Published:Updated:

சொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்?
சொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்?

ஃபர்ஸ்ட் டிரைவ் / மெர்சிடீஸ் பென்ஸ் GLC 300தொகுப்பு : ராகுல் சிவகுரு

பிரீமியம் ஸ்டோரி
சொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்?

நீண்ட நாட்களாக

GLA மற்றும் GLE கார்களுக்கு இடையே இருந்த இடைவெளியை நிரப்பும் விதமாக, GLC எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது பென்ஸ். இந்த காரின் முன்னோடியான GLK, இடதுபக்க ஸ்டீயரிங் அமைப்பைக் கொண்டிருந்ததால், அந்த காரை பென்ஸ் நிறுவனத்தால் இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லை. எனவே, ஆடி Q5 மற்றும் பிஎம்டபிள்யூ X3 எஸ்யுவிகள் பக்கம் வாடிக்கையாளர்கள் திரும்பினார்கள். இதுநாள் வரை செய்வதறியாது கை கட்டி வேடிக்கை பார்த்துவந்த பென்ஸ், தற்போது GLC எஸ்யுவி மூலம், போட்டியாளர்களை முழு பலத்துடன் எதிர்கொள்ளத் தயாராகி இருக்கிறது.

டிஸைன், கட்டுமானம்

பல மோட்டார் ஷோக்களில் கண்ட GLC காரை, இறுதியாக நம் ஊர் சாலைகளில் பார்க்கும்போது, கூடுதல் கவர்ச்சியுடன் வசீகரிக்கிறது. செடான் காரான C-க்ளாஸ் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் இந்த எஸ்யுவியைத் தயாரித்துள்ளது.

‘Sensual Purity’ எனும் டிஸைன் கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ள GLC, அகலமான முன்பக்கம் மற்றும் உயரமான கேபினைக்கொண்டிருக்கிறது. பானெட்டில் இருந்து நீளும் க்ரில், வெகு அழகு. உப்பலான வீல் ஆர்ச்கள், பாடி லைன்கள் மற்றும் இரட்டை எக்ஸாஸ்ட்கள், GLC ஒரு எஸ்யுவி என்பதை உறுதிபடுத்துகின்றன.

சொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்?

அலுமினியம் மற்றும் High Strength Steel கலந்து காரின் சேஸி உருவாக்கப்பட்டுள்ளது. 4 MATIC ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் நான்கு வீல்களுக்கும் இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன் இருப்பதால், ஆஃப் ரோடில் வித்தைகள் காட்டலாம்.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

காரின் கேபினுக்குள் நுழைந்தால், இன்ஜின் சத்தம், சஸ்பென்ஷன் சத்தம், வெளிக்காற்றுச் சத்தம் ஆகியவை சுத்தமாக காருக்குள் கேட்கவில்லை. அப்படி ஒரு பேரமைதி. இதற்கு காரில் இருக்கும் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினும் ஒரு காரணம். ஆக்ஸிலரேட்டரில் முழு பலத்தைக் காட்டும்போதுதான், கேபினுக்குள் இன்ஜின் சத்தம் கேட்க ஆரம்பிக்கிறது. இன்ஜினின் டாப் எண்ட்  பெர்ஃபாமென்ஸ் சூப்பராக இருப்பதால், சத்தம் ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை.

சொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்?
சொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்?

போட்டி கார்கள் அனைத்திலும் டீசல் இன்ஜின்களே இருக்க, பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் GLC எஸ்யுவியை பென்ஸ் களமிறக்கியது ஆச்சரியத்தை அளித்தாலும், அதற்குக் காரணம் இருக்கிறது. டெல்லி மற்றும் கேரளாவில் 2,000 சிசிக்கும் அதிகமான டீசல் கார்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே! இந்த காரில் டீசல் மாடல் வேண்டும் என்பவர்களுக்கு GLC 220d; பெட்ரோல் மாடலை விரும்புவர்களுக்கு GLC 300 சரியான சாய்ஸாக இருக்கும் என்கிறது பென்ஸ். GLC 300 என்றவுடன், காரில் 3,000 சிசி பெட்ரோல் இன்ஜின் இருக்கிறதா எனப் பலர் கேட்கலாம். ஆனால், உண்மையில் காரில் பொருத்தப்பட்டுள்ள 1,991 சிசி, 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 3,000 சிசி இன்ஜினுக்கு இணையாக 245bhp பவரையும், 37kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 1,871 கிலோ எடைகொண்ட GLC 300 காரை இழுப்பதற்கு, இந்தச் சக்தி அதிகம்தான்.

சொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்?

01. மெட்டல் ஃபினிஷ் பட்டன்கள் உயர்தரம்.

 02.போதுமான லெக்ரூம், ஹெட்ரூம் இருக்கிறது.

 03.க்ளோவ்பாக்ஸ் பெரிதாக இருப்பது ப்ளஸ்.

04. டயல்கள் தெளிவாக இருந்தாலும், டிஸைன் சுமார்.

05. ஸ்பேர் வீல், பூட் ஸ்பேஸைக் குறைக்கிறது.

 06.இந்த பட்டனை அழுத்தினால், ஆஃப் ரோடு செட்டிங் வரும்.

07. டர்போ பெட்ரோல் இன்ஜின், 245bhp வெளிப்படுத்துகிறது.

08. பட்டன்கள் சிறிதாக இருக்கின்றன.

 09.பின்பக்க இருக்கையை எலெக்ட்ரிக்கலாக மடக்கும் பட்டன்.

 10.சீட் பெல்ட் ஸ்மார்ட்.

11. பெரிய சன்ரூஃப்... சூப்பர்.

12. ஸ்டீல் ஸ்பிரிங்குகளைக் கொண்ட சஸ்பென்ஷனை அட்ஜஸ்ட் செய்ய முடியாது.


வழக்கமாக, பென்ஸ் கார்களில் காணப்படும் 7G-Tronic ஆட்டோ மேட்டிக் கியர்பாக்ஸுக்குப் பதிலாக, பென்ஸின் லேட்டஸ்ட் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. கூடுதல் பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் தவிர, 9 கியர்களும் காரின் பவர் மற்றும் டார்க்கை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றன. கம்ஃபோர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது, கியர்கள் ஸ்மூத்தாக மாறுகின்றன. ஸ்போர்ட்+ மோடில் வைத்து காரை வேகமாக ஓட்டும்போது, ‘தட்’ எனும் ஓசையுடன் கியர்கள் உடனுக்குடன் மாறுகின்றன. Comfort, Eco, Sport, Sport+, Individual என 5 டிரைவிங் மோடுகள் கொண்டுள்ளது GLC எஸ்யுவி. ஸ்டீல் ஸ்பிரிங்குகளைக்கொண்ட சஸ்பென்ஷனின் செட்-அப்பை மாற்ற முடியாது என்றாலும் ஸ்டீயரிங், பவர் டெலிவரி, கியர்பாக்ஸ் போன்றவற்றை நம்மால் அட்ஜஸ்ட் செய்ய முடியும். GLC 300 பெட்ரோல் இன்ஜினின் பவர் டெலிவரி, டர்போ லேக் இல்லாவிட்டாலும் ஆரம்ப வேகங்களில் அவ்வுளவு சிறப்பாக இல்லை. ஆனால், மிட் ரேஞ்ச் தொடங்கி டாப் எண்ட் வரையிலான (3,500ஆர்பிஎம் - 6,500 ஆர்பிஎம்) பவர் டெலிவரி சீராகவும், அதிரடியாகவும் இருக்கிறது. கியர்களைக் குறைக்க பேடில் ஷிஃப்ட்டர்கள் இருப்பதால், மேனுவல் காரை ஓட்டுவது போன்ற உணர்வைத் தருகிறது.

0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 7.5 விநாடிகளிலே எட்டிப் பிடிக்கும்  GLC 300, போட்டி டீசல் கார்களைவிட வேகமாகவே இருக்கிறது. ஆனால், டீசல் கார்களில் கிடைக்கும் டார்க், இதில் இல்லை என்பது நெருடல்.

ஓட்டுதல் தரம், கையாளுமை

GLC எஸ்யுவியில், கையாளுமை மற்றும் ஓட்டுதல் தரத்துக்குச் சம அளவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஹை புரொஃபைல் டயர்கள் மற்றும் மிருதுவான சஸ்பென்ஷன் செட்-அப், மோசமான சாலைகள் தரும் அதிர்வுகளை நல்ல முறையில் உள்வாங்கிக் கொள்கின்றன. இதனால் இந்த காரில் பயணிப்பது, சொகுசான அனுபவத்துக்கு உத்தரவாதம் தருகிறது. ஆனால், நிலையற்ற சாலைகளில் வேகமாகச் செல்லும்போது, கார் அலைபாய்வதுடன், பின்பகுதி ஆட்டம் போடுகிறது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், C-க்ளாஸ் செடான்போல GLC எஸ்யுவியின் ஓட்டுதல் தரம் ஃப்ளாட்டாக இல்லை. GLC ஸ்டீயரிங் இயங்கும் விதம், ஹைட்ராலிக் ஸ்டீயரிங்கை நினைவுபடுத்துகிறது. இதனால், எவ்வளவு வேகத்தில் சென்றாலும், கார் நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற நம்பிக்கை, ஓட்டுநருக்குக் கிடைக்கிறது. திருப்பங்களில் காரின் நிலைத்தன்மை சூப்பர். அதற்காக GLC எஸ்யுவியின் கையாளுமையை, பிஎம்டபிள்யூவின் X3 உடன் ஒப்பிடக் கூடாது.

சொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்?

கேபின், சிறப்பம்சங்கள்

தரத்துக்குப் பெயர்பெற்ற C-க்ளாஸ் செடானின் கேபின் போலவே, கிட்டத்தட்ட GLC எஸ்யுவியின் கேபின் தரமும் அமைந்திருக்கிறது. காரின் கட்டுமானத் தரம் அட்டகாசம். மர வேலைப்பாடுகொண்ட சென்டர் கன்ஸோலில் இடம் பெற்றுள்ள க்ரோம் ஏ.சி வென்ட்கள் மற்றும் மெட்டல் ஃபினிஷ் பட்டன்கள் ரிச் லுக் அளிக்கின்றன. கேபினில் கறுப்பு வண்ணமே வியாபித்திருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள முடிகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் சாதாரணமாக இருப்பதும், சிறிய 7 இன்ச் ஸ்கிரீனைக்கொண்ட COMAND சிஸ்டம் மற்றும் சில இடங்களில் பிளாஸ்டிக்கின் தரமும் கேபினோடு பொருந்தவில்லை.

முன்பக்க இருக்கைகள் பெரிதாக இருப்பதுடன், போதுமான சப்போர்ட்டையும் அளிக்கின்றன. இருக்கை மற்றும் ஸ்டீயரிங்கை எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்பதால், நமக்கேற்ற டிரைவிங் பொசிஷனை செட் செய்வது எளிது. தொடைகளுக்குப் போதுமான சப்போர்ட் கிடைக்கவில்லை என்றாலும், உயரமாக வைக்கப்பட்டுள்ள இருக்கைகள், போதுமான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம், சொகுசான குஷனிங் இருப்பதால், C-க்ளாஸ் செடானைவிட இதில் பயணம் செய்வது வசதியாக இருக்கிறது. பூட் ஸ்பேஸ் 550 லிட்டர். கூடுதல் இடம் தேவைப்பட்டால், இருக்கைகளைத் தரையோடு தரையாக மடித்து வைத்துக்கொள்ளலாம்.

முதல் தீர்ப்பு

லக்ஸூரி எஸ்யுவிகளில் ஆல்ரவுண்டர் என மெர்சிடீஸ் பென்ஸ் GLC-யைத் தாராளமாகச் சொல்லலாம். கார் மாடர்னாக இருப்பதுடன், சொகுசான கேபினின் இடவசதி, சிறப்பம்சங்களின் பட்டியல் ஈர்க்கிறது. பெட்ரோல் இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குவதுடன், ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை மனநிறைவைத் தருகிறது. இந்த காரின் பெரிய மைனஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான்.

லக்ஸூரி கார்களைப் பொறுத்தவரை, டீசல் கார்களின் விலை பெட்ரோல் கார்களைவிடக் குறைவாகவே இருக்கும். எனவே, GLC 220d அதிக வரவேற்பைப் பெறும் என்றே தோன்றுகிறது. GLC 300 காரின் உத்தேச விலை 60 லட்சத்தைத் தாண்டும். இந்த விலையில் பென்ஸின் லக்ஸூரி எஸ்யுவி வேண்டும் என்பவர்களுக்கான சரியான சாய்ஸ், GLCதான்.


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு