Published:Updated:

எந்திரன் - 17

இன்ஜினுக்கு எக்ஸ்ட்ரா சார்ஜ்! - SUPER CHARGER பரணி ராஜன்

பிரீமியம் ஸ்டோரி
எந்திரன் - 17

ன்ஜின் எரிதலுக்கு எரிபொருளும் காற்றும்தான் முக்கியத் தேவை. எரிபொருளை எரிக்கத் தேவையான காற்று, இன்ஜினில் சக் ஷன் ஸ்ட்ரோக் நிகழும்போது உண்டாகும் வெற்றிடத்தால் உள்ளிழுக்கப்படுகிறது. எந்த அளவுக்கு வெற்றிடம் உருவாக்கப் படுகிறதோ, அந்த அளவுக்குக் காற்று உள்ளே இழுக்கப்படுகிறது. அதன் பின்பு - சமவிகித ரிச்(Rich) அல்லது லீன்(lean) மிக்  ஷர் விகிதங்களுக்கேற்ப, தேவையான எரிபொருள் ஏற்கப்பட்டு எரிதல் நடக்கிறது. சிலசமயம் வாகனங்கள் மலைப் பகுதி அல்லது உயரமான இடங்களுக்குச் செல்லும்போது, அங்கே வளிமண்டலக் காற்றின் அழுத்தம் மற்றும் அடர்த்தி, கீழே இருக்கும் காற்றில் இருப்பதைவிடக் குறைவாக இருக்கும். அதனால், எரிபொருள் எரியத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. குறைவான எரிபொருளே எரிக்கப்பட்டு, வாகனத்துக்குக் குறைவான ஆற்றல் மற்றும் திருப்புத் திறன்தான்(Torque) கிடைக்கும்.

ரேஸ் கார்களில் சாதாரண வாகனங்களில் கிடைக்கும் ஆற்றலைவிட, அதிகப்படியான ஆற்றல் தேவைப்படும். இதற்கு இன்ஜின் அளவு பெரிதாக இருக்க வேண்டும். அப்படி வடிவமைத்தால், வாகனத்தின் எடை கூடிவிடும்; வேகம் பாதிக்கப்படும்; அதிக எரிபொருளும் செலவாகும். இத்தகைய சிக்கல்களைத் தீர்க்க, இன்ஜினுக்குத் தேவைப்படும் சிறப்பான தனி அமைப்புதான், சூப்பர் சார்ஜர்.

சூப்பர் சார்ஜரின் வேலை என்பது, இன்ஜினுக்குத் தேவைப்படும் அதிகக் காற்றை உயர் அழுத்தத்தில் அளிப்பது. இவ்வாறு பெறப்படும் அதிகமான காற்று, இன்னும் அதிகமான எரிபொருளை எரிக்கும் திறன் கொண்டிருக்கும். அதனால், தன் அளவுக்கு மீறிய ஆற்றலையும், திருப்புத் திறனையும் இன்ஜின் வெளிப்படுத்தும். அதிக ஆற்றலுக்கு என பெரிய அளவில் இன்ஜினை வடிவமைக்கத் தேவை இல்லை. ஏற்கெனவே இருக்கும் அளவிலேயே, சூப்பர் சார்ஜர் எனும் அமைப்பின் மூலம் அதிக ஆற்றலைப் பெற முடிகிறது.

சூப்பர் சார்ஜர், செயின் (chain) அல்லது பெல்ட் (belt) மூலம் கிராங்க்‌ ஷாஃப்ட் உடன் இணைக்கப்பட்டிருக்கும். கிராங்க்‌ ஷாஃப்ட்டின் சுழற்சியினால் இதன் கம்ப்ரெஸர் இயங்குகிறது. இன்லெட் மேனிஃபோல்டுக்கு வரும் காற்று கம்ப்ரெஸர் வழியாகப் பயணிக்கையில், அதிக அழுத்தத்துக்கு ஆட்படுத்துகிறது. இவ்வாறு அதிகப்படியான காற்று இழுப்பதை ‘பூஸ்ட்’ (Boost) என்கிறோம். இதனால் உள்நுழைந்த பூஸ்ட் செய்யப்பட்ட காற்று, அதிக எரிபொருளை எரிக்கிறது.

எந்திரன் - 17

உயரமான மலைப் பகுதிகளில் வாகனம் பயணிக்கும்போது, வளிமண்டலக் காற்றின் அடர்த்தி குறைவதால், இன்ஜின் ஆற்றல் குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் சூப்பர் சார்ஜர் வளி மண்டலக் காற்றினை உள்ளிழுத்து இன்ஜினுக்குக் கொடுப்பதால், அதிக எரிபொருளை எரித்து, தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. காற்றினை அழுத்துவதற்கு, கம்ப்ரெஸர்கள் இன்ஜினைவிட அதிக சுழற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் (உதாரணம் 50,000 rpm). அதனால் டிரைவ் கியர், கம்ப்ரெஸர் கியரைவிட மிகப் பெரிய அளவில் இருப்பதுபோல வடிவமைக்கப்படும். கம்ப்ரெஸர் மூலமாக அழுத்தப்பட்ட காற்றின் வெப்பநிலை உயரும். அப்போது, காற்றின் அடர்த்தி குறைந்து, எரிபொருள் எரிவதில் குறைபாடு ஏற்படும். அதனால், இன்லெட் மேனிஃபோல்டுக்குச் செல்லும் முன்பு, சூப்பர் சார்ஜரில் இருந்து வெளிவரும் காற்று, இன்டர்கூலர் (Inter Cooler) வழியாக அனுப்பப்பட்டு குளிர்விக்கப்படுகிறது. குளிர்விக்கப்பட்ட காற்றின் அடர்த்தி அதிகமாக இருக்கும். ரூட்ஸ் (Roots) சூப்பர் சார்ஜர், ட்வின் ஸ்க்ரோல் (Twinscroll) சூப்பர் சார்ஜர் மற்றும் செண்ட்ரிஃப்யூகல்(Centrifugal) சூப்பர் சார்ஜர் எனப் பலவகை சூப்பர்சார்ஜர்கள் இருக்கின்றன.

சூப்பர் சார்ஜர் இயங்கத் தேவையான சக்தி, இன்ஜின் கிராங்க்‌ ஷாஃப்ட்டில் இருந்து பெறப்படுவதால், ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது என்பது உண்மைதான். ஆனால், சூப்பர் சார்ஜரில் இருந்து பெறப்படும் ஆற்றல், இழப்பினை ஈடுகட்டுவதோடு அல்லாமல், அதனினும் அதிகமான ஆற்றலை நமக்கு அளிக்கிறது.

- எந்திரன் பேசுவான்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு