில் மூன்று தினங்களும் நடைபெற்ற ராலிகள், ஒவ்வொன்றும் வித்தியாசமான நில அமைப்பைக் கொண்டவை. ஒருமுறை பாகிஸ்தான் எல்லையின் மிக அருகே சாம் என்ற இடத்தில் ராலி நடந்தது. டூரிஸ்ட்டுகளும் ராணுவத்தினரின் நடமாட்டம் மட்டுமே பெரும்பாலும். கால்நடைகளை நம்பிப் பிழைக்கும் சின்னச் சின்ன கிராமங்களை மட்டுமே அங்கே பார்க்க முடிந்தது.

மணலில் நடந்த அனல் போட்டி!


இந்த ராலியில் கார் பிரிவிலும், ATV பிரிவிலும் நிறைய பெண்கள் பங்கேற்றது ஆச்சரியமான ஒன்று. அதில், சென்னை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் பணிபுரியும் சாரா, ஆண்களே தயங்கும் எக்ஸ்ட்ரீம் பைக் பிரிவில் கலந்துகொண்டார். மூன்று நாட்கள் ராலியை ஃபினிஷ் செய்தவர், நான்காவது நாள் வெயிலால் டிஹைட்ரேட் ஆகி, ஆம்புலன்ஸில் சிகிச்சை பெற்று மீண்டும் பைக் ஓட்டினார். தொடர்ந்து இருமுறை ராலியை ஃபினிஷ் செய்யாததால், அவரால் தொடர்ந்து ராலியில் பங்கேற்க முடியவில்லை. அதேபோல், பெங்களூரைச் சேர்ந்த ஸ்மிதா - ஆஷிகா ஜோடி எக்ஸ்ட்ரீம் T3 ATV பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தினார்கள். ‘‘ராலியில் பங்கேற்கும் அனைவராலும் போட்டியை நிறைவு செய்துவிட முடியாது. எதிர்பாராமல் ஏற்படும் மெக்கானிக்கல் பிரச்னையால், எந்த நேரம் எது நடக்கும் என்றும் சொல்ல முடியாது!’’ என்றார் ஈரோட்டைச் சேர்ந்த நேவிகேட்டர் சேகர்.

மணலில் நடந்த அனல் போட்டி!

முதன்முறையாக போலாரிஸ் ATV வாகனத்தில் ராலியில் பங்கேற்று முதல் இடத்தைப் பிடித்த திருநெல்வேலியைச் சேர்ந்த குகன் செட்டி, ‘‘இதுவரை ஏடிவியில் காடு, மலை, சேறு, மணல் என எல்லாவிதமான நிலப்பரப்பிலும் ஓட்டி இருக்கிறேன். ஆனால், பாலைவனத்தில் முதன்முறையாக ஓட்டுகிறேன். இந்த அனுபவம் எனக்கு மிகப் புதிதாக இருந்தது. இங்கே ATV ஓட்டுவதில் உள்ள பிரச்னை என்னவென்றால், ATV வாகனம் பாலைவனத்தில் ஓட்டுவதற்கு வடிவமைக்கப்பட்டது அல்ல.. முன்னால் செல்லும் வாகனத்தால் ஏற்படும் புழுதி, தாழ்வாக இருக்கும் ATVயை முழுமையாக மறைத்துவிடும். பாதை சுத்தமாகத் தெரியாது. மேலும், தூசு ரேடியேட்டரில் அடைத்துக்கொண்டால், இன்ஜின் ஓவர் ஹீட் ஆகி தகிக்க ஆரம்பிக்கும். இது எல்லாம் எனக்குப் புது அனுபவமாக இருந்தது. இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் நான் முதல் இடம் பிடிக்கக் காரணம், என் நேவிகேட்டர் கணேச மூர்த்திதான். அவர் ஏற்கெனவே வேறு கிளாஸில் நேவிகேட்டராகப் பணிபுரிந்தவர். அவரின் வழிக்காட்டல் எனக்குக் கைகொடுத்தது’’ என்றார்.

மணலில் நடந்த அனல் போட்டி!

எண்ட்யூர் (4 வீல் டிரைவ்) கார் பிரிவில், முதல் இடம் பிடித்த முகமது முஸ்தஃபாவிடம் பேசும்போது, ‘‘மாருதியின் இந்த ராலியில் இந்தியா முழுவதும் இருந்து பங்கேற்கிறார்கள். இதில் நேவிகேட்டர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக ஈரோட்டில் இருந்து இங்கு 10 பேர் வரை ராலியில் பங்கேற்றுள்ளோம். TSD ராலி என்றாலே, அதை தமிழகத்தில் வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு ஈரோட்டுக்கு இருக்கிறது. ராலி நடக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் மோட்டார் ஸ்போர்ட்ஸைப் புரிந்துகொண்டு மாநில அரசே உதவி செய்கிறது. ஆனால், தமிழகத்தில் புரிந்துகொள்ளும் அரசும் இல்லை; ஆதரிக்க ஆட்களும் இல்லை. இதை அரசே ஊக்குவித்தால்தான் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தமிழகத்தில் வளரும்’’ என்றார்.  
     
ஏழாம் நாள் மாலை ஜோத்பூரில் அனைவரும் குழுமியபோது, இரவாகி விட்டது. மறுநாள் காலை பரிசளிப்பு விழா. ஆனாலும் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவரிடமும் இருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் பெயரை அறிவிக்க... உற்சாகக் கூச்சல்களால் அந்த விடுதி வளாகம் அதிர்ந்தது.

மணலில் நடந்த அனல் போட்டி!

ஜெயித்தவர்; தோற்றவர், பாதியில் வெளியேறியவர் என எந்தப் பாரபட்சமும் இல்லாமல் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து வாழ்த்துச் சொல்லி மகிழ்ந்தனர்.

‘அடுத்து ஹிமாலயா ரைடில் சந்திப்போம்’ என சவால் விட்டுப் பிரிந்தனர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு