Published:Updated:

எல்லாமே ஸ்ட்ராங்!

ஃபர்ஸ்ட் டிரைவ் / மெர்சிடீஸ் பென்ஸ் GLS 350dதொகுப்பு : ர.ராஜா ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி
எல்லாமே ஸ்ட்ராங்!

மெர்சிடீஸ் பென்ஸின்

மிகப் பெரிய GL எஸ்யுவிக்கு, இப்போது புதிய பெயர். ஆம், GL - இனி GLS என்று அழைக்கப்படும். மேலும், புதிய GLS மாடலில் ஸ்டைலிங், வசதிகள், 9-ஸ்பீடு கியர்பாக்ஸ் எனப் பல புதிய மாற்றங்கள்.

பழைய GL காரின் ஃபேஸ்லிப்ஃட் மாடல்தான் புதிய GLS. இந்த 7-சீட்டர் ஃபுல் சைஸ் எஸ்யுவி பார்க்க, இப்போது கொஞ்சம் மாடர்னாக இருக்கிறது. கிரில் முன்பைவிட வளைவாக இருக்கிறது. ஃபுல் LED அடாப்டிவ் ஹெட்லைட்ஸ், பம்பர் டிஸைன் செம ஸ்டைலிஷ். பானெட் டிஸைனில்கூட மாற்றங்கள் உள்ளன. டெயில் லைட்ஸும் ஃபுல் LEDதான். டிஸைனைப் பொறுத்தவரை பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும், ஓரளவுக்கு வயதைக் குறைத்துக் காட்டியிருக்கிறது பென்ஸ்.

காரின் உள்பக்க கேபின் டிஸைனில் சின்னச் சின்ன மாற்றங்கள் இருந்தாலும், புதிய ஆடி Q7, வால்வோ XC90 கார்களுடன் ஒப்பிட்டால், ரொம்ம்ம்ப கஷ்டம். ஸ்போர்ட்டியான 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டிஜிட்டல் இன்ஃபோ டிஸ்ப்ளே, சென்டர் கன்ஸோலின் மேல் பாகம் ஆகியவை புதிது. இதில் உள்ள 8-இன்ச் ஸ்கிரீன், டச் ஸ்கிரீன் இல்லை. ஆனால், மிகவும் தெளிவாக இருக்கிறது. மேலும், மெர்சிடீஸின் லேட்டஸ்ட் COMAND ஆன்லைன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதில், வலைதளங்களைப் பார்க்கலாம்; இன்டர்நெட் ரேடியோ கேட்கலாம்; போனில் உள்ள 3G/4G நெட்வொர்க்கை இணைத்து சில அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தலாம். மேலும், முதன்முறையாக ஆப்பிள் கார் ப்ளே சிஸ்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.

எல்லாமே ஸ்ட்ராங்!
எல்லாமே ஸ்ட்ராங்!

GLS காரின் இன்னொரு புதிய விஷயம், டைனமிக் செலெக்ட் ஆப்ஷன். இதில் கம்ஃபோர்ட், ஸ்போர்ட், ஸ்லிப்பரி, ஆஃப்-ரோடு, Individual என ஐந்து டிரைவிங் மோடுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம் இன்ஜின்/கியர்பாக்ஸ், ஸ்டீயரிங், சஸ்பென்ஷன் ஆகியவற்றை மாற்றியமைக்கலாம். ஆம்பியன்ட் லைட்டிங், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் உள்ளன. பார்க்கிங் அசிஸ்ட் வசதி, இந்த 5.1 மீட்டர் நீளமான காரை பார்க்கிங்குக்கான இடத்தில் தானாகவே பார்க்கிங் செய்கிறது.

இவ்வளவு பெரிய காரின் ப்ளஸ் பாயின்ட் என்னவென்றால், இதன் விசாலமான கேபின்தான். மூன்றாவது வரிசை இருக்கையில் இரண்டு பெரியவர்கள் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும். நடுவரிசை இருக்கையை முன்னும் பின்னும் நகர்த்த முடியவில்லை என்றாலும், இடவசதி தாராளமாகவே உள்ளது. ஆனால், இருக்கைகள் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால், ஏறி இறங்குவதற்கு ஃபுட்போர்டை நம்பியே ஆகவேண்டும்.

இப்போதைக்கு GLS காரில் 350d மாடல் மட்டுமே கிடைக்கிறது. இதில் சூப்பர் ஸ்மூத் 3.0 லிட்டர், V6 டீசல் இன்ஜின் இருக்கிறது. இது பழைய காரில் தந்த அதே 258bhp, 63.22 kgm டார்க்கைத்தான் தருகிறது. ஆனால், பழைய காரில் இருந்த 7ஜி-ட்ரானிக் கியர்பாக்ஸுக்குப் பதிலாக, இப்போது பென்ஸின் புதிய 9-ஸ்பீடு 9ஜி-ட்ரானிக் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், பழைய காரைவிட 0-100 கி.மீ வேகத்தை 0.7 விநாடிகள் விரைவாக அடைந்தாலும், ஆடி Q7 இதைவிட ரொம்பவே ஃபாஸ்ட்.

2.4 டன் எஸ்யுவி என்றாலும், பெர்ஃபாமென்ஸில் பெரிய குறை ஏதும் இல்லை. ஸ்போர்ட் மோடில் இன்ஜினை விரட்ட முடிந்தாலும், இன்ஜினையும கியர்பாக்ஸையும் கம்ஃபோர்ட் மோடில் ஓட்டினால்தான் சூப்பராக இருக்கிறது.

எல்லாமே ஸ்ட்ராங்!

ஓட்டுதல் தரத்திலும் பெரிய குறையில்லை. 20 இன்ச் டயர்கள் பெரிய மேடு பள்ளங்களைச் சிறப்பாக சமாளிக்கின்றன. ஏர் சஸ்பென்ஷன் என்பதால், குறைந்த வேகங்களில் கொஞ்சம் இறுக்கமாகவே இருக்கிறது. ஸ்போர்ட் மோடில் வேகமாக ஓட்டும்போது ஸ்டெபிலிட்டி அதிகரித்தாலும், வளைவுகளில் பாடி ரோல் இருக்கவே செய்கிறது.

கிட்டத்தட்ட 85 லட்ச ரூபாய் விலையில் இங்கே விற்பனைக்கு வரவிருக்கும் GLS காரில், ஒரு ஃபுல்-சைஸ் எஸ்யுவிக்கான எல்லா அம்சங்களும் இருக்கின்றன. பிரம்மாண்ட தோற்றம், அகலமான கேபின், ஏராளமான வசதிகள், ஸ்ட்ராங்கான டீசல் இன்ஜின் என எல்லாமே ப்ளஸ் பாயின்ட்டுகள். ஆனால், காரே இங்கு மைனஸ் பாயின்ட். காரணம், ஆடி Q7, வால்வோ XC90 போன்ற புதிய வரவுகளினால், GLS கார் ஸ்பெஷலாக இல்லை. நான்கு ஆண்டுகளான காரின், ஃபேஸ்லிப்ஃட் இது. பென்ஸ்தான் வேண்டும் என்பவர்களுக்கு ஓகே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு