பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம் !

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

முதன்முதலாக கார் வாங்குபவர்களுக்கு மேலும் ஒரு சாய்ஸ் கிடைத்திருக்கிறது. மாருதி 800 காலமாக இருந்தாலும் சரி... அதற்குப் பிறகு வந்த ஆல்ட்டோ, ஆல்ட்டோ 800 காலமாக இருந்தாலும் சரி... என்ட்ரி லெவல் காம்பேக்ட் செக்மென்ட்டில் எப்போதும் மாருதியின் கொடிதான் பறக்கும். இப்போதும் டாப் 10 கார் விற்பனைப் பட்டியலில், ஏப்ரல்-16 விற்பனையின்படி - 16,583 கார்கள் என்ற எண்ணிக்கையோடு முதல் இடத்தில் இருப்பது ஆல்ட்டோதான். ஆனால், இதன் விற்பனை சமீபகாலமாகக் குறைந்துகொண்டே வருகிறது. காரணம், இதே செக்மென்ட்டில் ஆல்ட்டோவுடன் போட்டி போடும் ரெனோ க்விட், அறிமுகமான வேகத்தில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்திருப்பதோடு, ‘மாதம் சுமார் 10,000 கார்கள் விற்பனை’ என்ற உயரத்தையும் எட்டிப் பிடித்திருக்கிறது. ‘காம்பேக்ட் கார் என்றால், காம்பேக்ட் காரைப்போலவேதான் இருக்க வேண்டுமா... அது எஸ்யுவி சாயலில் இருக்கக் கூடாதா?’ என்று ரெனோ மாற்றி யோசித்ததன் பலன், க்விட் காரின் வெற்றி.

ஆல்ட்டோவோடு போட்டி போடுவதில் டாடாவின் நானோ, ஹூண்டாயின் இயான் ஆகியவற்றை எல்லாம் ‘ஜஸ்ட் லைக் தட்’ ஓவர்டேக் செய்திருக்கும் இந்த நேரத்தில், க்விட் தயாராகும் அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் டட்ஸன் ரெடி-கோ களம் இறங்குகிறது. க்விட்டின் பல ப்ளஸ்கள் டட்ஸன் ரெடி-கோ காரிலும் உண்டு. அதையும் தாண்டி, ரெடி-கோ பார்ப்பதற்கு டிரெண்டியாகவும் இருக்கிறது. காம்பேக்ட் கார் என்ற அடையாளத்தை மறைத்து, ‘அர்பன் கிராஸ்’ என்ற புதிய அடைமொழியோடு களம் இறங்கும் ரெடி-கோ, விலையிலும் பல விந்தைகள் செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் இருப்பதால், முதன்முதலாக கார் வாங்க நினைப்பவர்களுக்கு மேலும் ஒரு சாய்ஸ் அதிகமாகியிருக்கிறது.

டட்ஸன் ஏற்கெனவே அறிமுகப்படுத்திய கோ, கோ-ப்ளஸ் கார்கள் எல்லாம் விற்பனையில் சுமார்தான். அதனால், இதை எல்லாம் கண்டுகொள்ளத் தேவை இல்லை என்று மாருதி சும்மா இருக்கவில்லை. அது, ஆல்ட்டோ 800-க்குப் புதுப் பொலிவு சேர்த்து மீண்டும் களம் இறக்குகிறது. பல கார் நிறுவனங்கள் மீண்டும் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியிருக்கும் இந்த நேரம், காம்பேக்ட் கார் செக்மென்டில் போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்திருப்பது, வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

‘காரின் விலையைக் கட்டுக்குள் வைக்கிறேன்’ என்று மாருதி, ஹூண்டாய், ரெனோ போன்ற முன்னணி கார் நிறுவனங்களே காரின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வதைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். கார்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்கும் குளோபல் NCAP என்கிற சர்வதேச நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் விற்பனையாகும் 12 கார்கள் குறித்து எச்சரிக்கை செய்திருக்கிறது. எனவே, கார்களின் விலை, விற்பனை, வசதி, மைலேஜ் ஆகியவற்றோடு, பாதுகாப்பு குறித்தும் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

அன்புடன்

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு