Published:Updated:

“நாங்க பைக் சிஸ்டர்ஸ்!”

ஜாலி பேட்டிதமிழ், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

பிரீமியம் ஸ்டோரி
“நாங்க பைக் சிஸ்டர்ஸ்!”

‘‘அலீனா... என் அவென்ஜர் சாவியைப் பார்த்தியா?’’

‘‘அதுக்காக என் புல்லட்டை எடுத்துட்டுக் கிளம்பிடாத சயானா? எனக்கு காலேஜுக்கு டைம் ஆயிடுச்சு!’’

- இப்படித்தான் சயானாவுக்கும் அலீனாவுக்கும் பொழுது தொடங்குகிறது. பரபர, தடதடவென்று ஷூட்டிங்குக்கும் காலேஜுக்குமாக பைக்குகளில் பறக்கும் சயானா - அலீனா இருவரும் சகோதரிகள். அவென்ஜரும் புல்லட்டும்தான் இருவர்களது செல்லங்கள். ‘இந்த டிராஃபிக்ல கியரை மாத்தி கிளட்ச் பிடிச்சுனு டார்ச்சரா இருக்கு மச்சான்’ என்று ஆக்டிவா, ஆல்ஃபா போன்ற ஸ்கூட்டர்களுக்கு பசங்களே கட்சி மாறிக்கொண்டிருக்க, ‘‘எங்க பைக்ல உட்கார்ந்து கியரைப் போடும்போதே அவ்வளவு சந்தோஷமா இருக்குண்ணா!’’ என்று பைக்குகளைக் காதலிக்கிறார்கள் இந்த டீன்-ஏஜ் செல்லங்கள்!

பார்ப்பதற்கு ஸ்கூட்டி ஸ்வீட்டிகள் மாதிரி இருக்கும் இருவரும் பைக்கை ஆன் செய்துவிட்டால், பசங்களுக்குப் பெரிய டஃப் கொடுக்கிறார்கள். ‘‘பொதுவா வீட்ல பொண்ணுங்க ஸ்கூட்டர் ஓட்டுறதுக்கே யோசிப்பாங்களே?’’ என்று பைக் சிஸ்டர்ஸ் இருவரையும், ஒரு மஞ்சள் வெயில் கடற்கரையில் சந்தித்தோம். புல்லட்டுக்கு சென்டர் ஸ்டாண்ட் போட்டபடி பேச ஆரம்பித்தார் அலீனா.

‘‘சின்ன வயசுல இருந்தே எங்களுக்கு  பைக் ஓட்டுறதுனா ரொம்பப் பிடிக்கும். அதுக்குக் காரணம் அப்பா. நாங்க எட்டாவது படிக்கும் போதே பைக் ஓட்டக் கத்துக்கிட்டோம். அதுவும் யெஸ்டி பைக். அப்பாதான் சொல்லிக் கொடுத்தார். கொஞ்சம் நல்லா பைக் ஓட்டக் கத்துக்கிட்ட பிறகு, ‘எங்களுக்கு பைக் வாங்கிக் கொடுங்கப்பா’னு கேட்டோம். அம்மாதான், ‘இன்னும் லைசென்ஸ் எடுக்கிற வயசே வரலை; அதுக்குள்ள என்னடி பைக் வேண்டிக் கிடக்கு’னு செமையா சத்தம் போட்டாங்க. ‘இப்போ பைக் ஓட்டுறது தப்பும்மா’னு சொல்லி, அப்பா எங்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்தார். ஸ்கூலுக்கு நாங்க ரெண்டு பேரும் மாறி மாறி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைத்தான் ஓட்டிட்டுப் போவோம்.

“நாங்க பைக் சிஸ்டர்ஸ்!”

‘நீங்க பெரிய பொண்ணா ஆகி, லைசென்ஸ் எடுத்த பிறகு உங்களுக்கு பைக் வாங்கித் தர்றேன்’னு அப்பா வாக்குறுதி கொடுத்தார். சொன்னது போலவே லைசென்ஸ் எடுத்த உடனேயே சில்வர் கலர் அவென்ஜர் எங்க வீட்டு வாசல்ல நின்னுச்சு! நான் விளையாட்டுக்காகச் சொல்லலை. எங்க அவென்ஜர் எந்த நேரத்திலும் என்னைச் சிக்கல்ல மாட்டிவிடாது. பஞ்சர் ஆனாலும் பஞ்சர் கடை வாசலில்தான் ஆகும்; பெட்ரோல் காலியானாலும் பெட்ரோல் பங்க் பக்கத்திலதான் காலியாகும்! ஆனா, என்னோட ஃபேவரைட் புல்லட்தான்! ‘ஒல்லியா இருந்துக்கிட்டு எப்படி புல்லட் ஓட்டுறே’னு எல்லோரும் ஆச்சரியமா கேட்கறாங்க... பைக் ஓட்டுறதுக்கு ஸ்டெமினா இருந்தா போதும்; வெயிட் முக்கியம் இல்லை! இன்னொரு ஆச்சரியம் சொல்லட்டுமா? பைக் ஓட்ட ஆரம்பிச்ச நாள்லேருந்து இதுவரைக்கும் நான் ஒரு தடவைகூட கீழே விழுந்தது இல்லை. ஒரே ஒரு தடவை, பசங்க கிண்டலடிச்சுக்கிட்டே உரசி வந்து நின்னப்போ, கட் அடிச்சதுல கைல மட்டும் ஹேண்டில் பார் இடிச்சது. அவ்ளோதான்! இனி நீ சொல்லு சயானா!’’ என்று அக்காவைப் பார்த்துச் சிரித்தார் அலீனா.

‘‘ஸ்டெமினா, எடை, டேலன்ட் - இதெல்லாம் தாண்டி பொண்ணுங்க பைக் ஓட்டுறதுக்கு ரொம்ப தில்லும் பொறுமையும் வேணும்ணா... என்ன சொல்றீங்க?’’ என்று அவென்ஜரின் இன்ஜினை ரெவ் செய்தார் சயானா.

‘‘நான் திருட்டுத்தனமாதான் பைக் ஓட்ட ஆரம்பிச்சேன். என் அப்பாவோட ஃப்ரெண்ட், யமஹா பைக் வெச்சிருந்தார். அவர்கிட்ட ‘கியர் எப்படிப் போடணும்’னு கேட்டு, அவருக்குத் தெரியாம அவர் பைக்கையே ஓட்ட ஆரம்பிச்சேன். நாலு தடவை கீழ விழுந்து செம அடி! அம்மாகிட்டயும்தான். ‘பைக் கிட்ட போனா காலை ஒடிச்சிடுவேன்’னு அம்மா சத்தம் போடுவாங்க.

அப்பாதான், எங்களோட பைக் ஆர்வத்தைப் பார்த்து யெஸ்டி ஓட்டச் சொல்லிக் கொடுத்தார். ‘பொம்பளைப் புள்ளைங்களை எப்படி வளர்க்கிறான் பாரு’னு அப்பாவையே நெறைய பேரு பேசியிருக்காங்க. அதெல்லாம் அப்பா கண்டுக்கலை. ‘உனக்கு க்ரூஸர்தானே பிடிக்கும்’னு அப்பாதான் எனக்காக அவென்ஜர் பைக் வாங்கிக் கொடுத்தார்.

உலகம் அறியாத ஒரு சிலரின் பேச்சுக்கள்தான் உறுத்தல். நாங்க பைக் ஓட்டுறதைப் பார்த்து எங்க காது படவே ரொம்ப சிலர் வல்கரா  பேசினாங்க. முதல்ல கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் போகப் போக நாங்க அதை கண்டுக்கிறது இல்லை. நான் பைக் ஓட்ட ஆரம்பிச்சதில் இருந்து இப்போ வரைக்கும் தினமும் மூணு வகையான ஆட்களைச் சந்திக்கிறேன். ‘உங்களுக்கு இதெல்லாம் தேவையா’னு கேட்கிறவங்க; ‘பரவாயில்லையே’னு சொன்னாலும் பொறாமைப்படுறவங்க; உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டுறவங்க!

எல்லாப் பொண்ணுங்களுக்கும் பைக் ஓட்டணும்னு ஆசை இருக்கும். ஆனால், பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்களோனு பயந்துதான் பொண்ணுங்க பைக் ஓட்ட மாட்டேங்கிறாங்க... அவங்க ஒரு தடவை பைக் ஓட்டிப் பார்த்தா, பிறகு ஸ்கூட்டர் பக்கமே போக மாட்டாங்க. இப்போ என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் பைக் கொடுத்து ஓட்டச் சொல்லி என்கரேஜ் பண்றேன்.’’ என்கிற சயானா, ஒரு நடிகை. அன்பாலயா மூவீஸ் மற்றும் டூயட் மூவிஸ் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடித்திருப்பதாகச் சொன்னார். சேர நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட சயானா மலையாளத்திலும் செம பிஸியாம். கேரள அரசு விளம்பரங்கள் மற்றும் சின்னச் சின்ன ரோல்களில் எட்டிப்பார்க்கும் சயானாவுக்கு எப்படியாவது துல்ஹர் சல்மானுடன் நடித்துவிட விருப்பமாம்.

அலீனாவுக்கு புல்லட் என்றால், சயானாவின் சாய்ஸ் எப்பவுமே க்ரூஸர்தான். இப்போதைக்கு ஹார்லி டேவிட்சன் வாங்க வேண்டும் என்பது ஆசை. ‘‘பெரிய நடிகையாகி இந்தியன் மோட்டார் சைக்கிள் வின்டேஜ் க்ரூஸர் பைக் வாங்கலாம்ணும் ஒரு ஐடியா இருக்கு. அது 32 லட்சம்தானே... வாங்கின உடனே வாட்ஸ்அப் பண்றேன்... பை அண்ணா!’’ என்றபடி, ‘தட் தட்’ என அவென்ஜரும் புல்லட்டும் ரெவ் ஆகி மறைந்தன.

“நாங்க பைக் சிஸ்டர்ஸ்!”

பைக் ஓட்டும் பெண்களுக்கு டாப் 10 யோசனைகள்!

1. பைக்கை சென்டர் ஸ்டாண்ட் போட நிறையப் பேர் சிரமப்படுகிறார்கள். இது ரொம்ப ஈஸி. நீங்கள் அழுத்தம் கொடுத்தால், பைக் அதுவாகவே பின் பக்கம் சென்று உட்கார்ந்துகொள்ளும். ஆனால், ஹேண்டில்பார் நேராக இருக்க வேண்டும்.

2. பைக்கை இறங்கி நின்று ரிவர்ஸ் எடுக்கும் போதோ, திருப்பும்போதோ இடுப்பைக் கொண்டு தாங்கிப் பிடிக்க வேண்டும். ஹேண்டில்பாரை மட்டும் பிடித்தால் எடை தாங்காமல் கீழே விழ வாய்ப்பு உண்டு.

3. சைடு மிரர் பார்க்காமல், இண்டிகேட்டர் போடாமல் திரும்பாதீர்கள்.

4. ஸ்கூட்டர் ஓட்டும்போது வெறும் கைகளுக்கு மட்டும்தான் வேலை இருக்கும். ஆனால், பைக்கில் கால்/கை எல்லாவற்றுக்குமே வேலை இருக்கும். இதனால் பிரேக்ஸ், கிளட்ச் என்று காலையும் கையையும் அலெர்ட்டாக வைத்துக்கொண்டே இருங்கள்.

5. எப்போதுமே சடன் பிரேக் வேண்டாம். இது உங்களுக்கும் ஆபத்து; பின்னால் வருபவர்களுக்கு பேராபத்து!

6. சாலையில் எப்போதுமே நடுவில் செல்ல வேண்டாம். பெரிய வாகனங்களுக்குக் சிரமமாக இருக்கும்.

7 .இடதுபுறம் ஓவர்டேக் செய்யாதீர்கள்.

8. காதில் ஹெட்போனை மாட்டுவதைத் தவிர்த்துவிட்டு, முன்னால் செல்லும் இரண்டு மூன்று வாகனங்களைக் கவனத்தில் வைத்து ஓட்டுங்கள். முடிந்தளவு விபத்தைத் தவிர்க்கலாம்.

9. சிக்னல் வருவதற்கு ரொம்ப தூரம் முன்னரே கால்கள் இரண்டையும் நீட்டிக்கொண்டே வர வேண்டாம். பேலன்ஸ் செய்ய, இடது காலை மட்டும் பயன்படுத்துங்கள்.

10 . ரொம்ப முக்கியம் - கேலி செய்பவர்களை, ‘கடைசி பெஞ்ச் ஸ்டூடன்ட்’ போல கண்டுகொள்ள வேண்டாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு